சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா

பாஸ்கர்
நீதிமன்றத்திற்கு ஒருவர் வருகிறார். சுமார் ஐம்பது வயதுக்கு மேல். எளிமையான உருவம். காவி வேஷ்டி. நகர்ப்புறம் சாராதவர். அவர் பொதுநல வழக்கு ஒன்றிற்கு வந்து இருக்கிறார். நீதிபதி அமர்ந்து இருக்க அவர் சார்பாக அவரே வாதாடுகிறார். நீதிபதிக்குத் தமிழ் தெரியாது. வழக்காட வந்தவருக்கு ஆங்கிலம் தெரியாது. பொது நலத்தை மனத்தில் வைத்துக்கொண்டு வழக்குத் தமிழில் அவர் பேச, அதைப் பின்னர் விளக்க வழக்கறிஞர் ஒருவர் குறிப்பெடுத்துக் கொண்டு தயாராக இருக்கிறார். பராசக்தி சிவாஜி போல அவர் பத்து நிமிஷம் பேசினார். அன்றைய வழக்கு முடிந்தது.
எனக்கு இதை நண்பர் மாதவன் நேற்று டிராபிக் ராமசாமி மறைவு பற்றிப் பேசும்போது சொன்னார்.
எனக்குத் தோன்றிய மூன்று விஷயங்கள் –
நேர்மையும் பொதுநலனும் மனத்தில் இருந்தால் வெற்றி நிச்சயம். அப்படி வரவில்லை என்றாலும் அதன் தாக்கம் உள்ளே எப்போதும் இருக்கும். சத்தியத்தை அது என்றும் கைவிடாது.
ராமசாமிகள் இங்கு வந்துகொண்டு தான் இருப்பார்கள். இந்த நபரும் அவர் போல நேர்மையை ஆயுதமாகக் கொண்டவர். நலத்தொண்டு அவரிடம் எப்போதும் இருக்கும். விலை கொடுத்து அவரை வாங்க முடியாது.
இதை எல்லாம் தாண்டி இன்றைய சூழலில் மொழி தெரியாத போதும் உண்மை ஒன்றை நம்பி, ஒருவர்க்கு அவர் மொழியில் பேசி வழக்காடும் உரிமையை நீதிமன்றம் கொடுத்து இருப்பது நமக்கெல்லாம் பெரிய பலம். இன்று நீதி தான் நாமக்கு நாதி. இவர் நிச்சயம் ஜெயிப்பார். அப்படி அவர் தோற்றாலும் அவரின் வேகத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது.
அவரிடம் பேசி அவரைப் பற்றிய தகவல்களை ஏன் பெறவில்லை என நண்பரிடம் கேட்டேன்.
மாதவன் சொன்னார் “அடுத்த பொது நல வழக்கு ஒன்றிற்காக அவர் வேறு ஒரு நீதிமன்றத்திற்கு அவசரமாகச் செல்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்”.
நிச்சயம் அவரை ஒரு நாள் சந்திப்பேன். டிராபிக் ராமசாமிகள் மறைவதில்லை.