-மேகலா இராமமூர்த்தி

கொலுவீற்றிருக்கும் பொம்மைகளூடே கண்ணைப்பறிக்கும் கவினோடு காட்சிதருகின்றது இந்த வண்ணப் பரி. இவ்வெழிற்படத்தை எடுத்திருப்பவர் திருமிகு. ஷாமினி. இதனை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. என் நன்றிகளை இவ்விருவருக்கும் உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

குதிரைகளையே நீண்டதூரப் பயணத்திற்கேற்ற வாகனமாக மக்கள் பயன்படுத்திய காலமும் இருந்தது. போர்க்களங்களில் சாகசம் நிகழ்த்தி வேந்தர்களுக்கு வெற்றிதேடித் தந்ததிலும் குதிரைகளின் பங்கு மகத்தானது. புரவி, இவுளி, பரி, கலிமான், கடுமான் என்று பல்வேறு பெயர்களால் சங்க காலத்தில் குதிரைகள் அழைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விலங்கைக் குறிக்கப் பல பெயர்கள் புழக்கத்தில் இருந்ததை வைத்தே அதன் பயன்பாட்டு மிகுதியையும் நாம் உணர்ந்துகொள்ளலாம்.

கம்பீரமும் அழகும் கொண்ட இந்த மண் குதிரையைக் கண்டதும் நம் கவிஞர்களின் மனக் குதிரையும் பல்வேறு எண்ணங்களை நோக்கித் தாவும்; நற்கருத்துக்களைக் கவிதைகளில் தூவும் என்ற எதிர்பார்ப்போடு அவர்தம் படைப்புக்களைப் பார்வையிடுவோம் வாருங்கள்!

*****

”நகராத இந்த பொம்மைக் குதிரையைப் போலவே நாம் நம்பிடும் அரசியலும் பயனற்ற மண் குதிரையே” என்று வெறுத்து விளம்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

நாட்டிலும்…

பொம்மைக் குதிரை ஓடாது
போகு மிடத்தைச் சேராது,
இம்மி யளவும் அசையாத
இதிலே ஏறி அமர்ந்திட்டால்
நம்மைப் பார்த்து நகைப்பாரே,
நகர்ந்திடு சிறுவர் விளையாட்டு,
நம்பிடும் நாட்டு அரசியலும்
நமக்குக் காட்டிடும் மண்குதிரையே…!

*****

”பிறந்தவீட்டைப் பிரிந்து புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டபோது கூடவே கூட்டி வந்தது, அண்ணன் அன்பாய் வாங்கித்தந்த இந்த பொம்மைக் குதிரை”
என்று சிலிர்க்கும் தங்கையின் பாசத்தைக் காண்கிறோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

அண்ணன் வாங்கித் தந்த குதிரை
அண்ணன் நினைவு சொல்லும் குதிரை
அண்ணன் பாசம் காட்டும் குதிரை
அண்ணன் வசம் நிறுத்தும் குதிரை

கேட்டது எல்லாம் வாங்கித் தருவான்
கேட்க மறந்தாலும் கொண்டு வருவான்
கேட்பதை நானும் குறைத்துக் கொண்டேன்
கேட்பதால் ஆகும் செலவினைக் கண்டு

விவசாய நிலத்தில் வியர்வை சிந்துகிறான்
விவசாய விளைபொருளோ அடிமாட்டு விலை
குதிரை விலையிலோ மற்றைய பொருட்கள்
குண்டுமணிக் காசு கூட மிச்சம் ஏதுமில்லை

வயித்த கட்டி வாயக் கட்டி
விவசாயி பொழப்பு போகுது
அறியாத வயதில் அண்ணன்
கேட்டது எல்லாம் வாங்கித் தந்த
விபரம் இப்பத்தான் புரியுது

தனக்கு வேட்டியோ ஒன்னு இரண்டு
உடுத்திக்க சட்டையோ மூணு நாலு
வேட்டி விட சட்டை கூடுதலோ
கெட்டியான கேள்வி வரும்
அண்ணன் சட்டை போட்டால்தான்
கண்ணிரண்டில் தூக்கம் வரும்

தாயில்லாத பிள்ளை
தகப்பனில்லாத பிள்ளை
யார் சொன்னது?

அண்ணன் இருக்க
எண்ணமே இல்லாமல் போனது

பருவப் பொண்ணு
திருமணமே பண்ணு
அண்ணன் சொன்னதாலே
சம்மதம் சொன்னேன்

பரிசம் போட்டாச்சு பத்திரிகையும் அடிச்சாச்சு
பந்தக்காலும் நட்டாச்சு பந்திப்பாயும் விரிச்சாச்சு

தாலி கட்டிய புதுப் பொண்ணு
புகுந்த வீடு போகணும்மாமே
புதுப்பட்டு புது மாப்பிள்ளை
புதுமணப் பொண்ணு கோலம்
பிறந்த வீட்டில் இருக்கும்போது தெரியல

புகுந்த வீடு போகணும்னு
பிறந்த வீட்டை விட்டுப்
பிரியும் போது
கூடவே கூட்டி வந்தது
அண்ணன் வாங்கித் தந்த
மரப் பொம்மை குதிரை
மறக்க முடியுமோ
மூச்சு இருக்கும் வரையில்

*****

”பரிகள்போல் ஆட்சியில் வந்தமர்ந்து, பின்பு தம் நரிக்குணத்தை வெளிப்படுத்தும் அரசியலாளரை அடையாளம் கண்டும் மீண்டும் அவர்குணத்தை மறக்கிறானே வாக்காளன் அடுத்த தேர்தலில்!” என்று வருந்துகின்றார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.   

மண்பரிகள்

மண்ணில் பரியைச் செய்து
மனங்கவர் வண்ணம் தீட்டி
கண்ணில் கண்ட பின்பு
கடைதனில் உடனே வாங்க
ஆவலை ஊட்டும் வணிகன்
ஆயிரம் பேர்கள் உண்டு

அவனியில் அப்பரி போல்
அரசியல் தனிலும் உண்டு
பாய்ந்திடும் பரிகள் போலப்
பாசாங்கு செய்து விட்டு
வாக்குகள் வாங்கிப் பின்
வந்தமர்வர் பதவி தனில்

வாக்கிட்ட மக்கள் இடர்
வாழ்வினில் உடனிருக்க
வந்தமர்ந்த பரிகளெல்லாம்
வஞ்ச மிகு நரிகளென்று
அறிந்திடுவான் வாக்காளன்
அடுத்த தேர்தலில் மறப்பதற்கு!

*****

மண்குதிரை ஏறி மாக்கடல் தாண்ட விழைவதுபோல், புவியின் வளமழித்துப் புதிய சொர்க்கம் தேடுகின்ற மானுடனை எண்ணி வேதனையுறுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

மண்குதிரைச் சவாரி

மண்குதிரை மீதேறி
மாக்கடலைக் கடந்துவிட்டு
மறுகரையை அடைந்திடவே
மன்றாடும் மாந்தரைப்போல்

கண்ணிரண்டும் விற்றுவிட்டு
கவின்மிகு சித்திரத்தைக்
கண்டுநாளும் களித்திடவே
கனவுகாணும் மூடனைப்போல்

இயற்கை வளங்களை அழித்து விட்டு
இன்ப வாழ்க்கையைத் தேடுகின்றோம்
நிலவளம் நீர்வளம் கெடுத்து
நித்திய இன்பத்தை நாடுகின்றோம்…

சுவரை அழித்துவிட்டு
சுந்தர ஓவியந் தீட்டுவதுபோல்
பூமியின் வளமழித்து
புதிய சொர்க்கம் தேடுகின்றோம்….

வண்ணக் குதிரையைக் கண்டதும் கவியெழுதத் தம் எண்ணக்குதிரையை தட்டிவிட்டுப் பல நல்ல கருத்துக்களை அழகாய் அளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவுசெய்யப்பட்டிருப்பது அடுத்து…

வண்ண வண்ணக் குதிரைகள்
கிராமத்து வாயிலில் நம்மை வரவேற்கும்
ஐயனாரும் அதனூடே
வாளோடே வானுயர
குலசாமி நடுவினிலே
பார்ப்பவர் கண்கள்
பிரமிக்க வைக்கும்
நம் கிராமிய மணத்தில்தானே!

பட்டினத்தில் குதிரைகள்
பணம் வைத்து ஆடவே
பாழாய்ப் போன மாந்தர்கள்
பணமிழந்ததும் அதனிலே!

சத்ரபதியின் வீரம்
ஜான்சி ராணியின் வீரம்
வீரத்தை எதிர்கொள்ளும் வீரம்
அதன் அடையாளமே இந்தக் குதிரையினமே!

ஆன்மிகத் தோன்றலிலும் குதிரை
அரச வரலாற்றிலும் குதிரை
இயந்திர இயக்கத்தில் திறன் குதிரை
மழலைப் பருவத்தில் ஆட்டம் குதிரை
இடைவிடாது நம் கனவில் மனக்குதிரை
குதிரை குதிரை

வண்ண வண்ணக் குதிரை!!

”ஐயனாரிடத்திலும் குதிரை, ஆட்டத்திலும் குதிரை, வேகத்துக்கும் குதிரை, விவேகத்துக்கும் குதிரை, திறனுக்கும் குதிரை, தீரத்துக்கும் குதிரை, எண்ண ஓட்டத்துக்கும் குதிரை என எத்தனை எத்தனை வண்ணங்களில் குதிரைகள் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன!” என்று வியக்கும் திருமிகு. சுதா மாதவனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *