குறளின் கதிர்களாய்…(318)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(318)
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
– திருக்குறள் -468 (தெரிந்து செயல்வகை)
புதுக் கவிதையில்...
நிறைவேறும் வழியை
நன்றாய் அறிந்தபின்
தகுந்த வழியில்
முயற்சி செய்யாமல்
கண்டபடி
செய்யும் முயற்சி,
உதவிக்குப்
பலர் கூடி
அழிவு வராமல்
பாதுகாத்தாலும்
நிறைவேறாமல் அது
குறைபட்டு அழிந்திடும்…!
குறும்பாவில்...
தகுந்த வழியறிந்து அதன்படி
முயலாத முயற்சி, பலர்நின்று பாதுகாத்தாலும்
பலனின்றி நிறைவேறாது அழியும்…!
மரபுக் கவிதையில்...
செயலைச் செய்யு முன்னதாக
செய்யும் வழிமுறை நன்கறிந்தே
முயற்சி செய்வ தல்லாமல்
முறையிலா வகையில் முயன்றாலது
உயர்வை யென்றும் தருவதில்லை,
உதவியாய்ப் பலபே ரிருந்தாலும்
முயற்சி யதுவும் நிறைவுறாதே
முற்று மழிந்திடும் குறைபட்டே…!
லிமரைக்கூ..
செயல்படுமுன் அறிந்திடு வழியை
உதவிக்குப் பலரிருந்தும் தவறான முயற்சி,
அழிவுறப் பறித்திடும் குழியை…!
கிராமிய பாணியில்...
செயல்படணும் செயல்படணும்
வழிமொறயறிஞ்சி செயல்படணும்,
மொறயான வழியறிஞ்சி
மொயற்சி செய்யணும்..
செய்யும் வழிமொறய
சரியாத் தெரிஞ்சிக்காம
செயலுல எறங்க
மொயற்சி செய்யாத,
ஒதவிக்குப் பலபேரிருந்தாலும்
தவறான மொயற்சி
கொறபட்டு
அழிவத்தான் தருமே..
அதால
செயல்படணும் செயல்படணும்
வழிமொறயறிஞ்சி செயல்படணும்,
மொறயான வழியறிஞ்சி
மொயற்சி செய்யணும்…!