மீனாட்சி பாலகணேஷ்     

சமையல் பழகுதல்-7        

(புதிய பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

புதிய பருவங்களில் அடுத்து நாம் காணப்போவது சமையல் பழகுதல் என்பதாகும். பெண்குழந்தைகள் ஐந்தாறு வயதுச் சிறுமிகளாக உள்ளபோது பாவனையாகப் பொய்தல் விளையாட்டு விளையாடுவார்கள். மூன்று கற்களை அடுப்பாக்கி, சிவந்த நிறம் கொண்ட மாதுளை மலர்களை நெருப்பாகக் கொண்டு, சிறு மண்சட்டிகளையோ அல்லது பெரிய சங்குகளையோ பானையாகக் கொண்டு அதில் ஆற்றுநீரை உலைநீராகப் பெய்து, மணலையோ சிறு கற்களையோ அரிசியாக இட்டுச் சோறாக்கி விளையாடுவர்.

இவற்றை அழித்துச் சிதைக்க வரும் சிறார்களை அவ்வாறு செய்யாதிருக்க வேண்டுவதனை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் முன்பே கண்டோம். இது தொடர்பான பல விளையாட்டுக்களையும் கண்டுள்ளோம். பத்து ஆண்டுகள் நிரம்பிவரும் சிறுமி உண்மையான சமையல் செய்வதனை அன்னையுடன் அருகிருந்து கற்றுக் கொள்வாள். இவளே பின்பு சிறு பெண்குழந்தைகளுடன் விளையாடும்போது உண்மைச் சமையலின் சில பகுதிகளைத் தானே மேற்கொண்டும் செய்வதுண்டு. இதனையும் இந்தப் பொய்தல் விளையாட்டில் காண்கிறோம்.

சமையல் செய்வதனை ஆசையாகக் கற்றபெண் திருமணம் முடிந்து கணவனுக்குத் தான் செய்யும் புளிப்பான மோர்க்குழம்பை அவன் சுவைத்து உண்டதில் மகிழ்ச்சி அடைந்ததனை ஒரு சங்கப்பாடல் நமக்கு விளக்குகிறது.

சமையல் செய்யும் அவசரத்தில், புளித்த தயிரை விரல்களால் பிசைகிறாள்; கழுவ நேரமுமின்றித் தனது ஆடையிலேயே துடைத்துக் கொள்கிறாள். ஈர விறகோ என்னவோ, அடுப்பும் வேறு ஒத்துழைக்க மறுத்து, புகை மண்டுகிறது; அவளது குவளைமலர் போலும் கண்களில் புகுந்து தொல்லை செய்கிறது! இவ்வாறெல்லாம் பாடுபட்டுச் சமைத்த இனிய சுவையான மோர்க்குழம்பைக் கணவன் ‘நன்றாக உள்ளது,’ எனக்கூறிச் சுவைத்து உண்கிறான். இப்பெண்ணின் முகம் நுட்பமான மகிழ்ச்சியை அடைந்து மகிழ்ந்தது – என்று செவிலித்தாயின் கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல்.

                             முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
                            கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
                            குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
                            தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
                            இனிதெனக் கணவ னுண்டலின்
                            நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே1.

இவ்வாறெல்லாம் இல்வாழ்க்கைக்குத் தம்மை உருவாக்கிக் கொள்ளும் இளம்பருவத்தின் ஒரு இனிய கட்டமே சமையல் பழகுதலாகும். நாம் இப்போது முற்றும் வித்தியாசமாக, உலகுக்கே படியளக்கும் அன்னை உமையவளாம் அன்னபூரணி தன் இளமைப்பருவத்தில் எவ்வாறு சமையல் பழகினாள் எனப் பார்த்து மகிழலாமா?

மணம்புரிந்து கொண்ட பரமனுடன் இல்வாழ்க்கைக்குத் தயாரான மங்கை அன்னபூரணியிடம் பரமன் இருநாழி நெல்லை மட்டுமே அளித்து, “நீ உலகத்தோர் உய்யுமாறு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாமல் செய்வாய்,” என்று அன்புடன் கூறிவிட்டான். அவளும் தனது கருணையினால் பரமன் கூறியவாறு அனைத்துலகங்களையும் அன்னமும் மற்றனைத்தும் குறைவறத் தந்து புரந்தளித்துக் காப்பது சுவர்க்கத்தையும் மோட்சத்தையும் தரும் காசிமா நகரில் அன்னபூரணியாக இருந்துகொண்டு தானே அன்றோ!

                        பொன்னனைய பூவையுனைப் போற்றிப் புகழும்
                            பித்தன்பே ரருளான்
                   மன்னுலகை யெலாம்நீ மகிழ்ந்துபு ரந்தளிக்க
                            விருநாழி நெற்றந்து
                   சொன்னசொற் றவறாது சுவர்க்க மோட்சந்தருங்
                            காசிமா நகருறையு                 
                   மன்னபூர ணித்தாயே! அன்னமளித் துலகை
                            யளித்த ருள்வாயே2!

தான் உயிர்களைப் புரக்க ஆக்கிய இன்னமுதில் ஒரு பங்கினை ஐயன் தன்னிடமே ஏந்தி நிற்கும் சட்டியிலும் படைக்கிறாள் தாய் அன்னபூரணி! சங்குவளையலை அணிந்த அவள் (மணமான பெண்கள் சங்குவளைகள் அணிவது வட இந்திய வழக்கம்) சிற்றில் விளையாடிய காலத்தில் சமையல்கலையைப் பழக்கிக் கொண்டாள்; அவள் ஐயனின் இடப்பாகத்தில் வாழும் உமையவள்; வாராணசி நகரிலுறையும் அன்னபூரணித்தாய்!

                        அங்கர மலர்கொடு ஆக்கிய அடிசிலை
                            அன்புடன முதமென
                   சங்கர னேந்திய சட்டியில் வட்டிக்கும்
                            சங்குவளைக்  கையளே!
                   சங்கரி யே!சிற்றில் பயில் சுந்தரியே
                            எமைவாழ் வித்திடுமையன்
                   பங்கில் வாழுமையே வாராணசி நகருறை
                            யன்னபூ ரணியளே3!

இப்பூவுலகில் நான் உனக்கொரு விளையாட்டுப் பாவை (பொம்மை!) தானே! ஆகவே என்னை நீ சீராட்டி வளர்த்து, பல நலங்களையுமளித்தருளி, வாழ்வில் முன்னேற நம்பிக்கையொளி தந்து நல்ல எண்ணங்களுடன் இருக்க அருளுகிறாய். தேனும் பாலுமான நற்பொருட்களைத் தேடியெடுத்து என் வாழ்வை இனிதாக்கி, அது திகட்டாத வண்ணம் அமுது செய்விக்கிறாய். ஆதரவு தருகிறாய். உனது மானின் விழிகளை நிகர்த்த கண்களால் என்னப் நோக்கி இந்த மாநிலத்தில் நான் மயங்கி விழாமல் காப்பாற்றி மதி, நிதி, நலம் அனைத்தையும் குறையின்றிக் கொடுப்பவள் நீயே எமக்கு வாய்த்த ஒரு பெருஞ்செல்வம். உன்னிடம் கொண்ட குறையற்ற அன்பினால் உடல் உயிர் அனைத்தையும் உனக்கேயளித்து வாழும் அடியார்களுக்கு உன் கருணையால் வீடுபேற்றையும் இறுதியில் தரும் உமையவளே! உன்மத்தனாம் சிவனின் அருளென விளங்குபவளே! (காசிமாநகர் வீடுபேறு தருமிடமாதலால் அங்கு வாழும் உமையான அன்னபூரணி வீடுபேறு தருபவளென்பது பெறப்படும்!).

                        நானொரு பாவையெனை நன்றாகச் சீராட்டி
                            நானிலத்தே நலம்பலவு மளித்து
                       நாளும் பொழுதும் நம்பிக்கை யொளிதந்து
                            நல்லெண் ணங்கூட்டி வைத்து
                   தேனொடு பானமுத மானனற் பொருட்களை
                            தேடியெடுத் துச்சிறுகூழ் சமைத்து
                      தித்திக்க வென்வாயில் திகட்டாத முதுசெய்வித்
                            தணைத் தாதரவு மளிக்கும்
                   மானொடு கண்ணிணை மயங்கவே நோக்கி
                            மாநிலத்தில் மயங்கி வீழாமல்
                       மதியுநிதி யுநலமு மங்காமலே கொடுக்கு
                            மாநிதிச் செல்வி யன்னாய்!     
                   ஊனொடு வுயிருமுள் ளன்பால் தந்திடு
                            முழுவலடி யார்தம் பாலுள
                        முருகிவீ டுபேறுந் தந்திடு முமையே!
                            உன்மத்த சிவனின் அருளே3!

அனைத்து மானிடர்க்கும் அன்னையின் அருளை வேண்டுகிறேன்.

அடுத்து சில ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை நோக்குவோம்.

(புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

                                   ————————–

பார்வை நூல்கள்:

1. குறுந்தொகை

2, 3, 4. மீனாட்சி பாலகணேஷ்- காசி அன்னபூரணி அம்மை மீதான பிள்ளைத்தமிழ் பாடல்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.