பெருவை பார்த்தசாரதி

==============================

C2TQmRJWgAAlGl1

மனிதப்பிறவி என்பது அரிதாகும் அதைவிடவும்..

…….மனத்திலெழும் சிந்தனா சக்தியென்பது அற்புதமாம்.!

கனியுமாமங்கே கருத்துடன் செறியும் எண்ணம்..

…….காலத்தேயது வெளிப்படும் காதுக்கினிய பேச்சாக.!

இனியசொல்லே இல்லாமல் இடைவிடாமல் பேசும்..

…….இயல்புள்ள மனிதருமிங்கே உண்டு இவர்தவிர்த்து.!

தனிமையிலே பேசினால்நம் தன்னிலை அறியலாம்..

…….தக்கதோர் இடமதற்கு பொருத்தமா யமையவேணும்.!

 

 

முனிவனும் யோகியும் முற்றுமெதையும் துறந்தாலும்..

…….தனிமையில் சிந்தித்ததால் தன்னிகரற்று விளங்கினர்.!

மனித வளமென்று சொல்வதெல்லாம் எதைவைத்து..

…….மனிதரின் மனதிலெழுமுயர் எண்ணங்கள் வைத்தே.!

பனிப்படலம் விலகவங்கு பகலவன் தோன்றியது..

…….போலேநம் மனவழுக்ககல நற்சிந்தனை வேண்டும்.!

இனியவை நாற்பது இன்னாநாற்பதெனும் காவியமும்..

…….இன்புற இறுதிநிலையென இதைத்தான் இயம்பியது.!

 

 

அண்டசராசரத்தில் அனுதினம் ஆயிரம் நிகழ்வுகள்..

…….ஆண்டவனை அடிபணிய ஆங்கோர் சந்தர்ப்பமாம்.!

பண்டிகை விழாவெனில் மண்டபத்தில் கூடிநின்று..

…….பலருடன் பேசும்மனம் விசாலமடைய வழியதுவாம்.!

கொண்டாடும் இடத்தினிலே கூடியிருக்கும் பலரும்..

…….கொத்துமலர் கொண்டு வாழ்த்திப்பேச நலமுண்டாம்.!

கண்டவருடன் கண்டதையும் பேசாமல் ஒதுங்கித்..

…….தனிமையிலே பேசித்தன் சுகத்தை காப்போருமுண்டு.!

 

 

தன்னையறியவே தனிமையில் பேசினர் சித்தர்கள்..

…….தன்னுடலழகும் தகும் புறத்தோற்றமும் தவிர்த்தார்.!

தன்சிந்தையை தன்சுற்றத்தை தன்னியல்பை நீக்கி..

…….தனிமைத்தவம் கொண்டார்தன் ஐம்புலன்க ளடக்க.!

தன்வாழ்வை இயற்கை யோடிணைத்து வித்தகரானார்..

…….தமிழிலக்கியம் செழிக்கத் தன்னையு மர்ப்பணித்தார்.!

பின்னரிந்த உண்மையறியாத மாந்தரும்–சித்தரைப்..

…….பித்தனென்றே பேசினர்..வாழ்வியல் தத்துவமறியா.!

==============================================================

நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::12-02-18

நன்றி:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *