அண்ணாகண்ணன்

தமிழ்ப் பதிப்பியலை, அகராதியியலை நவீன கண்ணோட்டத்துடன் அணுகி, தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப, புதிய பரிமாணங்களுடன் மிளிரச் செய்த க்ரியா ராமகிருஷ்ணன், இன்று (17.11.2020) மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்.

க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களை நான் ஓரிரு முறைகள் சந்தித்துப் பேசியிருக்கிறேன். முதல் முறை, 2004 காலக்கட்டத்தில் அமுதசுரபியில் நான் பொறுப்பில் இருந்தபோது, வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைத் தொடர்ந்து பதிப்பித்தேன். அப்போது ஒரு கூட்டத்தில் அவர், க்ரியா ராமகிருஷ்ணனை எனக்கு அறிமுகம் செய்வித்தார். க்ரியா என மெய்யெழுத்தில் தொடங்குமாறு ஏன் வைத்தீர்கள் எனக் கேட்டேன். அதுதான் அதன் உச்சரிப்பு என்றார். அப்படியானால், ராமக்ருஷ்ணன் என்றுதானே எழுத வேண்டும். அங்கு மட்டும் ஏன் கிருஷ்ணன் என எழுதுகிறீர்கள் எனக் கேட்டதாக ஞாபகம்.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் சைக்கிள் உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள் எப்படி இடம்பெற்றன? என அதன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பேராசிரியர் இ.அண்ணாமலை அவர்களிடம் கேட்டேன். ஆனால், பிறகு இதற்கான தேவையைப் புரிந்துகொண்டேன். தமிழர் நாவில் புழங்கும் சொற்கள் அனைத்தையும் திரட்டித் தொகுக்கும் முயற்சியில் ராமகிருஷ்ணன், ஒரு முன்னோடி.

க்ரியா வலைத்தளத்தையும் (https://www.crea.in) செயலியையும் அவர் உருவாக்கியிருந்தார். தமிழில் அதிக அளவு சொற்களைத் திரட்டி, சொல்வங்கி ஒன்றை அவர் வைத்திருந்தார். தமிழில் மென்பொருள் கருவிகளை உருவாக்கும் நண்பர்கள், சொற்றொகுதிகள் தேவை எனக் கேட்டபோது, விக்கிப்பீடியாவையும் க்ரியாவையும் பரிந்துரைத்துள்ளேன்.

க்ரியா ஆண்ட்ராய்டு செயலியைத் தரவிறக்கினால் 10 முறைகள் மட்டுமே இலவசமாகத் தேட முடியும்; அதற்கு மேல் தேடுவதானால், ரூ.199 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிட்டிருந்தார். இதற்காக அந்தச் செயலிக்கு மிகக் குறைவான மதிப்பீடு அளித்து, அவரை வசைமாரி பொழிந்திருப்பதைக் காணும்போது வருத்தமாக உள்ளது. தமிழ் மென்பொருள்கள், தமிழ்ச் செயலிகள், தமிழுக்காக உருவாகும் தொழில்நுட்பக் கருவிகளின் வணிகச் சந்தை, மிக பலவீனமாக இருக்கிறது. இந்த இடர்களை எதிர்கொண்டே, கடந்தே தமிழுக்கும் தமிழ்கூறு நல்லுலகிற்கும் தொண்டாற்ற வேண்டியிருக்கிறது.

புதிய சிந்தனை, புதிய ஆக்கங்கள், சமரசம் இல்லாத தரம், செம்மை ஆகியவற்றை முன்னிறுத்தி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றி உழைத்த க்ரியா ராமகிருஷ்ணன் அவர்களின் மறைவு, தமிழுலகிற்குப் பேரிழப்பு. அவர் என்றென்றும் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

அவரது முக்கியமான ஒரு நேர்காணல் இங்கே – https://tamil.asiavillenews.com

படத்துக்கு நன்றி: ஆசியாவில்லி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *