தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 37

புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
விளார் புறவழிச்சாலை,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
அகத்திணை விளக்கும் புறத்திணை உவமங்கள் – 1
முன்னுரை
சிந்தனையில் கடமையுணர்வு மிக்கிருப்பவன் செய்யும் காதலுக்கும் காதலுணர்வு மட்டுமே மிக்கிருப்பவன் செய்கின்ற காதலுக்கும் வேறுபாடு உண்டு. காதலைப் பற்றி, இல்லாத கற்பனையைச் சொல்லாத கவிஞரில்லை. ஆனால் பரணர் சொல்வதற்கும் மற்றவர் சொல்வதற்குமான வேறுபாடே இங்கு ஆய்வுப் பொருளாகிறது. அகத்திணை மாந்தர்களின் உணர்வு வெளிப்பாடுகள் எல்லாரிடமும் ஒரே தன்மையாயும் பரணரிடம் மட்டும் அது வேறுபட்டும் அமையக் காரணம் என்ன என்பதை ஆராய்கிறபோதுதான் முன்னுரையின் முதல் வரி நினைவுக்கு வந்தது. மன்னர்களோடும் சமுதாய மக்களோடும் களங்காணும் வீரர்களோடும் பழகி அவர்களைப் பற்றிய சிந்தனை அதிகம் நிறைந்த புலவர்களில் பரணர் முன்னிற்கிறார். பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்தைப் பத்திய மருந்தாகச் சேரனுக்குப் பாடி மகிழ்ந்தவர் அவர். அகத்திணைப் பாடல்களைப் பாடுகிறபோது முதற்பொருள்களை உவமமாகக் கொண்டிருப்பதைக் காட்டிலும் சமுதாய நிகழ்வுகளையும் போர்க்களங்களின் ஆரவாரிப்பையும் குறுநில மன்னர்களின் இயல்பையும் இவை போன்ற செய்திகளையுமே உவமமாக்குகிறார். எங்கே உவமம் சொல்ல வேண்டும்? எவற்றை நிலைக்களனாகக் கொண்டு அவை தோன்றும்? யார் யார் உவமம் சொல்லலாம்? அவர்களும் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கெல்லாம் விதிவகுத்த தொல்காப்பியம் இதனைத்தான் உவமமாகச் சொல்லவேண்டும் என்பதற்கான விதியினை வகுத்திருப்பதாகத் தெரியவில்லை. ‘பொருளைவிட உவமம் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்’ என்ற ஒரே நிபந்தனையைத்தான் அது விதிக்கிறது. அந்த உயர்ந்த பொருளை புலவர் பெருமக்கள் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கிலிருந்தும் எடுத்துக் கொண்டார்கள். அவை பெரும்பாலும் முதற்பொருளைச் சார்ந்தே அமைந்தன. ஆனால் பரணர் மட்டுமே அக்காலச் சான்றோர்களில் யாரும் எண்ணிப் பார்க்காத சமுதாய நிகழ்வுகளை உவமமாக வைத்துப் பாடியிருக்கிறார். அவர் பாடிய அகத்திணைப் பொருண்மையைப் புறத்திணை உவமங்களால் விளக்கியதுதான் புதுமை. அத்தகைய புதுமைகள் சிலவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.
பரணரின் பதிவுகள்
தனித்தன்மை மிக்க சங்கச் சான்றோருள் பரணரும் ஒருவர். குறிஞ்சிக் கபிலரின் நெருங்கிய நண்பர் இவரென்பதற்கு உம்மைத்தொகைக்கு வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் ‘கபிலபரணர்’ என்னும் தொடரே போதுமான சான்றாகலாம். பதிற்றுப்பத்துள் ஐந்தாம் பத்து பாடிய இப்பெருமகனார் நற்றிணை, புறநானூற்றில் நூலுக்குப் பன்னிரண்டும் குறுந்தொகையில் பதினைந்தும் அகநானூற்றில் முப்பத்திரண்டுமாகப் பாடியுள்ளார். குறுந்தொகையில் இவர் பாடியதாகப் பதிவிடப்பட்டிருக்கும் பதினைந்து பாடல்களில் வரலற்றுச் செய்திகள் உவமமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் பாடல்கள் சிலவற்றிலிருந்து பெறப்படும் உவமக் கோட்பாடுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது,
தோழி செய்த சூழ்ச்சி
தமிழ் அகத்திணை மாந்தருள் நுண்ணியத்தோடு வடிவமைக்கப்பட்ட பாத்திரம் தோழியாகும். அகத்திணை நிகழ்வுகளை ஆழ்ந்த சிந்தனையோடும் பொறுப்புணர்வோடும் நிரல்படக் கொண்டு செலுத்தும் அரிய திறமையுள்ள பாத்திரம் அது. பகற்குறி வேண்டி வரும் தலைவனுக்கு இரவுக்குறி காட்டும் தோழி அதனையும் மறுக்கிறாள். இது கண்டு மருகும் தலைவி இனித் தலைவனைக் காண இயலாதோ என எண்ணிப் புலம்ப அவளைத் தேற்றுகிறாள் தோழி!. “நின் மனம் அறிவேன் நான்! அவன் மார்பு விழையும் உனக்கு என் செயல் புதிராகத் தோன்றலாம். நின்னை அவன் குறித்த காலத்தில் வரைந்து கொள்ள வேண்டுமானால் கோசர் செய்த சூழ்ச்சி போலச் சிறிதளவு சூழ்ச்சியும் தேவைப்படுகிறது! நீ கவலற்க!” எனத் தேற்றுகிறாள். ஆண்களின் உள்ளம் அறிந்த அரிய பாத்திரமாகப் படைக்கப்பட்ட தோழி இந்தப் பாட்டில் தான் செய்த சூழ்ச்சிக்குக் கோசர் செய்த சூழ்ச்சியை உவமமாகக் கூறுகிறாள்.
“மகிழ்நன் மார்பே வெய்யை! யான் நீ
அழியல் வாழி தோழி! நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல
வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே!” (குறுந். 73)
ஔவையுண்ட நெல்லிக்கனிபோல் நன்னன் என்பான் நாட்டில், மாமரம் நெடுநாள் சென்று கனியொன்று ஈந்தது. ஆற்றங்கரை மரமாதலின் அக்கனி ஆற்றில் வீழ, அது போழ்து அங்கு நீராடிய கோசர் குலப்பெண் அதனை எடுத்து உண்டாள். அது கேட்ட நன்னன் அவளைக் கொன்றான். மரத்தால் வந்த சிக்கல் என்பதனால் நன்னன் நாட்டில் இல்லாத காலத்தில் மரத்தை அழிக்க மார்க்கம் கண்ட கோசர், அகுதை என்பானிடம் யானைகளைப் பரிசிலாகப் பெற்றுவந்த பாடிணிகளைக் கரையோர மாமரத்தில் அந்த யானைகளைப் பிணிக்கச் சொல்ல, மரத்தோடு பிணிக்கப்பட்ட யானைகள் இழுக்க வேரோடு மரம் சாய்ந்தது என்பது வரலாறு. இது அக்காலத்தில் சூழ்ச்சி எனக் கருதப்பட்டது. நேரடியாக ஒன்றினைச் செய்வதை விட மறைவாகச் செய்வதே சூழ்ச்சியாகும். இந்தச் சூழ்ச்சியைத்தான் தலைவனுக்கு இருவகை குறிமறுத்த தோழி தன்னுடைய செயலுக்கு உவமமாக்குகிறாள்.
தலைவனுக்குப் பரிந்துரை நல்கும் தோழி
ஒரு பாத்திரம் மற்றொரு பாத்திரத்தை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும் என்னும் படைப்பு நுட்பத்தை இந்தப்பாட்டில் காணலாம். தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். அவள் மறுக்கிறாள். பரிந்துரைக்காகத் தோழியை நாடுகிறான் தலைவன். அவள் அவன் நிலையைச் சில குறுகிய சொற்களில் எடுத்துரைத்துத் தலைவியை இசையச் செய்வதாக அமைந்துள்ள பாட்டு இது.
“சேரி சேர மெல்ல வந்து வந்து
அரிது வாய்விட்டு இனிய கூறி
வைகல் தோறும் நிறம்பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் தோழி!” (குறுந். 298)
தலைவன் செவ்வி நோக்கிச் சேரி வருகிறான். மெல்ல மெல்ல வருகிறான். அரிதாகப் பேசுகிறான். அப்பேச்சு இனிமையாகவும் இருக்கிறது! ஒவ்வொரு நாளும் வருகிறான் அவன் பார்வையில் வெளிப்படும் பைதல் நோக்கம் மடலேறுதலைக் குறிக்கும் என அஞ்சுகிறேன். எனவே இசைக” என்பதாம்!
“இன்கடுங் கள்ளின் அகுதை தந்தை
வெண்கடைச் சிறுகோல் அகவன் மகளிர்
மடப்பிடிப் பரிசில் மானப்
பிறிதொன்று குறித்தது அவன் நெடும்புற நிலையே!” (குறுந். 298)
என்ற வரிகளிலும் நன்னன் வரலாற்றையே குறிப்பாகக் காட்டுகிறார் பரணர். அகுதை தந்தையிடம் அகவன் மகளிர் பிடிக்கூட்டங்களைப் பரிசிலாகப் பெற்று அவற்றை அப்படியே மாங்கனி உண்ட பெண்ணின் செயலுக்காகத் தண்டம் கட்டியவிடத்தும் அதனைக் கொள்ளானாய். நன்னனின் மனம் வேறொன்றை எண்ணியதைப் போல (‘பிறிதொன்று குறித்தது’ என்பது அந்தப் பெண்ணைக் கொல்வதை எண்ணியது போல) நம் தலைவனின் மனமும் வேறொன்றை எண்ணுகிறது என்று உவம வாயிலாகக் கூறுகிறார் பரணர்.
தாய்க்கு மகள் இட்ட சாபம்!
“தாயாகிய உறவினையும் தள்ளுபடி உறவாக்கும் தன்மை தமிழுக்கு உண்டு’ என்று பாடுவார் பாவேந்தர். ‘தயை மிகை உடையாள் அன்னை…….அயலவர் ஆகும் வண்ணம்” என்பது அவர் வாக்கு. பகற்குறி பிழைத்த தலைவன் இரவுக்குறி நாடி வருகிறான். அவ்வாறு அவன் வருகை தந்ததை அறிந்த செவிலி அன்றிலிருந்து உறக்கத்தை மறந்துத் தலைவியைப் பாதுகாக்கிறாள். அவளுடைய செயல் பாதுகாப்பாக இருந்தாலும் தலைவிக்கு மனத்துன்பத்தைத் தருகிறது. அவள் துன்பம் கண்டு பொறாத தோழி தன் தாயைப் பழிக்கிறாள். (தோழியின் தாயே செவிலி),
“மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை
புனல்தகு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ? அன்னை
ஒருநாள் நகைமுகம் விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே” (குறுந். 292)
பகைவரால் முற்றுகையிடப்பட்ட ஊரில் உள்ளவர் உறக்கம் மறப்பதைப் போலத் தாய் உறக்கம் துறந்து அவளைக் காக்கிறாளாம். அதனால் “பெண்கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரோ?” என்று தாய்க்கே சாபம் இடுகிறாள் தோழி. பெண்கொலை புரிந்த நன்னன் செயலைப் பலபட விரித்துரைக்கும் பரணர் இந்தப் பாட்டில் பெண்ணுண்ட மாங்கனிக்குப் பதிலாக எண்பத்தோரு களிறுகளையும் பொன்னால் செய்யப்பட்ட பாவையையும் கொடுத்தும் அமைதியடையாத அவனுடைய கொடூரப் பண்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
வம்பு பேசவா வள்ளைப் பாட்டு?
கற்பியல் ஒழுக்கத்தில் தலைவன் பரத்தையரிடம் சென்று வர, வாயில் மறுத்த தலைவி பரத்தையர் செவியுறும்படி அவர்களைத் தூற்றுகிறாள். தன் கணவனைப் பிரிந்த வேதனை அவளுக்கு. அதனால் பாடுகிறாள். அவள் பாட்டின் பொருள் அவர்களை உறுத்த, அவர்கள் அத்தனைப்பேரும் தமது வள்ளைப்பாட்டில் வைத்துத் தலைவியை ஏசுகிறார்கள். (வள்ளைப்பாட்டு – உரலில் இட்ட பொருளைத் தூய்மை செய்ய உலக்கையை ஏந்தி மகளிர் குற்றும் போது பாடுகிற பாட்டு) அவர்கள் ஏசுவதைக் கேட்ட தோழி “தலைவி ஏசப்படுவதற்குக் காரணமான தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள்.
“பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப!
அழிவது எவன் கொல்? இப்பேதை ஊர்க்கே
பெரும்பூண் பொறையன் பேஎம்முதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய
நல்லியற் பாவை அன்ன இம்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே!” (குறுந். 89)
இந்தப் பாட்டில் வரலாற்றுப் பதிவு என்பது அக்கால மன்னர்களின் ஆளுகைப்பரப்பையும் சமய நம்பிக்கைகளையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது. தலைவியை ‘மெல்லியற் குறுமகள்’ எனப் பண்பை முன்னிறுத்தி அடையாளப்படுத்திய தலைவிக்குக் கொல்லிப் பாவையை உவமமாகச் சொல்கிறாள் தோழி. ஆரவாரத்துடன் வள்ளைப்பாட்டில் தலைவியைப் பரத்தையர்கள் ஏசுவதை ‘நுவறல்’ என்றும், தன் தலைவனின் பெருமைகளை மட்டும் அமைதியாகப் பாடுவதைப் ‘பாடினள்’ என்றும் கூறும் நுண்ணியம் உணர்க. அவ்வாறு பாடும் தலைவிக்குச் சேரனின் ஆளுகைக்கு உட்பட்ட கொல்லிமலையின் மேற்குப் பக்கத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவையை உவமமாகக் கூறுகிறாள் தோழி!. “பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக் குடவயின்………தெய்வம் எழுதிய வினைமாண் பாவை அன்னோள்” (185) என்னும் நற்றிணையிலும் இவ்வாறே தலைவி உவமிக்கப்பட்டுள்ளாள் என்பதையும் அறியலாம்.
கீழ் கடல் நாரையும் மேல் கடல் மீனும்
தலைவியைக் கண்டுவிடலாம் என்னும் நம்பிக்கையோடு செல்கிற தலைவன் அல்ல குறிப்பட்டு மீள, ஏமாற்றமடைந்த தனது நெஞ்சிற்குத் தானே சொல்லிக் கொண்ட ஆறுதல் பாட்டு இது. இந்தப் பாட்டில் ‘கிட்டாதாயின வெட்டென மற’ என்னும் உலகியலுக்கு மாறுபட்டு அடைய முடியாத தொலைவில் இருக்கும் அரியளாகிய தலைவியை அடைய எண்ணுவது பேதைமையன்றோ எனத் தன் செயலுக்குத் தன் நெஞ்சையே இடமாக்கி உரைத்தான் என்பதாம். ‘அடைய முடியாத தொலைவு’க்கும் ‘அரியள்’ என்பதற்கும் பரணர் கூறுகிற உவமம் கீழ் கடல் நாரை மேல் கடல் மீனுக்கு அணவந்தது போல என்பதாம். அணவந்தது — இயலாத ஒன்றிற்கு ஏங்கி நிற்பது.
“குணகடல் திரையது பறைதபு நாரை
திண்தேர் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணந்தாங்குச்
சேயள் அரியோள் படர்தி!
நோயை நெஞ்சே நோய்பா லோயே!” (குறுந். 128)
இருதிசைக் கடலும் நாரையும் மீனும் பாட்டில் இடம்பெற்றாலும் அயிரை மீனாகிய இரை வாழ்கிற கடல் ”திண்தேர் பொறையன் தொண்டி முன்துறை” என இடம் சுட்டுவதில் அவருடைய வரலாற்றுப் புலமையை அறிந்து கொள்ள முடிகிறது. சேரனைப் பற்றிய இந்தக் குறிப்பு அவன் திண்தேர் உடையவன் என்பதும் ‘தொண்டி முன்துறை அவன் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது’ என்பதும் உணர்த்தி நின்றது.
அழிந்தது ஆர்க்காட்டு அழகு!
இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டதொரு கட்டுரையில் தலைவியின் அழகுக்கு நகரங்கள் ஒன்றாகவோ பலவாகத் தொகுத்தோ உவமிக்கப்படுவது ஆராயப்பட்டுள்ளது. அந்த வகையில் பரத்தையர் மாட்டுச் சென்று பழக்கமான தலைவன், தலைவி வழக்கம் போல் தன்னை ஏற்றுக் கொள்வாள் என்னும் நம்பிக்கையில் வர, அவனுக்கு வாயில் மறுத்த தோழி அவனை நோக்கிக் கூறுகிறாள் அலர் தூற்றுவது உலகியல் வைத்துச் செய்யப்படும் புலனெறி வழக்கு. ‘உன்னையும் என்னையும் வைத்து ஊரு சனம் கும்மியடிக்குது’ என்பார் வைரமுத்து. “உன்னை எண்ணி மூச்சிருக்குது! உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது!’ என்பார் வாலி. இது புலனெறி வழக்கு. பிறர்பழித் தூற்றுவது உலகியல்.! தூற்றுவதைக் கும்மியடிப்பது என்பது இலக்கணை.
“வாரல் எம்சேரி தாரல் நின் தாரே!
அலரா கின்றால் பெரும!“
‘எம் சேரிக்கு வராதே! நின் மாலை தராதே! ஊர்மக்கள் அவள் நிலைகண்டு தூற்றும் அலரே காரணம்’ என்பதுதான் தோழிக் கூற்று. எதனால் என்பதற்கான காரணத்தைக்,
“காவிரிப்
பலராடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை
அரியல் அம் புகவின் அந்தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளைஞர் பெருமகன்
அழிசி ஆர்க்காட்டு அன்ன இவள்
பழிதீர் மாணலம் தொலைதல் கண்டே!” (குறுந். 258)
என்னும் வரிகளில் பரணர் சுட்டுகிறார். சேந்தனின் தந்தையும் ஒள்வாள் இளைஞர் பெருமகனுமாகிய அழிசியின் ஆர்க்காடு போல் இருந்த அவளின் பழிதீர் அழகு இன்று பாழாய்ப் போனது பற்றிக் குறிப்பிடுகிறார்.
ஆர்ப்பினை வென்ற அலர்!
கற்புமணம் உள்ளாது களவொழுக்கத்தை நீட்டிக்கிறான் தலைவன். அலர் பெரிதாகியதால் அல்லலுறும் தலைவியின் நிலையை அவனுக்கு உணர்த்த வேண்டிய நிலை தோழிக்கு! அப்படி உணர்த்துகிற போது இரண்டு செய்திகளைப் பதிவு செய்கிறாள். ஒன்று. தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் முயங்கிய நாள் சில! ஊரார் அலர் தூற்றுகிற காலம் பல! இரண்டு, யாருக்கும் தெரியாமல் குறுகிய காலமே முயக்கம்! உலகமே அறிந்து கொள்ளும் அளவுக்கு அலர்!
“மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன்
முயங்கிய நாள் தவச் சிலவே! அலரே
கூகைக் கோழி வாகைப் பறந்தலைப்
பசும்பூண் பாண்டியன் வினைவல் அதிகன்
களிறொடு பட்ட ஞான்றை
ஒளிறுவாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே“ (குறுந். 393)
தலைவனுக்கும் தலைவிக்குமான உறவு பற்றிய பொதுவெளிப் பேச்சுக்கள் அலர் எனப்படும். சிலர் பேசினால் அம்பல்! பலர் பேசினால் அலர். தெரு முணுமுணுப்பு அம்பல்! ஊரின் பேரிரைச்சல் அலர்!. அம்பலின் பரப்பளவு குறைவு. அலரின் பரப்பளவு அதிகம். இந்தப் பரப்பளவை அவ்விருவரும் கூடிய கூட்டத்தின் கால அளவோடு பொருத்திப் பார்க்கிறாள் தோழி! இரண்டுக்குமான முரணை எண்ணி மருகி நிற்கிறாள். தீராப்பகை கொண்ட பாண்டியருக்கும் கொங்கருக்கும் இடையே நடைபெற்ற போர் ஒன்றில் வினைவலி அதிகன் களிறொடும் கொல்லப்படுகிறான். அவன் வீழ்ச்சி கண்டு கொங்கர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். அந்த ஆரவாரத்தைவிடக் களவொழுக்கம் பற்றிய அலர் மிக்குப் பரந்தது எனத் தோழி கூறுகிறாள். ஆர்ப்பினும் என்றால் ஆரவாரத்தினை விட என்பது பொருள். உவம உருபு செய்ய வேண்டிய பணியை இங்கே ஐந்தாம் வேற்றுமை உருபுகளில் ஒன்றான ‘இன்’ செய்கிறது. ‘ஆரவாரத்தைப்போல’ என்னும் ஒப்புப் பொருளினும் ‘ஆரவாரத்தினைவிட’ என்றும் கொள்ளலாம். இலக்கணம் கவிதைக்காக! பாட்டின் உயிர் ‘முயங்கிய நாள் தவச்சில! அலர் கொங்கர் ஆர்ப்பினும் பெரிது’ என்னும் ஒரு தொடரில் துடிப்பதைக் காணலாம்! களநிகழ்வு தும்பை என்னும் புறத்திணையின் பாற்பட்டது. களிறொடு பட்டான் என்பதால் அது ‘யானைமறம்’ என்னும் துறையினைச் சாரும். அப்புறத்துறை நிகழ்வை அகத்திணையின் துறையொன்றிற்கு உவமமாக்கினார் பரணர்.
மேற்சொன்ன பாட்டில் தலைவன் தலைவியோடு முயங்கிய நாள் சிலவாகவும் அவ்வாறு இருந்தது பற்றிய ஊரார் அலர் பெரிதாகவும் இருந்தமைக்குப் போர்க்களத்துக் கொங்கர் செய்த ஆர்ப்பினை உவமமாகச் சொன்ன பரணர் பின்வரும் பாட்டில் தலைவன் வருவதாகச் சொன்ன நாளின் எண்ணிக்கை சிறிதாகவும் அலரின் பரிமாணம் மிக்கிருப்பதாகவும் கூறுகிறார்.
“சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி
அலவன் சிறுமனை சிதையப் புணரி
குணில்வாய் முரசின் இயங்குந் துறைவன்
நல்கிய நாள் தவச்சிலவே! அலரே
வில் கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
புலிநோக்கு உறழ் நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே!“ (குறுந். 328)
என்ற பாட்டில் ‘துறைவன் நல்கிய நாள் தவச்சிலவே’ என்னும் அகத்திணைத் தொடரும் ‘அலரே கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே!’ என்னுந் தொடரும் நோக்கத்தக்கது. விச்சியர் பெருமகன் வேந்தரோடு பொருதமை கண்ட குறும்பர்கள் அவ்வேந்தர்க்கு அழிவு வந்தமையான் அகமகிழ்ந்து ஆரவாரம் செய்தனர் என்ற வரலாற்றுச் செய்தியை அதாவது புறத்திணை வாகைச் செய்தியை அகத்திணை அலருக்கு உவமமாக்கியிருக்கிறார் பரணர் என்பதாம்.
நிறைவுரை
தொல்காப்பியத்தின் உவம மரபு தனித்தன்மை மிக்கது. பொருள் புலப்பாட்டுக் கருவியாகவே உவமம் செயல்படும். செயல்பட வேண்டும். வினை, பயன், மெய், உரு என்னும் நான்கினுள் பரணர் கூறும் உவமம் எதனுள் அடங்கும் என்பது சிந்திக்க வேண்டிய பொருளாகியிருக்கிறது. ‘அலர்’ என்பதும் ‘ஆர்ப்பு’ என்பதும் தொழிற்பெயர்கள். அவ்விரண்டும் தாமாகச் செயல்படாது. பரணர் அவற்றைத் தான் பொருளாகவும் உவமமாகவும் கூறியிருப்பதோடு போர்க்கள ஆரவாரத்தையே உவமமாக்கியிருக்கிறார். மேலும் அகத்திணை மரபுப்படி முதற்பொருளை ஒட்டியே (உள்ளுறை, இறைச்சி என்னும் நுண்ணியங்களுக்காக) உவமம் அமைதல் வேண்டும் என்பதே விதியாயிருக்க இதற்கு மாறுபட்டுப் புறத்திணைச் செய்திகளை உவமமாக்குவதும் சிந்தித்தற்குரியது. இவை பற்றியெல்லாம் எதிர்வரும் கட்டுரைகளிலும் ஆராயப்படும்!.
(தொடரும்…)