’அதிகாலை’ குறும்படம் வெளியீடு!

0

adhikaalai

கவின் ஆன்டனி இயக்கிய ‘அதிகாலை’ என்னும் குறும்படம், 2010 அக்டோபர் 2 அன்று இரஷ்யக் கலாசாரக் கழகத்தில் வெளியிடப்பட்டது. மன அழுத்தத்தால் தான் பெரும்பான்மையான விபத்துகள் நடக்கின்றன என்று சொல்லும் இந்தக் குறும்படத்தின் வெளியீட்டு விழாவுக்குச் சென்னை மாநகரக் காவல் துறை (போக்குவரத்து) கூடுதல் ஆணையர் ரவி ஐ.பி.எஸ். தலைமை ஏற்றார். டிவி நடிகையும் செய்தி வாசிப்பாளருமான
பாத்திமா பாபு, இயக்குநர்கள் சற்குணம், லட்சுமிகாந்தன், கவிஞர் ஜெயபாஸ்கரன், அருட்பணியாளர் பெலிக்ஸ் பிலிப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

குறும்படத்தைக் காவல் துறை கூடுதல் ஆணையர் ரவி ஐ.பி.எஸ். வெளியிட, களவாணி படத்தின் இயக்குநர் சற்குணம், பாத்திமாபாபு, இயக்குநர் லட்சுமிகாந்தன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கூடுதல் ஆணையர் ரவி பேசும் போது, ‘இன்று சமுதாயத்திற்கு இந்தக் குறும்படம் மிக அவசியம்.  இந்தக் குறும்படத்தைச் சென்னை மாநகரக் காவல் துறை, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மட்டுமின்றி, பொதுமக்கள் கூடும் இடங்களில் திரையிடும்’ என்று தெரிவித்தார்.

பாத்திமாபாபு, குறும்படத்தின் இசையை வெகுவாகப் பாராட்டினார். இயக்குநர் சற்குணம் பேசும் போது, ‘சினிமாவிற்கு இல்லாத சிறப்பம்சம் குறும்படத்தில் உள்ளது. சொல்ல வந்த கருத்தை எந்தத் தடையும் இல்லாமல் குறும்படத்தில் மட்டுமே சொல்ல முடியும். இந்தக் குறும்படம் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்கிறது. இரண்டு பேருடைய வாழ்க்கையை அழகான கோணங்களில் சொல்லி ஒரே இடத்தில் சேர்த்திருப்பது
கவின் ஆன்டனியின் திறமையைக் காட்டுகிறது’ என்று பேசினார்.

இயக்குநர் லட்சுமிகாந்தன் ’என்னிடம் தான் உதவியாளராக கவின் ஆன்டனி வேலை பார்த்தார். இப்படி ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னவுடன்… பண்ணு… தேவையான உதவிய நான் பண்றேன் என்று சொன்னேன்… கவின் ஆன்டனி இப்படி சமூக அக்கறையுடன் குறும்படம் இயக்கியிருப்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது’ என்று பேசினார். இந்தக் குறும்படத்தை மதிப்புரை செய்த
கவிஞர் ஜெயபாஸ்கரன் பேச்சில் சமூக அக்கறை வெகுவாகவே வெளிப்பட்டது.

குறும்படத்தின் இயக்குநர் கவின் ஆன்டனி தனது நன்றியுரையில் ‘விபத்தின் காரணமாக நான் மாற்றுத் திறனாளியாகிவிட்டாலும், என்னைப் போன்று இன்னொரு மாற்றுத் திறனாளி கவின் ஆன்டனி உருவாகிவிடக் கூடாது என்பது எனது எண்ணம். கூடுதல் ஆணையர் உயர்திரு ரவி, ஐ.பி.எஸ். அவர்களைப் பார்த்த பிறகு காவல் துறை உங்கள் நண்பன் என்பதன் அர்த்தம் புரிந்தது. காரணம், என்னிடம் அவர் எப்போதுமே காவல் துறை அதிகாரியாகப் பேசியதில்லை. அவர் என்மீது வைத்திருக்கு அன்பும் மதிப்பும் மிக மிக அதிகம். என்னைப் பற்றிப் பெருமையாக மற்றவர்களிடம் பேசுவார். அவர் பேச்சுகள் எனக்குத் தன்னம்பிக்கையூட்டும் விதமாகவே இருக்கும். அவரால் காவல் துறை மீது எனக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் கூடியது’ என்று மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராய் இயக்குநர் கவின் ஆன்டனி பேசினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *