திருப்பூவணப் புராணம் – பகுதி – (6)

கி.காளைராசன்

3. திருப்பூவணப் புராணம்

(உரைச் சுருக்கம்)

 

1. சூரியன் பூசனைச் சருக்கம்

நவக்கிரகங்களுக்கும் தலைவராகச் சூரிய பகவான் விளங்குகிறார். ஒரு காலத்தில் பேரண்டத்தில் ஒரு பெரிய புரட்சி நிகழ்ந்தது.  இதனால்  சூரியனுடைய தலைமைப் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு. பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது.

தனது பதவியை நிலை நிறுத்திக் கொள்வதற்கான வழி வகையைச் சூரியன் ஆராய்ந்தார். அப்பொழுது இப்பேரண்டமே சிவலிங்கமாக திருப்பூவணத்தில் எழுந்தருளுகிறது என்பதை அறிந்தார். எனவே தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளத் திருப்பூவணத்திற்குச் சித்திரை மாதத்திலே சித்திரை நட்சத்திரத்திலே வந்து. மணலைக் குவித்துத் திருப்பூவணநாதர் போலச் செய்து, உரிய முறைகளைப் பின்பற்றிப் பூசை செய்தார்.    அவருக்கு அருள்புரிய உமாதேவி சமேதராகச் சிவபிரான் தோன்றியருளினான். சூரியன் விரும்பியபடி நவக்கிரகங்களுக்கு நாயகனாக என்றும் நிலைத்திருக்கும்படிச் சூரியனுக்கு அருள் வழங்கினான். திருப்பூவணத்தில் வசிப்பவர்க்கு அறமும் பொருளும் இன்பமும் வீடும் கிடைக்குமென்று அருளினார்.   ஐந்தெழுத்து மந்திரத்தையும் உபதேசம் செய்தருளினார்.

 

மணிகன்னிகை தீர்த்தம்: திருப்பூவணநாதரிடம் மந்திர தீட்சை கிடைக்கப்பெற்ற ஆதித்தனாகிய சூரியன். தான் கேட்டவுபதேசப் பொருளைச் சிந்தித்துத் ​தெளிந்து, சிவலிங்கத்துக்குத் தென்கிழக்கே (அக்கினித் திக்கிலே), தனது கையினாலே சதுரமாகக் குளம் தோண்டி, அதில், உற்பலமும் தாமரையும் உண்டாக்கி, ஐந்தெழுத்தைத் தியானித்து முறைப்படி வழிபட்டான். அத்தீர்த்தத்துக்கு மணிகன்னிகை என்று  பெயரையிட்டான்.  தேவதச்சனை அழைத்து ஆலயம் அமைத்து, ஆவரண தேவதைகளையும் பிரதிட்டை செய்து, திருவிழா நடத்தித் தன்னுடைய உலகத்தை அடைந்தான்.

அகத்திய முனிவரும் அம்மணிகன்னிகைத்  தீர்த்தத்தில் மூழ்கித் திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்துத் திருப்பூவணநாதரை வணங்கிச்  சமுத்திரத்தைக் குடிக்கும் வல்லமையைப் பெற்றார்.

 

குறிப்பு – இத்தீர்த்தத்தின் சிறப்புகள் பின்வரும் சருக்கங்களிலும் மிகவும் வெகுவாகப் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன.    தற்போது இத்தீர்த்தம் எவ்வாறு உள்ளது என்பது பற்றி குறிப்பு நான்காவது சருக்கமாகிய  துன்மனன் சருக்க இறுதியிலே குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

பாவநாச தீர்த்தம்:

சிவலிங்கத்திற்கு முன்பு ஒரு அம்பு செல்லும் தொலைவரையுள்ள வைகை ஆற்றிற்குப் பாவநாசதீர்த்தம் என்று பெயர்.  அதிலே முழுகினோர் சிவலோகம் பெறுவர். திருப்பூவணத் தலத்தைத்  தரிசித்தோர் திருக்கைலாசத்தை  அடைவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

 

திருப்பூவணத் திருத்தலத்தின் வேறு பெயர்கள்

திருப்பூவணத்திற்குக்  கிரேதாயுகத்திலே தேவிபுரம். புட்பவனம் என்றும், திரேதாயுகத்திலே இலக்குமிபுரம் என்றும், துவாபர யுகத்திலே பிரமபுரம் என்றும், கலியுகத்திலே பாஸ்கரபுரம், ஆனந்தவனம், முத்தியாச்சிரமம், ரகசியசிதம்பரம், தெட்சிணகாசி, சதுர்வேதபுரம், பிதிர்முத்திபுரம் என்னும் பெயர்கள் உண்டு.  இங்கு வசிப்போருக்குச் செல்வத்தை நல்கும்.  பாவத்தைப் போக்கும்.  சிவஞானத்தை ஆக்கும்.  இப்பதியில் வணங்கிய பெருமையாலே விநாயகக்கடவுள் சிவார்ச்சனை செய்து முடித்தார்.

இக்கதையைப் பிறரிடம் கூறுவோர், அதைக் கேட்போர், அதன்வழி திருப்பூவணம் வந்து வழிபடுவோர்  அனைவரும் முத்தியடைவார்கள்.

 

2. திரணாசனன் முத்திபெற்ற சருக்கம்

சைவபுராணம் முதல் பிரமகைவர்த்த புராணம் முடிய உள்ள  பதினெட்டுப்  புராணங்களிலும் சிறப்புடன் குறிப்பிடப்படுவது திருப்பூவணத் தலமாகும். பிரளயகாலத்தில் தோன்றிய அமிர்தக்கலசம் மகாவிஷ்ணுவால் மூன்று கூறாக உடைக்கப்பட்டது.  முதலாவதைத்  திருப்பூவணத்திலும், இரண்டாவது பகுதியைக்  கும்பகோணத்திலும், அதன்பின் மூன்றாவது பகுதியை  எல்லாத் திருத்தலங்களிலும் வைத்தார்.  அமிர்தத்தின்  முதலாவது பகுதி திருப்பூவணத்திலுள்ள மணிகன்னிகைத் தீர்த்தத்திலே மலராய் வந்து வீழ்ந்தது.  அத்தீர்த்தத்திற்கு மாயாதீர்த்தம் என்றும்  மணிகன்னிகைத் தீர்த்தம் என்றும் இரண்டு பெயருண்டு.  இத்தீர்த்தத்திலே நீராடுவோர்க்குப் பாவங்களெல்லாம் ஒழியும்.

திருப்பூவணத்தில் சிவலிங்கப் பெருமானை முதலிலே தரிசித்துப் பின்னர் தேவியாரைத் தரிசிக்க வேண்டும். இத்தலத்தில் அம்மையை முதலில் வணங்குபவர்கள் நரக உலகு அடைவர்.  மதுரை உட்பட மற்றபிற தலங்களில் முதன்முதலாக அன்னையை வணங்கியபின்னர்தான் சிவலிங்கத்தை வணங்கி வழிபடுகின்றனர்.   ஆனால், திருப்பூவணத்தில் மட்டும் அம்மையை முதன்முதலில் வணங்கக் கூடாது.  ஏனென்றால்,  முதலாம் யுகத்திலே, கௌதமி ஆற்றங்கரையில் திரணாசனன் என்பவர்  சிவபிரான் திருவடிகளை மனவாக்குக் காயங்களினால் வழிபட்டுவந்தார்.  அவர் தனது ஆசிரியரை வணங்கி  எளிதாக முத்தி கிடைத்திட  உபாயத்தைக் கூற  வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கு  அவரது ஆசிரியரும் பல சிவத்தலங்களுக்கும் சென்று அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி முறைப்படிச்  சிவலிங்க மூர்த்திகளைப் பேரன்போடு வழிபட்டால், பாவங்கள் ஒழிந்து முத்திபெறலாம் என்று கூறி அருளினார்.   உடனே திரணாசனன் துறவறம் பூண்டு  சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று, திருவாலவாயில் (மதுரையில்) வீற்றிருந்தருளும்  அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரை வணங்கி, திருப்பூவணம் வந்து மணிகன்னிகைத்தீர்த்தத்தில் மூழ்கியெழுந்து உமாதேவியைத் தரிசித்துச்  சிவலிங்கப் பெருமானைத் தரிசியாமல் தெற்குத்திசை நோக்கிச் சென்று திருச்சுழி என்னும் திருத்தலத்தை அடைந்து, முறைப்படிச் சிவலிங்கப் பெருமானை வழிபட்டு, மீண்டும் திருப்பூவணம் வந்து மணிகன்னிகைத் தீர்த்தத்தில் மூழ்கினான்.  அதனால்  இராச்சதனாய் மாறிப் பசியினால் வருந்தினான். அப்பொழுது நாரத முனிவர் வந்து,  அவனை நோக்கி, “நீ யார்?” என்று கேட்டார்.  அப்பொழுது அவனுக்குச் சிறிது ஞாபகம் வந்தது. அவன், இத்தீர்த்தத்தில் மூழ்கிய அளவிலே  நான் மனங்கலங்கியவன் ஆனேன். இதற்குக் காரணம் என்ன என்று புலப்படவில்லை என்று கூறினான்.  அதற்கு நாரதமுனிவர், பூவணநாதரை முதலிலே வழிபடாது தேவியாரை வழிபட்ட காரணத்தால்,    நீ இவ்வாறு ஆகிவிட்டாய்.  இனி, முதலிலே புட்பவனேசுவரரை வணங்கிப் பின்பு அம்மையை வணங்கினால் நற்கதி பெறுவாய்.  மேலும் புட்பவனேசுவரர் சந்நிதியிலே  ஐநூறு  விற்கிடை அளவுள்ள ஒரு பிரமதீர்த்தமுண்டு. அது முறை பிறழ்ந்த பாவமுதலியவற்றைப் போக்கும்.  அதிலே  கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்திலே  நீராடுதல் சிறந்ததாகும்.   ஆதலால், அத்தீர்த்தத்தில் நீ நீராடி   புட்பவனேசுவரரை வழிபடுவாய்  என்று கூறி வழிகாட்டினான்.  மேலும்,  காசி முதலிய பதிகளில் செய்த பாவங்கள் இப்பதியிற்போம்.  இத்திருப்பூவணத்திற் செய்த பாவம் இத்திருப்பூவணத்திலே ஒழியு மென்றும் கூறித் திருமால் உலகம் சேர்ந்தார்.     நாரதமுனிவர் அருளிய வழியே திரணாசனன் புட்பவனேசுவரரையும் தேவியாரையும் வழிபட்டுத் திருக்கைலாசபதவி சேர்ந்தனன். இவ்வாறு  பிரமகைவர்த்த புராணத்திலே எழுபத்தோராம் அத்தியாயத்திலே கூறப்பட்டுள்ளது.

