திருப்பூவணப் புராணம் – பகுதி – (5)

0

கி.காளைராசன்

1. திருப்பூவணம் – அறிமுகம்

 

தமிழகத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னர் சமணமும் புத்தமும் தலையெடுத்து வளர்ந்தோங்கி இருந்தன.  மதுரை ஆண்ட பாண்டிய மன்னனை மீண்டும் சைவத்திற்கு மாற்றும் பொருட்டு, மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தரை அழைத்து வரச் செய்தார்.  திருஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் முன்னர் மதுரையின் கிழக்கு எல்லையான திருப்பூவணத்திற்கு வருகிறார்.  வைகை ஆற்றின் தென் கரையில் திருக்கோயில் உள்ளது.  வடகரையில் அம்பாள் ஆடிமாதம் தவம் செய்த இடம் உள்ளது. இந்த இடத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் அங்கிருந்து  வடகரையில் உள்ள திருப்பூவணநாதரை வணங்கி வழிபடுகிறார்.  அப்போது வைகை ஆற்றின் மணல்களெல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி யளித்துள்ளன.  எனவே ஆற்றுமணல்களை மிதிக்க அஞ்சிய திருஞானசம்பதர் அங்கிருந்தபடியே பதிகம் பாடி இறைவனை வழிபடுகிறார்.  பாடல் கேட்ட சிவபெருமான், நந்தியைச் சற்றே சாய்ந் திருக்கச் சொல்லி ஆற்றின் மறுகரையில் நின்றுபாடும் திருஞானசம்பந்தருக்குக் காட்சியருளியுள்ளார்.  இதனால் திருப்பூவணத்தில் இன்றும் நந்தி மறைக்காது.  ஆற்றின் வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் இருந்தபடியே தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை வழி படலாம்.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாண்டிய நாட்டில் இறைவனைப் பாடிப் பணிந்த இடங்கள் பலவாகும்.   அவற்றுள் அவர்களின் பாடல்கள் கிடைக்கப் பெற்ற திருத் தலங்கள் பதினான்கு ஆகும்.  இந்தப் பதினான்கு திருத்தலங்களையும்  பாண்டிப் பதினான்கு என்று சிறப்பித்துக் கூறுகின்றனர்.

அவை, 1)மதுரை, 2)திருப்பரங்குன்றம், 3)திருவிராமேச்சுரம், 4)திருவாடானை, 5)திருப்புத்தூர், 6)திரு ஏடகம், 7) திருநெல்வேலி, 8)குற்றாலம், 9) ஆப்பனூர்  (மதுரையில் வைகையின் வடகரையில் உள்ள ஊர்) 10)திருச்சுழியல், 11)திருப்புனவாயில், 12)கொடுங்குன்றம் (பிரான்மலை), 13)காளையார் கோயில், 14) திருப்பூவணம் என்பன.

இப்பதினான்கு பதிகளில் மிகவும் பழமையானது பாண்டியநாட்டின் தலைநகராக விளங்கும் மதுரை ஆகும்.  ஆனால் மதுரை மாநகரம் இந்திரனுடனான போரினாலும், கண்ணகி இட்ட தீயினாலும், வையை ஆற்றுப் பெருக்கினாலும் அழிந்தழிந்து  மீண்டும் மீண்டும் உயிர் பெற்றது.  ஆனால், திருப்பூவணத் திருத்தலம் தொன்மைக்காலம் முதல் அழிவிற்கு உட்படாமல் அப்படியே பழமையுடன் உள்ளது.

பார்வதிதேவியார் தான் அறிந்து செய்த பாவம் போக்க இத்திருத்தலம் வந்து பாரிசாத மரம் வளர்த்து அதன் அடியிலிருந்து தவம் செய்தார்.  அப்போது சிவபெருமான் அம்மரத்தின் அடியில் சிவலிங்கமாய் முளைத்து, உமையம்மையின் பாவத்தை நீக்கியருளினார்.

 

1)         இச்சிவலிங்கத்தைச் சூரியன் வழிபட்டு, நவக்கிரகங்களுக்கும் தலைவனாக இருக்கும் வரம் பெற்றுள்ளான்.

2)         பிரம்ம தேவன்  அறிந்து செய்த பாவத்தை நீக்கிய திருத்தலம்

3)         மகாவிஷ்ணு, சலந்திரனைக் கொல்ல சக்கராயுதம் பெற்ற திருத்தலம்

4)         காளிதேவி, சிவலிங்கம் வைத்து பூசித்த திருத்தலம்

5)         திரணாசனன் என்பவன் வீடு பேறு அடைந்துள்ளான்.   துன்மஞ்ஞன் என்ற மாபாவி நற்கதி அடைந்துள்ளான்.

