அக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 20 (பார்ப்பான்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர்& தமிழ்த்துறைத் தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

தொல்காப்பியம் பார்ப்பான் என்னும் பாத்திரம் கூற்று நிகழ்த்தக்  கூடிய இடங்களை வரையறுத்துக் கொடுத்துள்ளது. ஆனால் தொகை இலக்கியங்களில் பார்ப்பான் கூற்று நிகழ்த்தவில்லை. அகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்;  சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான்.

தொடர்புடைய பின்புலப்பாத்திரங்கள்

தொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன்,  வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர்  காட்சிப்  படுத்தப்படுகின்றனர். அனைவரும் பின்புலத்தில் இடம்பெறுகின்றனர்.  சிறுபாத்திரத்தகுதி பெறுபவர்  பார்ப்பனமகனும் முடமுது பார்ப்பானும்  மட்டுமே ஆவர்.

வழிச்செல்வோன் ஆகிய பார்ப்பனமகன்

தலைவனின் காதல் மிகுதியைப் புலப்படுத்த வழிப்போக்கனாகிய பார்ப்பனமகன் பாத்திரம் உதவுகிறது. அத்துடன் அந்தணர் மந்திரத்தைப் பற்றிக் கேள்வி கேட்கும் தொல்தமிழரின் மனப்போக்கும் தெரிகிறது.

செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே
எழுதாக் கற்பின் நின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ இதுவே“ (குறு.- 156)

என்கிறான் தலைவன். பார்ப்பனமகனே என மும்முறை அழைத்து ‘நீ  போற்றும் எழுதப்படாத வேதத்தில் பிரிந்தவரைச் சேர்க்கும் மருந்தாகிய சொல்; அதாவது மந்திரம் ஏதாவது உள்ளதா? இது தான் மையலின் தன்மையா?’ எனக் கேட்பதாக அமைகிறது பாடல். உலகியலில் பார்ப்பனன் பதிலுரைக்கக் கூடியவன் எனினும்; நாடகவழக்கில் அவன் பேசவில்லை.

குறுந்தொகையைத் தொகுத்தோரும் உரை எழுதியோரும் இவனைப் பாங்கன் என்கின்றனர்.  செம்பூ பூக்கும் முருக்கின் தண்டில் நாரைக் களைந்து எடுத்துக் கமண்டலத்தைத் தொங்க விட்டுக்; கையில் தண்டேந்தி  வரும் பார்ப்பனனைத் தலைவனின் தோழனாக; அதாவது அவனது வாழிடம் சார்ந்தவனாகக் கருத இடமில்லை. கொளுவும் உரையும் அவனைப் பாங்கன் எனக் கூறினும்; நீர்க்கமண்டலமும் தியானம் செய்யப் பயன்படும் தண்டும் கைக்கொண்டு செல்பவன் உள்ளூர்க்காரனாக இருக்க இயலாது; வழிப்போக்கனாகத் தான் இருக்க இயலும். அத்துடன் வேதமந்திரம் பற்றிய மென்மையான  நையாண்டியும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.

குஷ்டரோகியான முடமுது பார்ப்பான்

தலைவி தலைவனை இரவில் சந்திக்கக் காத்திருப்பதில் ஆபத்து மிகுதி என்று எடுத்துக் கூற முனையும் தோழி; அவன் சிறைப்புறமாக நின்றுகொண்டு இருந்தபோது; தலைவியிடம் பேசுகிறாள். நாடகக் காட்சியை வருணிப்பவள் போல முன்னர் நடந்ததை எடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி; ஒரு கிழட்டு நொண்டிப் பார்ப்பான் பற்றியது. அந்தக் காலத்துப் பாலியல் சீண்டல்.

ஊர் உலகமெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த நள்ளிரவு. அழகிய துகிலைப் போர்வையாகப் போர்த்துக் கொண்டு தலைவன் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தாள் தோழி. அப்போது அங்கு வந்து சேர்ந்தான் மழித்த தலையுடன் குஷ்ட நோயால் காலும் கையும் குறைப்பட்ட வயோதிகப் பார்ப்பான். அவனை இன்னும் தெளிவாக அடையாளம் காட்ட முனைந்த தோழி ‘நீ கூடப் பலகாலும்  நம் சேரியை விட்டு எங்கும் போகாமல் ஒளித்துத் திரியும் அவனைப் பேணிப் புரக்கச் சொன்னாய் அல்லவா? அவனே தான்’ என்கிறாள். ‘இது மகளிர் வெளிப்போதரும் காலம் அல்லவே! நீர் யார்?’ என்று ஐயத்துடன் குனிந்து பார்த்துக் கேட்டவன் ‘இளம்பெண்ணே நீ தம்பலம் தின்கிறாயா?’ என்று வைக்கோலைக் கண்ட கிழட்டு எருது போலப் பக்கலில் இருந்து அகலாமல் நின்று; பாக்குப்பையைக் குலைத்து ‘எடுத்துக் கொள்’ என்றான். தோழியோ வாய்திறவாமல் நிற்க; ‘சிறுமியே உன்னை அகப்படுத்திக் கொண்டேன். மற்றும் பிசாசுகளுக்குள் ஒருவனாகிய என்னை நீ வருத்தினால்; இவ்வூரில் நீ பெறும் பலிப்பொருளைப் பெறாதபடி நானே எடுத்துக் கொள்வேன்’ என்று பலபடப் பேசி நின்றான். பார்ப்பான் மனதில்; தான் பிசாசோ என்ற ஐயம் எழுவதைப் புரிந்து கொண்ட தோழி ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி வீசினாள். பார்ப்பான் கதறிக் கொண்டு ஊரெல்லாம் கேட்கக் கூப்பாடு போட்டான். புலிக்கு விரித்த வலையில் நரி அகப்பட்டதைப் போலத் தலைவனுக்காகக் காத்திருந்த வேளையில் இப்படி வருத்தம் நேர்ந்தது என்று விலாவாரியாகக் கூறுவதன் மூலம் இரவுக்குறி வேண்டாம் என்கிறாள் தோழி. இங்கு பார்ப்பான் நேரில் இடம் பெறவில்லை. தோழி பேச்சில் இடம் பெறுகிறான்; அவ்வளவே.

தூது செல்லும் பார்ப்பான்

எத்தகைய பாதுகாப்பற்ற சூழலில் பார்ப்பார் தூது சென்றனர் என்பதை விளக்கிச் சொல்லும் பாடல் ஒன்று; பொருள்வேட்கை கொண்ட நெஞ்சை மறுத்து ஆற்றும் தலைவன் முன்பொரு முறை காட்டுவழியில் கண்ட அவலக்காட்சியை நினைவு கூர்வதாக அமைந்துள்ளது.

உப்பு வணிகரது கழுதைக்கூட்டம் போல் காட்சி அளிக்கும் பாறைகள் மிகுந்து; வெண்மையான பரற்கற்கள் கண்கூச ஒளிவீசும் வெய்யில். கவர்த்த பாதை மயக்கத்தைக் கொடுக்கும் காடு. அவ்வழியே ஒரு ஏழைப்பார்ப்பான் வெள்ளிய  தூது ஓலையை மடித்து எடுத்துக்கொண்டு செல்கிறான். உண்ணாமையால் அவனது விலாவில் இருக்கும் எலும்புகள் எல்லாம் எண்ணும்படி உள்ளன. ஆனாலும் அவன் கையில் உள்ள பொருளில் பொன் இருந்தாலும் இருக்கும்; என்ற எண்ணத்தில் தம் கைப்படையால் உடன் கொன்று வீழ்த்திக்; குருதி படிந்த அம்பினை ஏந்தியவராய் ஆராய்கின்றனர் கொலைத்தொழில் வல்ல மழவர். அதன் பின்னர் உடுக்கவியலாக் கந்தையை உடுத்திருக்கும் அவனது வறுமையைப் பார்த்துத் தம் கையை நொடித்துக் கொண்டு சென்றனர்.

“….. ……. ….. ……. ……. ……உமணர்
கணநிரை அன்ன பல்காற் குறும்பொறைத்
தூது ஒய்பார்ப்பான் மடிவெள்ஓலை
படைஉடைக் கையர் வருதிற நோக்கி
உண்ணா மருங்குல் இன்னோன் கையது
பொன் ஆகுதலும் உண்டு எனக் கொன்னே
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்
திறனில் சிதாஅர் வறுமை நோக்கிச்
செங்கோல் அம்பினர் கைநொடியாப் பெயர” (அகம்.- 337)

அத்தோடு அந்த அவலம் முடியவில்லை. உயிரைவிட்ட பார்ப்பானின் சடலத்திற்கு நேர்ந்த கதி வாசகர் நெஞ்சை உலுக்கும் மருட்கையைத் தோற்றுவிக்கிறது. நீள ஒழுகிய குருதியுடன் தொங்கிக் கிடந்த குடலைக் கடித்துக் கொண்டு ஆண் நரி ஒன்று கள்ளி நிழலில் கூக்குரலிட்ட்டது. இப்பாடல் காட்டுவழியின் ஏதத்தை விளக்க எழுதப்பட்டதெனினும்; அக்காலச் சமூகஅவலத்தைப் புனைந்துள்ளது. வாழ்வாதாரத்திற்காக வந்தேறிய பார்ப்பனரின் வறுமை நிலையை எடுத்தோதுகிறது. தூதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர் எதிர்நோக்கிய கொடுமைகளின் எல்லை என்ன என்று புரிகிறது.

பார்ப்பனக் குறுமகன்

பெண் கேட்டு வருகிறான் தலைவன்; தோழிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. செய்தியைத் தலைவிக்கு உரைக்கிறாள். அவளது பேச்சு நுட்பமான பல செய்திகளைத் தாங்கி அமைகிறது.

“அன்னாய் வாழி வேண்டு அன்னை நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே” (ஐங்.- 202)

முதலில் தலைவன் வந்த மகிழ்ச்சியைப் புலப்படுத்துகிறாள். அது குறிப்பிட்ட பொருளை நேரடியாகச் சொல்லாது; பொதுவான வாழ்த்தாக அமைகிறது. ஏனெனில் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தலைவிக்குத் தோழி வாழ்த்துக் கூறினாலே; அது தலைவன் வரவைப் புரிய வைத்து விடும். அடுத்த செய்தி; தலைவன் தன் செல்வச் செழிப்பு வெளிப்படையாகத் தெரியும்படி வந்திருக்கிறான்; அதாவது அலங்கரித்த குதிரை பூட்டிய தேரில் வந்துள்ளான். தேரும் குதிரையும் அவர்கட்குப் புதிதில்லை எனினும்; குதிரையின் தலை அலங்காரம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாய் இருந்தது. இதுநாள் வரை சோர்ந்திருந்த மனம் புத்துணர்ச்சி பெற்றதால் அக்குதிரையின் தலையில் சூட்டியிருந்த தலையாட்டம் அவளுக்கு அவ்வூர்ப் பார்ப்பனச் சிறுவரின் குடுமியை நினைவூட்டியது. இரண்டையும் ஒப்புமைப்படுத்தி உவமிக்கிறாள். பண்டு தமிழகத்தில் பார்ப்பனச்சிறுவரின் குடுமிக்கட்டு தனித்தன்மை பெற்று இருந்தமை இதனால்  புலப்படுகிறது.

பார்ப்பன மகளிர்

தன் பணிமுடிந்து மீண்டுவரும் தலைவன் வழியில் தேர்ப்பாகனோடு பேசிக்கொண்டு வருகிறான். செம்புலப் பின்னணியில் முல்லை பூத்த கார்காலத்து மாலை. ஊரை நெருங்கி ஆயிற்று. கதிரவன் மறைய; மேய்ச்சல் முடிந்து ஆடுகள்  கழுத்து மணிகள் ஒலிக்கத் திரும்பும் பொழுது. ‘மாலை வழிபாட்டிற்கெனத் தீமுறை செய்து ஓதும் கணவரைப் பிரியாதிருத்தலால்; பார்ப்பன மகளிர் விரிந்த முல்லைப்பூக்களைச் சூடி மகிழ்ந்து இருப்பர். தலைவியோ என்னைப் பிரிந்து இருப்பதால்; வருத்தத்தோடு  நானில்லாத மனையை நோக்கி இருப்பாள். விரைந்து தேரைச் செலுத்துவாயாக’ என்கிறான்.

“கானமுல்லைக் கயவாய் அலரி
பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அயர”த் (நற்.- 321)

தனித்திருக்கும் துன்பத்தைத் தாங்கித் தலைவி தவித்து இருப்பாள் எனக் காலப்பின்புலத்தையும் இடப்பின்புலத்தையும் சிறக்க எடுத்துக் காட்டப் பார்ப்பன மகளிர் பயன்பட்டுள்ளனர். கவிச்சுவை   கூட்டப் பார்ப்பன மகளிர் நிலையோடு தலைவியின் நிலை முரண்படுத்திக் காட்டப்படுகிறது.

ஓதும் பார்ப்பார்

புறத்தொழுகிய தலைவன் திரும்பியபோது  தலைவி எப்படி ஆற்றி இருந்தாள் எனக் கூறும் தோழி;

“பகைவர் புல்லார்க; பார்ப்பார்  ஓதுக
என வேட்டோளே யாயே” (ஐங்.- 4)

என்கிறாள். தலைவியின் சமூகமுன்னேற்றச் சிந்தனை அக்கால அரசியல் நிலையைத் தாங்கி நிற்கிறது. திணைமாந்தர் பிரிவைச் சேர்ந்த ஊரனின் மனைவியாகிய அவள் ‘பகைவர் புன்செய்ப் பயனை உண்ணட்டும்’ என்று விரும்புவது; நெல்வேளாண்மை செய்த வேளிரைச் சார்ந்த அவளது வாழ்வைப் புலப்படுத்துகிறது. ஊரோடு சேர்த்து அழைக்கப்படும் கிழார்கள் வேளிருக்காக நெல்வேளாண்மை செய்தனர் என்றும் தெளிவாகிறது. எனவே தான் பகைவர்கள் புன்செய்ப் பயனை உண்ணட்டும் என்கிறாள். புன்செய் உணவைக் காட்டிலும் நெல் உயர்ந்ததாகக் கருதப்பட்ட நாகரிக மாற்றமும் இந்தப் பாடலடியில் பொதிந்துள்ளது.  ‘பார்ப்பார் ஓதுக’ என்ற  அவளது விருப்பம் வைதீகம் அக்காலத் தமிழ்ச் சமுதாயத்தில் மேன்மையானது என ஏற்றுக்கொள்ளப்  பட்டமைக்கு உரிய சான்றாகிறது.

வேளாப் பார்ப்பான்

வேள்வி தவிர்ந்த பிற தொழில் செய்யும் பார்ப்பாரே வேளாப் பார்ப்பார் ஆவர்.

“வேளாப் பார்ப்பார் வாளரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன
தளைபிணி அவிழாச் சுரிமுகப் பகன்றை” (அகம்.- 24)

என்ற பாடலடிகளில் பகன்றைப் பூக்களின் தோற்றத்திற்கு வளைகள் அறுத்து மீந்த சங்கின் தலைப்பகுதி உவமையாக அமைகிறது. அச்சங்கை அறுத்தவர் வேளாப் பார்ப்பார் ஆவர். சங்கினை அறுத்து மங்கல வளை செய்யும் தொழிலில் பார்ப்பார் ஈடுபட்டு இருந்தமை இப்பாடலடி மூலம் வெளிப்படுகிறது.

“இலங்கு வளை  இருஞ்சேரி” (மது.- 136)

பற்றிப் பிற இலக்கியங்களும் பேசுவதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பார்ப்பார் கூடி வாழ்ந்த சேரி இருந்ததா என்பது தனி  ஆய்விற்கு உரியதாகிறது.

முடிவுரை

அகஇலக்கணம் துணைப்பாத்திரம் என்று வரையறுக்கும் பார்ப்பான்;  சிறுபாத்திரமாகவே நமக்குக் கிடைத்திருக்கும் தொகை இலக்கியத்தில் காணப்படுகிறான். தொகைநூல்களில் பார்ப்பனக் குறுமகன், வேளாப்பார்ப்பான், ஓதும் பார்ப்பார், தூதுசெல்லும் பார்ப்பான், பார்ப்பனமகளிர் எனப் பலர்  காட்சிப்  படுத்தப்படுகின்றனர். தோழி பேச்சில் இடம்பெறும் முதுபார்ப்பானும் தலைவன் பேச்சில் இடம்பெறும் பார்ப்பன இளைஞனும் சிறுபாத்திரம் ஆகின்றனர்.

காலப்பின்புலத்தையும் இடப்பின்புலத்தையும் சிறக்க எடுத்துக் காட்டப் பார்ப்பன மகளிர் பயன்பட்டுள்ளனர். கவிச்சுவை கூட்டப் பார்ப்பன மகளிர் நிலையோடு தலைவியின் நிலை முரண்படுத்திக் காட்டப்படுகிறது.

வைதீகம் தொகைநூற்காலத் தமிழ்ச்சமுதாயத்தில் மேன்மையானது என ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தது. வாழ்வாதாரத்திற்காக வந்தேறிய பார்ப்பனரின் வறுமை நிலை; தூதைத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர் எதிர்நோக்கிய கொடுமைகளின் சித்தரிப்பில் புரிகிறது. பண்டு தமிழகத்தில் பார்ப்பனச்சிறுவரின் குடுமிக்கட்டு தனித்தன்மை பெற்று இருந்தது. சங்கினை அறுத்து மங்கல வளை செய்யும் தொழிலில் வேளாப்பார்ப்பார் ஈடுபட்டு இருந்தனர். பார்ப்பார் கூடி வாழ்ந்த சேரி இருந்ததா என்பது தனி  ஆய்விற்கு உரியதாகிறது.

ஊரோடு சேர்த்து அழைக்கப்படும் கிழார்கள் வேளிருக்காக நெல்வேளாண்மை செய்தனர். புன்செய் உணவைக் காட்டிலும் நெல் உயர்ந்ததாகக் கருதப்பட்ட நாகரிக மாற்றம் தொகைநூற் காலத்தில் ஏற்பட்டு இருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *