கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 7
-மேகலா இராமமூர்த்தி
கூனியின் துர்ப்போதனைகளால் தூய உள்ளம் திரிந்த கைகேயி இராமனின் பட்டாபிடேகத்தைத் தடுத்துநிறுத்த என்ன வழி என்று அவளிடமே யோசனை கேட்க, பல்லாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பராசுரப் போரையும் அதில் கைகேயி துணிச்சலாய்த் தேர்நடத்தித் தயரதனின் உயிரைக் காத்ததையும்; அதனால் மகிழ்ந்த அவன் அவளுக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாய் வாக்களித்ததையும் நினைவூட்டிய கூனி, அவ்வரங்களைக் கேட்டுப்பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்றாள்.
கூனி குறிப்பிடுகின்ற சம்பராசுரப் போர் பற்றிய விவரணை வால்மீகியின் மூலநூலில் அயோத்தியா காண்டம் 9ஆம் சருக்கத்தில் மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அவ்வளவு விரிவாக அதனைக் கூனி கைகேயி விவாதத்திற்கிடையே வைப்பது கதையோட்டத்திற்குத் தடையேற்படுத்தும் என்று கருதிய கம்பர், ஒரே ஒரு பாடலில் அந்நிகழ்வைச் சுருக்கமாகப் பாடி முடித்துவிட்டார்.
நாடி ஒன்று உனக்கு உரைசெய்வென்
நளிர் மணி நகையாய்
தோடு இவர்ந்த தார்ச் சம்பரன்
தொலைவுற்ற வேலை
ஆடல் வென்றியான் அருளிய வரம்
அவை இரண்டும்
கோடி என்றனள் உள்ளமும்
கோடிய கொடியாள். (கம்ப: மந்தரைசூழ்ச்சிப் படலம் – 1576)
கூனியின் கருத்தைக் கேட்டு ”ஆகா நல்ல யோசனை!” என்று கைகேயி மகிழ்ச்சியோடு கூறவும், ”மீதியையும் கேள்” என்று தொடர்ந்த கூனி,
“அவ்விரு வரங்களில் ஒன்றின்படி உன்மகன் பரதனுக்கு நாடாளும் உரிமையைப் பெறு! மற்றொன்றின்படி இராமனைப் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் திரியவிடு! பிறகென்ன…? தீர்ந்தது தொல்லை! அதன்பின் உன் மகன் பரதனுக்கு நாடாளுவதில் போட்டியும் இல்லை!” என்று கூனி உரைத்த கொடுமொழிகள் கைகேயியின் செவிகளில் தேனாய்ப் பாய்ந்தன.
கூனியைக் கட்டித்தழுவி நிறைய பரிசுப்பொருட்களை அள்ளி வழங்கிய கைகேயி, ”உண்மையில் பரதனுக்குத் தாய் நானில்லை; நீதான்!” என்று பாராட்டுமொழிகள் உரைத்து, இனி பரதனுக்கு ஆட்சியைப் பெற்றுத்தருவது என் பொறுப்பு; நீ கவலையின்றிப் புறப்படு!” என்று கூனிக்கு விடைகொடுத்தாள்!
வந்த வேலையைக் கச்சிதமாக முடித்த மகிழ்ச்சியில் விடமன்ன கூனியும் அவ்விடம் விட்டு நீங்கினாள்!
கூனி சென்றதும் கைகேயி தன் கபட நாடகத்தைத் தொடங்கினாள். தன் ஒப்பனையைக் கலைத்தாள்; அணிகலன்களைக் கழற்றி தரையெங்கும் வீசினாள். நெற்றித் திலகத்தை முற்றிலும் அழித்தாள். பூவில்லாக் கொடிபோல் புவிமிசை புரண்டாள். இராமனுக்கான பட்டாபிடேக ஏற்பாடுகளை முடித்துவிட்டுக் கைகேயியின் அரண்மனைக்கு மகிழ்வோடு வந்த தயரதன் கைகேயியின் அலங்கோல நிலைகண்டு அதிர்ந்தான்.
