கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் வாணி விழா

vivekananda collegeஅண்ணாகண்ணன்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் உள்ள விவேகானந்தா கல்லூரி, ஆரம்பப் பாட சாலை மாணவர்களின் வாணி விழாவினை 2010 அக்.19 அன்று கண்டு களித்தேன்.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வேப்பிலை நடனம், கரகாட்டம், மாரியம்மன் நடனம், காளியம்மன் நடனம், சக்தி வழிபாடு குறித்த தனி்ப் பேச்சுகள் (இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி), குழுப் பாடல்கள் (ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம்), நாடகம்… எனப் பலவும் மிக நேர்த்தியாக இருந்தன. தமிழும் சைவமும் அவர்கள் வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பதை இந்த நிகழ்ச்சிகள் எடுத்துரைத்தன.

நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களின் ஒப்பனை, இசைக்கேற்ப உடல் உறுப்புகளை அசைக்கும் திறன், கண்களின் வழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல், நினைவாற்றல் ஆகிய அனைத்தும் மிகச் சிறப்பாக இருந்தன. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர்கள் அவர்களைச் செம்மையாகப் பயிற்றுவித்துள்ளதைக் காணக் கூடியதாக இருந்தது.

மொரீசியசுக்கான இலங்கையின் கவுரவத் தூதர் தெ.ஈஸ்வரன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினார்.

இக்கல்லூரியில் விவேகானந்தர், விபுலானந்தர், நாவலர், மகேசன் ஆகியோர் பெயர்களில் தனித் தனிக் கட்டடங்கள் உள்ளன. முதல் மூவருக்கும் சிலைகளும் உள்ளன. வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் கட்டடச் சுவர்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அடுக்குகள் உள்ளன. இலங்கையிலோ, முதல் தரம் முதல் 13ஆம் தரம் வரை வகுப்புகள் உள்ளன. ஒவ்வொரு தரத்திலும் சிறந்த மாணவர் ஒருவர், Prefect என்ற பட்டத்திற்குத் தேர்வு பெறுகிறார். இவர், பிற மாணவர்களை வழி நடத்துகிறார். இவர்கள், தனியே கோட் உடை அணிந்து, வலம் வருகிறார்கள்.  12, 13ஆம் தரங்களில் Senior Prefect என ஒருவர் தேர்வு பெறுகிறார். இவ்வாறு தேர்வு பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பெறுகின்றன. அவற்றுக்கு வேலை வாய்ப்புக் களத்தில் சரியான மதிப்பு உண்டு எனப் பெற்றோர் ஒருவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களின் பெயர்களை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய மாணவர்கள், அவ்வப்பொழுது அறிவித்தார்கள். அவற்றுள் வடமொழித் தாக்கம் மிகுந்திருப்பதைக் கண்டேன். முதெலழுத்துகளை ஆனா, ஆவன்னா என்ற முறையில் குறிப்பிட்டனர் (எ.கா. – சூவன்னா ஆனந்த ரூபிணி). ஆங்கிலத்தில் முன்னெழுத்துகளைக் குறிப்பிட்ட பொழுது, இவ்வாறு சொல்ல இயலவில்லை (எ.கா. – எம்.தர்ஷிகா).

இந்தக் கல்லூரிக்கெனத் தனியே விளையாட்டுத் திடல் எதுவும் இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை வெளியே உள்ள பொது விளையாட்டு்த் திடலினை முன்பதிந்து பயன்படுத்துகிறார்கள். இந்தத் திடலுக்கு ஒரு நாள் வாடகை, இலங்கை ரூபாய் மதிப்பில் 85 ஆயிரம். இவ்வாறு இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

இந்தப் பள்ளியின் பழைய மாணவர் சங்கம் இயங்கி வருகிறது. இவர்களை, முக மண்டலத்தில் காணலாம். இவர்களுள் ஒருவர், வாணி விழா நடைபெறும் பொழுதே அது குறித்த செய்திகளையும் படங்களையும் தங்கள் முக மண்டலப் பக்கத்தில் ஏற்றினார். அதனை மடிக்கணினியில் எடுத்துக் காட்டினார். வலைப்பதிவும் தொடங்குங்கள் என வழி காட்டினேன். முக மண்டலத்தில் ஏற்றினால் முக மண்டல உறுப்பினர்கள் மட்டுமே அவற்றைக் காண முடியும்; வலைப்பதிவினை யாரும் காண முடியும் என்றேன். முயல்வதாகக் கூறினார்.

நிகழ்ச்சியின் இடையே பேசிய இக்கல்லூரியின் அதிபர், ‘இந்த மாணவர்களைப் பார்க்கிறபோது, விவேகானந்தா கல்லூரியின் எதிர்காலம் பிரகாசமாய் இருப்பது தெரிகிறது’ என்றார். எனக்கோ, இலங்கையின் எதிர்காலமே பிரகாசமாய் இருக்கும் எனத் தோன்றியது.

அண்ணாகண்ணன்

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

Share

About the Author

அண்ணாகண்ணன்

has written 86 stories on this site.

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 'தமிழில் இணைய இதழ்கள்' என்ற தலைப்பில் இளம் முனைவர்; 'தமிழில் மின் ஆளுகை' என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

2 Comments on “கொழும்பு, விவேகானந்தா கல்லூரியின் வாணி விழா”

  • Nanda wrote on 19 October, 2010, 20:11

    அழைப்பு கிடைத்து ஒரு விழாவுக்கு போய் வந்து “””எனக்கோ, இலங்கையின் எதிர்காலமே பிரகாசமாய் இருக்கும் எனத் தோன்றியது.”” சொல்லும் வார்த்தைகளில் தெரிகிறது உங்கள் அரசியல் ,,,,, எலும்பு துண்டு நினைவுக்கு வருகிறது !!

  • அண்ணாகண்ணன்
    அண்ணாகண்ணன் wrote on 20 October, 2010, 12:20

    இந்த நிகழ்வில் நான் பார்வையாளனாகத்தான் பங்கேற்றேன். நூற்றுக்கும் மேலான பள்ளிச் சிறுவர்களின் ஆற்றலை நேரில் கண்டதால் அவ்வாறு உரைத்தேன்; ஆதாயம் கருதி அன்று. எல்லோரின் நிகழ்காலமும் எதிர்காலமும் பிரகாசமாய் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதை நோக்கி இயங்குவதே என் அரசியல்.

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 4 = twelve


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.