நாங்குநேரி வாசஸ்ரீ

113. காதற் சிறப்புரைத்தல்

குறள் 1121

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்

எங்கிட்ட இனிக்கப் பேசுத இவ முத்துப்பல்லுக்கு இடையில ஊறுத எச்சி பாலும் தேனும் கலந்து வச்சாப்போல ருசியக் கொடுக்கும்.

குறள் 1122

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு

ஒடம்புக்கும் உசிருக்கும் உள்ள ஒட்டுஒறவு எங்ஙன இருக்குமோ அதுகணக்கா இருக்கதுதான் எனக்கும் இந்த பிள்ளைக்கும் இருக்க ஒறவு.

குறள் 1123

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை யிடம்

என் கண்ணோட கருமணியில இருக்க பாவையே நீ வெளிய போயிரு. ஏம்னா நான் ஆசைவச்சிருக்க இவள கண்ணுக்குள்ளார வச்சிக்கிட இடமில்ல.

குறள் 1124

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து

ஆராஞ்சு நகநட்டு பூட்டி இருக்க இவ என்னோட கூடுத நேரம் உசிரு வாழுதது கணக்காவும், விட்டு வெலகும்போது உசிரு பிரியுதது கணக்காவும் உணருதேன்.

குறள் 1125

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

ஒளி வீசுத கண்ணோட இருக்க இவ கொணத்த நான் நெனச்சி பாக்கதே கெடையாது. ஏம்னா நான் எப்பமும் அயத்ததேயில்ல.

குறள் 1126

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர்எம் காத லவர்

நான் நேசிக்கவரு என் கண்ணுக்குள்ளாலேருந்து வெளிய எங்கும் போவ மாட்டாரு. கண்ண மூடி சிமிட்டினாலும் சங்கடப்பட மாட்டாரு. அவரு அம்புட்டு நுணுக்கமானவரு.

குறள் 1127

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து

என் கண்ணுக்குள்ளார நான் நேசிக்கவரு இருக்கதால, மை பூசினா அவரு காங்காம போயிடுவாருங்குத நெனைப்புல நான் மை பூசாம இருக்கேன்.

குறள் 1128

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து

நான் நேசிக்கவரு என் நெஞ்சுக்குள்ளார வாழுததால சூடா தின்னா அவருக்கு காந்தும் னு நெனச்சி சூடா திங்காம இருக்கேன்.

குறள் 1129

இமைப்பிற் கரப்பாக் கறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர்

நான் கண்ண சிமிட்டினேம்னா உள்ள இருக்க அவர காங்க ஏலாம புரிஞ்சிக்கிடாத ஊர்க்காரவுக அவர நேசமத்தவருனு சொல்லிப்போடுவாக. அதுங்காட்டி நான் சிமிட்டாம நிக்கேன்.

குறள் 1130

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர்

நான் நேசிக்கவரு என் நெஞ்சுக்குள்ளார சந்தோசமா வாழுதாரு. இதப் புரிஞ்சிக்கிடாம நேசமில்லாம பிரிஞ்சி வாழுதோம்னு பொறளி பேசுது இந்த ஊரு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *