நெல்லைத் தமிழில் திருக்குறள்-118
நாங்குநேரி வாசஸ்ரீ
118. கண் விதுப்பழிதல்
குறள் 1171
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது
கண்ணால அவரப் பாத்ததுங்காட்டி எனக்கு நேசம் உண்டாச்சு. அங்ஙன காட்டின கண்ணு இன்னிக்கு வெசனப்பட்டு அவரக் காட்டச்சொல்லி அழுவுதது ஏன்?
குறள் 1172
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்
நடக்கப்போவுதத அறிஞ்சிக்கிடாம அன்னிக்கு நேசம் வச்ச கண்ணுங்க இன்னிக்கு பிரிஞ்சுபோன சங்கடத்துக்குக் காரணமும் தாங்கதாம்னு உணந்துகிடாம கெடந்து தவிக்குதது ஏன்? .
குறள் 1173
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து
அன்னிக்கு நேசம் வச்சவர வெரசலா போய்ப் பாத்து சந்தோசப்பட்ட கண்ணுங்க இன்னிக்கு தாங்களே அழுவுதது பாக்க சிரிப்பாணியா இருக்கு.
குறள் 1174
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து
என் ரெண்டு கண்ணும் தப்பிப் பொழச்சுக்க ஏலாத நேசங்குத நோய எனக்குத் தந்துபோட்டு இப்பம் தாங்களும் அழுவ ஏலாம தண்ணி வத்திக் கெடக்கு.
குறள் 1175
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்
அன்னிக்கு கடல் கூட பொறுத்துக்கிட ஏலாத அளவு நேசங்குத நோய உண்டாக்கின என் கண்ணுங்க இப்பம் ஒறங்க ஏலாம சங்கடத்தால வாடுதுவ..
குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது
எனக்கு இந்த நேசங்குத நோய உண்டாக்கின கண்ணுங்க தானும் கெடந்து சங்கடப்படுதது எனக்கு சந்தோசம் தான்.
குறள் 1177
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்
அன்னிக்கு ஆசையால இழைஞ்சு நேசம் வச்சிருக்கவரப் பாத்த கண்ணுங்க இன்னைக்கு அவரு பிரிஞ்சு போனதுக்காவ ஒறங்காம சங்கடப்பட்டு சங்கடப்பட்டு கண்ணீர் அத்து போவட்டும்.
குறள் 1178
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்
நெஞ்சுக்குழியில நேசமில்லாம மேல்டாப்ல இனிக்கப் பேசுத ஒருத்தர் இருக்காரு, அவரப் பாக்காம என் ரெண்டு கண்ணுக்கும் அமைதியான ஒறக்கம் இல்ல.
குறள் 1179
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்
நேசம் வச்சவரு வாராம போனாகன்னா ஒறக்கமில்ல. வந்த பொறவும் ஒறக்கமில்ல. இந்த ரெண்டு வழியிலயும் என் கண்ணுக்கு ஒறக்கம் இல்லாம இருக்கது சங்கடந்தான்.
குறள் 1180
மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து
பறை அடிக்கது கணக்கா மனசுக்குள்ளார இருக்கத வெளிய காணிச்சிக்குடுக்குத கண்ணு இருக்க என்னய ஒத்தவுககிட்ட இரகசியம் தெரிஞ்சுக்கிடது ஒண்ணும் ஊர்க்காரவுகளுக்கு சங்கடமில்ல.