6)         தருமஞ்ஞன் என்ற அந்தணன் கொண்டு வந்த அஸ்திக் கலசத்தில் இருந்த எலும்புகள் பூவாய் மாறிய திருத்தலம்.

7)         உற்பலாங்கி என்ற பெண், நல்ல கணவனை அடையப்பெற்று தீர்க்க சுமங்கலியாய் வாழும் வரம் பெற்றுள்ளாள்.

8)         அறிந்து செய்த பாவங்களை அகற்றும் திருத்தலம்

9)         திருமகளின் (இலக்குமி தேவியின்) சாபம் தீர்ந்த இடம்

10)       பார்வதி தேவியார் இறைவன் திருவருள் வேண்டித் தவம் செய்த திருத்தலம்

11)       சுச்சோதி என்ற அரசனுடைய பிதுர்கள் (இறந்துவிட்ட முன்னோர்கள்) நேரில் வந்து பிண்டம் (இறந்தவர்களுக்குப் படைக்கப்படுவது) பெற்றுக்கொண்டு, அவனை ஆசிர்வதித்த திருத்தலம்

12)       தீர்த்தங்கள் பல உள்ள திருத்தலம்

13)       சலந்திரன் என்ற தவளைக்குச் சக்கரவர்த்தியாய்  இருக்கும் வரம் அருளப்பட்ட திருத்தலம்

14)       நள மகாராசாவிடமிருந்த கலிகாலத்தின் கொடுமையை அகற்றி அவனுக்கு மனச்சாந்தி அளித்த திருத்தலம்

15)       மாத்தியந்தின முனிவருக்கும் தியானகாட்ட முனிவருக்கும் சிவபெருமான் சிதம்பர நல் உபதேசம் வழங்கிய இடம்

16)       தாழம்பூ பொய்சொன்ன பாவம் நீங்க வேண்டி,  சிவபெருமானை வணங்கி வழிபட்ட திருத்தலம்

17)       மூவேந்தர்களும் (சேர, சோழ, பாண்டிய மன்னர்கள்) ஒன்றாக வந்து வழிபட்டுத் திறை செலுத்திய திருத்தலம்

18)       திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர் ஆகியோர் வணங்கி வழிபட்டுத் தேவாரம் பாடிய திருத்தலம்

19)       மாணிக்கவாசகர் பாடிய திருத்தலம்

20)       கருவூர்த் தேவர் திருவிசைப்பா பாடல் பெற்ற திருத்தலம்

21)       அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல் பெற்ற திருத்தலம்

22)       மதுரை சிவபெருமான் சித்தர் வடிவில் வந்து இரசவாதம் செய்து திருவிளையாடல் நடத்திய திருத்தலம்.

23)       பொன்னனையாளுக்கு அருள் வழங்கிய திருத்தலம்.

24)       கோரக்க சித்தர் மற்றும் கத்தரிக்காய் சித்தர்  முதலான சித்தர்கள் வாழும் சிவபூமி

 

இவ்வாறு மிகவும் தொன்மைமிக்கதாகவும், அதிகச் சிறப்புக​ளை உடையதாகத் திருப்பூவணத் திருத்தலம் விளங்குகிறது.  இங்கு சுயம்பாகத் தோன்றிய சிவலிங்கத்தின் அருமை பெருமைகளும், சௌந்தர நாயகித் தாயாரின் அன்பும், அருளும் எடுத்துக் கூறப் பெற்றுள்ளன.

 

தலத்தின் பெயர்

முன்பு அனைத்து இலக்கியங்களிலும் திருப்பூவணம் என்று வழங்கப்பட்ட இத்திருத்தலம், தற்போது திருப்புவனம் என்று  அழைக்கப்படுகிறது.

 

தலஇருப்பிடம்

வைகையாற்றின் தென்கரையில்  மதுரை-இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 18  கி.மீ. தூரத்தில் உள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை வட்டத்தில்  பேரூராட்சியாக உள்ளது.   மதுரை மாட்டுத்தாவணிப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் அரைமணி நேரத்தில் திருப்பூவணத்​தை (திருப்புவனத்தை) அடையலாம். மானாமதுரை, பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம், இராமேசுவரம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் திருப்புவனம் வழியாகச் செல்கின்றன. திருப்புவனத்தில் “கோட்டை” பேருந்து  நிறுத்தத்திற்கு மிக அருகில் (சுமார் 200மீ) திருக்கோயில் உள்ளது.        திருப்புவனத்தின் வடக்கே வைகையாறு ஓடுகிறது.  ஆற்றின் வடகரையில் உள்ள மடப்புரம்-காளிஅம்மன் கோயில் தற்போது மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிவருகிறது.  மடப்புரம் காளிகோயில் நிறுத்தத்திற்கு முன்னால் உள்ள ஆடித்தபசுமண்டபத்தில் இறங்கி ஆற்றின் வடகரையில் இருந்தபடியே தென்கரையில்  கோயில் கொண்டிருக்கும் பூவணத்து ஈசனை வழிபடலாம்.   இந்த இடத்திலிருந்துதான் திருஞானசம்பந்தரும் மற்றைய அருளாளர்களும் திருப்பூவணநாதரை வணங்கிப் பதிகம் பாடியுள்ளனர்.   இதனால் இந்த இடம் சிறப்புப் பெற்றது.

 

இருப்புப் பாதை வழி

மதுரையிலிருந்து இராமேசுவரம் செல்லும் இருப்புப் பாதை திருப்பூவணம் (திருப்புவனம்) வழியாகச் செல்கிறது.  இருப்புப் பாதை நிலையத்திலிருந்து திருக்கோயில் சுமார் அரை கி.மீ.  தூரத்தில்  உள்ளது.

 

புவியியல் அமைப்பு

புவியியல் அமைப்பினை அடிப்படையாகக் கொண்ட வாஸ்து இலக்கணப்படி, பாண்டிய நாட்டின் வாஸ்து முகமண்டலமாக விளங்குகிறது திருப்பூவணத் திருத்தலம்.    பூமத்திய ரேகையிலிருந்து 9.49 பாகை வடஅட்சரேகையிலும், 78.15  பாகை கிழக்குத் தீர்க்கரேகையிலும் (9°49N ….78°15E) அமைந்துள்ளது.

 

தீர்த்தங்கள்

பாவநாச தீர்த்தம் என்று அழைக்கப்படும் வைகை ஆறு, மணிகன்னிகை அல்லது தேவிகுண்டம், பிரம்மதீர்த்தம், இலக்குமி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், நளதீர்த்தம், வசிட்ட தீர்த்தம், சந்திர தீர்த்தம் முதலான தீர்த்தங்கள் உள்ளன.

 

விருட்சங்கள்

முதலாம் யுகத்திலே பாரிசாதமரமும், இரண்டாம் யுகத்திலே வில்வமரமும், மூன்றாம் யுகத்திலே வன்னிமரமும், நான்காம் யுகமாகிய இக் கலியுகத்திலே பலாமரமும் தலவிருட்சங்களாகும்.

 

இறைவனின் திருப்பெயர்கள்

சுயம்பு லிங்கத்திற்குப் பூவணன், பூவணநாதர், புட்பவன நாதர், புஸ்பவனேசுவரர், பாஸ்கரபுரி ஈசர், பிதுர் மோட்சபுரீசர், பிரம்மபுரீசர், இரகசிய சிதம்பரேசர், திருப்பூவணேசர், அடைவார் வினை தீர்ப்பவர் ஆகிய பெயர்கள் உள்ளன.   உற்சமூர்த்திக்குச் சௌந்தரநாயகர், அழகிய நாயகர், பொன்னனையான் என்ற பெயர்கள் உள்ளன.

 

இறைவியின் திருப் பெயர்கள்

சௌந்தரநாயகி, தடிதம்பை, சுவர்ணவல்லி, அன்னபூரணி, அழகியநாயகி, அழகியமின், மின்னனையாள், மின்னம்மை, மின்னாள் என்பன.

 

சிறப்புகள்

1)திருப்பூவணநாதர்(சிவலிங்கம்) பாரிசாதப்பூவால் ஆனது. (The Siva Lingam is a fossil of Perijatha Flower). 2)மதுரை கோயில் அமைப்பைப் போன்றே சிவலிங்கத்திற்கு வலப்புறம் அம்பாள் கோயிலும் (தற்போதைய முருகன் கோயில்) அதன் எதிரே தீர்த்தமும் உள்ளன. 3)மதுரையின் கிழக்கு வாயிலாகத் திருப்பூவணம் உள்ளது. இதனால் திருப்பூவணநாதரை வணங்கிய பின்பு, மதுரை மீனாட்சி சமேத சோமசுந்ரேசுவரரை வணங்குவது மிகுந்த சிறப்புடையது. 4)திருஞானசம்பந்தர் திருப்பூவண நாதரை வணங்கி அருள் பெற்ற பின்னரே மதுரை சென்று சமணர்களை வென்றார். 5)அம்பாள் ஆடிமாதம் தவம்செய்த இடத்திலே ஆடித்தபசு மண்டபம் கட்டப்பெற்றுள்ளது. 6)இந்த இடத்திலிருந்துதான் திருஞான சம்பந்தர், ஆற்றின் வடகரையில் உள்ள திருப்பூவணநாதரை வணங்கிப் பதிகம் பாடியுள்ளார்.  7)அப்போது ஆற்றின் மணல்கள் எல்லாம் சிவலிங் கங்களாகக் காட்சியளித்துள்ளன.  நந்தியைச் சாய்ந்திருக்கச் சொல்லி சிவபெருமான் காட்சியளித்துள்ளார். 8)திருப்பூவணம் திருக்கோயிலானது, சிதம்பரத்தைப் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது.  நந்தி மறைக்காத காரணத்தால் திருப்பூவணநாதர் சந்நிதியிலிருந்து வணங்கினால் சிதம்பரத்தை திசைநோக்கி வணங்கியதாகும். 9)இடமிருந்து வலமாக  பெருமாள், முருகன், அம்மன், விநாயகர், திருப்பூவணநாதர் ஆகிய ஐந்து சந்நிதிகளும் ஒரே வீதியில் முன்பு இருந்திருக்கின்றன.  இதுபோன்ற அமைப்பு திருப்பரங்குன்றம் கருவரையில் உள்ள அமைப்புடன் ஒத்துள்ளது. 10) திருப்பூவணத்தில் முதலில் சிவலிங்கத்தை வணங்கி வழிபட்ட பின்னரே அம்மையை வணங்க வேண்டும்.

 


2. திருப்பூவணப் புராணம்

அறிமுகம்

 

அனைத்துத் திருத்தலங்களும் மூர்த்தி, தலம், தீர்த்தம் மற்றும் விருட்சம் ஆகியவற்றால் சிறப்பாகப் பேசப்படுகின்றன.   ஆனால், மிகவும் தொன்மையான பல திருத்தலங்கள், தலபுராணத்தாலும் இலக்கியத்தாலும் சிறப்புப் பெற்று விளங்குகின்றன.  இந்த அனைத்துச் சிறப்புகளையும்  ஒருங்கே பெற்ற திருத்தலமாகத் திருப்பூவணம் திகழ்கிறது.   இத்தலத்திற்கென்று வடமொழியில் புராணம் ஒன்று உள்ளது.  அதனைத் தமிழ் மொழியில் மொழிபெயர்த்துக் கந்தசாமிப் புலவர் பாடியுள்ளார் .

கடம்பவனபுராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றிலும் திருப்பூவணத் திருத்தலத்தின் பெருமைகள் விரிவாகப் பாடப் பெற்றுள்ளன.  மூவர் தேவாரம், திருவாசகம்,  தேவர் திருவிசைப்பா மற்றும் திருப்புகழ் ஆகியவற்றில்  திருப்பூவணம் சிறப்பித்துக் கூறப் பெற்றுள்ளது.

திருப்பூவணப் புராணம் இயற்றிய கந்தசாமிப்புலவர்  திருப்பூவணநாதர் உலா, திருப்பூவணநாதர் மூர்த்தி வகுப்பு, தலவகுப்பு  என்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

 

திருப்பூவணப் புராணம் (வடமொழி)

துறவியரும், ரிஷிகளும்  பிரமனை அணுகி,  தவம் மற்றும் வேள்வி  செய்வதற்கேற்ற புனித இடத்தைக் காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். அதற்கேற்பப் பிரமனும் ஒரு சக்கரத்தை உருண்டோடச் செய்து அது நின்று விழும் இடமே தவத்திற்கு ஏற்ற புண்ணிய பூமியாகும் என்றார்.     அவ்விடம் “நைமிசாரண்யம்” என்று அழைக்கப்படுகிறது.  இங்குதான்  வியாச முனிவர் புராணங்களையும் மகாபாரதத்தையும் இயற்றினார்.   வியாசமுனிவர் சூதமுனிவருக்குக் கூறிய புராணங்கள் பதினெட்டு ஆகும்.  இப்புராணங்களில்  பிரம்மகைவர்த்த புராணம் என்பதும் ஒன்று.   இப் புராணத்தின்  எழுபதாம் அத்தியாயம் முதல் எண்பத்துநான்காம்  அத்தியாயம் வரை திருப்பூவணத்தலபுராணம் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

