‘கூடு இலக்கியச் சந்திப்பு’ – நாமக்கலின் இலக்கிய அடையாளம்

முனைவர் ம. இராமச்சந்திரன்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்.
ramachandran.ta@gmail.com.
மதுரை சட்டக் கல்லூரியில் தருமபுரி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வந்தனர். இலக்கியக் கூட்டம், மனித உரிமை கூட்டம், முற்போக்குச் சிந்தனை கூட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளுவது விருப்பமான ஒன்று. பல சிந்தனை ஆளுமைகளை உற்றுணர்வற்கு இக்கூட்டங்கள் துணைபுரிந்தன. இத்தகையச் குழ்நிலையில் இந்நண்பர்கள் பழக்கமானார்கள். இவர்களின் கலந்துரையாடலில் நக்சல்பாரி இயக்கம் மக்களின் நலன்களுக்குப் பாடுபடும் இயக்கம் என்றும் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்றும் கூறி வந்தார்கள். தருமபுரி என்ற மாவட்டம் இவ்வாறு என்னுள் வினையாற்றத் தொடங்கியது. சில ஆண்டுகள் கடந்த பிறகு வேலை வாய்ப்புத் தேடிய 2004 ஆம் ஆண்டு தருமபுரி வந்தடைந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் இணைவுப் பெற்றக் கல்லூரியொன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன்.
கவிஞர் பிரம்ம ராஜன் என்று சொல்லக் கூடிய ஆங்கிலப் பேராசிரியர் ராஜாராம் மற்றும் பேராசிரியர் சிவக்குமார் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றினர். மேலும் எழுத்தாளர் ஜெயமோகன், த. பார்த்திபன், புது எழுத்து மனோன்மணி என்று பல ஆளுமைகள் இயங்கிய இடம். இலக்கியச் சந்திப்புகள் நடைபெறும் இடமாக ஒக்கேனக்கல் விளங்கியது. இவ்வாறு தருமபுரிக்கு ஓர் இலக்கிய முகமும் இருந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது.
தீவிர இலக்கிய வாசிப்புக்கும் ஆசிரியர் பணிக்கும் இடையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள நண்பர்கள் தூண்டினார்கள். முனைவர் பட்டம் என்றால் நெறியாளரைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும். நல்ல வழிகாட்டி அமைந்து விட்டால் ஆய்வு செம்மையாக, பயனுள்ளதாக அமையும். நெறியாளரைத் தேடி அலையத் தொடங்கினேன். ஆய்வு நூல்களின் கனத்தை உணர்ந்து நூலாசிரியர்களைத் துரத்தத் தொடங்கினேன். சங்க இலக்கியத்தில் ஆழமான அறிவும் ஆய்வு மனப்பான்மையும் கொண்ட பேராசிரியர் பெ.மாதையன் அவர்கள், அவரின் ஆய்வு நூல்கள் மூலம் அறிமுகமானார். எனது புண்ணியம் அவர் பெரியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இருந்தார்.
நவீன இலக்கியத்தில் பரவலாகப் பரிச்சயம் கொண்டவன் நான். சங்க இலக்கியத்தில் ஆழமான அனுபவமும் ஆய்வுச் சிந்தனையும் கொண்டவர் அவர். முனைவர் பட்ட ஆய்வு செம்மையாக, புதுமையாக, பயனுள்ளதாக அமைய வேண்டும் என்று எண்ணி இறுதியாக பெ. மாதையன் அவர்களிடம் சேர்ந்து விடலாம் என்று முடிவு செய்து நண்பர்களிடம் கூறினேன். அனைவரும் பெ.மாதையன் என்று சொன்னவுடன் மிரண்டு விட்டார்கள். தயவு செய்து தற்கொலை செய்ய முயற்சிக்காதே? என்று கூறினார்கள். இதனைக் கேட்டு வியந்த எனது மனம், அவர் மேல் மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. ஒரு நாள் விடுமுறை எடுத்து, அவரைச் சந்திக்கச் சென்றேன். நண்பர்கள் கூறியக் கருத்துக்களை அவரிடம் கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே அப்படியா கூறினார்கள்? என்று வியந்து கொண்டார். நான்கைந்து சந்திப்புகளுக்குப் பிறகு தலைப்பைக் கேட்டார். எனது நவீன இலக்கியப் பரிச்சயத்தைக் கூறினேன். என்றாலும், தங்களிடம் சங்க இலக்கியத்தில் ஆய்வு செய்யலாம் என்று கூறினேன். அவர் ஆழமாகச் சிந்தித்துவிட்டு ‘நீ நவீன இலக்கியத்திலேயே ஆய்வுச் செய்’ என்று கூறி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனைச் சந்திக்கச் சொன்னார். இவ்வாறு இலக்கியத்தில் (கூளமாதாரி, நிழல் முற்றம்) மட்டும் அறிமுகமான பெருமாள் முருகன் அவர்களும் அவர் நடத்துகின்ற ‘கூடு இலக்கியச் சந்திப்பும்’ நாமக்கலில் அறிமுகமானது.
பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் நடந்தவற்றைக் கேட்டு என்னை முனைவர் பட்ட ஆய்வாளராகச் சேர்த்துக் கொண்டார். அவருடன் எனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு மறக்க முடியாத அனுபவம். பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், கவிஞர், திறனாய்வாளர் என்று விரிந்த தளத்தில் இயங்கும் ஓர் ஆளுமையின் கனிவான, அன்பான அணுகுமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் தனது எழுத்து பணியின் போது அமர்ந்தெழுதும் சூழலைக் கண்டு வியந்து போன உணர்வுகளை வெளிப்படுத்தினேன். அவர் சிரித்துக் கொண்டே சமீபத்தில் வெளியான ‘கங்கணம்’ நாவலைப் பரிசாகக் கொடுத்தார். நான் பாதுகாத்து வருகிற பல புத்தகங்களில் அதுவும் ஒன்று. சிறந்த நெறியாளரைப் பெற்றுவிட்டோம் என்ற பெருமிதம் அன்று (2007) ஏற்பட்டது இன்று வரை மாறாமல் இருக்கிறது. இவரின் வீடு மாணவர்கள் கூடும் இலக்கியக் கூடு. இதனால் இலக்கியச் சந்திப்புக்குக் கூடு என்றே பெயர்.
ஒவ்வொரு மாதம் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையும் மாணவப் பறவைகள் சந்திக்கும் சரணாலயம், கூடு இலக்கியச் சந்திப்பு. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலும் இளங்கலைப் பட்ட மாணவர்களும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து சிந்திக்கும் விவாதம் நடத்தும் இடமாகக் கூடு அமைந்தது. தமிழ் இலக்கியத்தின் பன்முகம் கொண்டவர்களின் வருகை எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, தீராநதி, வடக்கு வாசல் என்று வெளிவந்த பல சிற்றிதழ்கள் பலருக்கு இங்கு தான் அறிமுகமானது. இதழ்களில் மட்டுமே அறியப்பட்ட பலரை நேரில் சந்தித்து உரையாடி மகிழும் வாய்ப்பைக் கூடு ஏற்படுத்தியது. எழுத்து ஆளுமைக்கும் தனிநபர் ஆளுமைக்கும் இடையே காணப்படும் இடைவெளி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஒருமுறை நானும் எனது நண்பர் கந்தசாமியும் கூடு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆர்வத்தின் காரணமாக நிகழ்ச்சி தேதியைச் சரியாகக் கவனிக்காமல் நாமக்கல் சென்றுவிட்டோம். அங்கிருந்து புறப்பட்டுப் பெருமாள் முருகன் அவர்களின் இல்லத்தையும் அடைந்துவிட்டோம் என்றாலும் எந்தப் பரபரப்பும் இல்லாத சூழலைக் கண்டு நண்பர்களிடம் பேசினோம், பிறகு தான் தெரிந்தது அடுத்த ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியென்று. இவ்வாறெல்லாம் கூடு நிகழ்ச்சி எங்கள் உணர்வோடு கலந்திருந்தது.
கூடு நிகழ்ச்சியை மாணவர்களே முன்நின்று நடத்துவார்கள். மாணவர்களின் பங்களிப்பும் ஆர்வமும் ஈடுபாடும் முன்னெடுக்கப்படும். வாசிப்புத் திட்டங்கள், படைப்பு மனப்பான்மை, மெய்ப்புத் திருத்தம், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள் என்று ஒவ்வொரு நிகழ்வும் நிறைவாக இருக்கும். மாணவர்களின் இலக்கியப் புரிதல் மேம்பட்ட தேடல் கொண்டதாக மாறும் இடமாக இக்கூடுச் சந்திப்பு நிகழ்ந்தது. இங்கிருந்து முதுகலைப் பயில பாண்டிச்சேரி, சென்னை என்று மாணவர்கள் சென்றனர்.
ஒருமுறை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பெருமாள் முருகன் அவர்கள் ஆய்வுகள் குறித்தும் ஆய்வுத் தலைப்புகள் குறித்தும் பேசினார். அப்போது மாணவர் ஒருவர் எழுந்து ‘ஆய்வுத்தலைப்புக்காக உங்கள் பின்னால் இனி அலைய வேண்டாம்’ என்று குத்தலாகக் கூறினார். இதனைக் கேட்ட எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் பெருமாள் முருகன் அவர்கள் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அன்பாக நடந்து கொண்டார். எந்த எதிர் வினைக்கும் தயாராக இருப்பதும் மாணவர்களின் ஆவேச பேச்சுக்களை அதிகமாக பொருட்படுத்தாமல் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் என்னைப் போன்று அனைவரையும் கவர்ந்தது.
எழுத்தாளர் பாவண்ணன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் (கன்னடம் – தமிழ்), சமூக ஆய்வாளர். பொ.வேல்சாமி தமிழ் மொழி, பண்பாடு, பதிப்புச் செயல்பாடு, நிறப்பிரிகை தீவிர சிறுபத்திரிகை ஆசிரியர் குழு உறுப்பினர் என்று ஆளுமைகளின் பட்டியல் நீண்டது. இன்று கல்லூரி உதவிப் பேராசிரியர், பள்ளி ஆசிரியர், ஆய்வாளர், பத்திரிகையாளர், நவீன படைப்பாளர் என்று பலர் முன்னேற்றம் அடைந்துள்ள நிலைக்குக் கூடு இலக்கியச் சந்திப்பு உருவாக்கிய தன்னம்பிக்கையும் தற்சார்ப்புமே காரணமாக அமைந்தது. இத்தகைய வாய்ப்பை உருவாக்கித் தந்தவர் பெருமாள் முருகன் அவர்கள். நாமக்கலின் ஒரு இலக்கிய அடையாளம், கூடு இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி.