தமிழ்த்தேனீ

Tamil_theneeஅப்பா  சொன்னதைக் கேட்டு இங்கே  இவர் வீட்டுக்கு  வந்தது  தவறோ என்று முதன் முறையாகக் கணேஷுக்குத்  தோன்றியது. ஆமாம்  பத்து நாட்களாகத் தொடர்ந்து  இந்தச்  சுந்தரேசன்  வீட்டுக்கு  வந்துகொண்டிருக்கிறான் கணேஷ்.

காலத்துக்கு ஏற்ப நிறையப் படித்திருந்தும் அவனுக்கு உரிய வேலை கிடைக்காமல் பல நிறுவனங்களில்  வேலை பார்த்தும்  அவையெல்லாம் திருப்தி அளிக்காமல் தன் தகுதிக்குரிய  வேலைக்காக அலைந்துகொண்டிருந்தான் கணேஷ்.

அப்பா  வேதாசலம் ஒரு நாள் அவனிடம், ’என்னுடைய ஆப்த நண்பன் சுந்தரேசன், பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரன். அவனைப் போய்ப் பார்த்துவிட்டுவா’ என்றார். அவருடைய பேச்சை மதித்து, இந்தச் சுந்தரேசன் வீட்டுக்கு முதல் நாள் வந்தது, அவன் மனத்தில் நிழலாடியது.

வாயிலில்  இருந்த கூர்க்காவிடம் தன் விவரங்களைத் தெரிவித்து, சுந்தரேசனுடைய நண்பர் வேதாசலம் மகன் கணேஷ்  வந்திருப்பதாகத்  தெரிவித்துக் காத்திருந்தான். இண்டெர்காமில் கேட்டுக்கொண்டு  கூர்க்கா அவனிடம் வந்து, ’உங்களை  மொட்டை மாடிக்கு வரச் சொன்னார்’ என்று சொன்னவுடன்  உள்ளே  சென்று, படிவழியாக மொட்டை மாடியை அடைந்தான்.

அங்கே  பல நிறுவனங்களுக்கு  இயக்குனரான சுந்தரேசன், பேரன் கீர்த்தியுடன் சேர்ந்து காற்றாடி விட்டுக்கொண்டிருந்தார். ’வாப்பா.  வேதாசலம் சௌக்கியமா?’ என்று வாய் கேட்டாலும்  கையும் மனமும் கண்ணும் காற்றாடி  மேலே  இருந்தது.

’சார் சார், என்ன சார் இது? நான் எதிர்பார்க்கவேயில்லை. நீங்க போயி இப்பிடிக் காத்தாடி விட்டுண்டு இருக்கீங்க?’ தட்டுத் தடுமாறி  ஒரு வழியாய் வியப்பாய் அந்தக் கேள்வியை கேட்டுவிட்டான் கணேஷ்!

காற்றாடியை அனாயாசமாக  இழுத்து, கீழே இறக்கி அந்தக் காற்றாடியைப் பேரனிடம் கொடுத்துவிட்டு, நூலைச் சுற்றத் தொடங்கினார் சுந்தரேசன். அவரையே  வியப்பாய் பார்த்துக்கொண்டே , ’நான்  நூலைச் சுற்றித் தரட்டுமா?’ என்றபடி  அவரிடமிருந்து நூல் கண்டை  வாங்கிச் சுற்றத் தொடங்கினான் கணேஷ்.

பக்கத்தில்  இருந்த குழாயில் முகத்தை கழுவி, கை கால்களையும் கழுவிக்கொண்டு, கொடியில் காயப்போட்டிருந்த துண்டை எடுத்துத் துடைத்துக்கொண்டு, ’மிஸ்டர் கணேஷ், நான்  இப்போதான் பல தொழில் நிறுவனங்களுக்கு  அதிபர். சின்ன வயசிலேருந்து அடி பட்டு, உதை பட்டு, கீழே விழுந்து மூஞ்சி முகரையெல்லாம் பேத்துண்டு, அதுக்கு நடுவிலே  வாழ்ந்து கஷ்டப்பட்டு  முன்னுக்கு வந்தவன். எந்தப் பழசையும் மறக்காதவன்… புரியுதா,  அதுனாலேதான்  உங்கப்பாவையும் ஞாபகம் வெச்சிண்டிருக்கேன். உங்களையும்  வரச்சொன்னேன்… புரியுதா?’  என்றார்.

’சரி சார், சரி சார்’ என்று திணறினான் கணேஷ்.

’சரி, எனக்கு நாளையிலேருந்து ஒரு முக்கியமான  வேலை இருக்கு. நீங்க தினோம் இவன் கூட வந்து, இவனுக்குக்  காத்தாடி விடக் கத்துக் குடுங்க. நாளைக்கு  உங்களைப் பாக்கறேன்… சரியா?’ என்றபடி  செல்போனில், ’ரமேஷ்   நான்தான் , ஆமாம்  சரியா இன்னும் பத்து நிமிஷத்திலே  நான் நம்ப கார்பொரேட் ஆபீஸ்லே இருப்பேன். நீயும் வந்துடு. இன்னிக்கு  ஒரு முக்கியமான  மீட்டிங்’ என்று பேசியபடி போய்க்கொண்டே  இருந்தார்.

’அப்பா, நீங்க போய்ப் பாக்கச் சொன்னீங்களே, அந்தச் சுந்தரேசன். அடேங்கப்பா, என்னா ஒரு மனுசன். என்ன கம்பீரம். என்ன ஒரு நேரம் தவறாமை. என்ன ஒரு எளிமை. அப்பா  இருந்தா அவரை  மாதிரி  இருக்கணும்’ என்றான் கணேஷ்.

’அதெல்லாம் சரிப்பா, உனக்கு அவர் வேலை குடுத்தாரா?’ என்ற வேதாசலத்திடம்,’ஆமாப்பா  அவரோட பேரனுக்கு  காத்தாடி விடக் கத்துக் குடுக்கச் சொல்லி இருக்கார். நாளையிலேருந்து போகப் போறேன்’ என்ற கணேஷிடம் மிகச் சாதாரணமாக, ’சரிப்பா போய்ட்டு வா’ என்றார் வேதாசலம். கணேஷ் அவரையே  வியப்பாய் பார்த்துக்கொண்டு நின்றான்.

மறுநாள்  சுந்தரேசனின் பேரன் கீர்த்தியை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, காற்றாடிக்கு  எப்படி சூத்திரம் போடுவது என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் கணேஷ். சுந்தரேசனின்  மனைவி சாந்தா! பெயருக்கேற்றபடி சாந்தம் தவழும் புன்னகையோடு  மாடிக்கு ஏறி வந்து கணேஷுக்கும்  கீர்த்திக்கும்  ஒரு தட்டில் பஜ்ஜி, காப்பி எல்லம் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து, ’சாப்பிடப்பா’ என்றாள்.

’ஏம்மா நீங்க ஏறி வர்றீங்க. கூப்பிட்டிருந்தா  நானே வந்து வாங்கிட்டு வந்திருப்பேனே’ என்ற கணேஷை, ’அதனாலென்ன, சரி நீங்க ரெண்டு பேரும்  சாப்ட்டுட்டு  கீழ வரும்போது  தட்டுகளைக் கீழே கொண்டு வந்திருங்க’ என்றபடி இறங்கிப் போனாள். அந்த வாரம் கடைசியில் கீர்த்தி  மிக நுணுக்கமாகக் காற்றாடி விட்டுக்கொண்டிருந்தான்.

வெள்ளிக்கிழமை அன்று, சுந்தரேசனின் ஒரு முக்கிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிய அனுமதிக்கும் உறுதிக் கடிதம் வந்தது. ’அப்பா எனக்கு உங்க நண்பரின் கம்பனீலேருந்து  அப்பாயிண்ட்மெண்ட் கடிதம் வந்திருக்கு’ என்றான் கணேஷ், மகிழ்ச்சியுடன்.

’சரிப்பா, போய்ச் சேந்துடு’ என்றார் வேதாசலம்.

’சரிப்பா ஆனா ஒண்ணு. என் மனசுக்கு வேலை பிடித்திருந்தா செய்வேன். இல்லேன்னா விட்ருவேன்’ என்றான் கணேஷ்.

மறுநாள்  அந்த அலுவலகத்துக்கு சென்று பொறுப்பை ஏற்றான் கணேஷ்.

சுந்தரேசன் அலுவலகத்துக்குள் நுழைந்தார். அனைவரும் எழுந்து மரியாதை நிமித்தமாக இனிய காலை வணக்கம் சொன்னார்கள். ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் காலை வணக்கம் சொன்னவர், நேராக கணேஷ் இருக்கும் மேஜைக்கு வந்து நின்றார்.

கணேஷ், ’மிகவும் நன்றி சார். ஆனா ஒரு விஷயம். என் தகுதிக்கேற்ற வேலைன்னா  செய்வேன். இல்லேன்னா  நின்னுடுவேன்’ என்றான்.

‘அது இருக்கட்டும்.  இன்னிக்கு  என் பேரன் நீச்சல் வகுப்புக்குப் போகணும்னு சொன்னான். நீங்க போயி அவனைக் கூட்டிக்கிட்டு நீச்சல் பயிற்சிக்கு போயிட்டு வாங்க’ என்றார் சுந்தரேசன்.

’மன்னிக்கணும் சார். நேத்து வரைக்கும்  நான் வேலை இல்லாம இருந்தேன். இன்னிக்கு  எனக்கு வேலை இருக்கு. வேலை நேரத்திலே வேற எங்கேயும் போக மாட்டேன். கொஞ்சம் இருங்க’ என்று தன்னுடைய செல் போனை உயிர்ப்பித்து, தன்னுடைய  நண்பன் ரமேஷை அழைத்து,  விலாசம் கொடுத்து, சுந்தரேசனின் பேரன் கீர்த்தியை  நீச்சல் பயிற்சிக்குக் கூட்டிப் போகச் சொல்லி வேண்டினான். பிறகு, ’சார் உங்க பேரன் நீச்சல் பயிற்சிக்கு என்னோட நண்பன் ரமேஷ்  கூட்டிக்கிட்டு போவான்’ என்றான் கணேஷ்.

அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டு, ’இப்போ உங்களுக்கு உங்க அப்பா சிபாரிசிலேதான் வேலை குடுத்திருக்கேன் முதல் நாளே  நான் சொல்றதை செய்யமாட்டேங்கறிங்களே?’ என்றார் சுந்தரேசன்.

கணேஷ், ’மன்னிக்கணும் சார். நீங்க சொன்ன வேலையைத் தகுந்த ஆள் மூலமா செய்ய ஏற்பாடு செய்துட்டேன். நானே போகணும்னு நீங்க எதிர் பார்த்தா என்னாலே முடியாது’ என்றான்.

ஒரு வித இறுக்கமான சூழ்நிலை உருவாயிற்று. சுற்றிலும் இருப்பவர்கள் ஒருவித பயத்தோடு அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர்.
சுந்தரேசன்  தீர்க்கமான பார்வையுடன் அவன் அருகே வந்து நின்றார்.

’இப்போ உங்களுக்குக் குடுக்கப்பட்டிருக்கிற வேலையே உங்க அப்பாவோட சிபாரிசிலே குடுக்கப்பட்ட வேலை’ என்று மீண்டும் சொல்லிவிட்டு நிறுத்தினார். ஒருவித மௌனம் குடிகொண்டது அங்கே.

பின் மீண்டும் சுந்தரேசனே தொடர்ந்தார்.

‘ஆனா இப்போ… உங்களுக்கு மேனேஜராகப் பதவி உயர்வு கொடுக்கிறேன்! இப்போ உங்களுக்கு குடுக்கப்பட்டிருக்கிற மேனேஜர் பதவி உங்க தகுதியை மதிச்சு, அதுக்குக் குடுக்கற மரியாதை. கங்ராஜுலேஷன்ஸ், ஜெண்டில்மேன். கீப்பிட்அப்” என்றார் கணேஷின் கையை இழுத்துக் குலுக்கியபடி.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தகுதி

  1. கதையில என்னதான் சொல்ல வரீங்க
    மொட்ட தலைக்கும்
    முழங்காலுக்கும் என்ன சம்பந்தம்
    கதைன்னு எதனா எழுதி ஏன் உயிரை வாங்கறீங்க

    பாமர ஜீவன்

  2. 1. பாமர ஜீவனா! உயிரை பிடிச்சுக்கோ! அவரு வாங்கவந்தா நீ என் கொடுக்கணும்?

    2. பட்டம் விட்ட சுந்தரேசன் நம்மை ஆச்சரியப்படுத்த வில்லை. ஒரு நிஜக்கதை. ஃப்ரடெரிக் தெ க்ரேட் என்ற ஜெர்மானிய சக்ரவர்த்தியை அவசரநிமித்தம் அந்தப்புரத்தில் காணச்சென்ற அமைச்சர் திகைத்து விட்டார். அரசன் நாலுகாலில்; இளவரசன் குழந்தை, அவன் மீது சவாரி! அரசன் கேட்டான், ‘உனக்கு குழந்தைகள் உண்டா?’ ஆம், அரசே. இயல்பாக, குழந்தையை கீழே இறக்கிவிடாமல், அரசன், ‘வந்த விஷயம் என்ன? என்றான். நுட்பமாக இதைத்தான் சொல்கிறார், கதாசிரியர்.

  3. இன்னம்பூரானா

    என்ன பெரிய புண்ணாக்கு கதை சொல்ல வந்துட்டீங்க,

    ஜெர்மனி. ஆஸ்தரேலியா. ஆப்ரிகான்னு

    – பாமரஜீவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.