பிரபலங்கள் கண்டு களித்த ”பீஷ்மர்” – மேடை நாடகம்
மானு ஆர்ட்ஸ் இந்தியா மேற்பார்வையில் அவண்ட் தியேட்டர்ஸ் சிங்கப்பூர், சென்னை அரசு அருங்காட்சியகத்தில் “பீஷ்மர்” என்னும் மேடை நாடகத்தை நடத்தினர். இந்த நாடகம் முதல் பாகம் தமிழிலும் இரண்டாம் பாகம் ஆங்கிலத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தின் சிறப்பம்சம் பீஷ்மர் கதாபாத்திரம். பீஷ்மராக நடித்த திரு. புரவாலன் நாராயணசுவாமி சிங்கப்பூர் நாட்டினைச் சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தமிழ் உச்சரிப்பு முற்றிலும் சுத்தமாகவும் பிழையின்றியும் காணப்பட்டது.
திரு. புரவாலன் முதல் பாகத்தில் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் இடைவெளியின்றித் தமிழ் மொழியிலும், இரண்டாம் பகத்தினை சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் இடைவெளியின்றி ஆங்கில மொழியிலும் தன் சொந்தக் குரலில் மேடையில் பேசி நடித்தது மிகவும் பாராட்டபட வேண்டிய ஒரு நடிப்புத் திறமை.
இந்த நாடகத்தை சென்னையில் நடத்திடவேண்டும் என்பதை ஒரு விடாமுயற்சியாக மேற்கொண்டு “காதல் மன்னன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய திருமதி. மானு தங்களுடைய மானு ஆர்ட்ஸ் மேற்பார்வையில் சிங்கப்பூர் நாட்டின் திரு. செல்வா அவர்களுடைய அவண்ட் தியேட்டர்ஸ் இந்த நாடகத்தினை சென்னையில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடத்தினர். இந்த நாடகத்தின் திரைக்கதையை சென்னையைச் சேர்ந்த திரு. இளவழகன் அவர்கள் எழுதியுள்ளார்.
நாடகத்திற்கு வந்திருந்த மக்கள் சற்று குறைவாக இருந்தாலும், திரைப்பட பிரபலங்கள் திருவாளர்கள் எம். எஸ். வி., பாலச்சந்தர், ரஜினிகாந்த், பாண்டியராஜன், நாசர், பார்த்திபன், இசையமைப்பாளர் பரத்வாஜ், பசுபதி, இயக்குநர் சரண், பாடலாசிரியர் மதன் கார்கி, ராஜேஷ் மற்றும் பலர் நாடகத்தினைக் கண்டு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.



