சேக்கிழார் பாடல் நயம் 161 (நீடும்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
வரலாறு
அத்தகைய அந்தணர், அரிய மறையாகிய உருத்திரத்தை நேயம் மிக்க நெஞ்சுடன் ஓதினார். பறவைகள் ஒலிக்க, மீன்கள் பிறழும் பொய்கையில் இறங்கிக் கழுத்தளவு நீரில் இறைவன் மேல் பற்றுடன் கைகூப்பி நின்று ஓதினார். சிலநாள்கள் தொடர்ந்து இவர் ஒதுவதைக் கண்ட இறைவன் சிவபுரி என்னும் திருத்தலையூர் அருகே சென்றார். அந்நிலையில் நிகழ்ந்ததைச் சேக்கிழார் பாடுகிறார்.
பாடல்
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால்
ஆடு சேவடி அருகு உற அணைந்தனர் அவர்க்குப்
பாடு பெற்ற சீர் உருத்திர பசுபதியார் ஆம்
கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.
பொருள்
நெடிது வளரும் அன்புடனே திருவுருத்திரத்தை ஓதிய நிலைமையினாலே இறைவரது ஆடுகின்ற திருவடியின் அருகு பொருந்த அணைந்தனர். (ஆதலின்) அவருக்குப் பெருமைபெற்ற சிறந்த உருத்திரபசுபதியார் என்று கூடும் பெயரும் உலகம்போற்ற நிகழ்ந்தது.
விளக்கம்
இந்நாயனாருக்கு உருத்திரபசுபதியார் என்ற பெயர் வழங்குதலின் காரணத்தை அறிவிப்பது இத்திருப்பாட்டு. முதனூலாகிய திருத்தொண்டத் தொகையினுள் உருத்திர பசுபதிக்கும், அடியேன்;என்று இப்பெயரால் இவர் போற்றப்பட்டமையால் இதன் காரணத்தை விரிநூல் விரித்துக் கூறவேண்டிய நியதிபற்றி இவ்வாறு எடுத்துக்காட்டியபடியாம். இதனை மேலும் விரித்து
அந்தாழ் புனல்தன்னில் அல்லும் பகலும்நின் றாதரத்தால்
உந்தாத அன்பொ டுருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த
பைந்தார் உருத்(தி)ர பசுபதி தன்னற் பதிவயற்கே
நந்தார் திருத்தலை யூர்என் றுரைப்பர்இந் நானிலத்தே.
என்று திருத்தொண்டர் திருவந்தாதி கூறுகின்றது. நீடும் அன்பு- “தூய அன்பு” , நீடுதல் – பெருகுதல்.
“ஈறே முதல் அதனின் ஈறலா வொன்றுபல,
வாறே தொழும்பு ஆகும் அங்கு”
என்ற சிவஞானபோதத்தின் படி, முத்திநிலையிலும் உயிர் இறைவனுக்கு அடிமையாய் நிற்கு மாதலின், சிவபுரி எல்லையிற் சேர்ந்த பசுபதியார், அங்கும், நீடிய அன்பினால் அடிமைத்திறம் புரிந்து இறைவனது சேவடியின் அருகுற அணைந்திருந்தனர் என்றலுமாம்..
ஆடுசேவடி – தூக்கிய திருவடி. அதுவே உயிர்களை மலச்சேற்றினின்றும் எடுத்து அருள்தருவதாதலின் அவ்வருளினைப்பெற்ற பசுபதியார் அதன் அருகு அணைந்தனர். அருகுற அணைதல் – அருகுற அணைதல் அரிதின் முயன்றடையும் பெரும் பேறென்பதனை,
“தேடியிமை யோர் பரவுந்தில்லைச்சிற் றம்பலவர்,
ஆடிவரும் போதருகே நிற்கவுமே யாட்டாரே”
என்று அகப்பொருளில் வைத்துப் புருடோத்தம நம்பிகள் திருவிசைப்பா வினுள் அருளியதுகாண்க.
அவர்க்குக் கூடும் நாமமும் நிகழ்ந்தது – கூடுநாமம் – உருத்திரம் என்னும் சொல். தமது பசுபதியார் என்னும் பெயரின் முன்னே கூடப்பெற்ற நாமம். பெருமை கூடிய என்ற குறிப்பும் காண்க. உருத்திரபசுபதியார் ஆம் என்றதும் இதனை விளக்கிற்று. ஆம் – ஆகின்ற. முன் பசுபதியார் என்றது இப்போது உருத்திரபசுபதியார் என ஆகின்ற என்க.
பாடு பெற்றசீர் – பாடு -பெருமை. பாடு – தவம், உடல் வருத்தல். என்று கொண்டுபசுபதியார் செய்த கடுந்தவத்தின் பயனாகப்பெற்ற என்றலும் ஆம்.
குவலயம்போற்ற நிகழ்ந்தது – உலகத்துள்ளார் அத்திருப்பெயரைப் போற்றும்படி வழங்கியது. போற்றுதல் – திருத்தொண்டத்தொகையாலும், அது கொண்டு உலகராலும் துதிக்கப்படுதல்.
தாம் பாடிய உருத்திரமந்திரத்தால் அடியார் திருப்பெயருக்கு முன் அம்மந்திரம் சேர்ந்தது என்பதை இப்பாடல் குறிக்கிறது! இவ்வாறு சேர்வது அடியாரின் இடையவிடாத தவத்தினால் விளைந்தது என்பது புலனாகின்றது. திருநாளைப்போவார் என்ற பெயர் நந்தனாருக்கு அமைந்ததும் இவ்வாறே எனலாம்.