குறளின் கதிர்களாய்…(291)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(291)
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
– திருக்குறள் – 447 (பெரியாரைத் துணைக்கோடல்)
புதுக் கவிதையில்…
தவறு செய்யும்போது
இடித்துரைத்து
நல்வழி காட்டும் பெரியோரைத்
துணையாய் கொண்டு
நல்லாட்சி செய்யும்
அரசனை,
அழிக்கும் வகையில்
ஆற்றலுடை எதிரி
அகிலத்தில் எவருமிலர்…!
குறும்பாவில்…
தவறுகையில் தட்டிக்கேட்கும் பெரியோரின்
துணைகொண்டே அரசாளும் மன்னனையழிக்கும்
திறனுடை எதிரி எவருமிலர்…!
மரபுக் கவிதையில்…
தவறு செய்யும் போதினிலே
தட்டித் திருத்தும் பெரியோரை
அவையில் துணையாய்க் கொண்டேதான்
ஆட்சி செய்யும் மன்னவனைக்
கயமைத் தனமது கொண்டேதான்
கெடுத்தே யழிக்கும் ஆற்றலுடை
வயவர் எவரு முண்டோவெனில்
வைய மீதில் யாருமிலையே…!
லிமரைக்கூ..
தவறுகளை இடித்துரைக்கும் நிலையே
கொண்ட பெரியோர் துணையுடனாளும் மன்னவனை,
அழிக்கவல்ல எதிரியாரு மிலையே…!
கிராமிய பாணியில்…
வேணும்வேணும் தொணவேணும்
பெரியவுங்க தொணவேணும்,
நாட்டையாளுற ராசாவுக்கு
நல்லவுங்க தொணவேணும்..
தவறுசெஞ்சாத் தட்டிக்கேட்டுத்
திருத்துற பெரியவுங்க
தொணயேட அரசாளுற ராசாவ
அழிக்கத்தக்கத் தெறமவுள்ள
எதிரிண்ணு யாருமில்லியே..
அதால
வேணும்வேணும் தொணவேணும்
பெரியவுங்க தொணவேணும்,
நாட்டையாளுற ராசாவுக்கு
நல்லவுங்க தொணவேணும்…!