திருச்சி புலவர் இராமமூர்த்தி

அளவிலா மரபின்  வாழ்க்கை  மண்  கலம்  அமுதுக்கு ஆக்கி
வளரிளம்   திங்கள்  கண்ணி  மன்றுளார்  அடியார்க்கு  என்றும்
உளமகிழ்   சிறப்பின்  மிக்க  ஓடு  அளித்து  ஒழுகும்  நாளில்
இளமை   மீதூர  இன்பத்   துறையினில்  எளியர்  ஆனார் !

சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை என்ற சிவனடியார் பற்றிய முதல் நூலை இயற்றினார். அந்நூலில்  ஓரடிக்கு  ஒருவராக,

தில்லைவாழ்  அந்தணர்தம்  அடியார்க்கும்  அடியேன்
திருநீல  கண்டத்துக்   குயவனார்க்கு அடியேன்

என்று தொடர்ந்துபாடினார். தில்லைவாழ் அந்தணரை அடுத்து திருநீலகண்ட நாயனாரைத் தம் நூலில் அறிமுகம் செய்தார். பின்னர் அந்நூலில் உள்ள புராணங்களைப் பிற்காலத்தில் ஓர் அடியாருக்கு ஒருபாடல்  வீதம், ‘’திருத்தொண்டர் திருவந்தாதி’’ என்ற வழிநூலாக, நம்பியாண்டார் நம்பிகள் இயற்றி அளித்தார். அதனை வழிகாட்டி நூலாகக்  கொண்டு சேக்கிழார் பெருந்தகை ‘’திருத்தொண்டர்புராணம்’’ என்ற விரிநூலை இயற்றி யருளினார். இந்நூல் திருமலைச் சருக்கத்தை முதல் சருக்கமாகக் கொண்டு திருத்தொண்டர் திருவந்தாதியின் ஒவ்வொரு விருத்தத்தின்  முதற்சீர்களை சருக்கம் என்ற நூற்பகுதியின் பெயராகக் கொண்டு, தில்லைவாழ் அந்தணர் சருக்கம்  முதலாக, மன்னிய சீர்ச் சருக்கம் ஈறாகப் பன்னிரண்டு சருக்கங்களுடன் அமைந்துள்ளது. இந்நூல் இரண்டு காண்டங்களைக்  கொண்டது!

இந்நூலில் போற்றப்பெறும்  தனியடியார்களுள் திருநீலகண்ட நாயனார் முதலாமவர் ஆவார். இவர் வேதியர்களாகிய தில்லைவாழ் அந்தணர்களின் வாழ்விடமாகிய தில்லையில் தோன்றினார். அவ்வூரில் வேட்கோவர் எனப்பெறும் குயவர் குலத்தைச் சார்ந்தவர். சிவபெருமான் அடியார்களில் அந்தணர்களுக்கு இணையான நன்னிலையைக் குயவர்களும் பெற்றார்கள் என்ற சமரசக் கருத்தை  இப்புராணம் காட்டுகிறது.

‘’வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து  வந்தார்’’ என்றே இப்புராணம் தொடங்குகிறது. இவ்வடியார் எல்லையற்ற மரபில் வழிவழியாக மண்ணைக் குழைத்து  சுட்டுச்  சட்டி, பானைகளை உணவுக்காக  உற்பத்திசெய்யும் குயவர் மரபில் தோன்றியவர்; இறைவனடியார்களுக்கு வேண்டிய பரிகலன்களைக் காணிக்கையாகத் தருபவர். அவ்வாறு மண்சட்டி, திருவோடு முதலியவற்றை உருவாக்கி அடியார்களுக்கு வழங்கி வாழும்  நாளில், அவருடைய மண்பானை வாணிகத்தில் வந்த பொருட்செல்வ மிகுதியால் இளமைக்கால  விளையாட்டில் ஈடுபட்டு அதன் தொடர்ச்சியாய்க்  காம வின்பத்தில் எளியவராகித்  திளைத்தார்.

இந்தப் பாடலில் வாணிகத்தின் நுட்பங்கள் கூறப்பெறுகின்றன! வாணிகத்தில், வியாபார நோக்கத்துடன் அடிக்கடி அழியும் பொருள்களை  உற்பத்தி செய்தல், அவற்றை ஓரிடத்திலிருந்து கடை வீதிக்கு எடுத்துச் சென்று தொகுத்து வைத்தல், அவற்றை வாங்கிய விலைக்குமேல் இலாபம் வைத்து விற்றல் ஆகியவற்றின்  நுணுக்கங்களை சேக்கிழார்  பெருமான் இப்பாடலில் கூறுகிறார்.

இந்தத் தொழில் மிகப்பழையானது என்பதை ‘’அளவிலா மரபின் வந்த மட்கலம்‘’ என்ற தொடர் விளக்குகிறது! மேலும் இறைவனின் படைத்தல் தொழிலுக்கு  இத்தொழிலையே உவமையாக்குவார்கள்!அளவிட முடியாத பயனுடையதாய், “ஆரியன் குலாலனாய்நின் றாக்குவ னுலக மெல்லாம்“ என்றபடி, இறைவனது சிருட்டித்தொழிலுக்கு இணை சொல்லத்தக்க மரபில் வந்ததாய் உள்ளது  என்று உரைத்தனர்.

ஜப்பான் நாட்டிலிருந்து வந்த வணிகக் குழுவினர் இரண்டு தலைமுறையாய் வீட்டில் கிடந்த ஆட்டுக்கல்லைப்  பார்த்து அதிர்ந்தனர். ‘’இப்படி நீண்டநாள் இருந்தால் எப்படி புதிய கல்லை உருவாக்கி விற்பது? அடிக்கடி உடைந்தால் தானே அடுத்ததை விற்பனை செய்யலாம்?’’ என்றார்கள்! தொன்மையும் பெருமையும் மிக்க இத்தொழிலில் உருவாக்கி விற்கும் மண் பாண்டங்கள் அடிக்கடி அடுப்பில் ஏற்றி இறக்குவதால்  உடைந்து, மீண்டும் விலைக்குப் பெறத்  தூண்டும்!  ஆகவே  நிலையாத  பாண்டங்கள் நிலைத்த ஊதியத்தைத் தரும். இதனை ‘’மட்கலம்  அமுதுக்கு ஆக்கி ‘’ என்ற தொடரால் நுட்பமாக  விளக்குகிறார்.

மேலும் தம் இல்லத்திற்குத் தேவையான உணவைச் சமைப்பதற்கும், விருந்தோம்புவதற்கும் அடியார்களுக்கு வழங்குவதற்கும் இவற்றை உருவாக்கினார் என்ற கருத்தையும் இத்தொடர் விளக்குகிறது! இதனை மேலும், ‘’அடியார்க்கு என்றும் உளம் மகிழ் சிறப்பின் மல்க  ஓடளித்து  ஒழுகும் நாளில் ‘’ என்ற தொடர் விளக்குகிறது!

தாம் செய்த வாணிகத்தால் ஈட்டிய செல்வத்தை அடியார்களுக்கு அளித்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இவர்,  இளமைக்கால ஆடல் பாடல்களில் ஈடுபாடு காட்டியதால்,  தம் நிலையில் தாழ்ந்து  காம இச்சைகொண்டு அவ்வேட்கையைத் தணித்துக்கொள்ள மனைவியை விட்டு நீங்கி மற்ற பெண்டிருடனும் பழகினார். இதனைச்   சேக்கிழார், ‘’இளமை  மீதூர  இன்பத்துறையினில்  எளியர் ஆனார்!’’ என்ற தொடரால் குறிப்பிடுகிறார். இளமை விரும்பிய இன்பம்  இவர் மனவலிமையைக் குறைத்து இவர் மேலேறி ஊர்ந்து, எளியவர் ஆக்கி விட்டது. இதனை, ‘’மீதூர’’ என்ற சொல் விளக்குகிறது.  அதனால் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கத்தை  விலக்க மாட்டாதவராய்த்  தாழ்ந்தார்.

இவர் செய்த  பிழை  பின்னர் இறைவனால் திருத்தும் பெற்றது. தாம் செய்த தவற்றை உணர்ந்து வருந்தி  மன்னிக்க வேண்டுவோரை இறைவன் கருணை காட்டி ஏற்றுக்கொள்வதை குற்றம் புரிந்து உடல் தேயச் சாபம் பெற்று இறைவனை அடைந்து சாபநீக்கம் பெற்ற சந்திரனை இளம்பிறையாக்கித் தலைமேல் சூடிக்கொண்ட சிவபிரானை, ‘’வளர் இளந்  திங்கள்  கண்ணி மன்றுளார்‘’என்றதொடர்புலப்படுத்துகின்றது.

’’மாதர்ப்ப்பிறைக்கண்ணியானை “போழிளங்கண்ணியினானை“, “வளர்மதிக் கண்ணியி னானை“ என்ற அப்பர் தேவார அடிகளை  இந்த அடிகள் நமக்கு நினைவூட்டுகின்றன! இப்பாடலை  மீண்டும் பயின்று மகிழ்வோம்.

அளவிலா மரபின்  வாழ்க்கை  மண்  கலம்  அமுதுக்கு ஆக்கி
வளரிளம்   திங்கள்  கண்ணி  மன்றுளார்  அடியார்க்கு  என்றும்
உளமகிழ்   சிறப்பின்  மிக்க  ஓடு  அளித்து  ஒழுகும்  நாளில்
இளமை   மீதூர  இன்பத்   துறையினில்  எளியர்  ஆனார்.

பொருட் செல்வவளம், அவ்வளம் பெற்றோரைப்  பூரியார் ஆக்கும். இதனை

‘’அருட்செல்வம்  செல்வத்துட்  செல்வம்  பொருட்செல்வம்
பூரியார்   கண்ணும் உள!’’ என்றும்,

‘’அறன்ஈனும்   இன்பமும்  ஈனும்  திறனறிந்து
தீதின்றி    வந்த   பொருள்!’’  என்றும்

திருக்குறள் கூறுகிறது! ‘’திறனறிந்து தீதின்றி வந்த பொருள்’’ என்ற தொடரின் சொல்தோறும் பொருள்நயம்  சிறந்து விளங்குவதைக்  காண்க!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *