அக இலக்கியச் சிறுபாத்திரங்கள் – 18 (கேளிர்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

சிறுபாத்திர வரிசையில் தனிப்பாத்திரங்கள், பிற தலைமைப் பாத்திரங்களையும் துணைப் பாத்திரங்களையும் தன்னுள் அவ்வப்போது  சேர்த்துக் கொள்ளும் தொகைப் பாத்திரங்கள், தம்மளவில் குழுவாக அமையும் பாத்திரங்கள் என  இதுவரை கண்டோம். கேளிர் என்னும் தொகைப்பாத்திரம் சிக்கலான சித்தரிப்பை உடைய தொகைப்பாத்திரமாக அமைந்துள்ளது.

‘கேள்’ எனும் ஒருமைப் பெயர்ச் சொல்லுக்கு உரியோர்

சேரிப்பரத்தை  

காமக்கிழத்தியின் கோணத்தில் ‘கேள்’ என்னும் உறவுப்பெயர் நட்புடையவர் என்று பொருள்பட்டுச் சேரிப்பரத்தையைக் குறிக்கிறது. ஐங்குறுநூற்றின் மருதப் பாடல்களுள் கிழவனுக்குரைத்த பத்தில் தலைவனைப் பார்த்து அவனுக்குப் புதிதாக வாய்த்த பரத்தையை;

“நின் கேளே” (பா.- 121-128)

என்று மீண்டும் மீண்டும் சுட்டி அமைகிறாள் கூற்று நிகழ்த்தும் பெண். உரையாசிரியர் அவளைக் காமக்கிழத்தி என்கிறார்.

தலைவன்

தலைவனின் புறத்தொழுக்கம் காரணமாக அவன் தனது ‘கேள்’ இல்லை என்பதைக் காமக்கிழத்தியே;

“கேளலன் நமக்கு அவன் குறுகன்மின்” (கலி.- 68)

என்று வாயில் மறுப்பதைக் காண இயல்கிறது.

திருமணத்திற்கு முன் தன் காதலன் ஏறு தழுவி வெற்றி பெற்றுப் புண்ணோடிருக்க; ஆயர்குலத் தலைவி  எல்லையில்லா மகிழ்ச்சி கலந்த அக்கறையுடன் இறைஞ்சிக்;

“கொலையேறு சாடிய புண்ணை எம்கேளே” (கலி.- 106)

என்று பாடியாடிக் குரவை அயர்கிறாள். தன் தலைவனைக் ‘கேள்’ என்றே சுட்டுகிறாள்.

இல்லறத்தில் பிரிவின் போது ஆற்ற இயலாமல் இரங்கி;

“எம்கேள் இதனகத்து உள்வழி காட்டீமோ” (கலி.- 144)

என நிலவோடும் காற்றோடும் கடலோடும் தன் துன்பத்தைச் சொல்லி அரற்றும் மனைவிக்குக் ‘கேள்’ ஆக அமைபவன் கணவனே. தலைவி தலைவனைக் ‘கேள்’ என்று உறவுமுறை கொண்டாடும் பல பாடல்கள் தொகை நூல்களில் உள்ளன (நற்.- 359; ஐங்.- 271; கலி- 5).

தூக்கத்தின் போது கனவு கண்டு உளறிய தலைவன் பிரிந்து செல்லப் போகிறான் எனப் புரிந்துகொண்ட தலைவி தோழியிடம் மனக்குறையுடன்;

“இன்தீம் கிளவியாய் வாய்மன்ற நின்கேள்” (கலி.- 24)

என்று பேசும்போது தலைவன் தோழியின் ‘கேள்’ ஆகிறான்.

தலைவி

தலைவனுக்குத் தானே ‘கேள்’ என்று தலைவி கூறுமிடமும் உளது. ஏறுதழுவிக்;

“கேளாளன் ஆகாமை இல்லை” (கலி.- 101)

என்பது தலைவியைக் ‘கேள்’ ஆக அவன் ஆளப்போகிறான் என்ற நம்பிக்கையைத் தான் உணர்த்துகிறது.

கேளிர் என்னும் பன்மைப்பெயர்ச்  சொல்லுக்கு உரியோர்

கிளைஞரல்லா உறவினரும் நண்பரும்

குடும்ப உறவினருள் பங்காளிகளைக் கிளை என்று குழுப் பாத்திரமாகச்  சுட்டுவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க- அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- கிளை) கிளை அல்லாத உறவினரையும் நண்பரையும் கேளிர் என்னும்  தொகைப்பாத்திரத்துள்  அடக்க  இயல்கிறது.

