படக்கவிதைப் போட்டி – 262
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.06.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
உப்பளத் தொழிலாளி பெருமிதம்
கடல் அன்னையின் தண்ணீர்
இட நிலத்தில் இடும் பன்னீர்
திடமாய் நீக்கிடும் கண்ணீர்
சூரிய பகவான் பார்வை படப்பட
வீரிய சமையல் உப்பு சுடச்சுட
உப்பிட்டவரை உள்ள்ளவும் நினை
உப்பு தருவோரை
உச்சிமுதல் கால்வரை நினை
இயற்கையோடு இயைந்த தொழில்
இயற்கைமீறி எதுவும் இல்லை
வருண பகவானால் விடுமூறை
வரவுக்கு மாற்றுத் தொழில்
பிழையில்லாத தொழில்
ஏழையாகவே வாழ்வாதாரம்
ஏழ்மை நிலை வாழ்க்கைக்கே
மனதிற்கு இல்லையே
சீ.காந்திமதிநாதன்
கோவில்பட்டி
உப்பளத்தில்…
வெயிலால் வந்திடும் விளைச்சலிது
வேர்வைச் சுவைதான் உப்புயிது,
பயிர்போல் விளையும் வயலினிலே
படிகமாய் மாறிடும் கடல்நீரே,
வயிற்றுப் பிழைப்புப் பலர்க்கிதுவே
வயிற்றி லடித்திடும் மழைவந்தே,
கயிற்றில் நடப்பதாய் வாழ்க்கையிது
காணீ ராங்கே உப்பளத்திலே…!
செண்பக ஜெகதீசன்…
படக்கவிதை போட்டி எண் 262
தூத்துக்குடி களஞ்சியமே
நீ இல்லாவிடில் இதயம் துடிதுடிக்கும்
அது நிஜமே
நீ உணவில் குறைந்தாலும் குற்றம்
மிகையானாலும் குற்றம்
உனைத் துறக்கத்தான் நினைக்கிறேன் முடியவில்லை
அதனால் தானோ நீ
ஏழேழ் கடல் முழுதும் கலந்து விட்டாய்
தண்ணீரோடு இணைந்து விட்டாய்
நீயின்றி சுவையில்லை
நீரின்றி உலகில்லை
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
அது அன்றைய பழமொழி
உப்பிட்டவரை உள்ளளவும் மற
இது இன்றைய பழமொழி
இதுவே காலத்தின் பாடம்
சுதா மாதவன்
உழைப்பில் விளைந்த உப்பு
உச்சிவேளை சுடும் வெயில்
ஒதுங்க இல்லை மர நிழல்
உப்பு கரிக்கும் நீர்
உடல் முழுதும் வழிந்தோட
கடல் நீரின் உப்புக்காய்
கடின உழைப்பை விதைக்கின்ற உழைப்பாளியே!
உப்பளங்கள் உன் உழைப்பை உதாசீனம் செய்தாலும்
‘உப்பில்லாப் பண்டம்
குப்பையிலே ‘ என்னும்
செப்புமொழியறிந்து
உப்பிட்டு உண்ணும்
ஊரார் நாங்கள்
ஒருநாளும் மறக்காமல்
உளமார நன்றி சொல்வோம்
கடல்விளை அமுதம்
நெல்வயல் காய்ந்துவிட்டால்
விவசாயி வயிறு காயும்
நெய்தல் நிலம் காய்ந்துவிட
வெண்ணமுது விளைந்துவரும்
சேற்றினில் விளைந்த வென்படிகம்
சோற்றினை சுவைக்க உதவிடும்
உப்பளத் தொழிலாளி காலினிலே
மக்களின் நாச்சுவை வாழும்…
அகிம்சைப் போராட்ட நாயகனின்
அறநெறி தத்துவ வழிமுறைகள்
கடல்விளை அமுதத் துகளாக -சோற்றுக்
களம்வழி உயிரில் புகுத்திவிடும்….