புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006.                  
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

விரும்பிக் கூறிய ‘வேண்டாதவை’

முன்னுரை

நூல்களுக்குப் புற அழகு ஓவியர்களாலும் அச்சகத்தாலும் வழங்கப்படும் வண்ணங்களால் அமையலாம். அக அழகு அவ்வாறு கொடுத்து அமையாது. முன்னது கண்ணுக்குரியது. அதனால் அது சாத்தியம். பின்னது புலன்களுக்கு உரியது. அதனால் அது அவர்களால் இயலாது. படைப்பாளனின் உள்ளம் மொழிவழி வெளிப்படும் அழகுக் கோலமே நூலின் அக அழகைத் தீரமானிக்கும். சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் முதலிய நூல்கள் புறத்தோற்றத்தில் பெரியன. சிவஞான போதமும் ஆத்திசூடியும் அளவால் மிகச் சிறியன. இவ்விரண்டு தன்மையிலமைந்த நூல்களின் பெருமையை உள்ளடக்கமே தீர்மானிக்கிறது. எத்தனைப் பக்கம் என்பதல்ல அவற்றுக்குப் பெருமை சேர்ப்பது. எவ்வளவு ஆழமான கருத்துக்கள் எப்படிச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதுதான் பெருமை சேர்க்கும். கருத்தாழமும் அக்கருத்துக்களை வெளிப்படுத்தும் உத்திகளின் பேராற்றலுமே நூல்களின் வெற்றிக்கு மூலதனம். காதல், வீரம் என்னும் இரண்டே பாடுபொருள்களைப் பற்றி இத்தனையாயிரம் பாடல்களைச் சங்கச் சான்றோர்கள் சலிப்படையாமல் பாடியிருப்பதற்கும் நாமும் சலிப்படையாமல் தலைமுறைகள் பல தாண்டியும் படித்து வருகிறோம் என்பதற்கும் சொல்லும் முறைதான் காரணம். அவ்வாறு சொல்லும்போது இருக்க வேண்டிய அழகு, நீக்க வேண்டிய குற்றம் இவைகளைப் பற்றியெல்லாம் தமிழிலக்கணங்கள் விரிவாக ஆராய்கின்றன. குற்றமேதும் இல்லாத நூலை எழுதுபவனைத்தான் ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவன்’ என்பர். அந்தக் குற்றங்களுள் ‘வெற்றெனத் தொடுத்தல்’ என்பதும் ஒன்று. வேண்டாது கூறலும் என்றாலும் பொருந்தும். எத்தகைய பயனும் இல்லாமல் தேவையின்றிச் சில சொற்கள் சில நூல்களில் பயின்று வருவது கண்கூடு. சான்றோர் செய்த நூல்களிலும் இத்தகைய குற்றங்கள் இருக்குமா? இருந்தால் அதனைக் கண்டிக்க இயலுமா? இல்லையாயின் அதற்கான காரணமாகிய அமைதியைக் கண்டறிய  இயலுமா? என்னும் ஐயங்கள் எழுவது இயற்கை. திருக்குறளில் ஒரு சில குறட்பாக்களில் பயின்று வந்துள்ள வேண்டாத சொற்களைப் பற்றி ஆய்கின்ற இக்கட்டுரையில் அதற்கான விளக்கம் ஓரளவு கிடைக்கலாம்.

‘வேண்டாத சொற்கள்’ ஒரு விளக்கம்

“ஐயா நீங்க உங்க வாயால சொல்லாதீங்க!” இத்தகைய வழக்காற்றினைப்  பலரும் செவிமடுத்திருக்கக்கூடும். எல்லாவகையிலும் உயர்ந்தார் ஒருவர் மனம்புழுங்கிச் சில சொல் சொல்லுகிறபோது ‘அவை பலித்துவிடுமோ?’ என்னும் அச்சமும் ‘பலிக்கும்’ என்னும் நம்பிக்கையும் சமுதாயத்தில் நிலவும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. சமுதாயம் அச்சொற்களை ஒலியின் காரியமாகக் கருதாமல் சத்தியத்தின் வெளிப்பாடாகக் கருதுவதே இத்தகைய மனநிலைக்குக் காரணம். இதனால் என்ன மாற்றம் என்றால், சொல்லுக்குக் கருவியான வாய் பதவியிழப்புக்கு ஆளாகிறது. அதிலிருந்து வருகிற சொற்களுக்கான காப்புரிமை சொல்கிறவருடைய பண்பாடு, ஒழுக்கம், சான்றாண்மைக்குச் சென்றுவிடுகிறது. அந்தத் தொடரில் அழுத்தம் ‘வாய்க்கு’ அன்று. ‘உங்க’ என்னும் சொல்லுக்கு என்பதை நோக்குதல் வேண்டும். அவர் வாயினது சிறப்புக்கு அச்சொற்கள் பொருந்தாமையை நோக்கி மக்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சி வெளிப்பாடு இது. நாம் எதனைக் கவனிப்பதில்லை? ‘வாயால் சொல்லாதீர்கள்’ என்பதை!. வாயைத்தவிர வேறு எக்கருவியால் சொல்ல இயலும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பேசுவதற்கான கருவி வாய்!. இருந்தாலும் கேட்டு அமைதியடைகிறோம்!.

இதனை உடன்பாடாகவும் கேட்டிருக்கக்கூடும்!. “நீங்க உங்க வாயால ஒரு சொல் சொல்லுங்கள் அது போதும் எனக்கு” எதிர்மறையை மறுதலித்த நாம் உடன்பாட்டுக்காக ஏங்குகிறோம். இருநிலையிலும் சொல்வார் பெருமையே சொற்களின் காரணமாக உணரப்படும். அல்லவர் வசவினைப் பெறுதலின் நல்லவர் வாழ்த்தினைப் பெறுவது சிறப்பு. ‘அறம் பெருக அல்லவை தேய்வது’ இயல்பல்லவா?  இவ்விரண்டிடங்களிலும் ‘வாய்’ என்பது சொல்லுக்கான கருவி என்னும் நிலையிலிருந்து மாறிச் சொல்வார்தம் பண்புக்கான குறியீடாகிவிடுவதைக் காணலாம். ஒருவன் பண்புகளால் உயர்ந்திருப்பான் எனின் உலக வழக்கு இப்படியும் அமையும் “அவன் வாயில் விழாதே!’ ‘வாயில் விழாதே’ என்றால் ‘வாயில் சென்று விழுதல்’ என்று பொருளன்று. அவரின் எதிர்மறை வசவுக்கு நீ ஆளாகிவிடாதே!’ என்று பொருள்.

மொழி மக்களுக்கானது. மொழியியல் அறிஞர்களுக்கானதன்று. அது பாமர மக்களின் பண்பாட்டுக் கூறுகளில் தலையாயது. ஓரினத்தின் உயிர் அடையாளம் மொழியே!. அவ்வினத்தின் வழக்கு நிலைகள் பெரும்பாலும் அம்மொழியின் இலக்கிய இலக்கணங்களில் தாக்கத்தை உண்டாக்கும் என்பது தொல்காப்பிய நெறி. அந்த நெறியில் நூல் செய்த திருவள்ளுவர் வேண்டாதன சிலவற்றை விரும்பிக் கூறிய நுட்பத்தை இனி ஆராயலாம்.

வள்ளுவர் கண்ட வாய்ச்சொல்

திருவள்ளுவர் இரண்டு வகையான மனிதர்களின் வாய்ச்சொற்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். உடன்பாட்டு வகையால் அதாவது உயர்பண்புகளின் தொகுப்பாக விளங்கிப் புகழ்பெற்ற சான்றோர்களின் வாய்ச்சொற்களின் சிறப்புக்களைப் பதிவிடுவதைக் காணலாம். எழுத்துக்களின் காரியமாக வெளிப்படுவதால் தமிழில் எழுத்துப் பிறக்கும் இடங்களிலிருந்து சொற்கள் பிறக்கும் இடங்கள் மாறுபடுவதில்லை. அதே நேரத்தில் புற உறுப்புக்களின் தன்மையைச் சொற்களுக்கு அவர் ஏற்றுவதில்லை. விளக்கமாகச் சொன்னால் சொற்களின் இறுதிவாயில் உதடுகள். அவ்வுதடுகளின் இனிமையைச் சொற்களுக்கு ஏற்றியுரைக்கும் இயல்பு திருவள்ளுவருக்கு இல்லை.

இன்சொல்லுக்கு வரைவிலக்கணம் தந்த வள்ளுவர் உயிரிரக்கம், மனத்துக்கண் மாசின்மை, வீடுபேற்றுக்கு நிமித்த காரணமாகிய செம்பொருள் கண்டார் சொல்வது என்னும் மூன்று பண்புகளின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதை,

“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (91)

என்னும் குறட்பாவில் தெளிவுபடுத்தியிருக்கிறார். தற்காலத்தில் வழங்கும் ‘பழகுதற்கு இனியவர்’ என்னும் ‘உதட்டுறவு’ உதிர்க்கும் பாசாங்கு மொழி திருவள்ளுவர் அறியாதது. இந்தக் குறட்பாவுக்குப் பொழிப்புரை தந்த  பரிமேலழகர்,

“அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் சொல் இன்சொல்லாவன“

என வரையறைக்குக் கூடுதல் தெளிவு தருகிறார். அன்பு, வஞ்சனையற்ற தன்மை, அறமுணர்தல் ஆகிய முப்பெரும் பண்புகளுக்கும் சொற்களின் மூலாதாரமான தொண்டை, நா முதலிய உறுப்புக்களுக்கும் நிலவும் தொடர்பின்மையைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். இத்தகைய பெருமக்கள் அடிமனத்திலிருந்து வரும் உண்மையான சொற்கள் வாய்வழியாக வெளிப்படுகிறபோது அந்த வாயும் அகப்பண்புகளால் சிறப்படைகிறது என்பதாம். அதனால்தான்,

“‘வாய்’ என வேண்டாது கூறினார் தீய சொல் பயிலா என்பது அறிவித்தற்கு”

என்று பரிமேலழகர் நுண்ணியம் காண்கிறார். ‘சொல்’ என்ற அளவிலேயே ‘வாய்’ என்பது பெறப்படுதலின் ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய் என்னும் முன்னொட்டு வேண்டாதது. ஆனால் வேண்டாத அச்சொல்லைப் பெருமக்களின் சிறப்புடைய வாயென்பதைப் பிரித்துக் காட்டலின் திருவள்ளுவர் விரும்பியே எழுதினாராம்! அந்த இடத்தில் ‘வாய்’ என்பது ஒலித்தொகுப்பின் வாயில் அல்லவாம்! பண்புக்கூறுகளின் வாயிலாம். இது பரிமேலழகர் பார்வை!.

வழுக்கத் தெரியாத வாய்

‘நாக்கு தவறிச் சொல்லிவிட்டேன்’, ‘வார்த்தை பிசகிவிட்டது’, ‘அவசரத்தில் சொல்லிவிட்டேன்’, ‘பதற்றத்தில் ‘சொல்லிவிட்டேன்’, ‘கவனிக்காமலேயே சொல்லிவிட்டேன்’ இதுபோன்ற தொடர்களை நம்மில் பலரும் கேட்டிருக்கக் கூடும். இந்தத் தொடர்களை ஊன்றிக் கவனித்தால் நாக்கின் பிறழ்வாகவே சொற்பிழைகள் தோன்றுகின்றன என்னுமாறு அமைந்திருப்பதைக் காணலாம். அடிமனத்தில் உள்ளதுதான் வாய்வழியாக வெளிப்படுகிறது என்பது உளவியல் உண்மை. இந்த உண்மையை உணர்ந்தவர் திருவள்ளுவர்.

“ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்” (139)

என்பது ஒரு குறள். இதற்கு,

“மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள் ஒழுக்கம் உடையவர்க்கு முடியா”

எனப் பொழிப்புரை தருகிறார் பரிமேலழகர். இந்தப் பொழிப்பிலேயே இந்தப் பத்தியின் தொடக்கக் கருத்துக்களின் சாரத்தைக் காணமுடியும். ‘வழுக்குதல்’ என்பது புறத்தொழில். ‘தரை வழுக்கும்’, ‘வழுக்கு நிலம்’, ‘பாறை வழுக்கியது’, ‘வழுக்கி விழுந்தான்’ என்பன நோக்குக. ஆனால் பரிமேலழகர் வழுக்கியும் என்னும் சொல்லுக்கு ‘மறந்தும்’ என உரை காண்கிறார். ‘மறத்தல்’ நினைவு தடுமாறுதல். நல்ல பண்போ தீய பண்போ அது பழக்கமான, வழக்கமான ஒன்றாகிவிடுமானால் அதனை அவ்வளவு எளிதில் மாற்ற இயலாது. சொற்கள் வாயினது செயலாக மட்டும் இருக்குமானால் இந்தத் தவறு நடக்காது. உரையும் பொருந்தாது. அது மனத்தின் வெளிப்பாடாக, நடத்தையின் வெளிப்பாடாக,  ஒழுக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தால்தான் இந்த உரை பொருந்தும். மற்றவர்களுக்கெல்லாம் சொற்களுக்கு வாயும் நாக்கும் கருவிகள். ஆனால் சான்றோர்களுக்கு அவை தடங்கள். மூலம் உள்ளம். உள்ளம் தூய்மையாயின் வாக்கு அதனை வெளிப்படுத்தும். ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே வாய்மையுண்டாகும்’ என்னும் மகாகவியின் தொடர் நோக்குக.  விளக்கவுரையில் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்,

“சொலல்’ எனவே அமைந்திருக்க ‘வாயால் என வேண்டாது கூறினார் ‘நல்ல சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு”

மிகத்தெளிவாக அமைந்திருக்கும் இந்த விளக்கவுரையில் வாய் என்பது எப்படி வேண்டாத சொல் என்பதையும் விளக்கிவிடுகிறார் பரிமேலழகர். விளக்கி ‘நல்ல சொற்கள் பயின்ற நா, இத்தகைய சொற்களை மறந்தும் கூறாது’ என்னும் தனது கருத்தினைக் குறிப்பாகப் புலப்படுத்தவே ‘வாய்ச்சொல்’ என்று கூறினாராம்! சொல்லுக்குக் கருவியாக வாய் இருப்பினும் அவ்வாயை ஒழுக்கத்தின் தலைவாசலாகக் கருதுகிறார் என்பதாம்!

இல்லறத்தான் வெல்லுமிடம் இதுதான்!

‘துறவறம்’ உயர்ந்தது என்பதனால் ‘இல்லறம்’ தாழ்ந்தது என்பதன்று.  இல்லறத்தின் நோக்கம் துறவறம் என்பதாலும் வாழ்வின் உச்சநிலை ‘வீடுபேறு’ என்பதாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படையாகிய இல்லறம் தனக்குரிய மதிப்பை என்றும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. திருவள்ளுவர் சில அறங்களைத் துறவறத்திற்கே ஒதுக்கியிருக்கிறார். உலகியல் நோக்கி அத்தகைய அரிய அறங்களை இல்லறத்தான் கடைப்பிடிக்க இயலாது என்பதே அதன் காரணமாகும். உலகியலில் கடுஞ்சொற்களைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலை இல்லறத்தானுக்கு ஏற்படும். பொய், குறளை, கடுஞ்சொல், பயனிலசொல் என்னும் சொற்குற்றங்கள் நான்கனுள் திருவள்ளுவர் பொய்யை இல்லறத்தானுக்கு விதிவிலக்காக்கி அதனைத் துறவறவியலில் ‘வாய்மை’ என்னும் அதிகாரத்தில் விளக்கிக் காட்டுவார். சொற்குற்றங்களைப் பொறுக்கும் பேராற்றல் துறவியைவிட இல்லறத்தானுக்கே உண்டு என்பது இதனால் பெறப்படும். இதனைத்,

‘துறந்தாரின தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற்பவர் (159)

என்னும் குறுட்பாவில் பதிவு செய்திருக்கிறார் திருவள்ளுவர். “இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர் துறந்தாரின் தூய்மை உடையார்’ என்னும் இந்தக் குறட்பாவிற்கு,

“நெறியைக் கடந்தார்வாய் இன்னாச் சொல் பொறுப்பவர், இல்வாழ்க்கைக்கண் நின்றேயும் துறந்தார்போலத் தூய்மையுடையார்.”

எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர், ‘நெறிகடந்தவர் சொல்’ என்னாது ‘நெறிகடந்தவர் வாய்ச்சொல்’ என்னும் குறட்பா தொடர் பற்றி விளக்கவுரையில் கூறுகிறார். துறவிகள் ‘துறப்பினமாதலின்’ அங்கே தர வேறுபாடுகள் இல்லை. அதனால் இத்தகைய நெருடல் இல்லை. இருக்க வாய்ப்பில்லை. உலகியலில் பலதரப்பட்ட மக்களோடு வாழவேண்டிய கடப்பாடு இல்லறத்தானுக்கு உண்டாதலின் ‘நெறிகடந்தவர்தம் வாய்ச்சொல்’ என விதந்தோதுகிறார். நெறி கடப்பதற்கு இங்கே வாய்ப்புண்டு ஆதலின்.

“வாய் என வேண்டாது கூறினார், தீய சொற்கள் பயின்றது எனத் தாம் வேண்டியதன் இழிபு முடித்தற்கு”

‘நெறிகடந்தவனுடைய வாய்ச்சொல்’ என்பதால் நெறிகடந்ததால் பண்பற்ற சொற்கள் என்பது பெறப்படும். நல்ல சொல்லுக்கும் தீய சொல்லுக்கும் வாயே கருவியானாலும், இங்கே நெறிகடந்தவனுடைய இழுக்கம் சொல்வடிவில் வாய்வழியாக வருகிறது என்பதாம். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல், செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்னும் இவற்றுக்கும் இறந்தார் வாய்ச்சொல்லிற்கும் உள்ள வேறுபாட்டினை இதனால் புரிந்து கொள்ள இயலும். முன்னவரின் உயர்வு அவர்தம் சொல்லால் வெளிப்படுவதுபோலப் பின்னவரின் இழிவும் அவருடைய சொல்லால் வெளிப்படுகிறது என்பதாம். மூன்றும் வாய்ச்சொற்களே! நடத்தை வேறுபாடு நாவில்!

உள்ளமா? நெஞ்சமா? மனமா?

மூளையைச்  சிந்தனைக்கருவியாகக் கொண்டால் உள்ளம், நெஞ்சம், மனம் ஆகியவற்றை உணர்வுக்கருவிகளாகக் கொள்ளலாம். திருவள்ளுவர் இவற்றோடு ‘அகம்’ என்பதையும் இணைத்துக் கொள்கிறார். ‘அகம் நக’ என்பது குறட்பாத் தொடர். ‘நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்’, ‘மனத்தொடு வாய்மை மொழியின்’, ‘உள்ளத்தால் பொய்யாதொழுகின்’ என்பனவெல்லாம் திருக்குறளில் காணக்கிடக்கின்ற சொற்களே! எனினும் இவற்றுள் நுட்பமான வேறுபாடு நிலவுகிறதோ என்னும் ஐயம் உண்டு. அது பற்றிய ஆராய்ச்சி தனி. இம்மூன்று சொற்களிலும் வினைமுதலாகக் கொள்ளப்படுவது உள்ளமே!, உள்ளுவதால் உள்ளம்!. உள்ளம் உள்ளும்! நெஞ்சத்திற்கும் மனத்திற்கும் அத்தகைய வினைப்பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. நெஞ்சத்தின் வினை, மனத்தின் வினை ஆகியவற்றை அறியக்கூடவில்லை. இந்நோக்கு திருக்குறளை மட்டும்  அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. ‘வாய்ச்சொல்’ என்னும் தொடரில் ‘வாய்’ என்பது எவ்வாறு வேண்டாத சொல்லாக நின்றதோ அவ்வாறே ‘உள்ளத்தால்’ என்ற சொல்லும் வேண்டாத சொல்லாக நிற்பதைத் தொடர்ந்து காணலாம்.

நினைவும் செயலும் ஒன்றே

திருக்குறள் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் செம்பாகம் அறத்துப்பாலுக்குரியது. அவற்றுள் ஒழுக்கமுடைமை, அன்புடைமை என்னும் இரண்டு உடைமைகளைச் சொற்களுக்கான மூலாதாரமாகக் கருதுகிறார் திருவள்ளுவர். ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்’லும் ‘ஈரம் அளைஇ செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்லும்’ ஆராயப்பட்டன. அருளை உடைமையாகக் கொண்ட அருளாளர்கள் தீயன எண்ணமாட்டார், தீயன சொல்லமாட்டார், தீயன செய்யமாட்டார் என்பது நியதி.

“உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்” (282)

என்னும் குறட்பா தீயன எண்ணல் பற்றிக் கூறுகிறது. இல்லறச் சூழல் காரணமாக மனத்தளவில் (ஒழுக்க நெறிகளில்) வழுவும் நேர்வுகள் உண்டு. துறவறத்தில் அது முற்றிலும் கடியப்படுகிறது. எனவே அருளாளர்கள் தீயனவற்றை உள்ளத்தாலும் நினைக்கமாட்டார்கள் என்பதாம். இந்தக் குறட்பாவிற்குக்,

“குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் பாவம்! ஆதலால் பிறனொருவன் பொருளை அவன் அறியா  வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க”

என்னும் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

‘உள்ளத்தால்’ என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது கருதியது முடித்தற்கு.”

என விளக்கவுரையில் உள்ளுதலாகிய வினைக்கேயுரிய உள்ளத்தை ‘உள்ளத்தால் உள்ளலும்’ எனக் கூறியது பற்றிய தனது கருத்தினைப் பதிவு செய்கிறார். மற்றையோர் உள்ளம் ஊழ் காரணமாகத் தீயன எண்ணிவிடுமாம். ஆனால் துறந்தாராகிய அருளாளர் வழுக்கியும் தீயன எண்ணமாட்டாராம். அந்தக் கருத்தினைப் புலப்படுத்தவே (அந்தச் சிறப்புடைய) ‘உள்ளத்தால் உள்ளலும் தீது’ எனச் சொல்லுகிறாராம்!

அருளிருக்கும் இடத்தில் சினத்துக்கு இடமில்லை!

துறவிகளுக்கு எதிரி வெகுளி. செல்லிடத்தும் தீது. செல்லாவிடத்தும் அது தீது. அது அவர்தம் இனத்தைச் சுடும். தீய பிறக்கும். இத்தகைய எதிர்மறைச் செயல்களை அது செய்யுமென்றால் ‘வெகுளாமை’ இவற்றுக்கு மறுதலையான செயல்களை செய்ய வேண்டுமென்று திருவள்ளுவர் சொல்ல வேண்டுமல்லவா?  சொல்லுகிறார்.

“உள்ளிய எல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்” (309)

வெகுளியை ஒரு பொருளாகக் கொள்ளாத துறவி தான் எண்ணியதையெல்லாம் ஒரே நேரத்தில் உடனே பெறுவான் என்பது குறள். இந்தக் குறட்பாவின் கருத்தினைத்,

“தவம் செய்யும் அவன் தன் மனத்தால் வெகுளியை ஒரு காலும் நினையான் ஆயின் தான் கருதிய பேறெல்லாம் ஒருங்கே பெறும்”.

என்னும் பொழிப்புரையால் பெறலாம். விளக்கவுரையில் உள்ளுவதே உள்ளத்தின் தொழிலாய் இருக்கவும் உள்ளத்தால் உள்ளான் எனின் எனத் திருவள்ளுவர் வேண்டாது கூறியதற்குக் காரணம் கூறுகிறார்.

“உள்ளத்தால் என வேண்டாது கூறிய அதனால் அருளுடை உள்ளம் என்பது முடிந்தது.”

துறவியின் உள்ளம் தவ உள்ளம். தவத்தைச் செய்து முதிர்ச்சியடைந்த உள்ளம். அந்த உள்ளத்தில் வெகுளி தோன்றாது. வெகுளி தோன்றாத, அருளுடைய அந்த உள்ளத்தைப் பிரித்துக்காட்டுகிறாராம் திருவள்ளுவர்.

பிரிக்க முடியாததும் கலந்தே நிற்பதும்!

இணைந்திருந்தாலும் நகமும் சதையும் பிரிக்க முடியும். மலரும் மணமும்  கலந்தே நிற்பதால் பிரிக்க இயலாதது. ‘வாசமில்லா மலரிது’ என்பது திரையிசைப்பாடல் தொடர். ‘மலரும் மணமும் போல’ என்பது உலகியல். கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம். ‘பண்’ பாட்டோடு இணைய வேண்டும். ‘பண்ணோடு பிறந்தது இராகம், குலப்பெண்ணோடு பிறந்தது நாணம்’ என்பது வழக்கு. இந்தப் பின்புலத்தில்தான் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் பெண்ணியப் பண்புகளை நோக்க வேண்டியதிருக்கிறது.

“பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை யுடைத்து” 907

என்னும் குறளுக்கு,

“(நாண் இன்றித்) (தன்) இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து நிற்கின்றவனது ஆண் தன்மையின் நாணினை உடைய (அவள்) பெண்தன்மையே மேம்பாடு உடைத்து”

எனப் பொழிப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். ‘நாணம்’ என்பது பெண்ணுக்குரியது ‘நாண்’ என்பது ஆணுக்குரியது. ‘நாணுடைமை’ என்னும் அதிகாரம் சான்றோர்களுக்குரியது. இது தமக்கு வரும் பழியையும் பிறர்க்கு வரும் பழியையும் ஒப்ப மதிப்பது. உண்மையில் இந்த ‘நாண்’ ஆணுக்குப் பெருமை தரும். அந்த நாணம் பெண்ணுக்குப் பெருமை தரும். அக்காலச் சூழலில் புறத்தொழுக்கம் அறியாத பெண் பழிபாவங்களுக்கு அஞ்சும் நிலை இருந்திருக்க வாய்ப்பில்லை.

கணவன்வழி மனைவியொழுகுதலே இல்லறம். மனைவி சொல் கேட்டுக் கணவன் ஒழுகுதல் இல்லற நெறியன்று. எனின் இல்லறத்தைக் கொண்டு செலுத்தும் ஆற்றலும் பண்பும் ஆணிடம் நிறைந்திருக்க வேண்டும் என்பது பொருள். இது மாறி நிகழுமாயின் இல்லறம் தடம்புரளும். நாணமில்லா ஆண்மையினும் நாணமுடைய பெண்மை போற்றுதற்குரியதாக ஆகிவிடும். இதனைத்தான் மேற்கண்ட குறட்பாவில் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். அவ்வாறு வலியுறுத்தும்போது, ‘நாணுடைப் பெண்’ எனச் சுட்டுகிறார். இதனால் ‘நாணமில்லாத பெண் இருப்பாளோ?’ என்னும் ஐயம் வருதல் இயல்பு. அதனைக் களைகிறார் பரிமேலழகர். எப்படி?

“நாணுடைப் பெண் என வேண்டாது கூறியது அவள் ஏவல் செய்வானது நாணின்மை முடித்தற்காதலின் அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது”.

நாணமில்லாத ஆண்தான் பெண்ணேவல் செய்வான். அதனைக் குறிக்க எண்ணுகிறார். வள்ளுவர் ‘யாப்பு காரணமாக ‘ஆண்மையின்’ என வாளா கூறிப் பெண்ணுக்கு உரிய நாணத்தை அவளுக்கு அடையாக்குகிறார். இருப்பவளுக்குரிய பண்பை வேண்டாது எடுத்துமொழியும் வள்ளுவர் இருக்கக்கூடாத பண்பைப் பெற்றிருக்கின்ற நாணமில்லாத ஆணை அடையாளப்படுத்துகிறாராம். ஆணின் நாணமின்மையைச் சுட்டுதற்குப் பெண்ணின் நாணம் பயன்பட்டிருக்கிறது என்பதாம்!

நிறைவுரை

‘நடந்தான்’ என்றாலே ‘கால்’ என வேண்டுவதில்லை. ‘கேட்டான்’ என்றாலே போதும்! செவி எதற்கு? ‘நோக்கினான்’ போதாதா? ‘கண்களால்’ என்பதைச் சொல்ல வேண்டுமா? ‘கொடுத்தான்’ என்றாலே ‘கைகள்’ நினைவுக்கு வராதா?  ஆனால் திருவள்ளுவர் கூறுகிறார். ‘சொல்லுகிற வாய்’, ‘உள்ளுகிற உள்ளம்’, ‘நாணுடைப் பெண்’ என்றெல்லாம் வேண்டாது கூறினாலும் அவற்றை விரும்பித்தான் கூறியிருக்கிறார். எல்லா வாயும் ஒரே வாய் அல்ல. எல்லா உள்ளமும் ஒரே உள்ளம் அல்ல. இவற்றைப் பிரித்துணர்த்த விரும்பிய திருவள்ளுவரின் உட்கிடக்கை அறிந்து உரையெழுதியதுதான் பரிமேலழகர் உரைத்திறன்!

(தொடரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *