எட்டுக் கோணல் பண்டிதன் – 11

0

தி. இரா. மீனா

                 அத்தியாயம் பதினேழு

ஆனந்த நிலையையும் ,உயிரியல்பையும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் விளக்குவது இந்த அத்தியாயமாகும்.

1. மனநிறைவும், இந்திரிய அமைதியும் பெற்று தனிமையில் எவன் என்றும் இன்பமடைவானோ அவனே ஞானப் பயனையும், யோகப் பயிற்சியின் பயனையும் அடைந்தவனாவான்.

2. தன்னிடமே பிரமாண்டத் தொடரெல்லாம் நிறைந்துள்ளபடியால், உண்மை உணர்ந்தவன் இவ்வுலகில் எந்தக் காலத்திலும் துன்பமடைய மாட்டான்.

3. ஈச்சம் குருத்தை உண்டு இன்பமடையும் யானையை வேப்பிலை மகிழ் விப்பதில்லை. அது போலத் தன்னுள்ளே மகிழ்ச்சியடைபவனை உலகவிஷயங்கள் எவையும் என்றும் மகிழ்ச்சி அடையவைப்பதில்லை.

4. அனுபவித்த போகங்களில் வாதனையற்றிருப்பவனும், அனுபவிக்காத வற்றில் உதாசீனமாக இருப்பவனும் ஆகிய ஒருவன் உலகத்தில் கிடைப்பதற்கு அரியவனாவான்.

5. இந்த உலகில் போக விருப்பினரையும், மோட்ச விருப்பினரையும் காண லாம். போகம், மோட்சம் இரண்டையும் விரும்பாத பெரியவர்கள் மிக அரியவர்களாவார்கள்.

6. அறம், பொருள், இன்பம், வீடு, வாழ்வு, சாவு முதலிய எல்லாவற்றிலும் பெரியவருக்கு வேண்டல் வெறுத்தல் எதுவுமில்லை.

7. அவனுக்கு உலகம் தொலைவதில் விருப்பமில்லை. அது இருப்பதில் வெறுப்புமில்லை. அவ்வாறானவன் விரும்பியவாறு வாழ்ந்து இன்ப வடிவாகயிருக்கிறான்.

8. இவ்வாறு மனதொழிந்தவன் பார்த்தும், கேட்டும், முகர்ந்தும் அருந்தியும் சுகமாக இருப்பான்.

9. சம்சாரக் கடல் வறண்டவனது பார்வை குறியற்றும், செயல் உத்தேசமற்றும். பொறிகள் வேகமற்றும் இருக்கும். விருப்பும், வெறுப்பும் அவனுக்கில்லை.

10. அவன் விழிப்பதும், உறங்குவதுமில்லை; இமைப்பதும், திறப்பதுமில்லை; விடுபட்டோனிடம் வெளிப்படும் பரநிலை அது!

11. எல்லாவிடத்திலும் அவன் தன்னிலை நிற்பவனாக, தூய்மையான உள்ளமுடையவனாய் இருப்பான். துன்பம்  நீங்கிய முக்தனாக எங்கும் பிரகாசிப்பான்.

12. பார்த்தும், கேட்டும், தொட்டும், முகர்ந்தும், உண்டும், ஏற்றும், புகன்றும், சென்றும், விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்ட முக்தனே பெரியவன்.

13. அனைத்திலும் சுவையற்ற முக்தன் எதையும் தூற்றுவதில்லை, புகழ்வ தில்லை, மகிழ்வதில்லை, கோபிப்பதில்லை, கொடுக்கல் வாங்கல் அவனிடமில்லை.

14. காதலறும் பெண்ணைக் கண்டும், அணுகி வரும் சாவைக் கண்டும் உள்ளம் கலங்காது தன்னிலை நிற்கும் பெரியோன் முக்தனேயாவான்.

15. அனைத்திலும் சமதிருஷ்டி உடைய தீரனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும், ஆணிலும், பெண்ணிலும், ஐஸ்வர்யத்திலும், ஆபத்திலும் எந்த விஷேஷமுமில்லை.

16. உலகச் சுழலற்றவனிடம் வருந்துதலில்லை, இரக்கமுமில்லை; செருக்கில்லை, தாழ்வுமில்லை, வியத்தலில்லை, குழப்பமுமில்லை.

17. முக்தன் விஷயங்களை வெறுக்க மாட்டான் விரும்பவுமாட்டான். என்றும் பற்றற்ற உள்ளத்தோடு நேர்ந்ததையும், நேராததையும் ஏற்றுக் கொள்வான்.

18. அகத்தே ஒன்றுமில்லாதவன். நன்மை, தீமையென்ற வித்தியாசங்களை உணர மாட்டான். அவன் தனிப் பரநிலை பொருந்தியவன் போலும்.

19. நான், எனது அற்று உண்மையில் எதுவுமில்லையெனத் துணிந்து, உள்ளே ஆசையற்றவன், செய்தும் செய்யாதவனே.

20. அகந்தை நழுவியவன் மனம், ஒளி, மயக்கம், கனவு, அழியாமை ஆகியவையற்ற ஒன்றில் நிலையுற்றவனாவான்.

                   அத்தியாயம் பதினெட்டு

எல்லாவற்றையும் துறந்து, தன்னிலையில் சும்மா இருப்பதுவே சுகமென்றும், பிற சாதனைகள் சிறுவருக்கேயென்றும், தன்னிலை நின்றவனுக்கு எக்கடமையும், இரட்டையும், விகற்பமுமில்லையென்றும், ஜீவன் முக்தனது இயல்பு விசித்திரமானது, தீனர்களாம் பாமரருக் கும், தீரனாம் அவனுக்கும் வெகுதூரமென்றும், ஞானியை ஞானியே அறிய முடியுமென்றும், வாழ்விலும், சாவிலும், தனிமையிலும், ஜனக் கூட்டத்திலும் மெய்ப் பொருளில் நிலைத்தவனாக இருப்பான் என்றும் அஷ்டவக்கிரர் ஜனகருக்குக் கூறுவது இவ்வத்தியாயமாகும்.

இ்ந்த அத்தியாயத்தில் மொத்தம்  நூறு சுலோகங்கள் உள்ளன. அவை மேலும் மூன்று தொடர்களில் இடம் பெறும்.

1. ஞானம் ஏற்படுகின்ற இன்பமே வடிவாகிய அமைதியொளியைப் போற்றுவோம்.

2. உலகப் பொருட்கள் எல்லாவற்றையும் பெற்று போகங்கள் செழிக்கப் பெறலாமெனினும், எல்லாவற்றையும் துறந்தாலன்றி சுகமானவனாதல் இயலாது.

3. கடமையாம் கடுவெயிலின் அனலால் உள்ளம் பொசுங்கியவனுக்குச் சாந்தியை விட்டு சுகமெங்கேயுள்ளது.

4. இப்படைப்பு கற்பனை மட்டுமே; உண்மையிலொன்றுமில்லை. இருப்பையும், இருப்பின்மையையும் உணரும் தன்மையுடையவர்களுக்கு இன்மையென்றுமில்லை.

5. விகற்பமும், வருத்தமும், மாறுதலும் மாசுமற்ற தனது நிலை தொலைவிலுமில்லை, அருகிலுமில்லை. அது என்றும் அடையப்பட்டதேயாகும்.

6. மயக்கம் விலகித் தன்னையே மீண்டும் பெற்றோர் பார்வை மூட்ட மின்றி துன்பமில்லாமல் இருப்பார்கள்.

7. அனைத்தும் கற்பனையே; ஆத்மாவோ கட்டற்ற பழம்பொருள் என்று ணர்ந்த தீரன் சிறுவரைப் போல என்ன பழகுவது ?

8. தான் பிரம்மம் என்றும், இருப்பும் இன்மையும் கற்பனைகளென்றும் துணிந்து அவாவற்றவன் எதையறிவது? எதைச் சொல்வது? எதைச் செய்வது?

9. அனைத்தும் ஆத்மாவேயெனத் தீர்ந்து மோனத்திலிருக்கும் யோகிக்கு அது நான், இது நானல்ல என்னும் விகற்பங்கள் ஒழிந்தன.

10. அமைதியற்ற யோகிக்கு  விஷேஷமில்லை. சாதாரணமுமில்லை; மேதையில்லை; மடமையுமில்லை; சுகமில்லை, துக்கமுமில்லை.

 [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.