Tag: பொலிகையூர் ரேகா

  • ”மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”

     

    பவள சங்கரி

     

    பொலிகையூர் ரேகா அவர்களை முதன் முதலில், உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் (சென்னை – 2017) சந்தித்தபோது பெயர் அறிமுகமின்றியே அவர்தம் எழுத்தின் வாயிலாகவேக் கவரப்பட்டேன். மிக யதார்த்தமான எழுத்து நடையுடன், இலங்கையின் கருமையான நாட்களையும், மக்களின் அவல நிலையையும், தற்கால முன்னேற்றத்தின் அகண்ட பாதைகளின் சுவடுகளையும் மிகவும் யதார்த்தமாக, துளியும் மிகைப்படாமல் எடுத்துரைத்த விதம் சிறப்பாக அமைந்திருந்ததால் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த அவர்தம் கருத்தரங்க உரை அனைவரையும் கவர்ந்திருந்தது.


    ”மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற அவருடைய சிறுகதைத் தொகுப்பின் தலைப்பே பல கதைகளை உருவாக்கக்கூடியது. ஆசிரியர் இத்தொகுப்பின் ஒவ்வொரு கதையின் பாத்திரப் படைப்பையும் வித்தியாசமாக உருவாக்கியிருப்பதோடு கதை மாந்தர்களின் பெயர் சூட்டுவதிலும் ஒரு அழகியலைக் கடைபிடித்திருக்கிறார். சிற்பிகா, சங்கழகிப் பாட்டி, தமிழினி , இலக்கியா, இசையரசி, இனியா, அறிவழகன், தமிழேந்தி என்பன போன்ற மிக அழகான தமிழ் பெயர்கள் இவர்தம் படைப்புகளுக்கு அணிகலன் ஆகியுள்ளன.
    இத்தொகுப்பின்முதற்படைப்பான,“மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்”என்ற கதை முத்தான முதல் கதையாகியுள்ளது. முதியோர் இல்லம் என்பது இன்றைய நாட்களில் மலிந்து கொண்டு வருவதாக உள்ளது.

    “கண்ணகிப் பாட்டியைப் போல இங்குள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு வலி நிறைந்த பின்புலம் உள்ளது. உறவினர்கள், பிள்ளைகள்,  அயலவர்கள் என யாரேனும் ஒருவர் கொண்டுவந்து சேர்த்தவர்களாகவோ அல்லது தாமாகவோ வந்து சேர்ந்தவர்களாக இருந்தனர்”

    இயந்திர உலகத்தில்  பணம் சேர்ப்பதற்காய், வேறு சிக்கல்களுக்காய் பெற்றவர்களை இங்கு விடும் பிள்ளைகளை என்ன செய்வது என அவள் எண்ணம் வண்டியோடு ஓடிக்கொண்டிருந்தது.

    ஆம் மனிதர்கள் காத்திருக்கின்றார்கள். அன்புக்காக, அரவணைப்புக்காக, அக்கறையான சில வார்த்தைகளுக்காக எல்லா இடங்களிலும் மனிதர்கள் காத்திருக்கின்றார்கள்.

    உணர்வைத் தீண்டிய உன்னத படைப்பு இது!

    2. கானல் நீரும் கலைந்த கனவுகளும்

    செடி கொடிகளில் ஆர்வம் உள்ளவர்கள் பெரும்பாலும் மென்மையான இதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். கதை நாயகியும் தனக்கும் அவற்றிற்குமிடையேயான பாசப் பிணைப்பு சிறிய அளவில் ஆரம்பித்துச் சிறிது காலப் பகுதிக்குள் பெருமளவில் பரவியதால் மாடிப் பகுதியையே ஒரு பசுமைத் தோட்டமாக மாற்றி வைத்திருந்த தனக்கு வேதனை ஏற்பட்ட காரணத்தைச் சொன்ன விதம் ஒரு தேர்ந்த விவசாயி தம் பயிர் பாதுகாப்பு குறித்து எடுக்கும் முயற்சிகளுக்கு சற்றும் சளைக்காத வகையில் உரம் போடுவது குறித்தும், பூச்சி மருந்து அடிப்பது குறித்தும் மிகத் தெளிவான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் என்றே பாராட்ட வேண்டியுள்ளது. ‘அமிர்த கரைசல்’ உருவாக்கப்பட்ட விதமும், மீன் அமிலம் எனப்படும் இயற்கை உர உருவாக்க முறைமையும் ஆக்கப்பூர்வமானதாகவே உள்ளதை மறுக்கவியலாது.

    துருக்கறைகளையே நீக்கும் அந்தக் குறிப்பிட்ட குளிர்பானத்தை வாங்கி நீர் கலக்காமல் அப்படியே தெளிக்கும் கருவி கொண்டு தெளித்துவிட்டால் மறுநாள் காலையில் பெரும்பாலும் பூச்சிகளற்ற நிலையில் இருந்த அவரைச் செடிகளையும் கண்டு வியந்து நிற்க இயலுமாம்.

    “எல்லோருடைய கனவுகளையும், ஆசைகளையும் குழப்புவதற்கு அனைத்து இடங்களிலும், பலவிதமான குரங்குகள் இருக்கும் போல என்று நினைத்தபடியே விழுந்து கிடந்த மரங்களையும், செடி வளர்ப்புப் பைகளையும், பார்த்தேன். குரங்குகளின் தாக்குதலுக்குப் பின்னரும் சில செடிகள் கம்பீரமாக நிற்பதாகவே இப்போது தோன்றியது” என்ற ஆசிரியரின் சிந்தைகள் வியந்து போற்றத்தக்கது.
    மனித வாழ்வும் மரம், செடி கொடிகளைப்போன்று நிலையற்றது. பிறந்தவை அனைத்தும் ஓர்நாள் அழியக்கூடியவை. இருப்பினும் இடையிலேயே பூத்துக்குலுங்க வேண்டிய தருணத்தில் உருத்தெரியாமல் அழிந்துபோகும் கொடுமையின் வலியை உணர்வுப்பூர்வமாக வடித்தெடுத்திருக்கும் அருமையான புனைவு இது!

    3. ‘மண் மணம்’ பழங்கதைகளை மணமும், சுவையும் மாறாமல் அழகாக வரையப்பட்ட ஓவியம்.

    4. வாய்மையின் வாயாடிகள்

    திருமணம் என்ற ஒரு நிகழ்வு ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தகையத் திருப்பு முனையாக அமைந்துவிடுகின்றது என்பதை அந்தப் பெண்ணின் பார்வையிலும், ஒரு தாயின் பார்வையிலும் மாறி மாறி பேசவைத்து இறுதியாக மிக யதார்த்தமான வசனங்களுடன் இயல்பாக முடித்திருக்கும் பாங்கு இந்தக் கதையாசிரியரின் பார்வையைத் தெளிவுற விளக்குவதாக அமைந்துள்ளது சிறப்பு.
    வாழ்க்கையில், சக மனிதரின் தர்மசங்கடங்களைப் புரிந்துகொள்ளாத சில நிரந்தரமான விசாரிப்புகள் எத்தகைய காயங்களை ஏற்படுத்துகின்றன என்பதை அவைகளை உணராதவர்கள் மட்டுமல்ல, உணர்ந்தவர்களும்கூட உதாசீனப்படுத்துகின்றனர் என்பதை உள்ளம் நோக உரித்துக்காட்டியுள்ள உயர்ந்த படைப்பு.

