புள்ளிக் கவிதைகள்
அண்ணாகண்ணன்
மயிர்க்கால் வெளியே தெரிந்தாலும்
முறைக்கிற மெளடீகக் கணவன் போல்
விரல் நுனி வெளியே தெரிந்தாலும்
விரட்டிக் கடிக்கிறது கொசு.
*******************************
உன்னைக் கொல்லும்
எண்ணமே எனக்கில்லை.
ஏன் நிர்பந்திக்கிறாய், கொசுவே?
*******************************
எந்தச் சொல்லைச் சொல்வது
என்ற மோதலில்
பிறகு அவர்கள்
பேசிக்கொள்ளவே இல்லை.
*******************************
தானும் பயந்து
என்னையும் பயமுறுத்துகிறது
இந்த நாய்.
*******************************
எப்போதும்
காரமாகவே இருக்கிறது
கடிகாரம்.
*******************************
கண்ணை உருட்டி, அதட்டி
மிரட்ட, மிரட்ட
குதித்துச் சிரிக்கிறது குழந்தை.
*******************************
கரம், சிரம் புறம் நீட்டவில்லை.
எனினும் பறிபோனது
உள்ளம்,
உன்னைக் கண்டதும்.
*******************************
படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா