குறளின் கதிர்களாய்…(349)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(349)

உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை யெல்லாம் பொறுத்து.

– திருக்குறள் – 1032 (உழவு)

புதுக் கவிதையில்...

உழவெனும் உயர்தொழில் செய்ய
மனமின்றி
வேறு தொழில்கள் செய்ய,
அவற்றைத்
தேடியலைவோர் யாவரையும்
தாங்குவதாலே,
உழுபவரே
உலகெனும் தேருக்கு
அச்சாணியாவர்…!

குறும்பாவில்...

உழவின் உயர்வை அறியாமல்
வேறுவேலை தேடி அலைவோரையும் தாங்குவதால்,
உழவரே உலகத்தார்க்கு அச்சாணி…!

மரபுக் கவிதையில்...

உயர்ந்த தொழிலாம் உழவதனின்
உயர்வு தன்னை யறியாமல்
முயன்று வேறு பணிதேடி
முனைப்புட னலையும் மாந்தரையும்
அயர்வே யிலாமல் தாங்கியேதான்
அவரையும் வாழச் செய்வதனால்,
பயிரிடும் உழவரே தேரதுவாம்
பாருக் காணியாய் ஆவாரே…!

லிமரைக்கூ..

ஏற்றித் தாங்கிடும் ஏணியாய்
உழவை விரும்பார்க்குமிருப்பதால், உழவரே ஆவர்,
உலகத் தேருக் காணியாய்…!

கிராமிய பாணியில்...

ஒசந்தது ஒசந்தது
ஒழவுத் தொழிலு ஒசந்தது,
ஒலகத்துத் தொழிலுகளிலே
ஒழவுத் தொழிலுதான் ஒசந்தது..

ஒழவுத் தொழிலு பிடிக்காம
வேற தொழிலத் தேடி
அலயிறவங்களுக்கும்
ஒணவு குடுத்துத் தாங்கிறதாலே
ஒழவரே
ஒலகத் தேரு ஓடுறதுக்கு
அச்சாணி ஆவாரே..

அதால
ஒசந்தது ஒசந்தது
ஒழவுத் தொழிலு ஒசந்தது,
ஒலகத்துத் தொழிலுகளிலே
ஒழவுத் தொழிலுதான் ஒசந்தது…!

About செண்பக ஜெகதீசன்

இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி (நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்). இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்). ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்), எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)… கவிதை நூல்கள்-6.. வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை, நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்...

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க