சு. கோதண்டராமன்

நேற்று எங்கள் ஊரில் ஒரு கூட்டம் நடந்தது. இடம் எங்கள் குடியிருப்பின் மன மகிழ் மன்றம். மாலையில் நான் அங்கு சீட்டாடப் போவது வழக்கம். நேற்று அங்கு என் சீட்டுக் கூட்டாளிகளைக் காணவி்ல்லை. பல புதிய முகங்கள் தென்பட்டன. ‘என்ன விசேஷம்?’ என்று விசாரித்தேன். ‘தமிழறிஞர்கள் கூட்டம்’ என்று சொன்னார்கள். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? என்று நான் வீட்டுக்குப் போகத் திரும்பினேன். ‘கூட்டம் துவங்க இருக்கிறது, இருந்து கேட்டுவிட்டுப் போங்கள்’ என்று வற்புறுத்தினார்கள்.

தலைமை தாங்கிய முனைவர் தமிழ்க் காவலன், “நாம் பல கூட்டங்களை நடத்தி பிற மொழிச் சொற்களுக்கு மாற்றான புதிய தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து அறிமுகப்படுத்தி வருவது நீங்கள் அறிந்ததே. இன்று நாம் கூடியிருப்பது டீவி என்பதற்கு இணையான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்கத் தான். டெலிவிஷனை நாம் தொலைக்காட்சி என்று மொழிபெயர்த்தாலும் மக்கள் என்னவோ எளிதாக, சுருக்கமாக இருக்க வேண்டுமென்று டீவி என்ற சொல்லைத் தான் மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். அதோ போல எளிமையான சுருக்கமான ஒரு தமிழ்ச் சொல்லை இன்று நாம் உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.

“புதியன புகுதல் வழுவல. ஆனால் உருவாக்கப்படும் சொல் தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்துக்கு உட்ப்ட்டதாக இருக்கவேண்டும்” என்றார் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.

“டெலிவிஷனின் சுருக்கம் டீ.வி. அதோ போல நாம் தொலைக் காட்சியின் சுருக்கமாக தொ.கா. என்று அழைக்கலாம்” என்றார் பவளசங்கரி.

“அது எழுதுவதற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். மேலும் ஆங்கிலத்தில் டீ.வி. என்று புள்ளி வைத்து எழுதுவதில்லை. அது போல இங்கும் புள்ளி இல்லாமல் ஒரு தனிச் சொல்லாக இருக்க வேண்டும்” என்றார் தலைவர்.

“புள்ளியை எடுத்து விட்டு தொகா என்று சொல்லலாமே” என்றார் இன்னம்பூரான்.

“பகா எண் என்றால் பகுக்கப்பட முடியாத எண் என்பது போல் தொகா என்று சொன்னால் தொகுக்கப்படாத என்று பொருளாகிவிடும். இன்று தொலைக்காட்சியில் தொகுப்பாளர் இல்லாத நிகழ்ச்சியே கிடையாது. எனவே இது பொருந்தாது” என்றார் ஒருவர்.

‘ஆ’காரம் கடைசியிலே வருமா என்றார் இன்னொருவர்.

“கவலைப்பட வேண்டாம் ஐயா. டீ, சமோசா சொல்லியிருக்கிறோம். சற்று நேரத்தில் வந்துவிடும்” என்றார் வெ.சா.

“நான் அதைச் சொல்லலை ஸ்வாமி. தமிழ்ப் பெயர்ச் சொற்களில் ஆவன்னாவில் முடியும் சொற்கள் உண்டா?” என்று கேட்டேன்.

“உணவகம் நில்லாப் பேருந்து, செல்லாக் காசு என்பதில் உள்ள நில்லா, செல்லா  என்பவை தமிழ்ச் சொற்கள் தாமே”  இது பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.

நான் கேட்டது பெயர்ச் சொற்களை.

“திருவானைக்கா, திருவெஃகா என்பவை உண்டே” இது இன்னம்பூரான்.

“அவை எல்லாம் கா என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் கொண்டவை. தா, வா என்ற வினைகள் உண்டு. கா, மா என்ற ஓரெழுத்துப் பெயர்ச் சொற்கள் உண்டு. நான் கேட்டது ஆகாரத்தில் முடியும் பல எழுத்துப் பெயர்கள் உண்டா என்பது தான்”

லெபோ கூறினார், “பலா, நிலா, உலா, நுணா, கனா என்று பல சொற்கள் உண்டு”

“தொகா என்று சொல்வதற்குப் பதிலாக தொக்கா என்று சொல்லலாம். யாழ்ப்பாணத்தில் அப்படித் தான் சொல்கிறோம்” என்றார் மறவன்புலவு சச்சிதானந்தம்.

தொக்கா என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

“தொக்காவே கதியென்று இருப்பவன்

மக்காக ஆகிடுவான் விரைவில்

எக்காலமும் வாய்ப்பு வரலாம்

கொக்காகக் காத்திருந்து குத்துங்கள்”

என்று கவிதை பாடினார் அண்ணா கண்ணன்.

எல்லாரும் கை தட்டினார்கள்.

கைதட்டல் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். எதிரில் தொக்காவில் தீபாவளிப் பட்டி மன்றம் நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே தூங்கிவிட்டேன் போல இருக்கிறது.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.