    5. “விதி(னை)யின் தீர்ப்புகள்”

    புறம் பேசும் பெண்களைச் சாடியுள்ள நல்லதொரு போக்கு இக்கதையின் சிறப்பம்சம் எனலாம்.
    “எல்லாருடைய வாழ்விலும் ஒரு முன்னாள் காதல் இருக்கலாம் அதனால் எனக்கு வருகின்றவர் என்னைப்போல யாரையும் காதலிக்காமல் தன் துணைவிக்காக காத்திருந்திருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” .
    ஆக்கப்பூர்வமான எண்ணங்களின் ஊற்றாக வெளிப்படும் படைப்பு!

    “ஒரு பெண் ஏமாற்றினால் அங்கே பாதிக்கப்படுவது ஒரு ஆணின் வாழ்க்கை மட்டுமல்ல எந்தத் தவறும் செய்யாத இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும்தான் என்பது பலரின் பார்வையிலிருந்து மறை(ற)ந்து கிடப்பதை எண்ணிப் பெருமூச்சு விட்டவாறு விதியின் பாதையில் நடக்கத் தொடங்கினாள்.” – முத்தாய்ப்பு!

    6. தேயாத நிலவுகள்

    குடும்பச் சுமைக்காகவும்,  பெற்றோரது கடமையை  முடிக்கும் நோக்கத்திற்காகவும் திருமணம் செய்து கொண்டு தங்கள் கனவுகளைத் தொலைத்துவிடுகின்ற பெண்களைப் பற்றிய ஆதங்கத்தைத் தெளிவுற விளக்கும் கதை.

    7. வழக்காடும் வழக்கங்கள்

    பெண்களின் இயற்கை உபாதைகளையும்கூட ஆண்களிடம் மறைக்கப்படுவதாலேயே இரு பாலருக்குமிடையே மனித இனம் என்பதையும் கடந்து வேறுபாடுகள் உருவாகி அதனால் நன்மைகளைக் காட்டிலும் தீமைகளே பெருமளவில் சமுதாயத்தில் பரவுகின்றன என்றதொரு சரியான கோணத்தை தெளிவாக உணர்த்தும் அனுபவங்களின் தொகுப்பாகவே உள்ளது இக்கதை.
    “மறைத்து மறைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள்தான் சமூகப் பொறுப்பற்றவர்களாக, அவர்களும் நம் போன்றவர்கள் என்று எண்ணாது பெண்களை போகப் பொருளாக எண்ணும் மனநிலைக்கு  ஆளாகின்றனர்.  இது ஆண்களிடம் இருந்து மறைக்க வேண்டியதல்ல ஆண்கள் உணர வேண்டிய பெண்களின் உடல் நிலை ” என்ற வாதமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

    8. களையிழந்த காகிதங்கள்

    தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னோடு உறவாடியப் புத்தகங்களை இழக்க நேரிடும்போது ஒரு உயிர் படும் வேதனையைத் துல்லியமாக உணர்த்தியிருக்கும் இனிய படைப்பு. இழந்துவிட்ட காகிதங்களால் களையிழந்த முகங்கள்!

    9. நிம்மதி

    மனிதர்களின் அன்றாடப் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்று, இயற்கை உபாதைகளைத் தீர்க்கும் தளமான கழிவறை. அதுவும் பொது இடங்களில் கழிப்பறையைப் பயன்படுத்துவோரின் அசூசையான மன நிலையைப் பிரதிபலிக்கும் குறுங்கதை இது.
    சில சந்தர்ப்பங்களில் இல்லை என்பதை விடவும் இந்த நிலைமையிலாவது இருக்கின்றது என்னும் நினைப்பே நிம்மதியானதுதான்போல என்ற எண்ணம் கழிவறைக்கு மட்டுமல்ல, களைத்துப்போய் நொந்த மேனிக்கும் கூடத்தான் என்கிறாரோ?

    10. தனிமைப் பறவைகள்

    தனிமை என்பது ஒரு சிலருக்கே, ஒரு சில காலங்களில் மட்டுமே விரும்பி ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்று. ஒரு கூட்டுப் பறவைகள் பிரிந்து தனிக்குடும்பம் ஏற்படுத்திக் கொள்வதென்பது இயல்பான ஒன்று என்றாலும், ஒரு தாய்ப்பறவைக்கு அது மகிழ்ச்சி கலந்த வேதனை என்றே கொள்ளமுடியும். தம்மை விட்டு விலகிச்செல்லும் பந்தங்களைக் காண உள்ளம் நோகத்தான் செய்யும். உள்ளம் தொட்ட உணர்வுப்பூர்வமான புனைவு!

    இந்த வகையில், கதை ஆசிரியர் பொலிகையூர் ரேகா அவர்களின் ஒவ்வொரு கதையும் வாழ்வியலின் அடிப்படையில் ஒவ்வொரு முகமாக அமைந்திருப்பது வாசிப்பவருக்கு சுவை கூட்டக்கூடியது. சிறந்த நடையும், எளிமையான மொழியும், சுவையான களங்களும் ஆசிரியரின் எழுத்தாற்றலை பறை சாற்றக்கூடியதாகவே உள்ளன. வரும் காலங்களில் பொலிகையூர் ரேகா மிகச்சிறந்த படைப்பாளர்களின் பட்டியலில் இடம் பெறுவார் என்பதில் ஐயமில்லை!

     

    Share
  • மண் மணம்

      பொலிகையூர் ரேகா

                                              சாப்பிட்டு முடித்தபின் மாடிப் பகுதியில் காய வைத்திருந்த  பழ விதைகளைப் பையில் சேகரித்துக் கொண்டிருந்தேன். பத்து வயது நிரம்பிய எனது மகன் வேகமாக மாடிப் படிகள் வழியாக வந்து கொண்டிருந்தான். பாடசாலையிலிருந்து வந்ததுமே நேரே என்னிடம் வருவது தெரிந்தது.

                                            “அப்பா இன்னும் ஒரு மாதத்தில் விடுமுறை வந்துவிடும்.பரீட்சைக்கான திகதிகள் எல்லாம் தந்துவிட்டார்கள் இந்த விடுமுறைக்கு எங்கே  போவதென்று  எல்லா நண்பர்களும் கதைத்துக்கொண்டு  உள்ளார்கள் . நாங்கள் எங்கே  போகப் போகின்றோம் ” என வேகமாக கேட்டான். சிரித்தவாறு “எங்கே  போக வேண்டுமென  உனக்கு விருப்பம்” என்று கேட்டேன்.

                                             “அப்பா நல்ல இடமாப் போக வேண்டும்;  பெரிய விடுதியில்  தங்க வேண்டும்.  இடம் நன்றாக இருக்க வேண்டும் அப்பா” என்றான். “சரி இப்பொழுது  சென்று  உடுப்பை மாற்றிவிட்டுச் சாப்பிடு, எங்கே  செல்வதென்று  யோசிக்கலாம்” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு சேகரித்த விதைகள் அடங்கிய பையோடு கீழே சென்றேன்.

                                            “என்ன தம்பி எப்படி இருக்கின்றாய்” என்றபடி அண்ணன் வந்து கொண்டிருந்தார். தூரத்துச் சொந்தம் என்றாலும் ஊரில் ஒன்றாக வளர்ந்ததால் பாசம் அதிகம். நகர்ப்புறம் வரும்போதெல்லாம் வீட்டுக்கு வர மறந்ததில்லை. ‘’வாருங்கள்  அண்ணா’’ என்று வரவேற்றபடி உள்ளே அழைத்துச் சென்றேன். “பெரியப்பா” என்றபடி மகன் வந்து அருகில் அமர்ந்தான். “சொந்தத்தை அரவணைக்கின்ற இந்தக் குணம் உன் மகனுக்கும் அப்பிடியே இருக்கிறதடா  தம்பி” என்று கூறி அவனை தழுவிக் கொண்டார்.

                                                 “எப்படிப் படிக்கின்றாய்” என்று மகனைக் கேட்டார். “நன்றாகப் படிக்கின்றேன் பெரியப்பா , தேர்வு வருகின்றது  முடிந்ததும்  விடுமுறைக்கு சுற்றுலா செல்லப்போகின்றோம்.” எனக்  கூடுதல் தகவலையும் அவரிடம் வழங்கினான். “அது சரி எங்கே  போகப் போகின்றாய்  ” என்று சிரித்தபடி கேட்டார். “இன்னும் முடிவு எடுக்கவில்லை பெரியப்பா இனிமேல்தான் தேர்வு செய்யவேண்டும் ” என்றான்.

                                               “தற்போது  உள்ள பிள்ளைகள் விடுமுறை விட்டால் எந்த நாட்டுக்கு, எந்தச்  சுற்றுலாத்  தலத்துக்குச்  செல்வதென்றுதான்  திட்டமிடுகின்றீர்கள்  ஆனால் நாங்கள் எல்லாம் விடுமுறை என்றால்   எந்தக்  குளம், கடல், ஆறு  கோயிலுக்குப் போவதென்றுதான் திட்டமிடுவோம். காலம் மாறிப்போய்விட்டது தம்பி” என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

                                              அவர் கூறியதன் உள்ளர்த்தம் புரிந்தது. சிறுவயதில் ஒன்றாக விளையாடியதும் , திருவிழா சென்றதும் காலப் போக்கில் வளர்ந்து நகர்ப்புறம் வந்து வேலை, குடும்பம் என்றானபின் குறைந்து போயிருந்தது. விடுமுறைப் பிரச்சனைகளால் கடந்த சில வருடங்கள் திருவிழாவிற்கு கூடச்  செல்வதில்லை.

                                               சிறிது நேரம் பேசிவிட்டு இரவு உணவை முடித்துக் கொண்டு அவர் விடைபெற்றுக் கொண்டார். மனையாள் சமையலறையில் பாத்திரங்களோடு போராடிக் கொண்டிருந்தாள். மகன் பரீட்சையை விட விடுமுறைக்கு எங்கே செல்வதென்பதில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். எனக்கோ எனது விடுமுறைக் காலங்கள் நினைவில் வந்து கொண்டிருந்தது. அண்ணா வந்து சென்றதன் வெளிப்பாடா அல்லது சிறுவயதிலேயே மகன் இவ்வளவு தூரம் விடுமுறையைத் திட்டமிடுகிறான் என்பதாலோ தெரியவில்லை.

                                             எங்கள் விடுமுறையில் வீடே அல்லோகல்லோலப்படும். எண்ணெய்க் குளியலில் இருந்து நாட்டுக் கோழி குழம்பு வரை வீடே கமகமக்கும். எங்களைச் சமாளிப்பது பெரியவர்களுக்குக் கொஞ்சம் சிரமம்தான். விடுமுறைக்கான திட்டமிடல்கள் அங்கே  வேறுவிதமாக இருக்கும். குல தெய்வம் கோயிலுக்குப் போக வேண்டும் என்று ஆரம்பிக்கும். கோயிலுக்குப் போவதென்றால்  எல்லோருக்கும் விருப்பம்.

                                                முதல் நாளே பொங்கலுக்குத் தேவையான பொருட்கள் எல்லாவற்றையும்  அம்மா, பெரியம்மா, சித்தி ஆகியோர் எடுத்து வைத்துவிடுவார்கள் . அதில்  குறிப்பிடக் கூடிய முக்கியமான பற்றியம்  என்னவென்றால் பெரும்பாலும் எல்லாமே எங்கள் வயலில் விளைந்த அரிசி, கரும்பு, தேங்காய், பழம்,பாக்கு,வெற்றிலையாக இருக்கும்.

                                                  வாகன வசதிகள் குறைவான காலம் என்பதால் மாட்டு வண்டியில்தான் பயணம். அதை இப்போது நினைத்தாலும் மனது குதூகலிக்கும். அப்பப்பாதான் மாட்டு வண்டி ஓட்டுவார். மாடுகளின் மேல் படாதவாறு சிறிய சாட்டையை சுழற்றி சத்தமெழுப்பி அவற்றை மெதுவாக விரட்டிச் செல்லும் அழகைக் காணவே அவருக்கு அருகில் முன்பக்கமாக அமர்ந்து கொள்வேன். ஒற்றையடிப் பாதைகளில் சத்தமிட்டபடி மாட்டு வண்டி செல்வது கூட இசை போல இருக்கும் எனக்கு.

                                             கோயிலுக்குப் போனதும் பெரியவர்கள் எல்லோரும் பொங்கல் பொங்குவதற்கான வேலைகளைச் செய்யத் தொடங்குவார்கள்.  நாங்கள் சிறியவர்கள்  கோயில் மண்ணில் விளையாடிக் கொண்டிருப்போம். அப்படியே அப்பாவைக் கேட்டு பலூன்,பந்து என வாங்கி விளையாடுவோம். விசேட நாளாக இருந்தால் மணிக் கடைகள், பனிக்கூழ் கடைகள்,சாப்பாட்டுக் கடைகள் எல்லாமே இருக்கும். சாப்பாட்டுக் கடை என்றால் இப்போது உள்ளவாறு இருக்காது. தோசைக்கடை, இட்டிலிக்கடை மட்டும்தான்.

                                          அம்மாக்கள் புற்கை பொங்கும்  நேரத்திற்குள் ஒரு தடவை  நாங்கள் சித்தப்பாவுடன்  சென்று  ஒரு தோசைக் கடையில்  ஆளுக்கு இரண்டு தோசை எனச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவோம். அப்படியே கோயிலை ஒரு சுத்து சுத்தி கண்ணைக் கவருகின்ற  வண்ணத்தில்  விதம் விதமாக தயாரித்து  அடுக்கி வைக்கப்பட்ட மிட்டாய்களையும் ஒரு கை பார்த்துவிட்டு வருவதற்குள் இங்கு எல்லாம் தயாராக இருக்கும்.

                                         பொங்கல் முடிந்த பின்னர் சாமிக்குப் படைத்துவிட்டு அங்கே நிற்பவர்களுக்கும் கொடுத்துவிட்டு நாங்களும் அங்கேயே சாப்பிட்டுவிட்டு வெளிக்கிட்டோம்  என்றால்  இரண்டு  மாட்டு வண்டியும் நேராக  வீட்டில்தான்  போய் நிற்கும் . கோயிலுக்குப்  போனால் நேராக  வீட்டிட்குத்தான் போக வேண்டுமென  அம்மாச்சி சொல்லிவிடுவார் .

                                         பிறகு ஊரில்  உள்ள வீடுகளுக்கெல்லாம்  நாங்கள்தான் ஆளுக்கொரு பாத்திரத்தில பொங்கல் கொண்டு செல்வோம். அது எங்களுக்கு விளையாட்டுப் போன்றது. யார் விரைவாகக் கொண்டு சென்று  கொடுத்துவிட்டு வருவதென  போட்டி போட்டுக் கொண்டு செல்வோம். அது ஒரு அழகான பண்பாடு. பகிர்ந்துண்ணல் என்பதைச் சற்றே மறந்த பகுதியில் வாழும் எனக்கு இப்போது நினைத்துப் பார்த்தாலும் அவையெல்லாம் எனக்கு கிடைத்த வரம் போலத்  தோன்றும்.

                                         இன்னொரு நாள் எல்லோரும் சேர்ந்து வயலுக்குச்  செல்வோம். அங்கே  தண்ணீர்  இறைக்கின்ற இடத்தில் தொட்டியில குளிப்பது , வயலுக்குத் தண்ணீர்  போகின்ற  கால்வாயில் ஓடும் சின்னச் சின்ன மீன்களைப்  பிடித்து மீண்டும் கிணற்றுக்குள் விடுவது, அப்படியே தென்னந் தோப்புக்குச் சென்று இளநீர் குடிப்பது, கரும்புத் தோட்டம் செல்வது  என நாள் போவது கூடத் தெரியாது.

                                  ஆறு , குளம் சென்று போட்டிக்கு நீச்சலடிப்பது, மத்தியான வெயிலில் கிளித்தட்டு, கிட்டிப்புள் விளையாடுவது என எங்கள் விடுமுறைகள் குதூகலமாகவே செல்லும். விடுமுறைக்காக நாங்கள் காத்திருந்ததில்லை. பாடசாலை முடித்து வந்தாலும் வார இறுதி நாட்களிலும் எங்கள் பொழுது போக்குகள் இவைதான்.

                                  இவற்றை எல்லாம் விடவும் அப்பப்பா, அப்பாச்சி சொல்லும் சுவாரசியமான கதைகள் கூட எங்களைப் புது உலகிற்கு அழைத்துச் செல்லும். இரவு உணவை உருண்டைகளாக உருட்டி கைகளில் கொடுத்தவாறே அப்பாச்சி சொல்கிற கதைகள் அவர் கொடுக்கும் உணவைப் போலவே அருமையானவை. பெரியவர்களாகப்  பத்துப்பேரும் சிறுவர்களாக ஐந்து பேரும் இருந்த அந்த வீட்டில் நான் தனிமையை உணர்ந்ததேயில்லை.

                                    தினமும் எங்கள் நாட்கள் குதூகலமாகவே இருக்கும். உணவுகள் ஆரோக்கியமாக இருந்தன. வரகு,திணை,சாமை,குரக்கன் என அனைத்து தானியங்களும் உணவில் இடம்பெற்றது. வீட்டின் பின்புறம் அம்மா வைத்திருந்த கீரை வகைகள் தினமும் உணவாகின. கைமுறுக்கு,சீடை,எள்ளுருண்டை,பொரி உருண்டை எனத் தின்பண்டங்கள் வீட்டிலேயே தயாராக இருக்கும்.

                                  எந்த உறவினர் வீட்டிற்குச் செல்வதாக இருந்தாலும் வீட்டில் தயாரித்த உணவுகளும், வயலில் விளைந்த தானியம், கிழங்கு, பழங்களுமே கையுறையாகக் கொண்டு செல்லப்பட்டது. விளையாடச் சென்று கை, காலை உடைத்துக் கொண்டதல்லாமல் நோய் வந்து நாங்கள் படுத்தது மிகவும் குறைவு. சந்தேகங்கள் தீர்த்து வைக்கும் அறிவாளியாக அப்பப்பா இருந்தார். என் அப்பப்பா இருந்தவரை எனக்கு எல்லாம் அவர்தான். அவர் சொல்கின்ற ,செய்கின்ற  செயல்கள்  எல்லாம் வித்தியாசமாக இருக்கும்.

                                 வீட்டில் இருக்கும் வேப்பம்பழ விதை, சாப்பிட்ட பின்பு  உள்ள மாதுளை,மா, திராட்சை, தோடம்பழ விதைகள் எல்லாவற்றையும் காய வைத்து ஒரு பையில்  சேர்த்து வைத்துவிட்டு தூரமாக  உள்ள இடங்களுக்குச் செல்லும்போது   வீசிவிட்டு வருவார். இல்லையென்றால் குளிப்பதற்கு ஆற்றிற்குச் செல்லும்போது ஆற்றங்கரை ஓரமாக வீசிவிட்டு வருவார் . அது தானாக  முளைத்துப்   பலன் கொடுக்கும் எனச்  சொல்லுவார். இந்த நல்ல பழக்கம் எல்லாம் அவரிடம்  இருந்து வந்ததுதான். நகரத்துக்கு வந்த பிறகும்  கூட நான் நகர்ப்புறத்தைத் தாண்டிப்  போக நேரும் சமயங்களில் வண்டியில் சேகரித்து வைத்திருக்கும் விதைகளைத்   தூவிச் செல்வது வழக்கம்.

                                            அப்பப்பாவுடன் இருந்தபோது எனக்கு அவர் செய்வதெல்லாம் பெரிதாகத்  தோன்றியதில்லை. கிராமத்தில் பெரும்பாலும் எல்லாரிடத்திலும் இத்தகைய நற்குணங்கள் இருந்ததுண்டு. நகர்ப்புறம் வந்து வீட்டைக் கூண்டாக மாற்றிக் கொண்டு வசிப்பவர்களைப் பார்த்த பின்னரே எனக்கு அவரின் செயல்கள் பெரிதாகத் தெரிந்தது. அவர் இறந்த பின்னர் அந்த இழப்பு எனக்கு பெரிதாகத்  தெரியாமல் இருக்கவே மேற்படிப்புக்காக நகர்ப்புறம் அனுப்பி வைத்தார் அப்பா. ஆனால் இங்கு வந்த பின்னர்தான் ஊர் நினைவும் உறவுகளும் பெரிதாகத் தெரிந்தது.

                                       அடுத்தடுத்து பெரியவர்கள் காலமான பின்னர் ஊருக்குப் போகவே கவலையாக இருந்தது. வேலை, குடும்பம் என்றானபின் ஊருக்குச்  செல்வதும் குறைந்து போனது. ஆற்றில் போட்டி போட்டு நீச்சலடிக்க அண்ணன்கள் ஊரில் இல்லை, இரவு உணவை உருண்டை பிடித்துக் கையில் வைக்க அப்பாச்சி இல்லை, ஊர்க் கோயில் வரலாறு சொல்லும் அப்பப்பா இல்லை, அப்பாவைத் தொடர்ந்து அம்மாவும் இல்லை என்றான பின் ஊர் செல்லும் நாட்டம் குறைந்து போனது.

                                         அக்கா தொலைபேசியில் பேசும் போதெல்லாம் எங்களை எல்லாம் மறந்துவிட்டாயேடா  என்று மூக்கைச் சிந்துவாள். கோயிலுக்குப் பொங்கல் வைக்கச் செல்லும் போதெல்லாம் அழைத்துக் கொண்டே இருக்கிறாள். விடுமுறைப் பிரச்சனைகள் ஒரு பக்கம் தடுக்க பெரியவர்கள் இல்லாத வெறுமை வீட்டைப் பார்க்க மனது வரவில்லை எனக்கு. அம்மா இருந்தவரை மாதமிருமுறை சென்றதும் அங்கே எல்லாரும் ஒன்றாகக் கோயிலுக்குச் சென்றதும்தான். அதன்பின் போவது குறைந்து போனது. சென்ற ஆண்டு குடும்பத்தோடு அம்மாவின் நினைவு நாளுக்குச்  சென்றதோடு சரி. அதுகூட இரு நாள் விடுப்பில் சென்றது.

                                             காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகின்றது. பழைய நாட்கள் திரும்பிடாதா என்று மனது இன்னும் அடித்துக் கொள்கிறது. குளத்தில் நீச்சலடிக்க, வயல் வரப்புகளில் நடக்க, போட்டி போட்டு கரும்பு உண்ண, அண்ணண்களோடு விளையாட, அப்பாச்சியின்  இடத்தில் அக்கா தரும்  உணவைச்  சாப்பிட என ஓரமாக ஆசை இருக்கத்தான் செய்கிறது. “அப்பா”என்ற குரல் கேட்டுப்  பெருமூச்சோடு நிமிர்ந்தேன்.

                                              “அப்பா விடுமுறைக்கு எங்கே செல்வதென ஒரு இடத்தை யோசித்து வைத்திருக்கின்றேன் ” என்று புதிர் போட்டபடி என் முகத்தைப் பார்த்தான். உணர்வற்றபடி “ம் சொல்லு ” என்றேன்.” அப்பா “போன வருசம் சென்றோமே அங்கேயே செல்வோம், உங்கள் ஊருக்குப் போவோம்” என்றான் ஆர்வமாக.

                                         வியப்போடு பார்த்தேன் “ஆம் அப்பா அங்கேயே போவோம். சிறிது நேரத்திற்கு முன்னர் பெரியப்பா கூறியிருந்தார்  அங்கே  நீங்கள் எல்லாம் எப்படி மகிழ்ச்சியாக விடுமுறையைக் கொண்டாடினீர்கள்  என்று. போன ஆண்டு சென்றபோது  நாங்கள் வீட்டில்  மட்டும் நின்றுவிட்டு வந்துவிட்டோம் . இந்த முறை அங்கே சென்று அதிக நாட்கள் நிற்கவேண்டும். ஆறு,குளம்,கோயில்,தோப்பு என அனைத்து இடங்களுக்கும் செல்வோம். சென்ற தடவை அங்கு போனபோது எல்லோரும் எவ்வளவு பாசமாக பார்த்துக்கொண்டார்கள். நான் எல்லாரையும் பார்க்க வேண்டும். பெரியம்மா கதைக்கும்போது அவவையும் வரச் சொல்லுவோம். எல்லோரும் சேர்ந்து போவோம்.” என்றபடி அவன் பெரிய மனிதத் தோரணையில் ஆர்வமாகச் சொல்லிக் கொண்டிருக்கையில் எனக்குள்ளே ஒரு பரவசம் என்னை ஆட்கொண்டது. என் மகன் மண் வாசம் உணர்ந்தவனாய் இருக்கிறான். விடுமுறையை எங்கோ களிக்க விரும்பியவன் தன் ஊரிற்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறான். எனக்கு மகிழ்வாக இருந்தது.

                                            மனைவியும் எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு மலர்ந்த முகத்தோடு தன் சம்மதத்தை உணர்த்தினாள். மகனின் விடுமுறைக்காக அவனை விடவும் ஆர்வமாக நான் தவிப்போடு காத்திருக்கத் தொடங்கினேன்.

    Share
  • புலம்பெயர் தமிழரும் புதிரான வாழ்வும் – ஈழத்தமிழர் வாழ்வியல் சிக்கல்கள்

    (சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இடம்பெற்ற கட்டுரை)

    • பொலிகையூர் ரேகா

    அறிமுகம்

                   புலம்பெயர் இலக்கியங்களைப்  பற்றிப் பேசுவதற்கு முன்பாக அத்தகைய இலக்கியங்களுக்குக் காரணமாயமைந்த காரணிகளையும், புலம்பெயர் மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள வாழ்வியல் சிக்கல்களையும் பேச வேண்டியது இன்றியமையாததாகும்.

                   காலம் காலமாக வேரூன்றி வளர்ந்த மண்ணிலிருந்து பிடுங்கி வீசப்பட்ட பின்னர் அந்நிய மண்ணில் துளிர்த்தெழுதல் என்பது சவால் நிறைந்ததாகும். சொந்த மண்ணைப் பிரிந்த சோகத்தோடு; அநாதையாக  வாழ்ந்து வேற்று நாட்டிலும் அடையாளமற்றவராகப் புலம்பெயர்ந்தவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்கள் அதிகம். அவை பற்றிய ஓர் ஆய்வே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    புலம் பெயர்தல்

                   ‘’புலம்பெயர்தல்’’ அல்லது ‘’இடம் பெயர்தல்’’ என்பது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளது. பொதுவாக ஒருவரது முன்னோர் பிறந்து வளர்ந்த நிலப்பரப்பே புலம் எனப்பட்டது. அக,புற நெருக்கடிகள் காரணமாக தாம் வாழ்ந்து வந்த இடத்தை விட்டு வேறிடத்திற்குச் சென்று அங்கு தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் புலம்பெயர் மக்கள் / ஏதிலிகள் என அழைக்கப்படுகின்றனர்.புலம்பெயர்தலானது உள்நாட்டிற்குள்ளோ , பிற நாடுகளுக்கோ இடம்பெயர்தலைக் குறிக்கின்றது.

    புலம்பெயர்தலுக்கான காரணிகள்

                   கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து கொண்டுள்ளனர். அதற்குப் பல காரணிகள் இருப்பினும் முக்கியமாகக் கருதப்படுபவை பின்வருமாறு:

    • உள்நாட்டுப் போர்
    • அரசியல் காரணங்கள்
    • மனித உரிமை மீறல்கள்
    • இயற்கைச் சீற்றங்கள்
    • கல்வி
    • பொருளீட்டல்
    • வேலையின்மை
    • வறுமை

    சங்க இலக்கியங்களில் புலம்பெயர்தல்

                   “பதியெழு அறியாப் பழங்குடி கெழீஇய”(சிலம்பு)

    எனப் புலம்பெயராது ஒரே இடத்தில் மக்கள் வாழ்ந்த செய்தியைச் செவ்வியல் இலக்கியங்கள் பதிவு செய்ததைப்போன்று புலம்பெயர்தலைப்பற்றி முல்லைப்பாட்டு,நெடுநல்வாடை, புறநானூறு, பட்டினப்பாலை, நற்றினை ஆகியன கூறுகின்றது.

                   “புலம்பெயர் மாக்கள் கலந்தினிது உறையும்” என்று வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்து புகாரில் வாழ்ந்தவர்களைப்பற்றிப் பட்டினப்பாலை எடுத்துரைக்கின்றது. “அவன் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து” என நற்றிணையும், “கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்காள்” எனக் கடலாடு காதையில் இளங்கோவடிகளும், “ஓதல் பகையே துதிவை பிரிவே” எனத் தொல்காப்பியரும் கூறுகின்றார்.