திரணாசன் முத்தி பெற்ற இச்சருக்கத்தைப் படிப்போரும், இக்கதையைப் பிறரிடம் கூறுவோரும், அதை ஆவலுடன் கேட்போரும் சிவபெரும்பதியை அடைவார்கள்.

 

3. மணிகன்னிகைச் சருக்கம்

திருப்பூவணத் திருத்தலமானது விராட்புருடனுக்கு முகமண்டலமாகும். இங்குள்ள தீர்த்தத்தில், விஷ்ணு முதலாவது வைத்த அமிர்தக்கூறு மணிமயமாய் வீழ்ந்தபடியால், அதற்கு மணிகன்னிகை  என்று பெயர்.  அதிலே நீராடு வோர், பத்துப் பிரமகற்பகாலம் அமிர்தம்  உண்டு தேவலோகத்தில் வாழ்வார்கள்.   இத்தீர்த்தத்திலே எல்லாத் தேவர்களும் இருடிகளும் வசிக்கின்றார்கள்.  அதிலே மூழ்கிச் சூரியலிங்கத்தைத்  தரிசனம் செய்வோர். காலனைக் காணாமல், காலகாலர் கயிலையைக் காண்பர்.    அத்தீர்த்தமாடுதலும், அச்சிவலிங்க தரிசனம் செய்தலும் அறஞ் செய்வோர்க்கே கைகூடும்.   இத்தலத்தினைத் தரிசனம் செய்வோரின் அனைத்துப் பாவங்களும் ஒழிந்துவரும்.

சுய அறிவுடனோ அல்லது அறிவின்றியோ  ஒரு கணப் பொழுதாவது திருப்பூவணத்தில் வசித்தால் சிவ உருவம்  பெறுவர்.  ஒரு தளிரோ கனியோ புட்பவனேசருக்குப் பக்தியோடு கொடுப்போர் முத்தி அடைவர்.  மற்றைய தலத்தினின்று வயோதிகத்தைச் சிந்தித்து இத்தலஞ்  சேர்ந்து இறந்தவர்களுக்குச் சிவபிரான் தாரகமந்திரமாகிய பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்தருளுவார். ஆதலால் இத்தலத்தில்  யாவரும் வசித்தல் வேண்டும்.  காசியின் தட்பவெப்பத்தினால் பெரிதும் உடல் வருந்தும்.  திருப்பூவணத்தில் சமநிலையிலான தட்பவெப்பம் நிலவுவதால்,  உடல் வருத்தமுறாது. ஆதலாற் காசிப்பதியினும் புட்பவனம் ஏற்றதாகும்.  பஞ்சாமிர்தம், பஞ்சகவ்வியம் முதலியவற்றை இங்குள்ள சூரியலிங்கத்திற்கு  அபிடேகம் செய்தால் சிவனருள் பெறலாம்.  மணிகன்னிகா  தீர்த்தக் கரையினில் பிதிர்சிரார்த்தம் முதலியன செய்தால் நெடுங்காலம்  பிதிர்கள் பெரிதும்மகிழ்வார்கள்.

முன்னம் ஒரு காலத்தில்  அந்தணனின் இறந்த உடலில் உள்ள ஒர்  அங்கத்தைக் கழுகு ஒன்று தூக்கி வந்து திருப்பூவணத்தில் போட்டுவிட்டது. அதனால் அந்த உடலுக்கு உடையவன் நற்கதியடைந்தான். எனவே, பிதிர்கள் முத்தியடையும் வண்ணம் அவர்கள் இறந்த பின்னர், அவர்களது அங்கங்களை இங்கே போடவேண்டும்.

 

4. துன்மனன் சருக்கம்

மாதா, பிதா, குரு, அந்தணர் இவர்களை இகழ்ந்தவர்களும், மற்றும் இதுபோன்ற மன்னிக்கமுடியாத கொடிய பாவங்களைச் செய்தவர்களும்  நரகத்தில் சேர்ந்து பெருந் துன்பங்கட்கு ஆட்படுவர். அகிம்சை, உண்மைகூறல் முதலிய தர்மங்களை உடையவர் சொர்க்கத்தில் சுகங்களைப் பெறுவர்.  ஆனால் துன்மனன் என்னும் கள்வன் இப்பிறவியில் செய்யாத பாவங்களேதுமில்லை. செய்த புண்ணியமெதுவும் இல்லை. அவனது பூர்வபுண்ணியத்தினாலே, ஒருசமயம் திருப்பூவணத்திலே பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுவதைக் கேள்வியுற்று திருடும் நோக்கத்தோடு இத்தலம் வந்தடைந்தான்.   தேரில் எழுந்தருளியிருந்த இறைவனைத் தரிசித்து விட்டு, நடுநிசியில் மற்றபிற கள்வர்களுடன் திருடச் சென்றான். அப்போது காவலர்களால் விரட்டியடிக்கப்பட்டான். இரவில் வழிதெரியாமல் ஓடிய திருடர்கள் மணிகன்னிகைத் தீர்த்தத்தில் வீழ்ந்து இறந்தனர்.    தீர்த்தத்தின் சிறப்பினால் அவர்கள் சிவலோகம் சேர்ந்தனர்.

ஐந்து மாபாதகங்களையும் செய்த தீயோர்களுக்கே சிவப்பேறு கிடைத்தது என்றால், நற்புத்தியுடனும் உண்மையான பக்தி நோக்கத்துடனும் இத் தீர்த்தமாடுவோர் சிவலோகம் சேர்வதில் சிறிதும் ஐயமில்லை.

 

தீர்த்தத்தின் இன்றைய நிலைபற்றிய குறிப்பு

இத் தீர்த்தம் முருகள் கோவிலுக்கும், பெருமாள் கோயிலுக்கும் எதிரே உள்ளது. மணிகன்னிகா தீர்த்தம் பற்றிப் பலவாறாகப் புகழ்ந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளதால், அந்திமக்காலத்தில் நிர்க்கதியாய் நின்ற பலர் இத்தீர்த்தத்தில் வந்து மூழ்கி உயிரை விட்டனர்.   இதனால்   இத்தீர்த்தத்தில் வீழ்ந்து இறப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது.    அரசியல் செல்வாக்கு மிகுந்தோர் தீர்த்தம் ஆட வரும்போது அவர்கள் எதிரேயே பிணத்தைத் தூக்கிச் செல்லும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  மேலும் தங்களது வீட்டிலிருந்த முதியோர் களும் இவ்வாறு தீர்த்தத்தில் மூழ்கி இறந்துவிட்டனரே என்ற வருத்தங்களும் பொதுமக்களிடம் அதிகம் இருந்தது.   இக்காரணங்களால் தீர்த்தம் முழுவதுமாக மூட்பட்டு தென்னந்தோப்பு உள்ளது.

