மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டாலே (Eckhart Tolle) 

1

-மேகலா இராமமூர்த்தி

1948ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தவரும் இப்போது கனடாவில் வசித்து வருபவருமான உல்ரிச் லியொனார்டு டாலே (Ulrich Leonard Tölle), இன்றைய உலகின் குறிப்பிடத்தக்க ஆன்மிக வழிகாட்டிகளில் ஒருவர். இவரை ஆன்மிக வழிகாட்டி என்பதைவிடவும் மனித மனத்தை வளப்படுத்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவும் மனவளக்கலை நிபுணர் (Expert in the art of living) என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

இவருடைய பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் சென் புத்தமதம் (Zen Buddhism), சூபித் தத்துவம் (Sufism), இந்துமதம் (Hinduism) மற்றும் கிறித்தவ மதம் (Christianity) போன்றவற்றின் சிறந்த சிந்தனைகள் இடம்பெற்றிருந்தாலும், இச்சிந்தனைகளை இவர் மதம் பரப்பில் நோக்கில் பயன்படுத்தாமல், வாழ்வுக்கு உதவும் நற்கருத்துக்கள் இவை என்ற அடிப்படையிலேயே பயன்படுத்துவது, எவ்வித மத அடையாளமும் அற்ற மனவளக் கலை நிபுணராக மேற்குலக மக்களிடம் இவரை அடையாளப்படுத்தியிருக்கின்றது.

தம்முடைய ஆன்மிக ஆசான்களாக கௌதம புத்தமர் (Gautama Buddha), இரமண மகரிஷி (Ramana Maharshi), ஜித்து கிருஷ்ணமூர்த்தி (Jiddu Krishnamurti), மற்றும் ரூமி (Rumi) ஆகியோரை குறிப்பிடுகின்றார் எக்கார்ட் டாலே.

டாலேயின் இளமைக்கால வாழ்வை ஆராய்ந்தால், நான் தென்றலைத் தீண்டியதில்லை; ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன்என்ற பராசக்தி வசனந்தான் நம் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு அவருடைய இளமைக்காலம் துயர் நிறைந்ததாக இருந்திருக்கின்றது. ஜெர்மனியில் அவர் கழித்த குழந்தைப்பருவ நாள்களில் அவருடைய தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த சண்டைகளையும் அதைத் தொடர்ந்து அவர்களிடையே ஏற்பட்ட மணமுறிவையும் காணக்கூடிய அவலநிலை அவருக்கு வாய்த்திருக்கின்றது.

தம் பதின்மூன்றாம் வயதில் தந்தையோடு ஸ்பெயினுக்குச் சென்றார் டாலே. தந்தையார் அவரைக் கல்வி கற்க வற்புறுத்தாத நிலையில் தாமாகவே முயன்று இலக்கியம், வானியல், பிற மொழிகள் போன்றவற்றை வீட்டிலிருந்தபடியே கற்றிருக்கின்றார். தம் பதினைந்தாவது வயதில் ஜெர்மனியின் ஆன்மிகச் சிந்தனையாளரான பொ இன் ராவின் (Joseph Anton Schneiderfranken, aka Bô Yin Râ) புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய டாலே அவற்றில் ஆழ்ந்துபோனார்.

பத்தொன்பது வயதில் இங்கிலாந்திலுள்ள இலண்டனுக்குச் சென்ற டாலே, அங்கிருந்த மொழிப்பாடங்கள் நடத்துகின்ற பள்ளியில் (London school for language studies) ஸ்பானிஷ் மற்றும் ஜெர்மானிய மொழிகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது இனம்புரியாத அச்சமும் மனஅழுத்தமும் அவரைக் கடுமையாகத் தாக்கவே  தம் எதிர்கால வாழ்வு குறித்த கவலையில் ஆழ்ந்திருக்கின்றார்.

மனத்தைத் திசை திருப்ப, இலண்டன் பல்கலைக்கழத்தில் தத்துவம், உளவியல், இலக்கியம் உள்ளிட்ட பாடப்பிரிவில் சேர்ந்து பயின்று பட்டம் பெற்றார். முதுகலைப் படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தொடர அவருக்கு அரசின் உதவித்தொகை கிடைத்தும் அதனைத் தொடராது பாதியிலேயே கைவிட்டிருக்கின்றார்.

தம்முடைய இருபத்தொன்பதாவது வயதில் மீண்டும் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகி அவர் துயருற்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாகக் கிடைத்த அக விழிப்பால் (spiritual awakening) தம் வாழ்வின் துன்ப நினைவுகளிலிருந்து மீண்டிருக்கின்றார். மறுநாள் முதலே தம் வாழ்வு கலக்கமற்ற அமைதிப் பூங்காவாகத் தோற்றமளித்தது என்றுகூறி நம்மை அதிசயிக்க வைக்கின்றார்!

அதனைத் தொடர்ந்துவந்த காலங்களில் தியானத்திலும், அகத்தாய்வுப் பயிற்சிகளிலும் (meditation and intense contemplation) அவர் ஈடுபடத்தொடங்கவே அவரைப் பொறுப்பற்றவர் என்றும் பைத்தியக்காரர் என்று முத்திரை குத்திப் பகடி செய்திருக்கின்றது அவருடைய குடும்பம். அதைப் பொருட்படுத்தாத அவர் அங்கிருந்த புத்த மடத்திலும், இலண்டன் ஹித் எனப்படும் பரந்த புல்வெளிப் பிரதேசத்திலுமாகத் தம் வாழ்க்கையைக் கழித்திருக்கின்றார்.

அந்தக் காலக்கட்டத்தில் உல்ரிச் (Ulrich) என்ற தம்முடைய முதற்பெயரை எக்கார்ட் (Eckhart) என்று அவர் மாற்றிக்கொண்டிருக்கின்றார். மெயிஸ்டர் எக்கார்ட் (Meister Eckhart) எனும் ஜெர்மானியத் தத்துவ அறிஞருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இதனை அவர் செய்திருக்கின்றார் என்று அறிகிறோம். அதுமுதல் உல்ரிச் டாலே, எக்கார்ட் டாலே ஆனார்.

அகத்தாய்வுப் பயிற்சிகளால் அவரடைந்த மனவளத்தை அறிந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணாக்கர் பலர், மனநல ஆலோசனைகள் வேண்டி அவரிடம் வரத்தொடங்கினர்.  டாலேயின் புகழ் அமெரிக்காவிலும் பரவவே அங்கும் மனவளக்கலை தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்த அடிக்கடிச் சென்றுவரலானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தம்முடைய இருப்பிடத்தைக் கனடாவிலுள்ள வான்கூவர் (Vancouver)  நகருக்கு நிரந்தரமாக  மாற்றினார் டாலே. தம்முடைய வருங்கால மனைவியான கிம் எங்கை (Kim Eng) அவர் சந்தித்ததும் அங்கேதான்!

மனிதர்கள் அந்தந்த நொடிக்கான வாழ்வை வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் எக்கார்ட் டாலே எழுதி, 1997இல் வெளிவந்த ’The Power of Now: A Guide to Spiritual Enlightenment’ என்ற நூலும், பொருளைத் துரத்திக்கொண்டு ஓடாமலேயே பொருள்பொதிந்த வாழ்க்கையையும் புத்துலகையும் படைக்கலாம் என்பதை விளக்கும் வகையில் அவர் எழுதி 2005இல் வெளியான ’A New Earth: Awakening to Your Life’s Purpose’ என்ற நூலும் மிகவும் புகழ்வாய்ந்தவை.

’The Power of Now’ புத்தகத்தைப் படித்த பிரபல தொலைக்காட்சித் தொடர் நடத்துநரும், தயாரிப்பாளருமான ஓப்ரா வின்பிரே (Oprah Winfrey), எக்கார்ட் டாலேயைத் தன்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி, அவருடைய ’The Power of Now’ நூலை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டும் என்று பரிந்துரைக்க, டாலே ஒரேநாளில் உலகறிந்த மனவளக்கலை நிபுணரானார். இந்நூல் அரேபிய மொழி உட்பட உலகின் 33 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2009 வாக்கில் ’The Power of Now’ புத்தகம் அமெரிக்காவில் மட்டும்  3 மில்லியன் படிகளும்,  ’A New Earth’  புத்தகம் 5 மில்லியன் படிகளும் விற்று அதிகம் விற்பனையான புத்தகங்கள் (the best sellers) என்ற புகழை அடைந்திருக்கின்றன. 

டாலேயின் புகழ்பெற்ற நூல்களான ‘The power of Now’விலிருந்தும்A New Earth’இலிருந்தும் சில செய்திகளை நாம் அறிந்துகொள்வது வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

‘The Power of Now’ புத்தகத்தின் தொடக்கத்தில் தம்முடைய  கடந்தகாலக் கசப்பான அனுபவங்களை ஒளிவுமறைவின்றி விவரிக்கும் டாலே, அன்பாகவும் அமைதியாகவும் வாழவே நாம் இயற்கையால் படைக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் நாமோ வலிகளால் நம்மை நிரப்பிக்கொண்டு அவதிப்படுகின்றோம். வலி என்பது இன்னொரு வலியைத்தான் தருமே தவிர அதிலிருந்து மகிழ்ச்சி கிடைக்க வழியில்லை. அதனால் வலிதரும் கடந்த கால அனுபவங்களையே மனிதர்கள் அசைபோட்டுக்கொண்டிருப்பது எவ்வகையிலும் அவர்களுக்கு மகிழ்ச்சியையோ மன நிம்மதியையோ தரமுடியாது. அவற்றைத் தூக்கிச் சுமப்பதிலும் பயனில்லை என்கிறார்.

அதுபோல் எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்றெண்ணிக் கலங்குவதும் எவ்வித நன்மையையும் தரப்போவதில்லை.  எனவே கடந்துபோன கசந்த காலத்தையும், புதிரான எதிர்காலத்தையும் எண்ணிக் கலக்கமும் குழப்பமும் அடைவதைவிட்டு, மனிதர்களே… நிகழ்காலத்துக்கு வாருங்கள். கடந்துசெல்லும் நொடிகள் எவையும் திரும்ப வாரா என்பதை உணர்ந்து இந்த நொடிக்கான வாழ்வை வாழுங்கள் என்று குறிப்பிடும் டாலே, ”எனக்கு நானேதான் பிரச்சினையாகி வருகிறேன்” (I have become a problem to myself) என்று கத்தோலிக்க மதபோதகரான புனித அகஸ்டின் (Saint Augustine) சொன்ன வாசகத்தை கோடிட்டுக் காட்டுகிறார்.

இச்செய்தி ”தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற புறநானூற்றுப் புலவன் கணியன் பூங்குன்றனின் மணிமொழியை நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

“நாம்” என்பது நம்முடைய பெயரோ பதவியோ பொருளோ புகழோ நாம் சார்ந்திருக்கும் மதமோ அல்ல. இவையெல்லாம் நம்முடைய அகந்தையால் இவைதாம் நாம் என்று தவறாக நம்மை நாம் அடையாளப்படுத்திக் கொள்பவையே என்று தெரிவிக்கும் டாலே, இலக்குகளை உருவாக்கி அவற்றை அடைவது குறித்தே சிந்திப்பதையும் அவற்றை அடைந்தால்தான் வாழ்வில் வெற்றி என்று நினைப்பதையும் நிறுத்துங்கள். இவையே உங்களை மன அழுத்தத்தில் தள்ளுபவை. அதற்கு மாறாக இந்த நொடியில் உங்கள் வாழ்க்கை – நீங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை – எவ்வாறிருக்கின்றதோ அதனை ஏற்றுக்கொண்டு வாழப் பழகுங்கள்!  விழிப்புணர்வு உடையதாகவும், அதே சமயம் அவசியமில்லா எண்ணங்கள் அற்றதாகவும் உங்களின் இப்போதைய பொழுது அமையட்டும்!