“கேள் கேடுஊன்றவும் கிளைஞர் ஆரவும்
கேளல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்” (அகம்.- 93)

என்று தொடங்கும் பாடல் தலைவன் பொருள் தேடச் சென்ற காரணத்தைச் சொல்கிறது. இங்கு பங்காளிகள் தனியாகக் கிளைஞர் என்று சொல்லப்பட்டிருந்தும்; அதற்கு முன்னரே ‘கேள்’ என்று விதந்தோதி இருப்பது அவரல்லாத உறவினரைக்  குறிக்கிறது என்பது பொருத்தமாகப் படுகிறது. ஏனெனில் அடுத்த அடியில்  ‘கேளல் கேளிர்’ என்று தொடர்ந்து பேசுவது நட்புறவு இல்லாத கேளிரை; அதாவது நொதுமலரைச்  சுட்டுகிறது.  எனவே கேளிர் நண்பரையும் கிளையல்லா உறவினரையும் உள்ளடக்கிய தொகைப்பாத்திரம் ஆகிறது. உரையாசிரியர் கேளிர் என்ற சொல்லுக்கு சுற்றம் என்று சொல்லிச் செல்கின்றனர். ‘தமர்’ என்னும் வழக்கு பலதிறப்பட்ட  சுற்றத்தைச் சுட்டப் பயின்று வருவதை முன்னர்க் கண்டோம் (பார்க்க- அகஇலக்கியச் சிறுபாத்திரங்கள்- தமர்) சுற்றம் என்னும் பொதுப்பொருள் மேற்சுட்டிய பாடலடிக்குப் பொருந்தி வரினும் இரண்டு அடிகளையும் விளக்க முற்படும் போது; கிளையல்லா உறவினரும் நண்பரும் என்று பொருள் கொள்வது ஏற்புடைத்து ஆகிறது. இதே போல கேளிர், நண்பர், நொதுமலர் மூவரையும் விதந்தோதும் பாடல் உளது (அகம்.- 279).

“எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” (குறுந்.- 40)

என்ற தலைவனின் கேள்வியில் கேளிர் உறவினர் ஆவது ஒருதலை.

மிதமிஞ்சிய காமநோயால் அவதியுறும் தன்னை இடித்துரைப்பவர்களைப் பார்த்து;

“கேளிர் வாழியோ கேளிர் நாளும் என்” (குறுந்.- 280)

‘நெஞ்சம் பிணித்த அஞ்சிலோதியை ஒருநாள் புணர்ந்தால் அதற்கு மேல் அரைநாள் வாழ்க்கையும் வேண்டேன்’ என்ற தலைவன் பேச்சில் இடம் பெறும் கேளிர் நண்பர் கூட்டத்தினர் என்பதில் ஐயமில்லை.

கேளிர் பேச்சு

தான் சந்தித்த பெண்ணிடம் இவ்வாறு அடக்கமாட்டாத ஆர்வம் கொள்வது தவறு எனும் நண்பர் கூட்டத்திடம்;

“இடிக்கும் கேளிர் நும்குறை ஆகம்
நிறுக்கல் ஆற்றினோ நன்று மற்று இல்ல” (குறு.- 58)

என்கிறான் தலைவன். ‘என்னை இடித்துரைக்கும் உங்கள் செயலால் என் உடம்பு உருகாமல் நிறுத்த இயலுமானால் அதைக்  காட்டிலும் நற்செயல் வேறேதும் இல்லை’ என்ற மறுமொழியைத் தலைவன் உரைக்கும் காரணம் அவனது நண்பர்கள் அவனிடம் கூறிய அறிவுரையே ஆகும். ஆக கேளிர் பேசியமை பற்றித் தலைவன் உரைக்கிறான். உரையாசிரியர் இப்பாடலில் இடம்பெறும் கேளிர் பாங்கனைக் குறிப்பதாகப் கூறியுள்ளார். பாங்கன் ஒருமைக்குரிய உறவுமுறைப் பெயர்ச்சொல் ஆகும். கேளிர் பன்மைப் பெயர்ச்சொல் ஆதலால்; அப்பொருள் ஏற்புடைத்தன்று. பாங்கன் துணைப்பாத்திரமாகத் தொல்காப்பியரால் குறிப்பிடப்படுகிறான். பாங்கன் கூற்று நிகழ்த்தும் இடங்களையும் அவர் வரையறுத்துள்ளார். ஆனால் கேளிர் கூற்று நிகழ்த்துவது பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடவில்லை.

உறவினராகும் கேளிரின் பேச்சு  பற்றிய குறிப்பு செவ்விலக்கியக் காலக் குடும்ப அமைப்பைத் துல்லியமாகக் காட்டுகிறது. பொருள் தேடிச் சென்றவன்; வெற்றிகரமாக வினைமுடித்து  விட்டான்.  இனி வீடு நோக்கிப் பயணத்தைத் தொடங்க வேண்டும். வீட்டை விட்டுக் கிளம்பிய நாளில் இருந்து காட்டைக் கடக்கவும்; அயல்நாட்டில் பாடுபடவும் தான் கடந்த சோதனைகளும் கொண்ட விடாமுயற்சியும் மனதில் தோன்றி மறைகின்றன. அத்தனைக்கும் துணையாகத் தன் கேளிர் கூறிய சொற்களும் அவர்களது அன்பும்  ஊக்கமூட்டியமையை நினைத்துப் பார்க்கிறான். தான் கிளம்பிய போது அவர்கள் அனைவரும் வழியனுப்பிய காட்சி மனக்கண்ணில் ஓடுகிறது.

“பெறலரும் கேளிர் பின்வந்து விடுப்ப” (அகம்.- 351)

அது தன் கடமையை முடிக்க எந்த அளவிற்குத் துணைநின்றது என்பதை நெஞ்சோடு உரைக்கிறான். ‘சென்று வா’  என்று விடைகொடுத்த உறவினரின் பேச்சு இங்கே தலைவன் மனதிற்குள் அசைபோடும் அன்பு வெளிப்பாடாக அமைந்து அழகூட்டுகிறது. கேளிர்க்குக்  குடும்ப அமைப்பில் இருந்த முக்கியத்துவத்தைப் பிற பாடல்களிலும் காண இயல்கிறது (அகம்.- 151&173).

பின்புலத்தில் கேளிர்

பரத்தமையில் ஈடுபட்ட தலைவன் தன்  வீட்டிற்குத் திரும்புகிறான். தலைவியோ வாயில் மறுத்து உள்ளே வரக்கூடாது என்கிறாள். தோழி இடித்துரைக்கிறாள். அவனை உள்ளே விட்டால் அதற்குப் பின்னர் என்ன ஆகும் என்று தலைவி விளக்கம் கூறுகிறாள்.

“கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர்ப்
பாளைதந்த பஞ்சியங் குறுங்காய்
ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன
அயவெள் ளாம்பல் அம்பகை நெறித்தழை
தித்திக் குறங்கின் ஊழ்மாறு அலைப்ப
வருமே சேயிழை” (குறுந்.- 293)

என்கிறாள். இங்கே ‘கள்ளின் கேளிர்’ என்று குறிப்பிடப்படுபவர் கள்ளுக்கடைக்கு உரியவரான களியர். ‘கள்ளை இறக்கச் சென்ற சுற்றம்;  பனைமரம் பூத்துக் காய்த்து விட்டதால் அதற்குப் பதிலாக பஞ்சு போல் மிருதுவான நுங்கின் காய்களைப் பறித்துக் கொண்டு வரும்; ஆதி அருமன் என்பானது மூதூரைப் போல; வளமான வெள்ளாம்பலோடு ஒத்துத் தோன்றும் நெருக்கிக் கட்டின தழையுடை தன் தொடையில் மாறி மாறி அலைத்து மோத;  இளவயதினளாகிய அப்பெண் வீடுதேடி வந்து விடுவாளே’ என்று தயங்குகிறாள். இங்கு பனைமரம் பூத்துக் காய்த்து மென்மையான நுங்குடன்  இருப்பது அப்பெண்ணின் இளமை, அழகு, இன்பம்  அனைத்தையும் உள்ளுறுத்தி  அமைகிறது. அவளது ஆடை அலங்காரம் பற்றிய வருணனை தலைவியின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது. இவ்வளவு இளமையும் அழகும் வாய்த்த பெண்ணைத் தலைவன் தவிர்க்க மாட்டான்; அவளும் வீடு தேடி வரத்  தயங்க மாட்டாள். அப்படி வந்து விட்டால் பின்னர் என்ன ஆகும்? என்று வினவுகிறாள். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லறத்தில் ஈடுபடும் பெண்டிர் எதெற்கெல்லாம் பயந்து இருந்தனர் என்பதுடன்; ஆடவரின் புறத்தொழுக்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்ற அவலம் இப்பாடலில் வெளிப்பட்டுச் சமூகநிலையைக்  காட்டுகிறது.

உவமையில் கேளிர்

பொருள்வயிற் பிரிய நினைக்கும் தலைவனிடம் செலவு அழுங்கக் கூறும் தோழி;

“மேல்நின்று மெய்கூறும் கேளிர்போல் நீசெல்லும்” (கலி.- 3)

‘கானமே உன் செலவை விலக்கும்’ என்கிறாள். உனக்கும் மேம்பட்டவராக நின்று இடித்துரைக்கும் நண்பர்  கூட்டம் போல நீ செல்லும் காடு உன்னைத் தடுக்கும் என்ற உவமையில் கேளிர் தலைவனை நெறிப்படுத்தும் மேன்மை மிகுந்த நண்பர் குழுவினர் ஆவர்.

வேட்கை மிகுந்த தலைவன் தோழியிடம் ஏதோ கூற நினைக்கிறான். ஆனால் வார்த்தை வரவில்லை. அவனது வாய்ச்சொற்களை எதிர்பார்த்துத் தோழி அவனது முகத்தை நோக்கும் போது அவளது பார்வையைக் கூடத் தாங்கமாட்டாமல் நிலத்தை நோக்கினான். இந்த மென்மையான நுட்பமான உணர்வுப் போராட்டத்தை  அழகான உவமை மூலம் தோழி உரைக்கிறாள்.

“அல்லல் களைதக்க கேளிர் உழைச் சென்று” (கலி.- 61)

‘தம் வருத்தத்தைக் களையத்தக்கவர் என்று நினைத்து வாய்விட்டுப் பேசத் தொடங்கிப்; பின்னர் முழுவதுமாக உரைக்க மாட்டாமல் தடுமாறுவது போலத் தலைவன் பலமுறை என்னைப் பார்த்தான்’ என்று புனைகிறாள். இவ்உவமையில் இடம்பெறும் கேளிர் உறவினர் ஆவர். இதுபோல் உவமையில் கேளிர் இடம்பெறும் பிற பாடல்களும் உள (கலி.- 149).

முடிவுரை

தலைவன், தலைவி, சேரிப்பரத்தை முதலியோர் ‘கேள்’ என்னும் உறவுமுறைப் பெயர்ச் சொல்லால் குறிப்பிடப்படுகின்றனர். உரையாசிரியர் சுற்றம் என்று குறிப்பிடும் கேளிர் என்னும் பன்மைப் பெயர்ச்சொல் தொகைப் பாத்திரமாகிக் கிளையல்லா உறவினரையும்  நண்பரையும் தன்னுள் அடக்கிக் கொள்ளக் கூடியது. உரையாசிரியர் கேளிர் என்ற சொல்லுக்குப் பாங்கன் என்று பொருள்  கூறுவது ஏற்புடைத்தன்று. பாங்கன் ஒரு துணைப்பாத்திரமாகும். எனினும் நண்பரைக் குறிக்கும் கேளிர் சிறுபாத்திரம் ஆவது குறிப்பிடத்தகுந்தது.  ‘கள்ளின் கேளிர்’ என்று குறிப்பிடப்படுபவர் கள்ளை இறக்கச் சென்ற சுற்றம் ஆகும். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் இல்லறத்தில் ஈடுபடும் பெண்டிர் எதெற்கெல்லாம் பயந்து இருந்தனர் என்பதுடன்; ஆடவரின் புறத்தொழுக்கம் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தியது என்ற அவலம் கேளிர் பற்றிய குறிப்பு இடம்பெறும் பாடலில் வெளிப்பட்டுச் சமூக நிலையைக்  காட்டுகிறது. கேளிர்  பற்றிய குறிப்பு செவ்விலக்கியக் காலக் குடும்ப அமைப்பைத் துல்லியமாகக் காட்ட உதவுகிறது. பின்புலத்திலும் உவமைகளிலும் கேளிர் இடம்பெறுவதுண்டு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *