அமெரிக்காவில் மூட்டைப் பூச்சிகள் மீண்டும் படையெடுப்பு
முனைவர் நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்க பார்லிமெண்டான காங்கிரஸின் இரண்டு அவைகளிலும் காலியாகும் இடங்களுக்குத் தேர்தல் நவம்பர் 2ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இப்போது தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலின் முடிவுகள், ஒபாமாவிற்கு இரண்டாவது தடவை ஜனாதிபதி பதவி கிடைக்குமா என்பதை நிர்ணயிப்பதோடு, அமெரிக்கா எந்தத் திசையில் பயணம் செய்யப் போகிறது என்பதையும் நிர்ணயிக்கப் போகிறது. இதனால் அமெரிக்க மக்கள் தேர்தல் முடிவுகளை ஆவலாக எதிர்நோக்கியிருக்கும் இந்தக் கட்டத்தில் அமெரிக்க மக்களை இன்னொரு விஷயமும் கலவரப்படுத்திக்கொண்டிருக்கிறது. அதுதான் மூட்டைப் பூச்சிகளின் மறு படையெடுப்பு.
சுமார் நாற்பது வருடங்களாக அமெரிக்காவில் காணாமல் போயிருந்த இந்த மூட்டைப் பூச்சிகள் மீண்டும் வந்திருக்கின்றன. இத்தனை நாட்கள் இவை எங்கே போயிருந்தன, இப்போது எப்படித் திரும்பி வந்தன என்பது பற்றி, அவை தொடர்பாக ஆராய்ந்து வருபவர்கள் மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள். கொசு, ஈ, கரப்பான் பூச்சு, உண்ணி, தெள்ளுப்பூச்சி போன்ற பூச்சி இனங்களைப் போல் மூட்டைப் பூச்சியும் மனித இனத்தோடு ஒன்றிப் போய்விட்டிருந்தாலும், மனிதனின் இரத்தத்தைக் குடித்தாலும், இரவில் மனிதனின் தூக்கத்தைக் கெடுத்தாலும், மனிதனிடத்தில் வியாதியைப் பரப்புவதில்லையாதலால் இந்த இனத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அதிகம் இல்லை.
2010 ஆகஸ்டு மாதம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், வியாதிகள் தடுப்பு மையம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் அமெரிக்க மக்களுக்கு மூட்டைப் பூச்சிகள் திரும்பி வந்திருக்கின்றன என்னும் விபரத்தைத் தெரியப்படுத்தி இருக்கின்றன. இந்த மூட்டைப் பூச்சிகளை ஒழிக்கும் திட்டம் எதையும் இந்த நிறுவனங்கள் தெரிவிக்கவில்லை, கையாளவும் இல்லை. தங்கள் தங்கள் வீடுகளிலிருந்து மக்கள் தாங்களே எப்படி மூட்டைப் பூச்சிகளை ஒழிக்கலாம் என்று மட்டும் அறிவுரை கூறியிருக்கின்றன. அழுக்குகளை உறிஞ்சி எடுக்கும் கருவிகளை வைத்து வீடுகளைச் சுத்தம் செய்யுங்கள், சுவர்களில் இருக்கும் ஓட்டைகளை அடையுங்கள், உஷ்ணத்தின் மூலமோ அல்லது ரசாயனப் பொருள்கள் மூலமோ அவற்றைக் கொல்லுங்கள். இவையே அந்த யோசனைகள்.
மனிதனைக் கடிக்கும் பூச்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான வியாதிகளைப் பரப்புகிரறது. மனிதனைக் கடிக்காத ஈ, கரப்பான் பூச்சி போன்றவை கூட வியாதிகளைப் பரப்புகின்றன. ஆனால் மூட்டைப் பூச்சிகள் அந்த விதத்தில் மனிதனுக்கு எந்த விதத் தீங்கும் விளைவிப்பதில்லை. தென்ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர்கள் இந்த மூட்டைப் பூச்சிகளுக்கு எய்ட்ஸ் கிருமிகள் அடங்கிய இரத்ததைக் ஏற்றினார்களாம். அவற்றிற்கு எய்ட்ஸ் வியாதி வரவில்லை என்பதோடு எய்ட்ஸ் கிருமிகள் செத்துவிட்டனவாம். மேலும் இந்த மூட்டைப் பூச்சிகளுக்கு ஏற்றிய ஹெப்படிடிஸ் பி என்னும் ஈரல் வியாதியைப் பரப்பும் கிருமிகளை அவை வாரக்கணக்கில் தங்கள் உடம்பில் வைத்திருந்தனவாம். ஆனால் இவற்றை சிம்பன்ஸி என்னும் குரங்கு வகையைக் கடிக்கவிட்டபோது குரங்கிற்கு ஒன்றும் ஆகவில்லையாம். பிரேஸில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த மூட்டைப் பூச்சிகள் மூலம் காட்டில் வசிக்கும் சுண்டெலிகளிலிருந்து ஒரு ஒட்டுண்ணியை ஆராய்ச்சிக் கூடங்களில் இருக்கும் சுண்டெலிகளுக்கு பரப்ப முயன்று தோற்றுவிட்டார்களாம்.
வீடு முழுவதையும் குளிர்காலத்தில் சூடுபடுத்தும் வசதி வரும்வரை இந்த மூட்டைப் பூச்சிகள் குளிர் காலத்தில், அதிகமாகக் குளிருமாதலால், இறந்துவிடுமாம். குளிர் குறைந்த பிறகு அவை திரும்பி வரும்போது படுக்கைகளை அடிக்கடி புரட்டிப் போடுவது, வெந்நீரைக் காய்ச்சி மெத்தைகளின் மீது ஊற்றுவது போன்ற செய்முறைகள் மூலம் இந்த மூட்டைப் பூச்சிகளை அழித்துவந்தார்களாம். இறுதியாக டி.டி.டி.யில் ஆரம்பித்து – மூட்டைப் பூச்சிகள் அவற்றிற்கு எதிர்ப்புச் சக்தியை வளர்த்துக்கொண்டதால் – வேறு வகையான இராசயன மருந்துகளை உபயோகித்து ஒரு வழியாக ஐம்பதுகளில் மூட்டைப் பூச்சிகளை அழித்தார்களாம்.
இப்போது டி.டி.டி. உபயோகிப்பதை முழுவதுமாக நிறுத்திவிட்டதால் மூட்டைப் பூச்சிகள் திரும்பி வந்திருக்கின்றன என்று சிலர் கூறினாலும் அது சரியில்லை என்று கூறுகிறார்கள். டி.டி.டி.யை நிறுத்தியதால் மறைந்து போன கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சி வகைகள் வெகு காலத்திற்கு முன்பே திரும்பி வந்துவிட்டன. ஆனால் மூட்டைப் பூச்சிகள் மாத்திரம் சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் வந்திருக்கின்றன. அதிலும் சமீப காலமாக நிறைய வந்திருப்பதால் பூச்சிகளை ஒழிக்கும் மருந்துகள் தயாரிக்கும் கம்பெனிகள் பல வகையான மருந்துகளைத் தயாரிக்க முயன்று வருகின்றன. ஆனால் இப்போதைக்கு மூடைப் பூச்சிகளை ஒழிக்கும் வழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. சென்ற மாதம் சிகாகோ அருகிலுள்ள ஒரு புறநகரில் ஆராய்ச்சியாளர்கள் கூட்டம் நடத்தி இந்தப் பூச்சிகளை எப்படி ஒழிக்கலாம் என்று ஆலோசனை செய்திருக்கிறார்கள்.
விமான நிலையங்களில் உள்ள ஓட்டல்களிலும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஓட்டல்களிலும்தான் முதல்முதலாக இந்த மூட்டைப் பூச்சிகள் காணப்பட்டதாகக் கூறப்படுவதால் வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக மெக்ஸிகோவிலிருந்து, இவை வந்திருக்கலாம் என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். ஆனால் மெக்ஸிகோவில் மருந்து தயாரிக்கும் கம்பெனிகளைக் கேட்டால், மெக்ஸிகோவில் இந்தப் பூச்சிகள் இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் அமெரிக்காவிலிருந்து பழைய கட்டில், மெத்தை போன்ற சாமான்களைக் கொண்டு வருபவர்களின் வீடுகளில்தான் அவை இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் இப்போது ஓட்டல்களில் தங்கவே பயப்படுகிறார்கள். ஒருவர் தன்னுடன் கொண்டுசெல்லும் தன்னுடைய பெட்டி வகையறாக்களை குளிக்கும் அறையில் வைத்துவிடுவாராம், அங்குதான் மூட்டைப் பூச்சிகள் இருக்காது என்பதால் (நம் நாட்டில் குளியல் அறையின் சுத்தத்தைப் பற்றி நினைத்தால் இது சாத்தியமில்லை!). இன்னொருவர், வீட்டிற்குத் திரும்பியதும் வெந்நீரில் தன் பெட்டிகளை நன்றாகச் சுத்தம் செய்துவிடுவாராம்!
அமெரிக்காவில் வெயில் காலத்தில் தோட்டத்தில் ஏதாவது பூச்சிகள் வந்தாலே அமெரிக்கக் குழந்தைகள் அவற்றைக் கண்டு அலறும். இப்போது மூட்டைப் பூச்சி தொந்தரவு இன்னும் அதிகமாக வளர்ந்து அவர்களுடைய படுக்கைகளை முற்றுகை இட்டால் என்ன செய்வார்களோ?
இந்தியாவில் நான் சிறுபிள்ளையாக இருந்த போது இந்த மூட்டைப் பூச்சிகள் தொந்தரவை அனுபவித்திருக்கிறேன். ஆனால் சென்ற ஐம்பது வருடங்களாக மூட்டைப் பூச்சியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. இந்தியாவில் முழுவதுமாக அவற்றை ஒழித்துவிட்டோமா? அப்படியென்றால் அவற்றை எப்படி ஒழிப்பது என அமெரிக்கர்களுக்கு அறிவுரை கூறலாமே.