 

திருப்பூவணப் புராணம் (வடமொழியில்) தோன்றிய வரலாறு

நைமிச வனத்திலே, மிகுந்த தவமுடைய சௌநகர் முதலான முனிவர்கள் பலர் சிவபிரான் திருவடியை அடைவதற்குக் கூறப்பட்ட வரலாற்றுக் கதைகளை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.  அப்பொழுது அங்கே சூதமுனிவர் என்பவர் வந்தார். மற்றைய முனிவர்கள், அவரை வணங்கி வரவேற்று அமரச்செய்தனர்.   பின்பு,  அவரிடம் நீங்கள் முன்பு ஒருமுறை சுவேதவன (திருவெண்காடு) சேத்திரமான்மியத்தைக் கூறும்போது இடையிலே புட்பவன (திருப்பூவண) மான்மியத்தை சுருக்கிச் சொன்னீர்கள். இப்பொழுது அதனை விரிவாக விளக்க வேண்டு மென்று முனிவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

முனிவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் திருப்பூவணப் புராணத்தைச் சூதமுனிவர் சொல்லியருளினான்.   இப் புராணத்தை யார் முதன்முதலில்  யாரிடம் கூறினார்கள் என்ற விவரத்தை,

“நந்திமுகன்றம்பியருணந்திதனக்குரைப்பநந்திசநற்குமாரன்

வெந்துயரமறவெடுத்துவிரித்துரைப்பனவன்வேதவியாதற்கோதப்

புந்தியுணர்ந்தவன்சூதமுநிக்குரைத்தபுட்பவனபுராணந்தன்னை… ” என்ற பாடலில் கந்தசாமிப் புலவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

திருப்பூவணப் புராணம் (தமிழ்மொழியில்) தோன்றிய வரலாறு

“திருப்பூவணப் புராணம் வடமொழியில் உள்ளது.  அதனை  அனைவரும்  அறிந்துகொள்ளத் தமிழில் பாடுக”   – என்று அனைவரும் கேட்டுக் கொண்ட காரணத்தினால். தமிழில் மொழிபெயர்த்துப் பாடுவதாகக் கந்தசாமிப்புலவர் தனது அவையடக்கப் பாடலில்  குறிப்பிட்டுள்ளார்.

புத்தகவடிவில் புராணம் – ஏட்டுச்சுவடியில் இருந்த புராணத்தை புத்தகமாக அச்சிட்டு வெளியிட வேண்டுமென, மதுரை திருஞானசம்பந்த தேசிக சுவாமிகள் ஆதீனத்து அம்பலவாண சுவாமிகள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.  அதன்படி,  தேவகோட்டை

உ-மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள்,

உ-ராம. சுப்பிரமணியச் செட்டியார் அவர்கள்,

உ-வீர. சொக்கலிங்கச் செட்டியார் அவர்கள்,

இம்மூவர்கள் பொருளுதவி பெற்று, மதுராபுரியில் வாசித்த இ.இராமசுவாமிப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட ஞானசம்பந்தப்  பிள்ளையால் அகப்பட்ட பிரதி கொண்டு,  சென்னை இந்து தியலாஜிகல் அச்சுக்கூடத்தில் மன்மதவருடம் (1896ம் ஆண்டு) மாசிமாதம் விலை ரூபாய்.கவ (ரூ.1¼)க்கு அச்சிடப்பெற்றுள்ளது.

இப்புத்தகத்தின் முகவுரையில் “….   ….  இப்பாடலடங்கிய ஏட்டுப்பிரதி ஒன்றே கிடைத்தமையால், அதுகொண்டு ஒருவாறு பார்வையிட்டு அச்சிடப்பட்டது.”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   இதைப்போன்றே, 1993ம் ஆண்டின் இறுதியில், இந்நூலாசிரியர் (கி.காளைராசன்) தனது M.Phil.  ஆய்வினை மேற்கொண்டார்.   ஆய்விற்குத் திருப்பூவணப் புராணப் புத்தகம் தேவைப்பட்டது.   ஆனால் திருப்பூவணத்தில் யாரிடமும் இப்புத்தகம் கிடைக்கவில்லை.  பல நூலகங்களில் கேட்டும் கிடைக்கப் பெறவில்லை.  இறுதியாகக் காரைக்குடியில் உள்ள இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய தமிழாகரர்-தெ.முருகசாமி அவர்கள்  திருப்பூவணப் புராணப் புத்தகத்தைக் கொடுத்து உதவினார்கள்.  புத்தகம் அச்சிடப்பெற்று நூறு ஆண்டுகளுக்கும் மேலானதால், காகிதங்கள் மிகவும் பழையதாய் இருந்தன.  தொட்டால் ஒடிந்துவிடும் நிலையிலிருந்த,    அப்புத்தகத்தை நுணுக்கிப் படித்தே இந்நூலாசிரியர் திருப்பூவணப் புராணப் பாடல்களை கணிணியில் அச்சேற்றியுள்ளார்.

 

தமிழில் புராணம் எழுதிய ஆசிரியர் வரலாறு

கந்தசாமிப்புலவரின் ஊர் திருப்பூவணமாகும்.  இவரைப் பற்றிய வரலாறு ஏதும் தெரியவில்லை.   இவர் திருவாப்பனூர் புராணமும், திருப்பூவணநாதர் உலாவும் இயற்றியுள்ளார். இவர் காலத்திலேயே இந்நூல்களுக்கு நன் மதிப்பிருந்துள்ளதற்கு ஆப்பனூர் புராணப் பாயிரச் செய்யுளும், திருப்பூவணநாதர் உலாவின் சிறப்புப் பாயிரச் செய்யுளும்  சான்று தருகின்றன.

இவர்  திருப்பூவணப் புராணத்தில் பாயிரம் பாடும்போது,  சகாத்த வருடம் 1543ல்  தமிழில் மொழிபெயர்த்துப் புட்பவனபுராணத்தை இயற்றியதாகக் குறிப்பிடுகிறார்.     இதனை ஆங்கில வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சகாப்த வருடம் 1543+78=1620-1621ஆம் ஆண்டைக் குறிப்பிடுகிறது. இப்புத்தகம் 2008ம் ஆண்டு எழுதப்பெற்றது.  இதனால் கந்தசாமிப்  புலவர்,   இன்றைக்குச் சரியாக (2008  –  1620=388) 388 ஆண்டுகளுக்கு முன் திருப்பூவணப் புராணத்தை  இயற்றியுள்ளார்.

இவர், நைமிசாரணியச் சருக்கம், சவுநகர் சூதரை வினவிய சருக்கம், திருக்கைலாயச் சருக்கம், ஆற்றுச் சருக்கம், திருநாட்டுச் சருக்கம், திருநகரச் சருக்கம் ஆகிய சருக்கங்களைப்  பாடிப் பாயிரம் பாடிய பின்னர் இருபது சருக்கங்களில் திருப்பூவணப் புராணத்தைப் பாடியுள்ளார்.   அவை பின்வருமாறு:

1.         சூரியன் பூசனைச் சருக்கம்

2.         திரணாசனன் முத்தி பெற்ற சருக்கம்

3.         மணிகன்னிகைச் சருக்கம்

4.         துன்மனன் சருக்கம்

5.         தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கம்

6.         உற்பலாங்கி பதியை யடைந்த சருக்கம்

7.         பாற்கரபுரச் சருக்கம்

8.         சர்வ பாவ விமோசனச் சருக்கம்

9.         பிரம சாப விமோசனச் சருக்கம்

10.       இலக்குமி சாபவிமோசனச் சருக்கம்

11.       உமாதேவி திருஅவதாரச் சருக்கம்

12.       திருக்கலியாணச் சருக்கம்

13.       தக்கன் வேள்வியழித்த சருக்கம்

14.       உமை வரு சருக்கம்

15.       சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம்

16.       சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்

17.       தீர்த்தச் சருக்கம்

18.       நளன் கலிமோசனச் சருக்கம்

19.       திருவிழாச் சருக்கம்

20.       சிதம்பரவுபதேசச் சருக்கம்

என இருபது சருக்கங்களாகும்.

 

திருப்பூவணப் புராணத்தில். மொத்தம் 1437 பாடல்கள் உள்ளன.  இப்பாடல்களை விருத்தப் பாவில் எழுதியுள்ளதாகக் கந்தசாமிப் புலவர், அவையடக்கம் ஐந்தாம் பாடலிலே குறிப்பிட்டுள்ளார்.

*****

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *