நட்சத்திர பரிதாபம்
-தனுசு
நாயும் அனாதையும்
இங்கு
ஒன்றானதடா!
நாதியற்ற ஜீவன்களுக்கு
வீதியே வீடடா!
பேயும்
பிசாசும்
ஊருக்குள்ள வாழுதடா!
மனித நேயமிங்கு
மண்ணாகி நாறுதடா!
நண்டு
சிண்டு
தடி
கைத்தடி
ஊருக்குள்
அடங்காமல் ஆடுதடா!
வியர்த்து
களைத்து
ஓடி
உழைக்கும்
உயிரெல்லாம்
அடங்கிக் கிடக்குதடா!
ஐந்தாண்டு திட்டங்கள்
ஆரம்பமாச்சு
அது
ஐந்தாண்டுக்கொரு முறை
புதுப்பிக்கலாச்சு
ஐம்பதாண்டாய் இதே பேச்சு
இன்று
வேலைக்கு கூலியென்றாச்சு.
நரிக்கூட்டம் நாட்டையாளும்
நாடகத்தில்
தொலை நோக்கு
வறுமை போக்கு
என்பெதெலாம் நடிப்படா!
நம்பியிருக்கும்
நாமெல்லாம்
கண்டு களிக்க
நடத்தும் கூத்துடா!
அணு உலைக்கும்
அரிசி விலைக்கும்
பாதுகாப்பு இல்லையடா!
இதில்
ஏழைக் கிழவிக்கும்
வாயில்லா ஜீவனுக்கும்
எதிர்பார்த்தால்
நீ ஒரு ஏமாளியடா!
கருவறையும் இருட்டுடா
கல்லறையும் இருட்டுடா
இடைப்பட்ட பயணத்தில்
வெளிச்சம் தருபவன் மனிதனடா!
பணம்
பதவி
பட்டம் கொடுக்குமடா
உயிர் விட்டால்
பிணம்
எனும் பட்டம்
அனைவருக்கும் பொதுவடா!