படக்கவிதைப் போட்டி (95)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

16117525_1208269852560545_1677354804_n
134429018@N04_rராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.01.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

7 Comments on “படக்கவிதைப் போட்டி (95)”

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 17 January, 2017, 23:11

  உழவர் படும்பாடு

  சி. ஜெயபாரதன்

  போர்முனை வாளெல்லாம்
  ஏர்முனை ஆயின
  தேர்தல் காலத்தில் !
  உழுதுண்டு வாழும் இனம்
  இப்போது
  அழுது கொண்டு வீழும் !
  கஞ்சிக்கு
  விளைச்சல் போதா !
  காளைக்குத் தீனி யில்லை !
  வேளைக்கு ஏற்ற
  பருவ மழை யில்லை !
  ஏர் இழுத்துச் செல்லும்
  ஓர் காளை மாடு
  காலொடிந்து போனது !
  சூடு காலம் வந்தது ! எமக்குக்
  கேடு காலம் வந்தது !
  ஏரி வற்றிப் போனது !
  காடு தீய்ந்து போனது !
  நாடு நரகம் ஆனது !
  சூடேறும் நிலத்தில் தானியம்
  காய்ந்து போனது !
  இப்போது வங்கிக் கடன் பணத்தை
  எப்படி அடைப்பது ?
  குத்தகைக்கு எடுத்த நிலம்
  ஐயோ
  மற்ற கைக்கினி
  மாறிடப் போவுது !
  மாரி ஆத்தா கண்திறப்பாய் !
  மாதம் இருபது ஆகுது !
  யாரிடம் போய் அழுவது ?
  யாரிடம் பணம் கேட்பது ?
  இதோ எம்மைக்
  கைது செய்து
  சிறையில் தள்ள
  காவல்துறை நிற்குது !

  ++++++++++

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 18 January, 2017, 21:40

  உழவரின் கண்ணீர்

  சி. ஜெயபாரதன், கனடா

  போட்ட விதைகள் இந்தப்
  பூமியிலே
  முளைக்க வில்லை !
  மாட்டைக் கட்டி
  உழுத நிலத்தில் பருவ
  மழையோ பொழிய வில்லை !
  நோட்டு நோட்டாய்க்
  கடன் வாங்கிப்
  போட்ட புஞ்சைப் பயிரெல்லாம்
  சூட்டு யுகத்துக் கிரையாகி
  காய்ந்து கருகிப்
  போச்சம்மா !
  நாட்டு அமைச்சர் நம்மூர் வந்து
  கண்ணீர் விட்டார்
  கடவுளைச் சபித்து !
  எமக்குதவ இங்கு
  ஓட்டு வாங்கிய
  அமைச்சரும் இல்லை !
  மேட்டுக் குடிச்
  செல்வந்தரும் இல்லை !
  வேளாண்மை செய்ய
  இப்புவியில் எம்மைப் படைத்த
  பிரம்மாவும் இல்லை !

  ++++++++++++++++

 • இப்னு ஹம்துன் wrote on 20 January, 2017, 13:59

  கருத்துரைப்புப் பெட்டியில் கவிதையை இட்டால் சரிவர அமைவதில்லை. ஆகவே, தனிமடலில் அனுப்பலாமா? தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி

 • இப்னு ஹம்துன் wrote on 21 January, 2017, 3:05

  கவிதை: உய்யட்டும் உழவரினம்
  – இப்னு ஹம்துன்

  களர்நிலத்தில் நீர்ப்பாய்ச்சிக் கவிதையென விதைதூவி
  காய்கனிகள் நெல்மணிகள் காண்பதுவே விவசாயம்
  வளம்மிகவே அடிப்படையாய் வாழுமிந்த மானுடத்தில்
  விவசாயி பெறுவதெல்லாம் வெற்றிலையாய் மதிப்புகளே
  தளர்வுறுவார் உழவரெல்லாம் தக்கபடி தம்முழைப்பை
  தன்னாட்டார் உறிஞ்சிவிட்டு சக்கையெனத் துப்புகிறார்
  களம்பலவும் இதைப்பேசும் காட்சிகளைக் காணுகிறோம்
  காரியத்தில் வெற்றியெல்லாம் கருத்தாக ஏற்றாலே..

  வேர்மறந்தோம் உணவுக்கும் வெளிநாட்டான் பழக்கத்தை
  வகையாகக் கைக்கொண்டோம் வயிற்றுக்கும் தெளிவின்றித்
  தேர்ந்தெடுத்தோம் தேசத்தின் உணர்வெல்லாம் விளையாட்டாய்த்
  தேடுகிறோம் தேகநலன் பேணாமல் தோற்கின்றோம்
  பேர்சிறந்த இனமென்று பெருமைகளைப் பேசுகிறோம்
  பேருக்குப் பேசிவிட்டு பெட்டிக்குள் அடங்குகிறோம்
  நேர்மையுடன் சிந்திப்போம் நெஞ்சத்தே உணர்வடைவோம்
  நெல்லிக்காய் இருக்கையிலே நச்சுக்காய் கொள்வதுமேன்?

  விளைநிலமும் விலைநிலமாய் உருமா(ற்)றும் பேராசை
  விவசாயம் சாகுமெனில் வாழ்வெங்கே சாகுபடி?
  களைபலவும் கலையெனவே காணுவதன் தொடக்கமென
  கருத்தான பயிரெல்லாம் களைகின்ற பழக்கம்தான்.
  அளைவுறுவர் உழவரெல்லாம் அயராமல் போராடி
  அடைவதுவும் சொற்பமென ஆகின்ற கணக்காலே
  வளையொளியும் எலியாக வாழ்வினிலே மற்றவரும்
  விவசாயப் பேருழைப்பை உண்கின்றார் ஏற்பிலையே

  மண்வளமே நல்வளமாம் மற்றதெல்லாம் ஓரளவே
  மகத்தான உழவாலே மாநிலமும் உயர்ந்திடுமே
  கண்நிறைந்து பயிர்செழிக்கக் காண்பதிலே இன்புறுவோம்
  கைநிறைய பலன்பெற்று களிக்கட்டும் உழவரினம்
  விண்வியந்து மழைபொழியும் ஊருலகும் செழிக்கட்டும்
  விதவிதமாய் மலரட்டும் விஞ்ஞானம் உதவட்டும்
  பண்பாடி வாழ்த்துகிறேன் பயிரெல்லாஞ் செழிக்கட்டும்
  பரம்பொருளை வேண்டுவமே பேருழவர் வெல்வதற்கே.

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 21 January, 2017, 12:43

           

  வாயில்லா சீவன்கள்

  வாயில்லா சீவன் மாடு மட்டுமல்ல!
  அந்த உழவனும் கூடத்தான் !
  சோறு போட்ட உழவனுக்கு கிடைத்தது
  சேறும் சகதியும் தான்!

  உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று நயமாகச் சொல்லிடுவார் !
  உலகத்தோர் அனைவருமே உழவருக்குப் பிறகென்று
  தேனொழுகப் பேசிடுவார் !
  வெளுத்ததெல்லாம் பாலென்று
  வெள்ளந்தி உழவரெல்லாம்
  உயிர் கொடுத்து உழைத்திடுவார்!
  நெல்லை விளைய வைக்க
  உடல், பொருள், ஆவி அத்தனையும்
  பணயம் வைப்பார் !
  வைகறை துயில் எழுந்து
  இருட்டும் வரை தினம் உழைப்பார் !
  அரை வயிற்றுக்கஞ்சிக்கு
  அலுக்காமல் தினம் உழைப்பார்!
  கூழைத் தான் குடித்து
  நமக்கு சோறிடுவார்!
  செய் நன்றி மறவாமை
  சிறிதேனும் நமக்கிருந்தால்!
  உயிரோடு இருப்பதே அவரால் தான்
  என்றுணர்ந்தால்!
  உழவர்கள் வாழ்வுயர
  நாம் முனைவோம்!
  உழவர்கள் குடும்பத்தை தத்தெடுப்போம் !
  அடிப்படை தேவைகளை அன்போடு
  நாம் கொடுப்போம்!
  உழவர்கள் தற்கொலையை உடனே தடுத்திடுவோம் !
  உணவு தரும் உத்தமரை
  உன்னதமாய் வாழ வைப்போம் !

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 21 January, 2017, 19:34

  உழவன் மகனாய்…

  ‘ஏர்ப்பின்னது உலகு’
  என்பதை மீண்டும்
  வரலாறு உண்மையாக்குகிறது..

  உழவன் மேல்
  ஒட்டியிருப்பது சேறல்ல-
  உண்ணும் சோறு..

  காளைகள்
  கோழைகளின் ஆயுதமல்ல,
  வீரத்தின் சின்னம்
  வெற்றிக்கு வழிகாட்டி..

  அதனால்,
  நானும் ஒரு
  உழவன் மகன் என்பதை
  உரக்கக் கூறுகிறேன்…!

  -செண்பக ஜெகதீசன்…

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 21 January, 2017, 22:58

  உழவன் எனும்   “சித்தன்”
  =======================

  உழுதொழிலின்னும் நசிக்கவில்லையென உறுதிகாட்ட
  உழவனுடன் நுகத்தடிகொண்ட காளையைப் படமெடுத்தாயோ..

  மண்ணிலுண்டாம் பலதொழிலதில் சிறப்பென..
  அவனியின் அச்சாம் உழுதொழிலே  பிரதானமாம்!

  உலகத்துக்கே உணவளிக்கும் உழுதொழிலே..
  உழவனிடும் முதலுழைப்பே முதலான உண்மையென்றோ!

  உழைப்பில் விளைந்த வியர்வைப்பூக்கள் உன் பின்னால்தெரிய..
  உழைப்பின் வாசம் வீசுமுன் தன்னம்பிக்கைச் செடியில்!

  உழவனுக்கொரு கேடென்றால், உலகமறியுமுன்னே..யெங்கள்
  களமும்விளைநிலமும் கம்மாக்கரையும் கலவரம்கொள்ளும்!

  உறவாடும்நுகத்தடியும் மாடுமெங்கள் மனதறியும் நன்றாக!
  உழவனின் இளைப்பாறா உழைப்புதனை  வியந்துசொல்லும் !

  உழவுத்தொழிலுக்கு உயிரான தண்ணீரைத் தனதாக்கி உரிமைகொண்டதொரு அணையில் வீணாகத்தேக்கியதால்…

  எங்கள்தேகமென்றைக்கும் சோர்வடையாது!

  நல்லவேளை ஆதவனும் தென்றலையுமடக்க..
  இயற்கை யார்கையிலும் அகப்படவில்லையய்யா!

  ஓராயிரம் இன்னல்கள் வந்தாலுமெங்கள்..
  உழுதொழிலொருபோதும் நில்லாது!

  உழவோடு உழவுக்கு உதவுகின்ற ஒவ்வொன்றும்..
  வாழ்வோடுவாழ்வுக்கு வேண்டியபல வரலாறுகூறுதுமே!

  இணைந்து சோடியாய்  இனிதே இல்லறத்தைநடத்த..
  எங்கள் நுகத்தடிதானே யின்றும்பாடம் சொல்லுதுமனிதருக்கே!

  கீழ்மண்ணை மேல்மண்ணாக்க மேலும்கீழுமென..
  எழுகின்ற ஏர்க்காலாயினு முங்கள்மனதில்…

  எதிர்மறை யெண்ணங்கள்மறைய நேர்மறைமேலாகுமன்றோ!
  கலப்பையொன்றைக் கையில்  பிடித்தவுடன்!

  மண்ணைமட்டுமல்ல உங்கள் மனதையும்…
  அல்லவா  சேர்த்துழுமெங்கள்  உழுகலப்பை!

  உழுகின்ற உன்னதவேலை ஒருகணம் நின்றால்…
  சுற்றும்பூமிகூட சுழலமறுக்குமொரு நொடிப்பொழுது!

  எறுமையென்கிறை எங்களினத்தின்மேல் வருகின்ற எமனிடம்கூட..
  வறுமையில் எங்கள்வாழ்க்கை முடியாதென சூளுரைப்போம்!

  உண்டிகொடுக்க மண்டிபோட்டிழுக்கும் எங்களை..
  மடுத்தவாயெல்லாம் தாங்கும் பகடென்றானே வள்ளுவன்!

  சர்வ வல்லமைபொருந்தியதாலோ என்னவோ?…
  சர்வேஸ்வரனென்னை வாகனமாக்கிக் கொண்டாரோ!

  இருக்கும்வரையில் உழைத்துக் களைத்தயெங்கள் காளையினம்!
  மறைந்தபிறகு மறுபிறவி  யிலும்மறவாது மகிழ்ச்சிதருமய்யா!

  ஏற்றம்கொண்டு பின்னையு முன்னையுமிறைத்த நீரெல்லாம்…
  களத்துமேட்டில் கச்சிதமாய்ப் பாய்ந்தாலும்…

  ஏற்றமிறக்கம் இல்லையம்மா எங்கள்வாழ்வில்…
  இறக்கமென்று வரும்போது இறைவனும் என்செயும்!

  ஏரோட்டுமெங்கள் சகோதரனின் வீரம்காக்க மெரினாவில்…
  போராடுமுங்கள் தீரம் கண்டு கடலலைகூட கரைக்குவரமறுக்கிறதே!

  தமிழரின் வீரமும் அறமும் எட்டுதிசையும் பட்டுத்தெரித்ததின்று
  தமிழ்காளையினருமை பெருமையும் அலைகடல்தாண்டியது அணைக்கமுடியாநெருப்பாய்…

  இட்டதெல்லாம் பயிரா 
  பெற்றதெல்லாம் பிள்ளையாவெனக் கேட்க

  வானிருந்துகீழ் நோக்கிப்பொழியும் மழையை
  கீழிருந்து மேனோக்கும் எங்களுழவர் குடிசிறக்கவேணும்.

  ஆயிரம் கவிகள் வந்தனர் போயினராயினுமெங்கள்
  ஏருக்கு வலிமைசேர்த்த ஐயன்வள்ளுவன் போல்எவரே?..

  அடக்கும் மூச்சினால் அனைத்தையும் அறிந்தவரென்றும்
  கடவுளைக் கண்டு தெளிந்தாரை   “சித்தரென” சொல்வார்கள்

  தன்னைத்தோண்டி தன்னையரியவைத்த பதினெண்மர்மத்தியில்
  மண்ணைத்தோண்டி மனிதநேயம்காட்டும் உழவனுமொரு சித்தனே.

  அன்புடன்
  பெருவை பார்த்தசாரதி

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.