முதுமை என்பது நம்முடைய புறவுடலுக்குத்தானேயன்றி அகவுடலுக்கு இல்லை; அகத்தினை மேம்படுத்தும் மனவளப் பயிற்சிகளால் முதுமையைத் தள்ளிப்போடவும் நம் நோயெதிர்ப்பு ஆற்றலை மேம்படுத்தவும் முடியும் என்கிறார்.

ஞானம் பெறுதல் என்பது நம் எண்ணங்களை மேம்படுத்துவதும், நாம் யார் என்பது குறித்த தெளிவான விழிப்புணர்வை அடைவதுமே ஆகும். அஃது ஏதோ பகுத்தறிவுக்குப் புறம்பான விந்தைச் செயலன்று என்கிறார்.

டாலேயின் கருத்துக்கள் பலவும் நம் தமிழகத்துச் சித்தர்களின் ஆன்மிகக் கருத்துக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கக் காண்கின்றேன்.

தமிழகத்தின் முதல் சித்தரான திருமூலர், உடலைப் பேணவும் நோய் நொடியின்றி வாழவும் யோகாசனப் பயிற்சிகள், தியானம் உள்ளிட்ட எட்டுவகையான வாழ்வியல் முறைகளை வலியுறுத்துகின்றார். இதனையே ’அட்டாங்க யோகம்’ என்கிறது திருமந்திரம்.

எக்கார்ட் டாலே திருமந்திரத்தைக் கற்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்தால் நிச்சயம் திருமூலரையும் தம்முடைய ஆசான்களின் வரிசையில் சேர்த்திருப்பார் என்பது துணிபு.

’A New Earth’  என்ற  தம்முடைய மற்றொரு நூலிலும் மனித மனம் தன்னைப் பற்றியும் தன்னுடைய புறச்சூழல் பற்றியும் விழிப்போடு இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார்.

மனிதனின் எண்ணங்கள் மிகவும் வலிமை வாய்ந்தவை, மனநோய்களையும் உடல்நோய்களையும் குணப்படுத்துவதில் எண்ணங்கள் இன்றியமையாப் பங்கு வகிக்கின்றன என்று உறுதிபடத் தெரிவிக்கும் டாலே, நம்முடைய மகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சியின்மைக்கும் நம்முடையே எண்ணங்கள்தாம் காரணமேயன்றிச் சூழ்நிலைகள் அல்ல என்கிறார் திடமாக. தன்னை ஒருவன் சுயபரிசோதனை (introspection) செய்து செம்மைப்படுத்திக் கொள்வதன் மூலமும், தனக்கென்று போலியாக எந்த பிம்பத்தையும் உருவாக்கிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதன் மூலமும் நல்ல மாற்றங்களையும் மகிழ்ச்சியையும் தன்னுடைய சொந்த வாழ்விலும் சமுதாயத்திலும் ஏற்படுத்த முடியும் என்பது டாலேயின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

இந்த நூலில் இறுதிப் பகுதியான ‘புதிய பூமி’ (A New Earth) என்பதில் முத்தாய்ப்பாக அவர் முன்வைக்கும் செய்தி இதுதான்: ”நாம் சாதாரண மனிதர்கள்தாம்; ஆனால் நம்முடைய செயல்களால் ஓர் அசாதாரணமான புத்துலகை நம்மால் படைக்கமுடியும்!”

நகைச்சுவை உணர்வும் நிரம்பப் பெற்றவர் டாலே என்பதை அவருடைய மேடைப் பேச்சுகள் ஐயத்திற்கிடமின்றி நிரூபிக்கின்றன.

இன்றைய எண்ணிம உலகத்துக் கண்டுபிடிப்பான கைப்பேசி குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் எக்கார்ட் டாலே, தொலைபேசிகள் பயனுள்ளவைதாம். ஆனால் இன்றைய கைக்கு அடக்கமான கைப்பேசிகளோ நம்மை ஏவும் முதலாளிகள் ஆகிவிட்டன; நாமோ அவை சொல்வதைக் கேட்கும் அடிமைகளாகிவிட்டோம். அவற்றால் வசியம் செய்யப்பட்டுவிட்ட நாம் அடுத்து என்ன நிகழும் என்ற காத்திருப்போடு அவற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நம்முடைய இச்செயல், கிரேக்கப் புராணங்களில் வரும் ஆணழகனான நார்சிசஸ், (Narcissus) நீர்நிலையில் தெரிந்த தன் அழகிய தோற்றத்தைக் கண்டு அதிலேயே இலயித்துப் போன செயலுக்கு ஒப்பானது.  அதுதான் உலகத்தின் முதல் செல்பி (selfie) என்றுகூடக் கூறலாம்.  கைப்பேசிகளின் உதவியால் சமூக வலைத்தளங்களில் புதிய புதிய மனிதர்களோடு நாம் தொடர்புகளை உருவாக்கிக் கொள்கிறோம். அம்மனிதர்கள் கூறுகின்ற கருத்துக்கள் நமக்கு உடன்பாடானவையாக இல்லாதபோது, அறிவற்ற வகையில், அவர்களிடம் சீற்றமும் சினமும் கொண்டு நம் மனஅழுத்தத்தைக் கூட்டிக் கொள்கிறோம்.

ஓர் உணவகத்துக்குப் போனால்கூடக் கைப்பேசியையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறோமே தவிர எதிரில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தக்கூட அல்லவா மறந்துபோய்விட்டது நமக்கு? என்று கேட்கிறார். 

அமெரிக்காவின் மத்தியமேற்கு மாநிலங்களைச் சார்ந்த ஒன்பது நடுநிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 94 விழுக்காடு ஆசிரியர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து வெளியிட்டிருக்கின்றது பள்ளிகளின் உளவியலை ஆராயும் அறிவியல் இதழான ஜர்னல் ஆப் ஸ்கூல் சைக்காலஜி (Journal of School Psychology).

இதற்கெல்லாம் தீர்வு, மனிதர்கள் தம் மனத்தில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை அகற்றி நேரிய எண்ணங்களால் மனத்தை நிரப்புவதே. அதனைப் பெறுவதற்கான தக்க வழி, மேற்குலக மனவளக்கலை நிபுணரான எக்கார்ட் டாலேயும், நம் தமிழ் மண்ணின் சித்தர்களும் பரிந்துரைத்திருக்கும் யோகமுறைகளும் ஆழ்நிலை தியானப் பயிற்சிகளுமே. சொல்லப்போனால் உண்மையான ஆன்மிக நெறி என்பதும் இதுவே!

.அன்றாடம் பல்வேறு வகைகளில் மன உளைச்சலுக்கும் அழுத்தத்துக்கும் ஆளாகும் நாமும் மன ஒருமைப்பாட்டையும் அமைதியையும் அளிக்கவல்ல தியானப் பயிற்சிகளை மேற்கொண்டு நம் மனத்தை நல்லெண்ணங்களால் நிரப்புவோம்; அதனால் நம் அகத்துள் பூக்கும் மகிழ்ச்சியை அகிலமெங்கும் பரப்புவோம்!

*****

கட்டுரைக்கு உதவியவை:

https://en.wikipedia.org/wiki/Eckhart_Tolle
https://www.philosophyforlife.org/blog/eckhart-tolle-the-forrest-gump-of-spirituality
https://en.wikipedia.org/wiki/The_Power_of_Now
https://www.sloww.co/eckhart-tolle-a-new-earth-101/

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டும் மனவளக்கலை நிபுணர் – எக்கார்ட் டாலே (Eckhart Tolle) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *