எழுவகைப் பெண்கள் – 17: பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்

அவ்வைமகள்

பெண்களைக் குறிவைத்துப்  பணம் பண்ணும் கேசப் பொருள் வர்த்தகம்  

தலைமுடியைப் பற்றிய அறியாமை, அறிவியல் நூற்றாண்டான இந்த நூற்றாண்டில் மிகுந்திருப்பது வருத்தமே! இன்று பெண்கள், மாபெரும் வணிகப் பொறியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். கேசப்பொருட்கள் வர்த்தகம் பெண்களின் புத்தியை மழுக்கி, அவர்கள் அவசர முடிவு எடுக்குமாறு வணிகக் கவர்ச்சிகள் காட்டி, வெகு வசமாய் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

இன்று, கேசப்பொருள் வணிகம் பில்லியன் டாலர் வணிகமாகக் கொழித்துச் செழித்துக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குப் பெண்களே மூல காரணம். பெண்களின் ஆதரவினால் மட்டுமே இந்த வணிகம் நடக்கும் என்பதால் என்னென்ன வியாபாரத் தந்திரங்கள் உண்டோ அவையனைத்தும் பிரயோகிக்கப்படுகின்றன.  கேசப்பொருள் வணிகத்தின் ஒரே குறிக்கோள் என்னவென்றால், பெண்களை இந்த வணிகத்தில், தொடர் வாங்குவோர்களாக, தொடர் நுகர்வோர்களாக தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதே.

பெண்கள், ஆண்களின் சார்பின்றி சுயமாக இயங்கும் திறனை. சுயமாகக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கும் திறனை வெகு சாதுரியமாய் கேசப்பொருள் வணிகம் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. வறுமையில் வாடுபவர்கள் கூட, கணிசமான தொகையை, கேசப்பொருட்களுக்காகச் செலவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இன்று என்பது உலகளாவிய விஷயமாய் நிலைபெற்றிருக்கிறது.

இந்நிலையில், தலைமுடியின் நுண்ணமைப்பு மற்றும் அதன் பண்புகளை அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு செய்வது நமது தலையாய கடமையாயிருக்கிறது. குறிப்பாகப் பெண்களுக்கு, தலைமுடியின் அமைப்பு, அதன் தன்மைகள் ஆகியன அத்துப்படியாகத் தெரியவேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் தலைமுடி பற்றிய ஞான வெளிச்சம் உண்டானதென்றால், அவளது குடும்பமே கேச ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கிவிடும்! ஏனெனில், ஒரு  குடும்பத்தின் ஒட்டுமொத்த உடல்நலப் பாதுகாப்பும் பெண்ணின் கையில் தான் இருக்கிறது.

எனவே அதுபற்றி நாம் முதலில் பேசுவது நல்லது என்றார் – தொடர்ந்தேன்.

சுமார் 100 மைக்ரான் அளவு சராசரி தடிமன் மட்டுமே கொண்டது, மனிதத் தலைமுடி (17 முதல் 181 மைக்ரான் வரை  தடிமன் மாறுபடும்); அதன் புறப்பரப்பு மிக அதிசயமான  அமைப்போடு காணப்படுகிறது. தடவிப் பார்க்க வெகுசன்னமாய்த் தெரிகிற தலைமுடியின் புறப்பரப்பு உண்மையில் ஒரு செதிலடுக்காகும். தலைமுடியின் புறப்பரப்பு Cuticle எனப்படும் தலைமுடிக் கவசத்தால் ஆனது.

ஆம்! ஒன்றின் மீது செருகப்பட்ட எண்ணிறந்த நுண்ணிய செதில்களை, தலைமுடியின் புறப்பரப்பில் காணலாம். தலைமுடியின் புறப்பரப்பில் உள்ள செதில்களின் அடுக்கு முறை, ஓட்டு அடுக்கு முறை பாணியில் அமைந்துள்ளது. வீட்டின் கூரைமீது ஓடுகள் வேயப்படும்போது, இவ்வாறுதான் ஓடுகளை அடுக்குவார்கள். வீட்டின் கூரையின் ஓடுகள் கீழ்நோக்கி அமைந்திருப்பதைப் போலவே, தலைமுடியின் புறப்புரச் செதில்களும் கீழுநோக்கியே அமைந்துள்ளன.

By Nicola Angeli/MUSEThis file was uploaded by MUSE – Science Museum of Trento in cooperationwith Wikimedia Italia. – MUSE, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=48293053

இவ்வாறான செதிலடுக்கு கொண்ட புறப்பரப்பு, தலைமுடிக்கு மினுமினுப்பைத் தருவதோடு, நம் மீது விழும் ஒளி மற்றும் வெப்பத்தை வலுவாக எதிரொளிப்பதற்கான ஏற்பாடாகும். இவ்வகையில், homeostasis எனப்படும் உடல்வெப்பத் தகவுசீரமைப்பில் தலைமுடி முக்கியமான பங்காற்றுகிறது.

தலைமுடியின் புறப்பரப்பு செய்யும் கூடுதல் பணி என்னெவென்றால், அது, சூழலிலிருந்து நம்மீது விழும் தூசு தும்புகள் மற்றும் நச்சுகள் யாவற்றையும் தன் மீது சேகரித்துத் துப்புரவு செய்கிறது. மேலும், அது முடியின் உள்பாகங்களுக்குப் பாதுகாப்புக் கவசமாய் இருக்கிறது. குறிப்பாக, தலைமுடியின் ஈரப் பதத்தைப் பாதுகாக்கிறது.

தலைமுடியின் புறத்தோற்றம் ஓர் அதிசயம் என்றால், உட்தோற்றம் இன்னுமோர் அதிசயம். பார்க்கப் போனால், புறத்தைவிட, அகத்தின் அதிசயம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் தொடர் அதிசயமாய் விரிகிறது. ஆம்! ஒவ்வொரு மயிரிழையும் ஒரு அற்புதச் சுரங்கம். வெளியிலிருந்து உள்நோக்கில், தலைமுடிக்குள் சென்று பார்த்தால், அதிநுட்பமான, அடுக்கடுக்கான புதையல் களஞ்சியத்தை அங்கே நாம் பார்க்க  முடியும். கீழே தரப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள் (https://www.mdpi.com/1420-3049/25/9/2143/htm) [1].

தலைமுடியின் உள்கட்டமைப்பு பற்பல அடுக்குகளைக் கொண்டதாக இருப்பதை, படம் 2 ஐயும் படம் 3 ஐயும் சேர்த்துப் பார்த்தால் விளங்கும்.

படம் 2: மனிதத் தலைமுடியின் படிநிலை உள்கட்டமைப்பு; Mullner , Alexander , R. M ., Ruben, Pahl, Doris, Brandhuber, Herwig Peterlik (2020)Porosity at Different Structural Levels in Human and Yak Belly Hair and Its Effect on Hair Dyeing, Molecules25(9), 2143; https://doi.org/10.3390/molecules25092143

படம் 3. தலைமுடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
https://biomedicalephemera.tumblr.com/post/66493115496/hair-cross-section-diagrams-and-representations/embed; A Treatise on the Diseases of the Skin. Dr. Henry W. Stelwagon, 1923

தலைமுடியின் நெடுக்குவெட்டுத் தோற்றத்திலும், தலைமுடியின் அழகிய உள்ளமைப்புக் கட்டமைப்பைக் கூடுதலாக அறிந்துகொள்ள முடியும். இந்த நெடுக்குவெட்டுத் தோற்றத்தில், அடியிலிருந்து நுனி நோக்கிச் செல்வதான  அமைப்பு தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தைப் பின்னாலும் நாம் உபயோகப்படுத்திப் பேசவிருக்கிறோம்.

படம் 3. தலைமுடியின் நெடுக்குவெட்டுத் தோற்றம்.

https://biomedicalephemera.tumblr.com/post/66493115496/hair-cross-section-diagrams-and-representations/embed; A Treatise on the Diseases of the Skin. Dr. Henry W. Stelwagon, 1923

முதலாவதாக, க்யூட்டிகிள் எனப்படும் தலைமுடியின் கவசத்தின் தன்மையையும் அதன் செயல்களையும் அறிந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும். ஏனெனில். தலைமுடியின் தலையாய பிரச்சினைகள் க்யூட்டிகிளில்  தான் தொடங்குகின்றன.  “எனக்கு அறிவியல் ஞானம் இல்லை” “எனக்கு அறிவியல் ஆர்வம் இல்லை“ என்று எவரும் சொல்லிவிடக் கூடாது. சிறிது  நேரத்தை  இதற்கென  ஒதுக்கி,  ஒவ்வொருவரும், மிகக்  குறிப்பாகப் பெண்கள், இதனை நன்கு அறிந்து புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

க்யூட்டிகிளின் செதில்கள் புரதத்தால் ஆனவை. இந்தச் செதில்களுக்கு இடையில் க்யூட்டிகிள் – க்யூட்டிகிள் செல் இழைக்  குழம்பு (Cuticle-Cuticle Cell Membrane Complex)  எனும் பொருள் இருக்கிறது. இதனை CCMB என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். CCMB-யில் என்னென்ன அடக்கம் என்றால்: டெல்டா மற்றும் பீட்டா புரதங்கள், 18- மீத்தைல் எய்க்கோசனாயிக் அமிலம் (18-methyl eicosanic acid), மற்றும் கட்டில்லாத அமிலங்களாக, ஒலியிக் அமிலம் மற்றும் பால்மிடிக் அமிலம் ஆகியன உள்ளன.

இதில், 18- மீத்தைல் எய்க்கோசனாயிக் அமிலம், சுருக்கமாக 18-MEA என்று அழைக்கப்படுகிறது.

CCMBயில், 18MEA எவ்வாறு அமைந்திருக்கிறது என்றால், அது  பீட்டா புரதங்களோடு,  கொவேலன்ட் பிணைப்புகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. கோவலன்ட் பிணைப்புகள் வெகு உறுதியான பிணைப்புகள் ஆகும்.

CCMB குழம்பு என்ன செய்கிறதென்றால் முடிகளின் செதில்களுக்கு இடையே, ஒரு மெத்தை போன்று, சிமெண்ட் போன்று செயல்பட்டு, செதில்களைப் பிணைத்தும் அவற்றிற்கு இடையே ஒரு உயவு எண்ணெய் ஆகவும்  ஒரே நேரத்தில் செயல்பட்டு,  முடியின் செதில்கள் பிரியாமல் –  விரியாமல் காக்கிறது. முடியின் செதில்கள்  பிரியாது விரியாது இருப்பது தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு, மிக முக்கியமானது.  இதில் 18MEA செய்கிற பணி அதிமுக்கியமானது. முடியின் மிருதுத் தன்மைக்கும், வளைந்து நெளியும் இசைவுத்தன்மைக்கும், மினுப்புத் தோற்றத்திற்கும்   எது காரணமாகிறது என்றால், அது 18MEA தான்.

மேலும், முடிக்கு Hydrophobicity எனப்படும் நீர் எதிர்ப்புத் திறனை 18MEA  தருகிறது. இதனால் தலையில் நீர் பட்டதென்றால், தாமரையிலையில் தண்ணீர் பட்டாற்போல், நீர் துளித்து நிற்கும் – முடியை நனைக்காது. இதனால், எந்தச் சூழலிலும் வெளியிலிருந்து அதிக நீரை முடி உறிஞ்சாதவாறு 18MEA காக்கிறது.

நவீனம் – மாடர்னிசம் – என்றாகியிருக்கிற இந்த காலக்கட்டத்தில், ஏறக்குறைய அனைவருமே, 18MEA சிதிலம் அடைந்தவர்களாக இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால், ஷாம்பூ, கண்டிஷனர், சாயம், ஸ்டைலிங் ஜெல், என்று பல்வேறு வேதிப்  பொருட்களைப் பயன்படுத்துவதும், மற்றும் தலைமுடியை அயர்ன் செய்வது, போன்ற பழக்கங்களால்.

ஷாம்புக்கள், ஆல்கலைன் பி. எச் எனப்படும் அளவீடு கொண்ட காரவகைப் பொருட்களால் ஆனவை. இவை 18-MEA உடன் வேதிவினை புரிந்து 18-MEAஐ அழித்துவிடுகின்றன. கண்டிஷனர்கள் தேவையற்ற ஒரு பூச்சை க்யூட்டிகிளின் மேல் இட்டு, தேவையற்ற எடையை முடியின் மீது ஏற்றி க்யூட்டிகிளைப் பிய்த்து இழுத்து முறிக்கின்றன. இதற்கு மேலாக, கூடுதல் சிதைவு, ஹேர் ட்ரையர் எனப்படும் உஷ்ண உலர்த்திகளால் நடைபெறுகிறது.  உஷ்ண உலர்த்திகள், க்யூட்டிக்கிளின் செதில்களை அகட்டி விரித்து, செதில்களுக்கு அடியில் இருக்கிற CCMB குழம்பை, துரத்தி வெளியேற்றி, வறள வைக்கிறது.

இதனால், முடி உலர்ந்து, உறுதி இழந்து, பலவீனமாகி அறுந்து போகும் தன்மையை அடைகிறது; பல நேரங்களில் முடி, வேரோடு உதிரும் நிலையம் உண்டாகிறது. இருக்கும் முடிகளும் கூட நுனி வெடித்துப்  பிளந்து கதிர் கதிராய் விரியும்.

க்யூட்டிகிள் பாதிக்கப்பட்டால், வேரறுபடுவது புரியவில்லையே என்று நீங்கள் கேட்கலாம்.

முடியின் நெடுக்கு வெட்டுத் தோற்றத்தைப் பார்த்தால் க்யூட்டிகிளுக்கும், வேருக்கும் உள்ள தொடர்பு புரியும். க்யூட்டிகிள் வேரிலிருந்து தொடங்குவது, எனவே வேருக்கும் க்யூட்டிகிளுக்கும்  நேரடித் தொடர்பு உள்ளது. க்யூட்டிக்கிள் பாதிக்கப்பட்டதென்றால் வேரும் பாதிக்கப்படுகிறது. கியூட்டிகிள் பலவீனமாகும் ஒவ்வொரு தருணத்திலும் வேரும் பலவீனமாகிறது.

இங்கு நாம் வேர் என்று குறிப்பிடுவது முடியின் அடியில் உள்ள குமிழி போன்ற பகுதி; இது Hair Bulb எனப்படுவது. இந்த, வேர் எனப்படும் முடியின் அடிக்குமிழி, உண்மையில் ஸ்கால்ப் (Scalp) எனப்படும் மண்டைத் தோலுக்கு உள்ளே, அடியில் இருக்கிறது. இதனை, படம் 5இல் பார்க்க முடியும்.

படம் 5. முடியின் வேர்;  https://link.springer.com/protocol/10.1385/0-89603-441-0:101

நாம் ஏற்கனவே பார்த்தது போல 1900 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட கொள்ளை நோய்களுக்கு முடி ஒரு ஊடகமாக இருந்தது என்கிற காரணத்தால், தலைமுடியில் தொற்றிக்கொள்ளும் நோய்க்கிருமிகளைக் களைந்து, முடியைக் கழுவி எடுப்பதற்கான முயற்சிகளில் உருவானதே ஷாம்பூ. அதைத் தொடர்ந்து அது நம்மிடையே நின்றுவிட்டதன் காரணம் விளம்பரங்கள் மட்டுமே. விளம்பரங்களின் மாய வலையில் மாட்டிக்கொண்ட பின் – அதிலேயே நாம் நின்றுவிட்டோம். ஷாம்பூவால் மண்டைத் தோலுக்கும், தலைமுடிக்கும் ஏற்பட்டுள்ள கேடுகள் ஒன்றா இரண்டா?  ஒவ்வாமை வியாதிகள் எத்தனை?

நல்ல தலைமுடி ஆரோக்கியத்திற்குப் பேர்போனவர்களான கிழக்கு நாடுகளிலுள்ள மக்கள் யாவரும் முன்னெப்போதும் காணா தலைமுடி உதிர்வு, சொட்டை விழுதல், வழுக்கை ஆகிய வியாதிகளால் தாங்கொணா மன உளைச்சலும் பணச் செலவுமாக இன்று அலைந்து வருந்தி வருவது தலைமுடிக்காக விற்கப்படும் பொருட்களால் தான் என்றால் அது மிகையில்லை.

அது மட்டுமல்ல, ஷாம்பூ, கண்டிஷனர், கேசச் சாயம், போன்ற வேதிப் பொருட்கள், குளியலறையிலிருந்து வெளியேறிப் பொதுக்கழிவில் கலந்து, வாய்க்காலோடி, நீர்நிலைகள் யாவற்றிலும் கலந்து, எத்தனை எத்தனையோ உயிரினங்களைக் கொன்றுள்ளன. இன்னமும் கொன்றுகொண்டே இருக்கின்றன.

ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களில் உள்ள நுரை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள், Eutrophication அல்லது Algal Bloom எனும் ஒரு கெடுதல் நிகழ்வை நீர் நிலைகளில் ஏற்படுத்தி, நீர்ப் பரப்பில் நஞ்சு மிகுந்த களைகளையும் பாசியையும் ஆல்காக்களையும் வளர்த்து. நீரில் கரைந்துள்ள உயிர்வாயுவான ஆக்சிஜனைக் கபளீகரம் பண்ணி, தவளை, தேரை, மீன், நண்டு, உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ இயலாதவாறு செய்கின்றன.

ஷாம்பு  கேசச் சாயம் போன்றவற்றில் உள்ள பிற வேதிமங்களோ  உண்மையில் நச்சுத் தன்மை உடையன. அவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்வதுபோல் சேர்ந்து, சிறுதுளி பெருவெள்ளமாய், அளவு கூடி நிறைத்த நச்சூட்டலை நீர்நிலைகளில் நிகழ்த்திவிடுகின்றன. இவ்வாறான நீர்நிலைகளில் அற்ப சொற்பமாக வாழ்கிற மீன், நண்டு ஆகியன நச்சூட்டப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. இவற்றை நாம் உணவாக உண்ணும்போது நாம் நஞ்சையும் சேர்த்துத்தான் உண்ணுகிறோம். கழிவுநீர்க் கால்வாயின் இருமருங்கிலும், நீர்நிலைகளின் கரைநெடுகிலும் நிலமும் நச்சூட்டப்படுகிறது, இந்நிலையில், அங்கு வளரும் தாவரங்கள் எவ்வாறு நச்சூட்டம் ஏற்படாமல் தப்பிக்க முடியும்?

ஆக, நாலு சுவருக்குள் நாம் செய்கிற மதியீனமான செயல்கள் எத்தனை பெரிய சமுதாய அழிவை உண்டாக்குகின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஷாம்பு, கண்டிஷனர், சாயம், இத்யாதிகள் வருகின்ற பாட்டில்கள், குப்பிகள், முதலியன சேர்க்கும் குப்பைகளுக்கு அளவுண்டா? இவற்றையும் நாம் காசு கொடுத்துத் தான் வாங்குகிறோம்! அவற்றைக் குப்பையில் வீசி, அந்தக் குப்பையை அள்ளவும் கூட நாம் தான் பணம் தருகிறோம். என்ன வேதனை இது? இந்தக் குப்பைகள் யாவும் அழியாக் குப்பைகள். பூமியின் பாரத்தைத் தெடர்ந்து ஏற்றுவதோடு – பூமியின் வெப்பமிகுதிக்கும் காரணமாகின்றன. என்ன வேதனை இது?

மேற்கத்திய நாடுகள் தாம் அறியாமையாலும் ஆணவத்தாலும் தவறு செய்கின்றன என்றால், கிழக்கும் இத்தவறுக்கு உடந்தையானது ஏன்?

பூர்வீகமான சுதேசி ஞானத்தை விடுத்து, நவீனத்தைத் தழுவியதால்தான், கேச ஆரோக்கியத்தில் இன்று துர்பாக்கியமான நிலைமையைக் கிழக்கு நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கின்றன! கிழக்கத்திய நாட்டு மக்கள்,  பொதுவாகவே, பாதுகாப்பு உணர்வு கொண்டவர்கள். இயற்கைப் பொருட்களில் நாட்டம் கொண்டவர்கள். இயற்கைப் பொருட்களாலான சிறப்புக் கலவைகளால் கேசம் கழுவும்  பழக்கம் கொண்டவர்கள். அதனை அவர்கள் மறந்ததும் துறந்ததும் துர்பாக்கிய நிலையே.

இதில், இந்தியா, தலைசிறந்த விஞ்ஞான அறிவியல், தொன்மை உடையது. இந்தியர்களுக்கு இருக்கிற தாவரவியல் ஞானம் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதது. அதுவும், “Phytochemistry” எனப்படுகிற தாவரவேதியியலில் இந்தியர்களுக்கு இணை உலகில் எவருமில்லை என்றே சொல்லலாம். பி. ராமச்சந்திரன் பய், டி. ஆர். கோவிந்தாச்சாரி போன்ற புகழ்மிக்க தாவர வேதியியல் விஞ்ஞானிகளை உலகிற்கு வழங்கிய பெருமை, தமிழகத்திற்கு  உண்டு. இன்று நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற எஸ். பி. தியாகராஜன் – கீழாநெல்லியிலிருந்து மஞ்சள் காமாலைக்கு மருந்து கண்டுபிடித்து உலகம் முழுமைக்கும் வழங்கியிருக்கிற பெருமையை நாமறிவோம்.

தமிழ் மருத்துவ முறை என்று பெருமையாகச் சொல்லப்படும் சித்த மருத்துவ முறை முழுக்க முழுக்கத் தாவரப் பொருட்களையும் பூமியில் உள்ள இயற்கைத் தாதுக்களையும் மட்டுமே பயன்படுத்துவது. அதர்வண வேதம், ரிக் வேதம், மற்றும், சுஷ்ருத  ஸமிதா ஆகியவற்றில். எண்ணிறந்த தாவரங்களும், அவற்றில் இருக்கிற மருந்துப் பொருட்கள் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவ முறை, இம்மூன்று நூல்களும் தரும் ஞானத்தின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்ட மருத்துவ முறையாகும்.

“Wealth of India” என்று தலைப்பிடப்பட்டு பதினொரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ள இந்திய அரசின் புத்தகத் தொகுப்பில், பாரத நாட்டின் பொக்கிஷங்களான தாவரங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் நாம் மறந்தது எப்படி?

எங்கள் மக்கள், சிகைக்காய்ப் பொடி என்னும் ஒரு  அதியற்புதமான பொடியை, தேர்ந்தெடுத்தப் பல தாவரப் பொருட்களைச் சேர்த்து அரைத்துத் தயாரிப்பர். அதனைச் சோறு  வடித்த கஞ்சியில் கரைத்து.  அந்தப் பசையைக் கொண்டு, எண்ணெய்க்  குளியலில், தலையில் வைத்த எண்ணெய்ப் பூச்சை, இதமாய்க் கழுவி எடுப்பர், கேசம் துளியும் கெடாது, மெருகுடனும் வளத்துடனும், பட்டு போன்ற மிருதுத் தன்மையுடனும், ஒவ்வொரு பெண்ணும் பாதுகாத்து வாழ்ந்த மண்ணில் இன்று ஞானப் பஞ்சம் ஏற்பட்டு, மதியீனம் ஓங்கி வளர்ந்திருக்கிறது என்றால் இந்தத் துர்பாக்கிய நிலையை என்னென்று சொல்வது?

சிகைக்காய்ப் பொடி என்பது நம்மவரின் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பு. சரியான pH சமநிலை, சரியான conditioning – ஈரப் பதனம், மிகச் சரியான போஷாக்கு, மிகச் சரியான கொரகொரப்புத்தன்மை, அற்புதமான வாசனை, நேர்த்தியாய்ச் சேர்த்த பாதுகாப்பான தொற்று நீக்கிகள், மிகச் சரியான நுரை வளம், நீர் நிலைகளுக்குப் பாதுகாப்பு, நிலத்துக்குப் பாதுகாப்பு எனச் சிகைக்காயின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பார்த்துக்கொண்டே இருங்கள் இந்த நூற்றாண்டிலேயே இதற்கு அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ பேடண்ட் வாங்கிவிடுவார்கள். நாம் எவ்வெவற்றையெல்லாம் நமது பொக்கிஷம் எனப் பேணிக் காக்கத் தவறுகிறோமோ, அவையெல்லாம் இவ்வாறு தான், அடுத்தவன் அள்ளிக்கொண்டு போவதில் முடிவடைகின்றன.

தலைமுடியின் வெளி உறையை மட்டுமே நாம் பார்த்திருக்கிறோம்.  உறைக்கு உள்ளே இருக்கிற, தலைமுடியின் உள் கட்டமைப்பின் முத்தாய்ப்பான விஷயங்களை அடுத்து நாம் கவனிக்க இருக்கிறோம்.

(மேலும் பேசுவோம்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க