சேக்கிழார் பாடல் நயம் – 155 (நாளும்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு
திருத்தொண்டர் புராணத்தில் இனி அடுத்த சருக்கம் மும்மையால் உலகாண்ட சருக்கம் ஆகும் . முதலில் மூர்த்தி நாயனார் வரலாறு பேசப்பெறுகிறது. சிறப்பும் செல்வமும் மிக்க மக்கள் மாடமாளிகைகளில் அன்புமிக்க சிந்தையராய் வாழும் பழம்புகழ் கொண்டது பாண்டிநாடு.இங்கே அழகிய இளம்பெண்களின் வாய்களில் பற்களாகிய முத்தும், கடலில் நன்முத்தும் நிறைந்திருக்கும்.
இந்நாட்டில் இனிய பொதிகைத் தென்றல் சந்தன மணம் கமழும்; உலகளந்த சிறப்புடைய தமிழ் மணமும் கமழும். மகளிர் நாவில் இன்னிசையும் அவர்கள் கூந்தலில் வண்டுகளும் வாழும் நகரம் மதுராபுரி ஆகும். அங்கே முத்தமிழ் நூல்கள் பயிலும் சங்கமும், எருமைகளின் பால் பாயும் தாமரையிடையே மீன்கள் பாய, அங்கே வயலில் சங்குகள் ஏறும்; அங்கே மாடங்களில் ஆடும் மகளிரின் மார்பில் முத்துப்போன்ற வியர்வையும், முத்து மாலைகளும் தங்கும்.
அங்கே நமக்கு மெய்ப்பொருள் தரும் ஈசன், திருவாலவாயில் தமிழ்ச் சங்கத் தலைவராய் விளங்கி நூற்பொருளும் தருவதால் அந்நகரம் மூவுலகங்களினும் சிறந்தது அல்லவா? அந்த நகரில் வாழ்ந்த வணிகக் குலத்தினர் செய்த தவத்தின் பயனாகத் தோன்றி, எல்லாப் பற்றுக்களையும் நீக்கி, ஏறூர்ந்த பெருமானின் பதத்தையே பற்றி ஒருவர் வாழ்ந்தார். அவரே இறைவன் பால் கொண்ட பற்றைத் தவிர மற்றைய பற்றுக்களை நீக்கிய திருவுருவம் பெற்ற மூர்த்தியார் ஆவார். இதனைச் சேக்கிழார்,
நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே,
கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;
மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.
என்று பாடினார்
இதன் பொருள்
நாடோறும் பெரிய காதல் கூர்ந்து பொருந்த வரும் ஆசைபெருகி வேட்கையாகி விளைந்ததனாலே சுற்றமும் துணையும் முதலாகிய கெடுதலில்லாத பதங்கள் எல்லாம் ஆளும் பெருமானாகிய சிவனது திருவடித் தாமரைகளேயல்லாது வேறில்லாதவர்; மூண்டு பெருகும் அன்பு என்றதனையே தமது உருவமாகக்கொண்டவர்; அவர்தாம் மூர்த்தியார் என்ற பெயர் பூண்டவர்.
விளக்கம்
பெருங்காதல் நயப்பு உறும் வேட்கை என்ற தொடருக்கு, விடாத விருப்பின் மிகுதி பெருங்காதலாக உருப்பட்டது; அது முறுகவே, நயப்பு என்னும் ஆசையாகியது; அது மேலிட வேட்கையாக விளைந்தது எனலாம். மனத்துள் அன்பு பெருகிப்படிப்படியாக வளர்ந்து கூர்தரும் வகையினைக் கூறியதாகக் கொள்ளலாம்
கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம்
ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்;.
என்ற அடிகளில் – கேள் – உயிர்ச்சார்பு. துணை – உயிர்ச்சார்பும் பொருட்சார்பும். கேடில் பதங்கள் – பதமுத்திப்போகங்கள். ஏனையவற்றை நோக்க இவை காலத்தால் நீடித்தனவாதலின் கேடில் என்று உபசரித்தார். இப்பொருளைச் சிங்கமுகாசுரன் எடுத்துச் சூரபதுமனுக்கு இனிது விளக்குகின்ற திறம் கந்தபுராணத்தினுட் கூறப்பட்டது காண்க.
“அழிவில் மெய்வரம் பெற்றன மென்றனை யதற்கு,
மொழி தரும்பொருள் கேண்மதி முச்சகந் தன்னுட்,
கெழிய மன்னுயிர் போற்சில வைகலிற்கெடாது,
கழிபெ ரும்பக லிருந்திடும் பான்மையேகண்டாய்.
இறைவன் றாளிற் பெறும் அபரமுத்திப் பெரும் போகமொன்றே என்றும் அழியாததாகும் என்பது உண்மை நூல்களின் துணிபு. கேளும் துணையும் என்றவற்றால் ஆன்மாக்கள் இம்மையில் தமக்குப் பற்றுக் கோடாக எண்ணிக்கொள்வனவும், கேடில் பதங்கள் என்றதனால் மறுமையிற் பற்றுக் கோடாகக் கொள்வனவும் குறிக்கப்பட்டன. இம்மைத்துணை முதல் மறுமைப்பயன் வரையுள்ள எல்லாம் என்பது. இதனைச் சித்தியார்,
“நெறியது வகையு மேலொடு கீழடங்க வெறும்பொயென நினைந்திருக்க”
என்று கூறும்.
ஆளும் பெருமான் – “அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே” என்று ஆளுடையபிள்ளையார் அருளியபடி உயிர்களுக்குப் பந்தமும் வீடும் தந்து ஆட்கொள்ளும் சிவபெருமான் என்பதாம்.
“இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்;
அம்மை யேற்பிற வித்துயிர் நீத்திடும்;
எம்மையாளு மிடைமரு தன்கழல்,
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே”
என்ற அப்பர்சுவாமிகள் தேவாரமுஞ் சிந்திக்க. மூளும் பெருகு அன்பு என்னும் மூர்த்தியார் என்ற தொடர், அன்பு மூண்டு பெருகிய அதுவே உருவாகி நின்ற என்பதைக்க காட்டுகிறது.
மூர்த்தி – உடல் – திருமேனி (வடிவம் என்பர்). மூர்த்திக்குள் இருந்து அதனை இயக்குபவர் மூர்த்திமான். ஆசனம் – மூர்த்தி- மூர்த்திமான் என்ற ஆகம பூசை முறையும் காண்க. மூர்த்தம் என்பதும் இது. மூர்த்தியார் மூர்த்தியை உடையவர். மூர்த்தியார் தாம் மூர்த்தியார் – என்க. மூர்த்தியார் பின்வந்தது பெயர். இவ்வாறு அடுக்கி மொழிந்து சிறப்பிப்பது ஆசிரியரது மரபு.