திருக்கோயிலின் உள்ளே அம்மன் கோபுரத்திற்கு எதிரே  அக்கினித்திசையில் ஒரு கிணறு உள்ளது.  இக்கிணறே தற்போதைய மணிகன்னிகா தீர்த்தமாகக் கருதப்படுகிறது.   இதிலும் தற்போது தண்ணீர் போதுமான அளவு இல்லை.    தற்போது ஆலயத்தின் தண்ணீர்த் தேவைகளுக்காக ஆழ்குழாய்க் கிணறு ஒன்று தோண்டப்பெற்று தண்ணீர் வழங்கப்படுகிறது.

 

5. தருமஞ்ஞன் முத்தி பெற்ற சருக்கம்

தென் திசையில் தாமிரபரணி நதிக்கரையிலே வேணுவனம் என்னும் ஊரின் மேற்குத் திசையிலே கோலாகலமென்னுங் கிராமத்திலே, வேதசர்மா என்னும் பெயருள்ள ஒரு பிராமணன் இருந்தான்.   அவன் நான்கு வேதங்களையும் ஆறு  சாத்திரங்களையும் கலைகளையும் ஓதியுணர்ந்தவன். கடமைகளை வழுவாது செய்து ஐந்தெழுத்து மந்திரத்தை விதிப்படி மெய்யன்பொடு ஓதுபவன். பிள்ளைகள் மற்றும் பேரன் பேத்திகளுடன் குபேரனுக்கு ஒப்பாக வாழ்பவன்.  அவனுக்கு மூப்புப் பருவம் வந்து இயற்கை மரணமடைந்தான்.  அவனுடைய மகன், தருமஞ்ஞன் என்னும் பெயருடைய ஒருவன் தந்தையைப் போல வேதம் முதலியவற்றை ஓதியுணர்ந்து ஒழுக்கத்திலே வழுவாதவனாக இருந்தான்.  தன்னுடைய தந்தைக்கு இறுதிக் கடமைகளை அன்புடன் முடித்து அஸ்தியை ஒரு குடத்திலே அடைத்துத்  துணியினாலே வாயை மூடி அரக்கு முத்திரை வைத்துக் கங்கைநதியிலே இடும் வண்ணம் எண்ணி,  அவனது மாணாக்கனோடு வடதிசை நோக்கி காசிக்குச் சென்றான்.  செல்லும் வழியில் உள்ள  சிவத்தலங்களிலே பெரியோர்களுக்குத் தானங்கள் கொடுத்துத் தீர்த்தங்களிலே நீராடினான். மதுரையை அடைந்து அங்குள்ள தீர்த்தங்களிலே மூழ்கித் தானங்கள் கொடுத்து மூன்று தினம்தங்கி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரைத் தரிசித்துப் பின்னர் திருப்பூவணம் வந்துசேர்ந்தான்.  சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து, மணிகன்னிகைத் தீர்த்தக்கரையை அடைந்து, வயிரவக் கடவுளை எள்ளு, அருகு, அட்சதை இவைகளினாலே பூசித்து, அஸ்திக் குடத்தை அக்கரையிலே வைத்துவிட்டுத் தீர்த்தத்திலே மூழ்கினான்.  மூழ்கும்போது பெருமழை பெய்தமையால் விரைந்து எழுந்து கரையேறும் பொழுது, கால் இடறி அஸ்திக் குடம்  அத்தீர்த்தத்திலே விழுந்தது.  உடனே அக்குடத்தை எடுத்துப் பார்த்தான்.  அதனுள்ளே இருந்த எலும்பு முழுவதும் தாமரை மலரும். உற்பல மலருமாக இருக்கக் கண்டான். எலும்பு பூவாக மாறியதைக் கண்டு பெரிதும் மகிழ்ந்து  பர்ணசாலைகளிலே வசிக்கின்ற முனிவர்களிடம் போய் நிகழ்ந்தவற்றைக் கூறினான். அவர்களும் இத்தலம் காசியைவிடச் சிறப்புடையதாம் என்றனர். உடனே தருமஞ்ஞன்  என்னுடைய பிதாமுதலியோர் நற்கதியடைந்தனர்” என்று கூறிச் சிவாலயஞ் சேர்ந்து, சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து வணங்கித் துதித்த பொழுது, சிவபெருமான் காளை வாகனத்தில் தோன்றிக் காட்சி  கொடுத்துத் தருமஞ்ஞனுக்கும் நற்கதியை அருளி மறைந்தருளினார்.  தருமஞ்ஞனைப் புகழ்வோரும் அவன் கதையைப் படிப்போரும் பாவங்கள் நீங்கிச் சுவர்க்கலோகம் சேர்வர்.

 

6. உற்பலாங்கி பதியை அடைந்த சருக்கம்

துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ஒரு புண்ணிய கிராமத்திலே, கோபாலன் என்னும் பிராமணனுக்கு  உற்பலாங்கி என்ற  பேரழகுடைய மகள்  ஒருத்தியிருந்தாள்.  அவளுக்குத் திருமணம் செய்விக்க வேண்டும் என்று அப்பிராமணன்  நினைத்துக் கொண்டிருந்தபோது,  அவர்கள் வீட்டு வாயிலில் அழகு பொருந்திய ஏழைப் பிராமணன் ஒருவன் வந்து அன்னப்பிச்சை கேட்டு நின்றான். அவனைக்கண்ட கோபாலன், தன் மகளுக்கு ஏற்ற வரன் இவனே என்று முடிவு செய்து, அவனிடம் தன் கருத்தைச் சொல்லி கலந்துரையாடினான்.   அவனும் அதற்கு இசைந்து உற்பலாங்கியை மணமுடிக்க விருப்புற்றான்.  கோபாலன் தன் மனைவியிடம் கலந்து ஆராய்ந்த பின்னர் மணப்பந்தல் அமைத்து, சில சடங்குகளைச் செய்தான். பின்னர் தன் மகளைக் கன்னிகாதானம் செய்யும் முன் மணமகன் மரணமடைந்தான்.  இவ்வாறு  இருபது நபர்கள் கன்னியாகிய உற்பலாங்கியைத் திருமணம் செய்துகொள்ளும் முன் மரணமடைந்தார்கள். இதனால் உற்பாலங்கியின் பெற்றோர்கள் பெரிதும் வருந்தினர். சிறிது காலத்தில் காலமடைந்தனர்.  அதன் பின் உற்பலாங்கி தனக்கேற்ற கணவனை அடையும் பொருட்டுப் பல  சிவதீர்த்தங்களிலே மூழ்கி இறைவனை வழிபட்டு வந்தாள். இறுதியாகத் திருப்பூவணம் வந்து சேர்ந்தாள். திருப்பூவணத்தில் மணிகன்னிகைத்  தீர்த்தத்திலே நீராடினாள்.  அத்தீர்த்தக் கரையில் காலவமுனிவர் என்பவரைக்  கண்டு வணங்கினாள்.  அவரிடம் தான் வந்த நோக்கத்தைக் கூறினாள்.  அதனைக் கேட்டறிந்த முனிவர் உற்பலாங்கிக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்படக்காரணம்  முற்பிறவியிலே  கௌரிதேவியின் விரதம் மேற்கொண்டு விரதத்தை முறைப்படி முடிக்காமல் விட்டதால் இப்பிறவியிலே இத்துன்பங்கள் நேர்ந்ததெனச் சொன்னார்.  மணிகன்னிகை தீர்த்தத்தில் நீராடிவிட்டதால் இப்பாவங்கள் நீங்கி  மங்களம் உண்டாகும்.  மேலும் நீ, “இத்தீர்த்தத்தில் மலர்ந்துள்ள  தாமரை மலரையும், உற்பல மலரையுங் கொண்டு உமாதேவியாரை விதிப்படி பூசனை செய்து வழிபட்டால் அம்மை நேரில் எழுந்தருளி மங்களம் தந்தருளுவார்” என்று முனிவர் சொல்லியருளினார்.  உற்பலாங்கியும் அவ்வாறே  செய்து  தேவியாரின் திருவருளினாலே நல்ல கணவன் வாய்க்கப் பெற்று,  தீர்க்க சுமங்கலியாயிருந்தாள்.  “இத்தீர்த்தத்திலே இடபராசியில் சந்திரன் இருக்கும் செவ்வாய்க்கிழமைகளில் அமங்கலிகள் நீராடினால்  மறுபிறப்பிலே தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வர்”.  சுமங்கலிகள் நீராடினால் பிள்ளைப்பேறு அடைவார்கள்.  இத்தகைய புண்ணிய தீர்த்தங்கள் உடையது திருப்பூவணத் திருத்தலமாகும்.

இக்கதையைப் படிப்போரும் கேட்போரும் கலிகாலத்தின் கொடுமை நீங்கப்பெற்று வளமைபெற்று நற்கதியுடன் வாழ்வார்கள்.   திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி நல்ல கணவன் கிடைப்பர்.

 

7. பாஸ்கரபுரச் சருக்கம்

காசிபமுனிவருக்கும் அதிதிக்கும்  மகனாகப் பிறந்த சூரியன். துவட்டாவின் மகளாகிய பிரபையை மணந்து வாழ்ந்துவந்தான்.  அவளால்  சூரியனின் வெப்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  எனவே  தனது நிழலைத் தன்னைப் போலப் பெண்ணாக மாற்றிச் சூரியனிடத்தில் நிறுத்திவிட்டுப் பெண்குதிரை வடிவமெடுத்து, வட நாட்டிற்குச்  சென்றாள். அங்கே, ஒரு வனத்தில்  சூரியனின் வெம்மையைப் பொறுக்கும்படிச் சூரியனை நினைத்துத் தவம்     மேற்கொண்டாள்.   இதனை உணர்ந்த சூரியன் ஆண்குதிரை வடிவமெடுத்து அவள் இருக்குமிடத்தை அடைந்து  அவளைக் கலந்தான்.   பிறகு சூரியனும் பிரபையும் ஆகாய வழியாகச் செல்லும் போது  தேவர் முதலியோரைச் சந்தித்துச் சூரியமண்டலத்தினைக் கடைந்து  செப்பம் செய்தனர்.  அப்போது பொறி ஒன்று தோன்றி முதலில் திருப்பூவணத்தில் விழுந்தது. பின்பு மற்றைய தலங்களுக்குப் விரிந்து பரந்தது.  இதனால் இவ்வூர் பாஸ்கரபுரம் என்னும் பெயர் பெற்றது என்பர்.  சூரியனும் பிரபையும் திருப்பூவணக் கோயிலையும், மற்ற கோயில்களையும்  தரிசித்தது போன்றே நாமும்  உபவாசம், விரதம், ஜபம் ஆகியவற்றை அன்புடன் செய்தால் முத்தி பேறு எய்துவது நிச்சயமாகும் எனக் கூறப்படுகிறது.   இத்தகைய சிறப்புக்களை உடையது திருப்பூவணத்திருத்தலமாகும்.

இக்கதையைப் படிப்போர் கேட்போர் மற்றும் கருத்தில் கொள்வோர் அனைவரும் தேவர்களது ஊரில் இருந்து அரசு ஆள்வார்கள்.

 

8. சர்வ பாவ விமோசனச் சருக்கம்

இச் சருக்கத்திலே  ஒவ்வொரு மாதமும், இத் திருப்பூவணத் தீர்த்தமாகிய மணிகன்னிகைத் தீர்த்தத்திலே  நீராடி, ஈசனை வழிபடும் முறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

சித்திரை மாதத்தில்,  முதலில்  வைரவக் கடவுளை வணங்கிப் பின் சிவபெருமானை  வழிபட்டுச் சூரியோதயத்திற்கு முன் மணிகன்னிகைத் தீர்த்தத்திலே நீராடினால் கொலை முதலிய பாவங்கள் நீங்கும்.  குட்ட நோயுடையோர்  மற்றும் கொடிய நோயுடையோர்  இத்தீர்த்தத்திலே நீராடினால், அந் நோய்கள் ஒழியப் பெறுவர்.

வைகாசி மாதத்தில்   புதன்கிழமைகளில், இத் தீர்த்தத்தில் மூழ்கி நீராடினால், பொருட்களவின் பாவம் போகும்.  இங்கு பொருட்களைத் தானம் செய்வோருக்குப் புத்திரர்கள் எள்,தயிர், பால், உளுந்து மற்றும் வெல்லம்  இவைகளுடன் அறுசுவைக் கறியமுது செய்விப்பார்கள்.  சந்தனம், பொட்டு மற்றும் ஆபரணம்  முதலியவற்றைத் தானம் செய்வோர்கள்  சுகம் அனுபவிப்பர்.

மாசிமாதத்திலே மாமக காலத்தில் மூழ்குவோர் பாவங்களைப் போக்குவர்.

மார்கழி  மாதத்தில் நீராடு வோர்.    சொர்க்கம் சேர்ந்து 14 இந்திரப் பட்டம் வரை வாழ்ந்து பூலோகத்தில் அரசர் ஆவார்கள் என்று கூறப்படுகிறது.

கார்த்திகை மாதத்தில் நீராடுவோர் சிவபுரம்சேர்வர்.    இவ்வாறாக மணிகன்னிகைத் தீர்த்தத்தின் சிறப்புக்களாக ஒவ்வொரு மாதமும் நீராடினால் கிடைக்கும் பலன்பற்றி இச்சருக்கத்திலே  கூறப்பெற்றுள்ளது.

 

9. பிரமசாப விமோச்சனச் சருக்கம்

திருக்கயிலாய மலையில் உள்ள திருமண்டபத்தில் தேவர் முதலியோர் சூழ்ந்திருக்கச் சிவனும் உமாதேவியாரும் வீற்றிருந்தனர். நந்திதேவர் துதிசெய்து கொண்டு இருந்தார்.  அரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை  முதலிய தேவரம்பையர்கள்  திருநடனம் புரிந்தார்கள்.  அவர்களில் ஊர்வசி தனித்து ஆடியபோது சிவபிரான் மகிழ்ந்திருந்தார்.   அவ்வேளையில் பலத்த காற்று வீசியதால், ஊர்வசியின் இடையில் உடுத்தியிருந்த ஆடை சற்றே ஒதுங்கியது. இதனால்  மற்றவர்கள் அனைவரும்  அஞ்சித் தலைகவிழ்த்தனர்.  ஆனால்  பிரமன் ஒருவன் மட்டும் ஊர்வசியின் மறைவிடத்தை உற்று நோக்கினான்.   அதனை உணர்ந்த சிவபிரான், சினங்கொண்டு நமது சந்நிதியிலே நிற்க  உனக்கு அருகதையில்லை எனக் கூறினான்.   உடனே பிரமன் சிவனது பாதங்களில்  விழுந்து தொழுதான்.  அவனது அன்பை உணர்ந்த சிவபிரான் இது போன்று நமது சந்நிதியில் தவறுகளை இழைப்போர் நரகவாசியாவான் என்று கூறித் தவறை உணர்ந்த பிரமனுக்குப் பிராயச்சித்தமாகத் திருப்பூவணத்திலே தேவியினால் பூசிக்கப்பட்ட மகாலிங்கத்தைப் பூசித்தால்   கருணை புரிவதாக அருளிச்செய்தார்.   பிரமனும் அவ்வாறே திருப்பூவணம் வந்து இறைவனை வழிபட்டான்.    அங்கே தவஞ் செய்து  கொண்டிருந்த விஷ்ணுவைக் கண்டு  தான் பூமிக்கு வந்த வரலாற்றைக் கூறி உரையாடினான். பிரமன்  தேவகம்மியனை வரவழைத்து  புட்பவனேசுவரருக்கு ஆலயம் அமைக்கும்படிச் சொல்ல, அவனும் அவ்வாணைப்படித் திருக்கோயில் அமைத்தான்.  பிரமன் அத் திருக்கோயிலினுள் புகுந்து சிவலிங்கத்தைப் பூசித்து சிவயோகத்தில் இருந்தான்.   அதனை உணர்ந்த சிவபிரான்  பிரமனுக்குக் காட்சியருளி  அவன் செய்த பாவத்தைப் போக்கி  இப்பூவணத்தில் வசிப்பவருக்கும் பாவம் தீரும்படி அருளினார்.  திருப்பூவணத்தில் இறைவன் சுயம்புலிங்கமாய்த் தோன்றியருள, அங்கு பிரமனால் கோயில் கட்டப்பட்ட வரலாற்றைக் கதையாகக்   குறிப்பிடுகிறது இச்சருக்கம்.

பிரமனது காமஇச்சையால் உண்டான சாபம் நீங்கப் பெற்ற இக்கதையைப் படிப்போரும் கேட்போரும் பிறரிடம் கூறுவோரும் சுவர்க்கத்தில் கிடைக்கக்கூடிய இன்பத்தை அளிக்கும் மகளிர் சூழ எந்நாளும் இருப்பர்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.