குறளின் கதிர்களாய்…(321)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(321)
யாதானும் நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
– திருக்குறள் – 397 (கல்வி)
புதுக் கவிதையில்...
கற்றவனுக்கு
எந்த நாடும்
எந்த ஊரும்
சொந்த நாடாய் ஊராய்
ஆகிவிடும்..
அவ்வாறிருக்க,
அத்துணைச் சிறப்புமிக்கக்
கல்வியை ஒருவன்
இறக்கும் காலம் வரைக்
கற்காமல்
காலத்தை வீணே
கழிப்பதும் ஏனோ…!
குறும்பாவில்...
கல்வியில் சிறந்தவனுக்கு எந்நாடும்
எவ்வூரும் தனதாகிவிடுகிறது, அத்தகு கல்வியைச்
சாகும்வரை யொருவன் கல்லாததேனோ…!
மரபுக் கவிதையில்...
கல்விச் செல்வம் கையிருந்தால்
காணு முலகில் எந்நாடும்
எல்லா ஊரும் தன்னதுதான்
என்ற நிலையே வந்திடுமே,
கல்விச் சிறப்பை அறிந்திருந்தும்
கருத்தி லதனைக் கொள்ளாதே
கல்லா தொருவன் சாவுவரை
காலங் கடத்தல் வீணன்றோ…!
லிமரைக்கூ..
சொந்தநாடாய் ஊராயாகுமித் தரையில்
கற்றவனுக் கென்கையில், ஒருவன் வாழ்வில்
கல்லாததேனோ சாகின்ற வரையில்…!
கிராமிய பாணியில்...
படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
படிப்புத்தான் சிறப்புண்ணு ஒணர்ந்து
பாடுபட்டு எல்லாரும் நல்லாப்படிக்கணும்..
எந்த நாடும் எந்த ஊரும் படிச்சவனுக்குச்
சொந்த நாடா சொந்த ஊரா ஆயிடுமே,
அப்புடி மகிமயுள்ள படிப்ப ஒருத்தன்
படிக்காமச் சாகிறவர சும்மாயிருந்தா
அதுனால ஒருபயனும் இல்லையே..
அதால
படிக்கணும் படிக்கணும் நல்லாப்படிக்கணும்,
படிப்புத்தான் சிறப்புண்ணு ஒணர்ந்து
பாடுபட்டு எல்லாரும் நல்லாப்படிக்கணும்…!