    ஈழம் ஓர் அறிமுகம்

                     இன்றைய காலப் பகுதியில் “இலங்கை” என்று அழைக்கப்படும் தீவானது முற்காலத்தில் “ஈழம்” என்றே அழைக்கப்பட்டது. பழந்தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களில் “ஈழம்”, “ஈழ மண்டலம்” என்ற பெயரே பயன்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு பழந்தமிழ் இலக்கியங்களில் “ஈழத்துணவு”, “ஈழத்துப் பூதந்தேவனார்” போன்ற சொல்லாடல்களும்  ஈழம் என்பது வரலாற்றோடு தொடர்புடைய பெயர் என்பதை வலியுறுத்தி நிற்கின்றது. ஆக்கிரமிப்புகளின் பின்னரான ஈழமானது தமிழர் பகுதி என்ற எல்லைக்குள் குறுகிப்போய் வந்தேறிகளின் ஆட்சிக்குள்ளாகிப்போனது.

    ஈழத் தமிழர் இடப்பெயர்வு 

                  உலகத் தமிழர் வரலாற்றில் ஈழத் தமிழரின் இடப்பெயர்வு தனித்துவமானதாகும். சிங்களப் பேரினவாதத்திற்குள் மூழ்கிக் கிடக்கின்ற அரச பயங்கரவாதமானது தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணிலிருந்து புலம்பெயரச்  செய்தது.

                   சனநாயகத்திற்குட்பட்ட கோரிக்கைகள் மறுக்கப்பட்ட நிலையில்; உரிமை மீட்புப் போராட்டங்கள் ஆயுதப் போராட்டங்களாக மாறிய பின்னர் பேரினவாத அரசின் கெடுபிடிகளுக்குள் உயிர்வாழ முடியாமல் தமிழர்கள்  பிற நாடுகளுக்கு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர்.

                  1983 ஆம் ஆண்டு இனக் கலவரமும், இராணுவத் தாக்குதல்களும், ஆயுதப் போராட்டங்களும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழவேண்டிய ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. தம் விருப்பத்திற்கு மாறாக, பிறந்த மண்ணிலே வாழ்வதற்கான உத்தரவாதம் எதுவுமற்ற நிலையில் இடப் பெயர்வானது; உள்நாட்டு இடப்பெயர்வாகவும் பிற நாடுகளில் தஞ்சம் புகுதலாயும் அமைந்தது.

                   உயிர் பிழைத்தலின்பொருட்டுப் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று இந்தியா, இங்கிலாந்து, நோர்வே, கனடா, அமெரிக்கா, அயர்லாந்து, ஆசுத்திரேலியா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, பிரான்சு, பின்லாந்து, சேர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

    வாழ்வியல் சிக்கல்கள்

                   புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் தாம் இழந்த வீட்டையும் நாட்டையும் உறவுகளையும் எண்ணி வருந்துவதன்றிப் பல இன்னல்களையும் அனுபவித்து வருகின்றனர். ஈழத் தமிழினத்தின் போராட்டத்தின் பின்பு புலம் பெயர்ந்த தமிழர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு

    • ஏதிலி முகாம்கள்
    • மனநிலை
    • உணவுப் பழக்கங்கள்
    • மொழி
    • காலநிலை
    • நிறவாதம்
    • வேலைவாய்ப்பு
    • ஆளுமைச் சிதைவு
    • தனிமை
    • பண்பாட்டுச் சிக்கல்
    • அடையாளச் சிக்கல்
    • முரண்கள்
    • சுரண்டல்கள்
    • அச்சுறுத்தல்கள்
    • காழ்ப்புணர்ச்சி

    1. ஏதிலி முகாம்கள்

                  பிற நாடுகளுக்கு ஏதிலிகளாகச் செல்பவர்கள் அங்குள்ள அகதி முகாம்களில் தங்க வேண்டியுள்ளது. இச்சூழலில் நிலவும் பாகுபாடுகளும், சட்டதிட்டங்களும் தனிமனித சுதந்திரத்தைப் பாதிப்பதாகவே அமைகின்றது. நிம்மதியாக வாழவேண்டித் தாய்நாட்டைத் துறந்து வந்தவர்கள் இங்கேயும் கட்டுப்பாடுகளுக்குள் வாழ்தலென்பது கவலையளிப்பதாகவே அமையும்.

    1. மனநிலை

                   இயல்பாகவே உயிர்களிடத்திலுள்ள இழந்தது குறித்த ஏக்கமானது பூர்வீக நாட்டையும்,புகலிட நாட்டையும்  ஒப்புநோக்க வைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. வாழும் நாட்டுச் சூழல் ஒத்துப்போகாத நிலையில் பிறந்தநாட்டு ஏக்கமும், நினைவுகளும் விரக்தியைத் தூண்டுகின்றது. போர்ச் சூழலிலிருந்து வெளியேறிப் பல காலம் கழிந்துவிட்ட நிலையிலும் பெரும்பாலானோர்  அதிலிருந்து வரமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

    1. உணவுப் பழக்கங்கள்

                   இது வெளியே இருந்து பார்ப்பவர்களுக்குச் சிறிய விடயமாக இருப்பினும் இதுவும் ஒரு இன்னலாகவே புலம்பெயர்ந்தவர்களால் பார்க்கப்படுகின்றது. நெல்லரிசிச் சோற்றைப் பிரதான உணவாகக் கொண்ட தமிழர்க்கு வெளிநாட்டு உணவுகளின் மேலிருக்கும் மோகம் சிறிது காலத்தில் சலிப்புத் தட்டிவிடும். அத்தோடு குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தனியே புலம்பெயர் நாட்டில் வசிப்பவராக இருப்பதாலும்  பிறந்த நாட்டு உணவைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகின்றது.

     

    1. மொழி

               பிறநாட்டின் மொழி தெரியாது அங்கு வாழ்தல் என்பது மிகவும்   கொடுமையானது. வெளியில் சென்றால் கேட்கப்படும், பேசப்படும் மொழி விளங்காததாக இருப்பதோடு தெரிந்த சில வார்த்தைகளோடு சமாளிப்பதும், மொழியைக் கற்றுத் தேர்ந்திருப்பினும் மனதில் உள்ளதை உள்ளவாறு  தாய்மொழியில் கூறுவதைப்போல வெளிப்படுத்த இயலாமல் வாழ்வதும் வேதனை அளிக்கக் கூடியதாகும்.

                 வாயிருந்தும் ஊமையாக வாழவேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஒரே ஊரில் வாழும்போது பிரிவினைவாதம் பேசுபவர்கள்கூட வெளிநாட்டில் தமிழ் பேசுபவனைக் கண்டதும் கடவுளைக் கண்டதைப் போன்று மகிழ்கின்றனர். மனதில் இருப்பதைச் சொந்த மொழியில் கூறுவதை போல வேறு மொழியில் பகிர்ந்துகொள்ள  முடியாதென்பதே உண்மையாகும்

               பெரியவர்களுக்கு மொழியைக் கற்றல் சிக்கலாய் இருப்பது போல இளைய தலைமுறைக்குத் தாம் சார்ந்து வாழும் நாட்டின் மொழியைக் கற்றல் இலகுவாகவும் தாய் மொழியைக் கற்றல் கடினமாயும் போவதால் தாய்மொழியை எழுத, வாசிக்கத் தெரியாத சமூகமாக மாறிவிடுகின்றனர்.

    1. காலநிலை

                 வெயில் கொளுத்தும் வெப்பமண்டல நாட்டுக்குச் சொந்தமான தமிழர்கள்  உடலை உலுக்கும் குளிர்தேசத்தில் ஊசிமுனைகளாய் ஊடுருவும் குளிருக்கு ஈடுகொடுக்க முடியாமலும், நேர மாற்றத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதிலும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். கடல் கடந்து சென்று கால மாற்றத்துக்கு ஈடு கொடுத்து வாழ்தல் என்பது சவால் நிறைந்ததாகவே உள்ளது.

    1. நிறவாதம்

                  புலம்பெயர் நாடுகளில் உள்ள மக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டும் நிறத்தையும், உருவ அமைப்பையும் கொண்ட தமிழர்கள் நிறவாதம் காரணமாக நிறவெறிச் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். பல இடங்களில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்.

    1. வேலைவாய்ப்பு

                   வேலை அனுமதிச் சீட்டு இல்லாமையையும் புலம்பெயர்ந்துள்ளமையையும் காரணம்காட்டி பன்னாட்டு நிறுவனங்கள் தகுதியுள்ளவர்களை வேலைக்கு எடுக்காத சூழ்நிலை இந்தியாவில் பல படித்த புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டுவரும் சிக்கலாகும். இதேபோன்று வெளிநாடுகளிலும் தமிழர்கள் பெரும்பாலும் கூலி வேலைகளுக்கே பயன்படுத்தப்படுகின்றனர். துப்புரவுத் தொழில், உணவகங்களில் பணியாட்களாக என அடிநிலை வேலைகளுக்கே பணியமர்த்தப்படுகின்றனர். அதுமட்டுமன்றி குறைந்தளவு ஊதியமே வழங்கப்படுகின்றது.உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்

    1. ஆளுமைச் சிதைவு

                   எத்தகைய திறமை இருப்பினும் குடியுரிமை கிடைக்கப்பெறாதாதாலும், மொழிப் பிரச்சனைகளாலும் அதற்கேற்ப வேலைகள் கிடைப்பதில்லை. கிடைத்த வேலையைச் செய்வதற்கு உந்தப்படுகின்றனர். தனி மனித ஆளுமையானது வீணாகிப்போவதில் வெளிநாட்டு வாழ்க்கையும் ஒரு காரணியாகிவிடுகின்றது.

        9.தனிமை

                    தனிமை என்பது நாமாக எடுத்துக் கொள்ளாவிடின் இனிமையைக் குலைப்பதாகவே அமையும். வேலை நேர மாற்றங்களால் குடும்பத்தில் உள்ளவர்கள் முகத்தையே பார்க்க முடியாத சூழலிலும், வயதானவர்களால் தங்கள் பிள்ளைகளின் இயந்திர வாழ்க்கையின் ஓட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாமலும் போவதால் தனிமை கொடுமையாக மாறிவிடுகின்றது. மொழி தெரியாத நாட்டில், அயலினரிடம் கூட பேச முடியாத நிலையில் நினைவெனும் சிறையில் சிக்கிவிடுகின்றனர். இது தாய்நாடு உள்ளிட்ட பிற ஏக்கங்களை அதிகரித்து மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

    1. பண்பாட்டுச் சிக்கல்

                 தமது பண்பாட்டிற்கு முற்றிலும் வேறுபட்ட அந்நிய மக்கள் மத்தியில் வாழ்வது ஒன்றும் சுலபமானதல்ல. நாம் வழக்கமாகச் செய்யும் சிறு செயல்கள் கூட நம்மை அந்நியப்படுத்திக் காட்டும். நமது பண்பாடுகள்கூட புதுமையாக உற்று நோக்கப்படும். எடுத்துக்காட்டாக நெற்றியில் பொட்டிடும் தமிழ் வழக்கம் அங்கு ஏன் என்ற வினாவுடன்தான் பார்க்கப்படுகின்றது.

                   ஆடை அணிகலன்களிலிருந்து, கொண்டாடும் பண்டிகைகள் வரையில் வித்தியாசமாகப் பார்க்கப்படுகையில் நமது பண்பாட்டைக் கைவிட்டு அந்நாட்டுச் சூழலுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு அவர்கள் விழாக்களில் ஈடுபாடு கொள்ளும் சமூகம் இயல்பாகவே தோன்றிவிடுகின்றது. இது நம் அடையாளங்களைத் தொலைக்க ஒரு காரணியாகிவிடுகின்றது.

    1. அடையாளச் சிக்கல்

                 ஏதிலியாக வாழும் நாட்டில் உண்மை முகத்தை தொலைத்து     வாழவேண்டி உள்ளது. புலம்பெயர் நாட்டில் கடினமின்றி வாழ்வதற்காகப் பல விடயங்களை இழந்து வாழ வேண்டியிருத்தல் சிக்கலான ஒன்றாகும். வைக்கும் பெயர்கூட அந்நாட்டு வாழ்க்கையில் இடையூறாக இருத்தல் கூடாதென்றெண்ணி தமிழ்ப் பெயர்களை விடுத்து வாயில் நுழையாத மேலைநாட்டுப் பெயர்களையும், வடவெழுத்துப் பெயர்களையும் வைக்கத் தொடங்கிவிடுகின்றனர்.புலம்பெயர் நாட்டில் தம்மைத் தக்கவைத்துக்கொள்ளத் தம் அடையாளங்களையும் இழக்கத் துணியும் அவல நிலைக்கு புலம்பெயர் தமிழர்கள் ஆளாகின்றனர்.

    1. முரண்கள்

                  புலம்பெயர்ந்து வந்ததன் காரணம் அறியாத இளைய தலைமுறைக்கும், தாய் நாட்டு ஏக்கத்தோடு வாழும் முந்தைய தலைமுறைக்கும் இடையேயான கண்ணோட்டம் மாறுபடுவதால் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. புகலிட நாட்டின் பழக்கவழக்கங்களால் பெரும்பாலான இளைய தலைமுறையினர் தம் நாட்டுப் பண்பாட்டை மறந்துவிடுகின்றனர். பண்பாட்டில் ஊறிப்போன முந்தைய தலைமுறைக்கு இம்முரண்கள் மன உளைச்சலை அளிப்பதாகவே இருக்கின்றது.

    1. சுரண்டல்கள்

                     வேலையின்மை என்ற சூழ்நிலையில்  எந்த வேலைக்கும் செல்லத் தயாராக இருக்கும் மக்களை குறைந்த சம்பளத்துடன் வேலைக்கு அமர்த்துதலும், குடியுரிமை பெறாதவர்களுக்கு  மிக மிகக் குறைந்த சம்பளம் வழங்குவதுமாக புலம்பெயர் நாட்டில்  உழைப்புச் சுரண்டல்கள் இடம்பெறுகின்றன.

      14.அச்சுறுத்தல்கள்

                   தாய்நாட்டோடு ஒப்பிடுகையில் கருத்துச் சுதந்திரம் என்பது புலம்பெயர் நாட்டில் அதிகம் இருப்பினும் அதை புகலிடம் கோரிச் செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. அப்படிப் பயன்படுத்தி உரிமைகள் பற்றிப் பேசமுற்பட்டால் தேவையற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.அடக்குமுறை காரணமாக தாயகத்தைவிட்டு நீங்கியவர்களுக்கு மீண்டும் அடக்குமுறைகளுக்குள் வாழ்தலென்பது கொடுமை நிறைந்ததாகும். இது அவர்களுக்கு அச்சுறுத்தல் நிறைந்த சவாலாகவே அமைகின்றது.

     

    15.காழ்ப்புணர்ச்சி

                  புலம்பெயர் நாட்டினரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சியோடே ஏதிலிகளை எதிர்கொள்கின்றனர். தங்கள் நாட்டில் தமக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளையும் வேலை வாய்ப்புகளையும் தட்டிப் பறிக்க வந்திருக்கும் எதிரிகளாகவே புலம் பெயர்ந்தவர்களைப் பார்க்கின்றனர். இம் மனநிலை புலம்பெயர்ந்தவர்கள் மீது பலவகையிலும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. இவற்றால் புலம்பெயர்ந்தவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகின்றனர்.

      

    புலம்பெயர் இலக்கியம் 

                 புலம்பெயர் இலக்கியமானது புகலிட இலக்கியம், ஆறாந்திணை இலக்கியம் எனவும் அழைக்கப்பட்டது. போரானது “போர் இலக்கியம்” மற்றும் “புலம்பெயர் இலக்கியம்” என இரு வகையான இலக்கியத்திற்கு காரணமாயமைகின்றது. தம் சொந்த நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் தமது தாய் நாடு தொடர்பான நிகழ்வுகள்,வலிகள், ஏக்கங்கள் ஆகியனவற்றையும் புலம் பெயர்தலிலும் புலம்பெயர் நாட்டிலும் சந்திக்கும் இன்னல்களையும் இலக்கியங்களாகப் படைத்தனர். இவையே புலம்பெயர் இலக்கியங்கள் எனப்படுகின்றன.

                  போரின்  கொடுமை, குடும்பங்களின் சிதைவு, உயிரிழப்பு, வெறுமை,ஏக்கம்,

    நினைவுகள் எனப் பலவற்றை வெளிப்படுத்தித் தன்னிரக்கம் நிறைந்தவையாய் வெளிவரும் ஈழத்துத் தமிழ்ப் படைப்புகளை எளிதாகக் கடந்துவிட முடியாது. நல்ல இலக்கியம் அவலங்களிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பிறக்கின்றன. சொந்த நாட்டில் வாழ்வு மறுக்கப்பட்ட நிலையில் தாம் இழந்துவிட்ட நாட்டையும் உறவுகள் பற்றிய விரக்தியையும், பிரிவாற்றாமையையும் வெளிப்படுத்த  இவ்விலக்கியங்கள் உதவுகின்றன.

                  என்னதான் புலம்பெயர் இலக்கியங்கள் உண்மையின் குரலாக இருப்பினும் பலர் உண்மைகளை ஆவணமாக்குவதை விடவும் சந்தைப்படுத்தலிலே முன்னணி வகிக்கின்றனர் என்பதையும் மறுத்துவிட முடியாது. அதேபோன்று புலம்பெயர் தமிழர்களின் எழுத்துக்களும் எழுத்தாளர்களும் சரியான முறையில் இனங்கண்டுகொள்ளப்பட்டு முழுதாக ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும் இலக்கிய உலகில் குறைபாடாய் உள்ளது.

    முடிவுரை

                     புலம்பெயர்தலானது பல காரணிகளின் அடிப்படையில் நிகழ்வதாயினும் புகலிட நாட்டில் புலம்பெயர் சமூகம் சந்திக்கின்ற இன்னல்கள் எண்ணிலடங்காதவை.இருப்பினும் தங்கள் பண்பாட்டை எப்படியாயினும் கட்டிக்காக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது அவர்கள் தாயகத்தின்மேல் கொண்ட ஆழ்ந்த பற்றை வெளிப்படுத்துகின்றது.

                  புலம்பெயர் தமிழர்கள் தாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பிறந்த நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென்றெண்ணித் தமது அனைத்து முயற்சிகளிலும் எமது அடையாளத்தை நிலைநிறுத்தும் வண்ணம் வளர்ந்துள்ளார்கள் என்பதும் பெருமைக்குரியதாகும். அதேபோன்று இளைய சமுதாயமும் பண்பாட்டைக் காக்கும் செயல்களிலும், நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் சாதனைகளிலும் உயர்ந்து செல்வதை எண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டும்.

                 புலம்பெயர்ந்தவர்கள் தங்களது இன்னல்களையும்,கனவுகளையும், தாயகத்தின் நினைவுகளோடு தாம் அடையும் துயர்களையும், புலம்பெயர் நாட்டிலுள்ள தங்கள் வாழ்க்கை நிலையையும், சொந்த நாட்டின் நிகழ்வுகள் குறித்தும்  பல்வேறு இலக்கியங்களைப் படைக்கின்றனர். இவையே இன்று புலம்பெயர் இலக்கியங்களாக  வெளிவருகின்றது. பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே படைக்கப்படுவதால் இலக்கிய வரலாற்றில் புலம்பெயர் இலக்கியங்களுக்கென்று தனிச் சிறப்புள்ளது.

                                 புலம்பெயர் வாழ்வில் பணம் அதிகம் ஈட்டலாம், மகிழ்ச்சியாக வாழலாம் எனும் நல்வாழ்க்கை போன்ற தோற்றத்தைக் காட்டுவதாக இருப்பினும் உண்மையில் அதிக வலியைத்தான் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. தாய்நாட்டு நினைவுகளும், நிகழ்வுகளுமே புலம்பெயர் தமிழரை விரட்டிக்கொண்டிருக்கின்றது. தாய் நாட்டைப் பற்றிய ஏக்கத்தைப்போலவே புகலிட நாட்டின் மீதான எதிர்பார்ப்பும் கனவாகவே போய்க் கொண்டிருப்பதுதான் புலம்பெயர் தமிழர்களின் உண்மை நிலையாகும்.

                                           **************************

    Share
  • கையறு நிலையை மாற்றுவோம்!

    பொலிகையூர் ரேகா

     

    தீய ராமன்கள் இணையானால்
    தீக்குளிக்கும் சீதையாகோம்!
    கண்ணகியாய் மாறிக்
    கணவனையும் எரிப்போம்!

    கூடையில் சுமக்கும் நளாயினி்களாயன்றிக்
    கூண்டினில் ஏற்றும்
    நாகினிகள் ஆவோம்!

    தமயந்திகளாயன்றித்
    தனித்துவம் காப்போம்
    சந்திரமதிகளாயன்றிச்
    சபதம் கொள்வோம்!
    வன்முறைகள் பல கண்ட
    வரலாறு எழுதட்டும் இனி
    வீறுகொண்ட வேங்கைகளைச்
    சீண்டிப் பார்க்காதீரென!

    காலம் காலமாய் வந்த
    கைவிலங்கை உடைத்தே
    காவியம் நாட்டுவோம்
    கையறு நிலையை மாற்றுவோம்!

     

    Share