”என்ன நிகழ்ந்தது? உனக்கு யார் என்ன தீங்கு செய்தது? சொல்! அவர்களை இப்போதே மாய்க்கிறேன்!” என்று அவன் சினந்துகூறவும், “மன்னவ! முன்பு தாங்கள் தருவதாகச் சொன்ன இருவரங்களை இப்போது எனக்குப் பரிந்து அளிப்பீரா?” என்று போலி வினயத்தோடு வினவினாள் கைகேயி.
”பூ…இவ்வளவுதானா? இதற்குத்தானா இத்தனை சோகமும் அலங்கோலமும்?” என்று நகைத்த தயரதன், “கேள் வரங்களை! தருகிறேன் உடனே! இது உன் புதல்வன் இராமன்மேல் ஆணை!” என்றான் கைகேயியின் வஞ்ச நெஞ்சம் உணராமல்!
”அரசே! அந்த இரண்டு வரங்களில் ஒன்றின்படி என்னுடைய சேய் பரதன் நாடாள வேண்டும்; இன்னொன்றின்படி சீதை கேள்வனான இராமன் சென்று காடாள வேண்டும்” என்றாள் கொடிய மனத்தினளாய் மாறிப்போன கைகேயி.
இதுவரை இராமனைத் தன் மகன் என்று பெருமிதத்தோடு அழைத்துவந்தவள், ’சீதை கேள்வன்’ என்று பிரித்துப் பேசுவதிலிருந்தே அவள் மனமாற்றத்தை நமக்கு நயமாய் உணர்த்திவிடுகின்றார் கம்பர்.
கைகேயியின் சொற்களைக் கேட்டதும் தலை கிறுகிறுத்தது தயரதனுக்கு! இத்தகைய பயங்கரமான வரங்களை அவளிடமிருந்து எதிர்பார்க்காத அவன், இவை வேண்டாமென்று கைகேயியிடம் அழுகிறான்; தொழுகிறான். உன் மகனுக்கு ஆட்சியை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்; இராமனைக் காட்டுப் போகச் சொல்லாதே என்று கெஞ்சுகிறான்.
தயரதனின் பரிதாப நிலையைப் பார்க்கும்போது, வரங்களாகக் கைகேயி கேட்க விரும்புபவை யாவை என்பவற்றை அறிந்தபின்பு அவன் அவற்றிற்கு ஒப்புதல் அளித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மனைவி மீதிருந்த அளவுகடந்த அன்பும் நம்பிக்கையும் அவன் அறிவைக் குருடாக்கிவிட்டன.
தயரதனின் மன்றாட்டைக் கைகேயி ஏற்றுக்கொள்ளவில்லை. ”வரங்களைத் தருவதாக இருந்தால் சொல்லுங்கள்! இல்லையேல் நான் தீயில் விழுந்து உயிரை மாய்ப்பேன்” என்று அவள் எச்சரிக்கவும், அவள் உள்ளத்து உறுதியை அறிந்த தயரதன், அரிச்சந்திரன் தோன்றிய இரவிகுலத்து வாய்மை தன்னால் பழுதுபடவேண்டாம் என்றெண்ணியவனாய், “நீ கேட்ட வரங்களைத் தந்தேன்” என்றான் வெறுப்போடும் வேதனையோடும்!
தொடர்ந்து பேசியவன்…”என் மகன் வனமாளுவான்; நான் உயிரைவிட்டு வானாளுவேன்; நீயும் உன் மகனும் மக்களின் வசை என்னும் வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருங்கள்” என்று சபித்துவிட்டுச் சோர்ந்து வீழ்ந்தான்.
கங்குல் மங்கி மறைய வைகறை மெல்ல எட்டிப் பார்த்தது. கோழிகள் கூவத் தொடங்கின. அப்போது அவற்றின் சிறகுகள் படபடப்பது, தயரதனின் துயர்கண்டு ஆற்றாத அக் கோழிகள் தம் சிறகுகள் எனும் அழகிய கைகளால் தம் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுவது போன்றிருந்தது என்று அவலச்சுவையைப் பறவைகளிடத்தும் தற்குறிப்பாய் ஏற்றிப் பாடுகின்றார் கவிவலார் கம்பர்.
எண் தரும் கடை சென்ற
யாமம் இயம்புகின்றன ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
மயங்கி விம்மியவாறு எலாம்
கண்டு நெஞ்சு கலங்கி அம்சிறை ஆன
காமர் துணைக் கரம்
கொண்டு தம்வயிறு எற்றி எற்றி விளிப்ப
போன்றன கோழியே. (கம்ப: கைகேயி சூழ்வினைப்படலம்: 1630)
இதே போன்ற கருத்தமைந்த பாடலொன்றை நாம் புகழேந்திப் புலவரின் நளவெண்பாவிலும் காணமுடிகின்றது. அங்கும் ஓர் அவலக் காட்சி!
நடுக்காட்டிலே காரிருள் வேளையிலே உறங்கிக்கொண்டிருந்த மனைவி தமயந்தியைத் தமியளாய் விட்டுச்சென்றுவிடுகின்றான் நளன். கண்விழித்த தமயந்தி கணவனைக் காணாது துயருறுகின்றாள். அவள் துயர்கண்டு பொறாத கோழிகள் தம் இறகுகளால் வயிற்றிலடித்துக்கொண்டு, விரைந்து தேரேறி வருகவெனச் சூரியனை அழைப்பதுபோல் கூவின என்கிறார் புகழேந்தியார்.
தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் – வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம். (நளவெண்பா – 280)
பொழுது நன்கு புலர்ந்ததும் இராமனை அழைத்துச்செல்ல சுமந்திரன் இராமனின் அரண்மனைக்கு வருகின்றான். தேரில் ஏறிய இராமனைக் கைகேயியின் அரண்மனைக்கு அழைத்துச் செல்கின்றான். அங்கே இராமனின் கண்கள் தந்தை தயரதனைத் தேடின. ஆனால் தந்தையைக் காண முடியவில்லை; சிற்றன்னை கைகேயியே எதிர்ப்பட்டாள்!
இராமன் எதிரில் வந்தவள், முகத்தில் எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல், ”மைந்த! ஆழிசூழ்ந்த இந்த உலகையெல்லாம் பரதன் ஆளவேண்டும் என்றும், நீ சடாமுடி தரித்து, தவக்கோலம் மேற்கொண்டு, கானகம் சென்று அங்குள்ள புண்ணிய நீர்நிலைகளிலெல்லாம் ஆடிவிட்டுப் பதினான்கு ஆண்டுகள் கழித்து மீண்டுவர வேண்டும் என்றும் அரசர் உரைக்கச் சொன்னார்” என்றாள் நிதானமாக.
ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனேஆள நீபோய்த்
தாழ்இருஞ் சடைகள்தாங்கி தாங்கருந் தவம்மேற் கொண்டு
பூழிவெங் கானம்நண்ணி புண்ணியத் துறைகள்ஆடி
ஏழ்இரண்டு ஆண்டின்வா என்று இயம்பினன் அரசன் என்றாள் (கம்ப: கைகேயி சூழ்வினைப் படலம் – 1690)
தன்மீது பழிவரா வண்ணம் தப்பித்துக்கொள்ளவே இஃது அரசனின் விருப்பம் என்று கூறுகின்றாள் கைகேயி.
அதைக்கேட்ட இராமனின் முகத்தில் சினம் தோன்றியதா? இல்லை! இச்செய்திகேட்டு, ”அப்பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றதுபோல் மலர்ந்தது செப்பருங் குணத்து இராமனின் திருமுகம்” என்கிறார் கம்பர்!
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- கம்பராமாயணம் – கோவைகம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
- கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
- கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
- கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.
நயந்தேன்