உலகே மாயம்

பாஸ்கர் சேஷாத்ரி
தினம் தினம் இங்கு ஒரு பெருங்கூத்து
இரவு பகல் ஆடியும் இரைச்சல் முடியவில்லை.
ஸ்திரீபார்ட் வேஷம் கட்டியவன் பால் மறந்தான்
ராஜா உடை போட்டவன் சைக்கிள் சாவி தேடினான்
ராணி வேஷக்காரி குழந்தைக்கு சோறூட்டினாள்.
ஒப்பனையால் கனமேறி கண்ணீரில் சிரங்கவிழ்த்தான்
கிளிகளும் புறாக்களும் கூண்டுக்கு திரும்பின
படுதாக்களும் போர்வாளும் இடம் மாறி மறைந்தன
மக்கள் வெள்ளம் நிஜம் தேடி வேறிடம் விரைந்தது
இருக்கைகள் எல்லாம் வாடகை வண்டி ஏறின
பள்ளம் உடைத்தவன் பாதையை சரி செய்தான்
விளக்குகள் இருண்டன வண்ண நிலவும் தெரிந்தது
மரங்கள் தெரிந்தன மர்மங்களெல்லாம் விலகின
மின்மினி பூச்சிகள் வெளிச்சத்தில் விசாரித்தன
இருட்டின் அமைதியில் இரவே தவித்தது
மனிதர்கள் அகன்றனர் மண் மட்டுமே மிஞ்சியது
திரண்ட இடங்களில் சுவர்க்கோழி எல்லை மீறியது
போரும் இல்லை சண்டை போட ராஜாவும் இல்லை
எதிரிகள் இல்லை எல்லையுமில்லை ஆயுதமில்லை
ஒப்பனை மேடையில் வேஷங்கள் கலைந்தன
எல்லோரும் கரைந்தனர் -எங்கேயோ மறைந்தனர்
ஆளற்ற பிரதேசத்தை மணல்துகள்கள் தாங்கி நின்றன
எல்லாமே மாயையென புதுக் காற்றும் வீசியது
காலம் நின்று காவல் காத்து சாட்சியாக நீள்கிறது