பூங்காற்று தனசேகரின் புதிய பாதை
அண்ணாகண்ணன்
பூங்காற்று தனசேகர், எழுத்தாளர், கவிஞர், இதழாளர் எனப் பல முகங்கள் கொண்டவர். பூங்காற்று என்ற பத்திரிகையை நடத்தியதால், அந்தப் பெயராலேயே அழைக்கப்பெற்றார். முதல் காதல் கவிதை என்ற கவிதைத் தொகுப்பு, மகாராஜாவுக்குப் பசிக்கிறது என்ற சிறுகதைத் தொகுப்பு உள்பட பல நூல்களைப் படைத்தவர். மாலைச் சுடர், தமிழரசி, புதிய பார்வை, அரும்பு, ஜெயா தொலைக்காட்சி உள்பட ஊடக நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றியவர்.
பல ஆண்டுகளாக இவருக்குக் குடிப் பழக்கம் இருந்துவந்தது. குடும்பத்தினரும் நண்பர்களும் நீண்ட காலமாக வலியுறுத்தியதன் பயனாக, இப்போது குடிப் பழக்கத்தை விடுவது என்ற திடமான முடிவினை எடுத்துள்ளார்.
நான் கடந்த வாரம் அவரைச் சந்தித்த போது, 10 நாட்களாக மதுவிலிருந்து விலகியிருப்பதாகக் கூறினார். இது, உண்மையிலேயே ஒரு மிகச் சிறந்த முடிவு. இதற்காக அவரைப் பெரிதும் பாராட்டுகிறேன். இந்த முடிவில் அவர் நிலைத்து நின்று, குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வரலாம் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குவார் என்பது என் நம்பிக்கை.
மதுவின் பிடியிலிருந்து ஒருவர் விலகியுள்ளார் என்ற நற்செய்தியை, மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி அறிவிப்பது, மிகவும் பொருத்தமானது.
மேற்கண்ட புகைப்படம், பூங்காற்று தனசேகரின் ‘முதல் காதல் கவிதை‘ நூல் வெளியீட்டு விழாவின் போது (2004-05) எடுத்தது. இதில் இசையமைப்பாளர் தினா வெளியிட, நானும் கவிஞர்கள் குகை மா.புகழேந்தி, இளையகம்பன் ஆகியோரும் இணைந்து பெற்றுக்கொண்டோம். படத்தில் இயக்குநர் ராசி.அழகப்பன் உள்ளார். இந்தப் படத்தில் நடுநாயகமாக, கோடு போட்ட சட்டையில் இருப்பவர், பூங்காற்று தனசேகர்.
புதிய பாதைக்குத் திரும்பியிருக்கும் பூங்காற்று தனசேகரை வாழ்த்துங்கள். இவரின் செல்பேசி எண்: 9380641397