நெல்லைத் தமிழில் திருக்குறள்-114
நாங்குநேரி வாசஸ்ரீ
114. நாணுத் துறவுரைத்தல்
மடலூர்தல்னா என்னன்னு மொதல்ல தெரிஞ்சிக்கிடுங்க. எம்புட்டு மொனஞ்சும் காதலிய அடைய முடியாத காதலன் கடைசியா மடலேறி அவள அடைய முயலுவான். மடல் ங்கது பனை மட்டையால குதிரை உருவம் செஞ்சி கீழ உருள பொருத்தி, கயிறு கட்டி இழுத்துக்கிட்டு போகுத மாரி செஞ்சிருக்க வண்டி கணக்கா இருக்கும். ஊருக்கு நடுவுல முச்சந்தியில அத நிப்பாட்டி காதலன் ஏறி உக்காந்துக்கிடுவான். அவன் கையில காதலியோட படம் வரைஞ்ச துணி (கிழி) இருக்கும். ஒடம்பு முழுக்க திருநீறு பூசியிருப்பான். உணச்சியில்லாம வேற எந்த நெனப்பும் இல்லாம காதலியப் பத்தியே பாட்டு பாடிக்கிட்டு கெடப்பான். ஊர்க்காரங்க மடல இழுப்பாங்க. இதால என்ன பிரயோசனம்னா ஊர்க்காரவுங்களுக்கு அவன் நேசம் தெரிஞ்சு போவுததால அவன் படுத சங்கடத்தப் பாத்து சிலசமயம் அந்தப் பிள்ளையக் கட்டிக்கிட அவனுக்கு ஒதவியா நிப்பாங்க.
குறள் 1131
காமம் உழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி
நேசம் வச்சி கைகூடாத நேரம் மடலூர்தலத் தவித்து பிடிப்பான தொண வேற இல்ல.
குறள் 1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து
நேசம் வச்சி பிரிஞ்சதப் பொறுத்துக்கிட ஏலாம என் ஒடம்பும் உசிரும் வெக்கத்த விட்டு மடல் ஏறுததுக்கு துணிஞ்சு போச்சு.
குறள் 1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்
நல்ல ஆண்மையோடயும் மானவெக்கத்தோடயும் முன்ன நான் இருந்தேன். இப்பம் காதலுக்காவ மடலூர்தலச் செய்யுதேன்.
குறள் 1134
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை
காதல்னு சொல்லப்படுத பெரு வெள்ளம் ஆண்மை, மானம் ங்குத தோணிகள அடிச்சி கொண்டு போயிடும்.
குறள் 1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்
மடலேறுதலோட சேத்து அந்தி சாயுத நேரம் ஏங்குத சங்கடத்தையும் மால கணக்கா வரிசையா வளவி போட்டிருக்க இவதான் எனக்கு குடுத்தா.
குறள் 1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படலொல்லா பேதைக்கென் கண்
காதலியப் பிரிஞ்சதால கண்ணு ஒறக்கம் இல்ல. ராப்பூரா மடலூர்தலப் பத்தியே ரோசன பண்ணிக்கிட்டுக் கெடக்கேன்.
குறள் 1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்
கொந்தளிக்குத கடல் கணக்கா காதல் நோய் சங்கடத்தக் கொடுத்தாலும் பொறுத்துக்கிட்டு மடலேறாம இருக்க ஒசந்த பெண்பிறப்புக்கு சமானமா எதுவுமில்ல.
குறள் 1138
நிறையரியர் மன்னளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்
பாவம் இவரு மனசுல ஒளிவுமறைவு கெடையாது. பாவப்பட்ட மனுசன். இப்டியெல்லாம் நெனையாம இப்பம் எங்க நேசம் ஊரறிஞ்சிக்கிடுத மாரி வெளிய தெரியப் போவுது.
குறள் 1139
அறிகிலார் எல்லாரும் என்றேயென் காமம்
மறுகின் மறுகும் மருண்டு
அமைதியா இருந்ததால என்னையத் தவித்து யாரும் தெரிஞ்சிக்கிடலனு நெனச்சி இப்பம் என் காதல் தெருப்பூரா பரவி சுத்திக்கிட்டு கெடக்குபோல.
குறள் 1140
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு
நான் படுத சங்கடத்த அனுவிச்சு அறியாதவங்க எம் முன்ன நான் காணுதமாரி நின்னு எளக்காரமா சிரிக்காங்க.