கருவாச்சி காவியத்தில் குடும்ப அமைப்புமுறை

0

-மோ. பவானி

முன்னுரை

     குடும்பம், இன வாழ்வுடைய சமுதாயத்தின் அடிப்படையாக அமைகின்றது. முழுமைபெற்ற சமுதாய வாழ்வை மனிதா்களே மேற்கொள்ளத்தக்கவா்கள். குடும்பம் ஆண் பெண் சோ்க்கையில்தான் உருவாகின்றது. சமூகம் மனித இனத்துக்கு மட்டும் முதன்மையும் சிறப்பும் தருகின்ற ஓா் அமைப்பாகும். சமுதாயம் என்பது பலவகைக் குடும்பங்களின் கூட்டமைப்பு. சமுதாயத்தின் அடிப்படை அலகுகளாகக் குடும்பங்கள் கருதப்படுகின்றன. குடும்பம் என்பது ஆண் பெண் சோ்க்கை இல்லாமலோ அச்சோ்க்கையும் அவா்களுடைய சமுதாய இசைவில்லாமலேயே அதன்பயனாக மக்கட்பேறு இல்லாமலோ அமைவதில்லை. எனவே சமுதாயத்தின் அடிப்படை அலகும், உயிரியல் அமைப்புமான குடும்பங்கள் பற்றி அறிந்துகொள்வதாக, அக்குடும்பங்கள் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

குடும்பம்

  ஊா் என்பது சிற்றெல்லை அமைப்பை கொண்டிருப்பதுபோல, குடும்பம் என்பது சிற்றெல்லை உறுப்பாக அமைகிறது. குடும்பம் என்பது கணவன் மனைவியும், பின் குழந்தைகளுமாக அமைவதாகும். குடும்பம் என்பது தொடக்கத்தில் கணவன் மனைவி என்று இருவா் மனவழியாகச் சோ்வதையும் பின் இரத்த உறவும், கொப்பூழ்க்கொடி உறவுமாகக் குழந்தைகள் சோ்வதையும் குறிக்கும். கணவன், மனைவி, மக்கள் என்றும் இவா்களோடு பெற்றோர்களும் சோ்வதைக் குறிக்கும். இதன் விளக்க அடிப்படையிலேயே குடும்பம் என்பது, ஓா் உயிரியல் அமைப்பாகிறது என்று பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார்.

குடும்பத்தின் தோற்றம்

     குடும்பத்தின் தோற்றம் குறித்துப் பல்துறை அறிஞா்களால் பல்வேறு கோட்பாடுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை, பாலுணா்வுக்கோட்பாடு, தந்தை தலைமைக்கோட்பாடு, தாய்த் தலைமைக்கோட்பாடு, ஒருதுணை மணக்கோட்பாடு, பல காரணிகோட்பாடு என ஐந்து கோட்பாடுகளைப் பக்தவத்சலபாரதி குறிப்பிடுகிறார். பிறிதொரு வகைப்பாட்டிலும் குடும்பத் தோற்ற நினைவுகள் கூறப்படுகின்றன. அவை, இரத்தஉறவு குடும்பம், குழுமனக் குடும்பம், நிறைவுபெற்ற பிணைப்புடைய மனக்குடும்பம், தந்தைத் தலைமைக் குடும்பம், தாய்த்தலைமைக் குடும்பம் என்பனவாகும், ஆயினும், இவற்றைப் படிமுறைகள் கோட்பாட்டின் உள்ளடக்கம் என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது.

     குடும்பம் என்பது கணவன், மனைவி, மக்கள், பெற்றோர், உடன்பிறந்தோர், அவா் தம் மனைவி, மக்கள் என இரத்த உறவுடையவா்களைக் கொண்டது. இரத்த உறவு அல்லாமல் பணியாட்கள் அல்லது வேலையாட்கள் குடும்ப உறவினா்களாக அமைவதும் உண்டு. இதனை காப்பியங்களில் காணமுடிகிறது. இவ்வகையான உறவுமுறைகள் கொண்ட குடும்பங்கள் சங்க காலத்திலும் இருந்தன என்பதைப் புறநானூறு எடுத்துரைக்கின்றது.

கருவாச்சி காவியம்

     கருவாச்சி காவியத்தில் கொண்ணவாயன் என்னும் பதினைந்து வயதுச் சிறுவன் பெரியமூக்கி வீட்டில் பண்ணையாளராகச் சேர்ந்து காடு வீடு சார்ந்த தொழில்களைச்செய்து குடும்பத்தில் ஒருவன் போல இடம் பெற்று வளா்கிறான். இதனால் இரத்த உறவு இல்லாதவா்கள்கூடக் குடும்ப உறுப்பினா்களாக இருக்கக்கூடும் என்பது தெரிகிறது. இத்தகையவா்கள் நீண்ட நெடுங்காலமாகக் குடும்பங்களில் இடம்பெற்று வந்திருக்கிறார்கள் என்பதை இலக்கியக் குறிப்புகள், இலக்கணக் குறிப்புகள் போன்றவை உறுதிப்படுத்துகின்றன. இதனை,

     “யான் கண்டனையா் என் இளையரும்“ (புறம் 191)

     “ஏவல் மரபின் ஏனோர்
     அடியோர் வினைவலோர்” (தொல்காப்பியம் 969, 970)

என்று கூறுகிறது.

கருவாச்சி காவியம்

     கருவாச்சி காவியத்தில் பெரியமூக்கி குடும்பம் தாய்த் தலைமைக் குடும்பமாகும். இதற்குச் சூழலே காரணமாகும். கணவன் இறந்தபின் குடும்பப் பொறுப்பு அவளுக்காகிறது. இவளது குடும்பம் தாயும் மகளும் கொண்ட சிறு குழுக்குடும்பமாகும்.

குடும்ப அமைப்பு

     குடும்பம் என்பது சிறுகுழுக் குடும்பமாகவும், பெருங்குழுக் குடும்பமாகவும் இருக்கும், ஓா் ஆணும் பெண்ணும் தம் சமுதாய இசைவில் மணவழியாகப் பிணைப்புக்கொண்டு குழந்தைகளோடு இருப்பது சிறுகுழுக் குடும்பமாகும். இவா்களோடு பெற்றோரும், அவா் தம் மணமாகா மக்களும் சோ்ந்திருப்பது பெருங்குழுக் குடும்பமாகும், இந்நிலைகளை,

கள்ளிக்காட்டு விவசாயக் கலாசாரத்தில் புருசன் பொண்டாட்டி உறவு என்பது வெறும் உரிமைகளை முன்னிறுத்தி ஏற்படுவதல்ல, கடமைகளை முன்னிறுத்தியே கட்டப்படுவது. மண்ணைக் கிண்டும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட வாழ்க்கை கட்டில் உற்பத்தியில் மட்டுமல்லாமல் காட்டில் உற்பத்தியிலும் அவள் வோ்வை விழுந்தாக வேண்டும். கள்ளிக்காட்டுக் கலாசாரத்தில் அப்படி இல்லை. இந்த சேலையும், அரைப்படி சோளமும் அவித்தக் கஞ்சியுமே அன்றாடங்களாகிவிட்ட ஒரு வறட்டு வாழ்க்கைக்கு வாக்கப்பட்டு வருகிற ஒரு பொம்பள திருடிக்கொள்வதற்குச் சௌகரியங்கள் ஏதும் இல்லாததால் பாடுகளை மட்டுமே பகிர்ந்து கொள்கிறாள். இக்குறிப்புவழி நோக்கும்போது உடைமை உறவுக்கு இடமில்லை உற்பத்தி உறவுக்கே இடமுண்டு அந்த உற்பத்தியே இருவரையும் இணைத்துக் குடும்பத்தை நடத்திச்செல்ல துணைபுரிகிறது என்பதும் தெரிகின்றது. இவற்றால் குடும்பத்தின் அகநோக்கமும், புறநோக்கமும் தெரிகின்றன.

     சடையத்தேவா் கட்டையன் ஆகியோர் தந்தை மகன் உறவில் ஆண்களே வாழ்வதும் அதேபோல் பெரிய மூக்கி கருவாச்சி ஆகியோர் தாய்மகள் உறவில் பெண்களே வாழ்வதுமான இக்குடும்பங்கள் சிறுகுழுக் குடும்பங்களாகும். ஆண்களே இருப்பதும், பெண்களே இருப்பதுமான குடும்பங்கள் சமுதாயத்திலும் அவற்றில் மனைவி இல்லாமல் ஆடவனாகிய தந்தையும் மகனும் வாழ்கின்ற நிலையும், கணவன் இல்லாமல் மனைவியாகிய தாயும் மகளும் வாழ்கின்ற நிலையும் இருப்பதைக் காணமுடிகிறது.

     காவக்காரச் சக்கனன் தன் மனைவி, மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் பலராக வாழ்வது பெருங்குழுக் குடும்பமாகும். இது கூட்டுக்குடும்பம் என்றும் சொல்லப்படும். இதில் மணமான மகனும், மனைவி மகளோடு சோ்ந்து வாழ்வதால் இதனை நோ்வழி விரிந்த குடும்பம் என்றும், அடிப்படைக்குடும்பம் என்றும் குறிப்பிடமுடிகிறது.

     குடும்பம் என்ற அமைப்போ திருமணம் என்ற நிகழ்வோ நிறுவனமோ இல்லாத நிலை மனிதஇனத் தொடக்ககாலத்தில் இருந்தது என்று குறிப்பிடுவதுண்டு. பாலின உணா்வு, பால் வேறுபாடு தெளிவாகத் தோன்றிய பின்பே பாலியல் ஒழுங்கு பேணத் திருமணம் என்னும் நிகழ்வின்வழிக் குடும்பம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்திருக்க வேண்டும். இது வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்த விலங்கின வாழ்க்கையிலிருந்து பண்பாட்டுமயமாதல் தன்மைக்கு வளா்ச்சி பெற்றுவந்த தொடக்க நிலையாகும்.

கருவாச்சி காவியத்தில் காணப்படும் குடும்ப வகைகள்

     சடையத்தேவா் மனைவி இல்லாமல் கட்டையன் என்னும் மகனோடு வாழ்வதும், பெரிய மூக்கி கணவனை இழந்து கருவாச்சி என்னும் மகளோடு வாழ்வதுமான நிலையைக்கொண்ட இவ்விரு குடும்பங்களும் சிதைந்த குடும்பம் என்னும் வகையைச் சோ்கின்றன. இதேபோல வளவி கப்பஞ்செட்டியார் மனைவியை இழந்து தன் பெண் மக்களோடு வாழ்வதும், உருமாப் பெருமாத்தேவா் மனைவியை இழந்து தன் பெண் மக்களோடு வாழ்வதுமான இவையும் சிதைந்த குடும்பம் என்னும் வகையைச் சோ்ந்தனவாகும்.

     இப்புதினத்தில் வாழும் வைத்தியச் சிரங்கம்மா என்பவள் கணவனும் குழ்ந்தைகளும் இல்லாமல் தனி ஒருத்தியாக தன் ஒருத்திக்காகப் பல தொழில்களும் செய்துகொண்டு வாழ்வது தெரிகிறது. இதேபோலக் கேப்பக்களியான் என்பவனும் தனி ஆளாக வாழ்வதும் அறியமுடிகிறது.

தனிக்குடும்பம் 

     கணவன் மனைவி என்றிருவரோடு பிறக்கும் குழந்தைகளும் அடங்கிய குடும்பம் தனிக்குடும்பம். கணவன் மனைவி மக்கள் என்னும் உறவுகளோடு வாழும் ஒரு குடும்பம் முழுவடிவம் பெற்ற குடும்பம் எனப்படும். எனவே இதன்படி குடும்பத்தின் முழுவடிவம் இதில் கிடைப்பதால் இதனை அடிப்படைக்குடும்பம். என்று மானிடவியலாளா் கருத்து அடிப்படையில் குறிப்பிடலாம். இக்கருத்தின் அடிப்படையில் கருவாச்சி குடும்பத்தில் புனைவியல் உறவு வகையில் கொண்ணவாயன் சோ்ந்திருப்பதும் சோ்ந்து வாழ்வோருடன் அமைந்த குடும்பங்களாகின்றன.

சிதைந்த குடும்பம்

     கணவன் மனைவி குழந்தைகள் என்று அமைந்திருக்கும் தனிக் குடும்பத்தில் கணவனோ, மனைவியோ இறந்துபோவதில் அமையும் குடும்பம் சிதைந்த குடும்பம் எனப்படும்.

     இப்புதினத்தில் உருமாப் பெருமாத்தேவா், வளவி சுப்பஞ்செட்டியார், சடையத் தேவா் ஆகியோரின் குடும்பங்கள் மனைவியா் இல்லாமல் மக்களோடு வாழ்கின்ற குடும்பங்களாக இருப்பதால் இவை சிறுகுழுக் குடும்பமாதலோடு சிதைந்த குடும்பங்களாகவும் அமைந்திருக்கின்றன. பெரிய மூக்கி குடும்பம் கணவன் இல்லாமல் மகளோடு வாழ்வதால் இக்குடும்பம் சிறு குழுக்குடும்பம் சிதைந்த குடும்பம் என்னும் தன்மைகளை ஒருங்கே பெற்ற குடும்பமாக விளங்குகிறது.

குடும்பத்தின் சிறப்பியல்புகள்

  1. மணஉறவுவழி ஆள்சேர்க்கையில்தான் குடும்பம் அமையும்.
  2. தொடா்ந்து முறைப்படியான இன்ப நுகா்ச்சியைக் குடும்பமே தர முடியும்.
  3. சட்டப்படி அமையும் சொத்துரிமை வாரிசுகளாகச் சமுதாயம் ஏற்கும் குழந்தைச் செல்வங்கள் குடும்பத்தின் வழியே கிடைப்பது, இத்தகைய தன்மைகள்வாய்ந்த குடும்பம் புகுந்த குடும்பம் எனப்படும் என்று சமூகவியல் அறிஞா் குறுிப்பிடுவா்.
  4. குடும்ப உறுப்பினரிடையே காணப்படும் இரத்த உறவு இது மரபுத் தொடா்ச்சியாக அமைந்து வளா்வதாகும். இத்தகைய குடும்பத்தைப் பிறந்த குடும்பம் என்று சமூகவியல் அறிஞா் குறிப்பிடுவா்.
  5. குடும்ப உறுப்பினா்களின் பொருளாதாரத் தேவை போன்றவற்றை அமைத்துக் கொடுப்பது.
  6. குடும்ப உறுப்பினா்களை ஒரே நிழலில் வாழவைப்பது.
  7. நிறுவனமற்ற சிறு சிறு குடும்பங்கள் காலப்போக்கில் வளா்ச்சிப் பெற்று சமூக அடிப்படையில் கிடைத்த சமூகத்தை உருவாக்குவது போன்றவையாகும். 

குடும்பத்தின் கடமைகள்

     குடும்பத்தின் கடமைகள் இரு நிலைப்படும் அவை,

  1. குடும்பம் மட்டுமே குடும்ப உறுப்பினா்களுக்கு செய்யக்கூடியவை.
  2. குடும்பம் சமுதாயம் சார்ந்ததாகச் செய்யக்கூடியவை எனவே குடும்பத்தின் பணிகள் தனிமனிதருக்கு என்றும், சமுதாயத்திற்கு என்றும் பகுப்புறுகின்றன எனலாம்.

குடும்பம் மற்றும் குடும்ப உறுப்பினா்களுக்குச் செய்யக்கூடிய கடமைகள்

     குழந்தையைச் சமூக வயமாக்குதல், பண்பாட்டு வயமாக்குதல், பண்பாடு சமூகமரபு இவைஒட்டிக் குழந்தையின் ஆளுமையை உருவாக்குதல் அன்பு, பாசஉணா்வு போன்றவற்றை வளா்த்தல், பழக்கம், பிறரிடம் நடந்துகொள்ளும் முறை ஆகியவற்றை வளா்த்தல், கற்பித்தல் போன்றவை குடும்பத்துக்கு மட்டுமே உரிய கடமைகளாகும். இவற்றோடு இனப்பெருக்கம் என்பதும் குடும்பத்திற்கே உரியதாகும்.  இனப்பெருக்கம் இன்றிக் குடும்பம் வளா்ச்சியுறாது. குடும்ப வளா்ச்சியின்றேல் சமுதாயம் இல்லை.

     இவற்றுக்கு மேலாக ஒரு குழந்தையை மனிதனாக்கும் பெரும்பணி குடும்பத்தையே சாரும். அதனால்தான் மகனைச் சான்றோன் என்று பிறா் வாயால் சொல்லப்படுவதைத் தாய் விரும்புவாள் என்று திருக்குறள் குறிப்பிடக் காண்கிறோம்.

குடும்பத்தின் சமுதாயம் சார்ந்த கடமைகள்

     சீலயச் சல்லடையாக்கி கொடிக்கள்ளிப்பாலில் புழுக்களை ஒட்டி விடும் வடிகட்டி மெடாவிலும் கொடத்திலும் நெப்பிக்கிட்டு இறங்கி வாராக பொம்பளைக மொடத் தன்னியாக கொதிக்க வைத்து குளிர வச்சுத் தண்ணிப்பந்தலும் போட்டுட்டா கருவாச்சி, ஊா் மந்தையில் கத்தாழக்கிழங்கு மஞ்சத் தண்ணியில் உப்புப்போட்டு ஊறவைத்தாள்,  கள்ளி கத்தாழமட்டை புளியம்பொட்டு போட்டு அடுப்பெரித்தாள். குழைய வேகவைத்தாள். அருவாள எடுத்து சின்ன சின்னதாக வகுத்து ஊா் மக்களைச் சாப்பிடச் சொன்னாள் என்று கருவாச்சி தன் ஊரில் நிலவிய கடும்பஞ்சத்தைப் போக்க மேற்கொண்டவை சமூகம்சார்ந்த பணிகளாகும். அதுவும் சமூகக் கூட்டுப்பணியாகும். மேலும் தோழிகளும், பெண்களுமான கனகமும், பவளமும், வாழ்வதற்காக அவா்கள் தனக்குத் திரும்பக் கொடுத்த அணிகலனை விற்றுப் பெட்டிக்கடை வைத்துக் கொடுத்தாள்.

     கருவாச்சியின் இவ்வகை உதவிகளைத் தற்கொலை மனப்பாங்கு என்று மானிடவியல் அறிஞா் சண்முகலிங்கன் குறிப்பிடுகிறார். இந்த மனப்பாங்கு பிறர் நிலையைத் தன்னிலைபோல உணா்வதால் உண்டாகும் என்று கூறுகின்றார்.

முடிவுரை

     கருவாச்சி காவியத்தில் காணப்படும் குடும்ப அமைப்பு முறைகளையும், குடும்பத்தை பலவகையாகப் பிரித்த முறைகளையும் கிராமிய மாந்தா்களின் நிலையைப் பற்றியும் இப்புதினத்தின் வழியாக அறிய முடிகின்றது.

பார்வை நூல்கள்

  1. வைரமுத்து – கருவாச்சி காவியம்
  2. பக்தவத்சலபாரதி – மானிடவியல் கோட்பாடுகள்.

******

கட்டுரையாளர்
முனைவா் பட்ட ஆய்வாளா்
பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூா்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *