திருப்பூவணப் புராணம் – பகுதி (7)

0

கி.காளைராசன்

10. இலக்குமி சாப விமோசனச் சருக்கம்

இச்சருக்கத்தில் வைகுண்டத்தில் இலக்குமி செய்த பாவத்தைப் போக்க இத்தலம் வந்த வரலாறு கூறப்படுகிறது.

வைகுண்டத்தில் ஆடிப்பாடிய  அரம்பை, வித்தியாதரன் முதலியோருக்கு வேண்டிய வரங்களை அருளிச் செய்த பின்னர், சயனமண்டபத்தில் இலக்குமிதேவி திருவடிப்  பணிசெய்ய, விஷ்ணு நித்திரை புரிந்திருந்தார்.   அவ்வேளையில் வாலகில்லி என்ற முனிவர் வைகுண்டத்திற்கு வந்தார். இச் செய்தியைச் சேடியர் மூலம் கேள்விப்பட்ட இலக்குமி தேவி. அம்முனிவர் குள்ளமானவராய் (குரூபிகளாய்) இருப்பதுபற்றி எள்ளி நகையாடினாள்.  அதனால் கோபமுற்ற முனிவர் விஷ்ணுவையும் மதியாது  வைகுண்டத்தை விட்டு வந்தவழியே திரும்பிச் சென்று விட்டார்.  அப்பொழுது நித்திரை நீங்கிய விஷ்ணு பெருமான் இதுவரை நான் அந்தணர்களுக்கு அன்பன் என்பதை நீ இப்போது மாற்றி விட்டாய்.  உயர்ந்த குலமகளாய்க் கணவன் கருத்தின் வழி ஒழுகுபவளாயினும்  அந்தணர்களை அவமரியாதை செய்தால் அவள் குலத்திற்குக் கேடு விளைவிப்பவள் ஆவாள் என்று சபித்தார்.   அந்தச் சாபத்தையடைந்து இலக்குமிதேவி திருப்பூவணம் சேர்ந்து தவம்  செய்தாள்.   விஷ்ணு மூர்த்தி பயந்து விரைந்து சென்று முனிவரிடம்  தன் மனைவி  நகைத்ததைப் (கேலியாகச் சிரித்ததைப்) பொறுத்துக் கருணை புரிய வேண்டும் என்று வேண்டினான்.   அதற்கு அம்முனிவர் இலக்குமியானவள் பன்னிருவருடம் மணிகன்னிகையில் மூழ்கித் தவம் செய்ய, விஷ்ணுவாகிய நீ போய் புட்பவனேசுவரரைப் பூசித்தால்  அவமதித்த அபராதமும் சாபமும் நீங்கி வைகுண்டத்தில் வாழ்வாய் எனப் பாவ விமோசனம் கூறினார்.

பிறகு விஷ்ணு பெருமான் முனிவரிடம் அவர் வந்த காரணத்தை வினவினான்.  அதற்கு வாலகில்லி  முனிவரும்  நாங்கள் செய்யும் வேள்வியை நீ காத்தல் வேண்டும் எனக்கூறினான்.  இதனால்  அங்ஙனமே முனிவர்கள் வேள்வியைக் காத்தருளினான். பின்பு திருப்பூவணம் சேர்ந்து சிவலிங்கப் பெருமானைப் பூசித்ததினால் இலக்குமிக்கு உண்டான அபராதமும் சாபமும் நீங்கப் பெற்று  அவளோடு வைகுண்டம் சேர்ந்து வாழ்ந்தார்.

சித்திரை மாதத்திலே ஆதிவாரத்திலே (ஞாயிற்றுக்கிழமைகளில்) விஷ்ணு தம் பெயரால் உண்டாக்கிய சிவலிங்கத்தை மணிகன்னிகைத் தீர்த்தத்திலே மூழ்கி  வழிபட்டால் பாவம் நீங்கி விஷ்ணுபாதத்தில் முத்தி பெறுவர்.

இக்கதையைக் கூறுவோரும் கேட்போரும் சீர்மிகப்பெற்றுச் செல்வராய் வாழ்வார்கள்.

 

11. உமாதேவி திருஅவதாரச் சருக்கம்

ஒருசமயம், தட்சன் பிரமாவிடம் முழுமுதற் கடவுள் யார் என வினவினான்.  அதற்குப் பிரமாவும்  சிவன்தான் என்று கூறினான்.  இப்பதிலைக் கேட்ட தட்சன்,   படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களும்  முறையே மூவர்களுக்கும் உரியதாய் இருக்க, சிவனை மட்டும் முதற்கடவுள் எனக் கூறுவது என்பது பொருந்தாது எனக் கூறினான்.   அதனைக் கேட்ட பிரம்மா என்னையும் விஷ்ணுவையும் உண்டாக்கிப் பின்பு இவ்வுலகத்தைப் படைக்கவும், காக்கவும் சிவபெருமான் அதிகாரம் கொடுத்தார். ஆதலால் அவரே முழுமுதற் கடவுள்-  அவரை நோக்கி நீ தவஞ் செய்வாய்! எனக் கூறியருளினார்.   அவ்வாறு தட்சனும்  தவஞ் செய்ய, சிவபெருமான் எழுந்தருளினான். தட்சனும், சிவபெருமானிடம் அவரை நோக்கி உம்மை வணங்குவோர் அனைவரும் என்னை வணங்கவும், என்பணி செய்யவும், யான் உன்னை மாத்திரம் பணியவும், இந்திரபதம், பிரம்மபதம், விஷ்ணுபதம், அசுரபதம் முதலிய எல்லாம் என்னுடைய ஆணைவழி  ஒழுகும்படி நான் தலைவனாய்  இருக்கவும்  எனக்குப் புதல்வர் புதல்வியரைக் கொடுத்து அவர்கள் இறக்காமல் இருக்கவும், உமாதேவி எனக்கு   மகளாகப் பிறக்கவும், நீர் அத்தேவியைத் திருமணம் புரியவும் வரமருள வேண்டும்” என வரங்கள் கேட்டான். சிவபெருமானும் அவ்வாறே வரங்கள் அருளினார்.  வரம் பெற்ற தட்சன் பிரமாவை அழைத்து “மகாபுரம்” என்னும்  நகரை அமைத்தான்.  அந் நகரிலிருந்து அரசாட்சி செய்து, வேதவல்லியை மணந்து கொண்டான்.  பின்பு புத்திரர்களைப் பெற்று விவாகம் செய்து கொடுத்து     பாக்கியத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தான்.   அந்த நேரத்தில் திருக்கைலாயத்தில் உமா தேவியார் சிவனை வணங்கி உயிர்களுக்கு முத்தியருளும் முறையை  அருளிச் செய்ய வேண்டும் என்று விண்ணப்பம் செய்த போது, சிவபிரான், உமாதேவியாரைப் படைத்து முத்தி கொடுப்பதாகக் கூறினார்.    பின்பு  காளிந்தி நதியிலே தாமரை மலரிலே வலம்புரிச்சங்கு வடிவாய் நீ தவம் புரிந்தால், தட்சன் உன்னைக் குழந்தையாகக் கொண்டு வளர்ப்பான் எனக்கூறி அருளினார்.    பிறகு நான் வந்து உன்னை மணம் செய்து கொண்டு இக்கயிலைக்கு வருவோம் என்றார்.

 

உமாதேவியாரும் அந்த ஆணைப்படித் தவஞ் செய்ய, வேதவல்லியோடு தட்சன் நீராடிய போது, கமலமலரிலே தங்கிய சங்கினைக் கண்ணுற்றுக் கைகளினால் அள்ளிய போது, உமாதேவியார் குழந்தை வடிவாகினார்.  அக்குழந்தையைத் தங்கள் மகளாக வளர்த்து வந்தனர்.   உமாதேவியின்  ஆறாவது பருவமாகிய (26முதல் 31 முடிய) தெரிவைப் பருவத்தில் கன்னிமாடத்தில் சிவபிரானை நோக்கித் தவஞ் செய்து கொண்டிருந்தாள்.  சிவனும், பிராமணன் வடிவம் கொண்டு வர, அவரை வணங்கி உபசரித்தாள்.    பிரமச்சாரிப் பிராமணனாக வந்த சிவபெருமானும், தேவியிடம், உன்னை மணம் செய்யும் பொருட்டு வந்தோம் எனக் கூறினார்.  அதற்கு அஞ்சிய தேவியார் வஞ்சக வேடம் தாங்கி வந்தாய் போலும் எனச் சினந்து கூறினான்.  மேலும் நான்  சிவனை மணம் புரியும்பொருட்டுத் தவம் செய்கிறேன் என்றும் கூறினான்.  அப்போது, “இறைவன் வந்து மணம் புரிதல் அருமை” எனத் தேவியை இகழ்ந்தார். இதனால் தேவியார் மேலும் வருந்தி, அருந்தவம் செய்வேன் எனக் கூறினார்.   சிவன் தன் உண்மை வடிவை வெளிப்படுத்தத் தேவியார், கண்ணீர் ஒழுக அவரைத் தரிசித்தார்.  இந்நிகழ்ச்சிகளைக் கண்ணுற்ற சேடியர் ஓடிச் சென்று தட்சனிடம் சொல்லினர். தட்சணும் சிவனுக்கே தனது மகளை மணம் செய்து கொடுப்பேன் என உறுதிபூண்டான்.

இக்கதையைப் படிப்போரும் கேட்போரும் முத்தி அடைவார்கள்.

 

12. திருக் கலியாணச் சருக்கம்

தட்சன், உமா தேவியாருக்குத் திருமணம் செய்விக்கும் பொருட்டு, அனைத்து வேலைகளையும் துவக்கி, புத்திரிகளையும் வரவழைத்தான்.  விஷ்ணு, பிரம்மா ஆகியோரும் வந்தனர்.    சிவன் உமாதேவியார் தவஞ்செய்யும் இடத்திற்கு எழுந்தருளினார்.     அப்போது, தட்சன் சிவபெருமானைத் திருமண மண்டபத்திற்கு எழுந்தருள வேண்டுமென வேண்டினான்.  அவ்வாறே எழுந்தருளிய சிவபிரானுக்கு, வேதவல்லி பசும்பால் வார்த்து   பாதபூசை செய்தாள்.    தேவர்கள் சூழ உமாதேவியார் திருமணக்கோலம் கொண்டு சிவபிரான் அருகே அமர்ந்தார்.   பிரம்மா அக்கினி வளர்த்துத் திருமணச் சடங்குகளை முடிக்கும் போது,  சிவபிரான் மறைந்தருளினார்.   பெரிதும் வருந்திய உமாதேவி அருந்தவம் செய்தார்.    தட்சன்  தேவர்களை அனுப்பிவைத்துவிட்டுச்  சிவனை நிந்தித்துக் கொண்டிருந்தான்.   இவ்வாறு இருக்கும் போது, சிவபிரான் உமாதேவியாருக்குக் காட்சியளித்து அவரை இடபவாகனத்திலே அமரச் செய்து கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார்.   இவ்வாறு தட்சனுக்குக் காட்சியளிக்காமலேயே உமாதேவியாரைக் கவர்ந்து சென்றதால், தட்சன் தேவர்களை அழைத்து, இன்று முதல் சிவபிரானை நீங்கள் வழிபடக்கூடாது என ஆணையிட்டான்.

இக்கதையைப் படிப்போரும் கேட்போரும் இந்திரபோகங்களை அனுபவித்துச் சிவபிரான் திருவடியைச் சேர்வார்கள்.

 

 

13. தட்சன் வேள்வியழித்த சருக்கம்

பார்வதிதேவியின் தந்தையாகிய தட்சன் நடத்திய யாகத்திற்கு அவளது கணவன்-பரமேஸ்வரனுக்கு அழைப்பு இல்லை.  இதனால் அழையா விருந்தாளியாக யாகத்திற்குச் செல்லக்கூடாது என்பது ஈசன் விருப்பம்.   இருப்பினும் தனது தந்தை நடத்தும் யாகத்திற்குச் சென்று தந்தைக்கு முறைப்படி  எடுத்துக் கூறி, ஈசனையும் அழைக்கச் செய்யவேண்டும் என்பது உமையம்மையின் விருப்பம்.  இதனால்  பார்வதி தேவியார்,  பரமேசுவரருடன் தர்க்கம் செய்தார்.

தட்சன் சிவபிரானை விலக்கித் திருமால் முதலிய தேவர்கள் சூழ வேள்வி செய்யத் துவங்கினான்.  இதனை அறிந்த நாரதர் சிவனிடம் சென்று தெரிவித்தார்.  அப்போது உமாதேவியார், சிவனின் திருஉள்ளம் உணராமல் தட்சனின் யாகசாலையை அடைந்தார்.    தன் மகள் வேள்விக்கு வந்திருப்பதைக் கண்ட தட்சன் மிகுந்த கோபமுற்று, நீ கயிலைமலைக்குத் திரும்பிச் செல்லலாம் எனக் கூறினான்.  உமா தேவியார் கடுஞ்சினம் கொண்டு  அவ்வேள்வி அழிய  உன்னுடைய தலையும் ஒழிந்திடுக எனச் சபித்தார்.  பின்பு  மூலாக்கினியை எழுப்பி அதிலே மூழ்கி தட்சன்  வளர்த்த  யாககுண்டத்திலே அவதரித்தாள்.  இந்நிகழ்ச்சிகளை திருநந்தி தேவர் வழியாக அறிந்த சிவபிரான், வீரபத்திரக் கடவுளைப்  படைத்து  தட்சனின் சிரத்தை அறுத்து, அவனது வேள்வியையும் அழித்துவிடு யாமும் வருவோம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.   வீரபத்திரக் கடவுளும் அவ்வாணைப்படி,    தட்சனது தலையை அறுத்து யாக குண்டத்திலே போட்டார்.  அப்போது சிவன் எழுந்தருளினார்.   உடனே திருமால் வணங்கிப் பிரார்த்தனை செய்தமையால், வீரபத்திரக் கடவுள் முகமாகச் சிவபெருமான்  தேவர்களைப் பிழைப்பித்தார். பின் பிரம்மா வணங்கிக் கேட்டுக் கொண்டபடி ஆட்டின் தலையைத் தக்கனுக்கு அமைத்து எழுப்பினார்.    சிவபிரான் பார்வதி தேவியாருடன் திருக்கயிலாய மலை சேர்ந்து யோகியாய் எழுந்தருளினார்.    ஈசனின் விருப்பத்திற்கு மாறாகச்  சென்றதும், அவரை எதிர்த்துச் சண்டைச் செய்ததும் இறைவி அறிந்து செய்த பாவங்கள் அல்லவா?  இப்பாவங்களை இறைவியே செய்துவிட்டாரே!   இவ்வாறு அறிந்து செய்த பாவத்தைப் போக்க பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென பார்வதி தேவி விரும்பியிருந்தார்.

இக்கதையைப் படிப்போரும் கேட்போரும் அரசனாகி நாட்டை நன்முறையில் ஆண்டு,  நன்மக்களைப் பெற்று எல்லா இன்பங்களையும் துய்த்துப் பின்னர் சுத்த ஞான சுகத்தினில் வாழ்வார்கள்.

 

14. உமைவரு சருக்கம்

சிவபெருமானும் நீ  போய்த் திருப்பூவணத்தலத்தில் தவம் செய், அங்கே ஒரு மூல லிங்கம் தோன்றும்.   அதனை நீ பூசித்தால், தாம் வெளிப்படுவதாகக் கூறி உமா தேவிக்கு அருள்புரிந்தார்.    உமா தேவியாரும் அவ்வாறே பாரிசாத மரத்தை வளர்த்து அதன் நிழலிலே தவஞ் செய்தார்,  அம்மரத்தின் அடியிலே சிவலிங்கம் முளைத்தது. அதனையறிந்து பூசித்து வழிபட்டார்.   சிவனும் வார்த்தை கடந்த  பாவத்தை மாற்றி  அமர்ந்திருந்தார்.

இதுவே திருப்பூவணத்தில் சுயம்புலிங்கமாய்ச் சிவபிரான் தோன்றிய வரலாறு ஆகும். இவ்விடத்தில்  தினையளவு தானம் செய்தாலும் அது புண்ணியத்தைச் சேர்க்குமிடமாகும்.

இங்கே  வேதம் உணர்ந்த அந்தணன்  ஒருவன்  சிவார்ச்சனை செய்து  உடலினை வெறுத்து, இலைக்கறி மாத்திரம் உண்டு சிவ யோகத்தில் அமர்ந்திருந்தான்.  பெருமழை பெய்யும் ஒரு நாள் இரவிலே  ஒரு பிராமணன்  அச்சிவயோகியின் பர்ணசாலையை அடைந்தான்.   சிவயோகியும்  வணங்கி அவரை வரவேற்று தனக்கிருந்த இலைக்கறியில் ஒரு பங்கை அவருக்கும் கொடுத்து உண்பித்தான்.    பிராமணனும் அவ்விலைக் கறியை உண்டு மகிழ்ந்தார்.   அதனால், சிவபிரானும் திருஉள்ளம் மகிழ்ந்து அருளினார்.    இலைக்கறி படைத்த அந்தணர் முன்னே சிவன் தோன்றி பிறவி அறுமாறு  அருள் செய்தார்.  அவனுக்கு மரணம் நேரிட்டபோது வேதாந்த முடிபாகிய சித்தாந்தத்தை உபதேசித்தார்.  எனவே  “இத்திருப்பூவணத் திருத்தலத்திற்கு ஒப்பான  எந்த ஒரு தலமும் இல்லை” எனக் கூறப்படுகிறது்.

 

15. சுச்சோதி தீர்த்தயாத்திரைச் சருக்கம்

கோதாவிரி நதிக் கரையிலே, போகவதி நகரத்திலே, தேவவன்மா என்னும் அரசன் ஒருவன் ஆட்சி  செய்திருந்தான்.  அவனுக்குச் சுச்சோதி முதலான நான்கு புத்திரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத்  திருமணம் செய்வித்து, மூத்த புத்திரனாகிய சுச்சோதி என்பவனுக்கு முடிசூட்டி முறைப்படி அரசாட்சியை அவனிடம்  ஒப்புவித்துவிட்டு  தருமசீலை என்னும் மனைவியோடு வனத்தை அடைந்து தவம் செய்தான்.  பின்னர் அவனும் அவனது  மனைவியும்  சிவபதம் அடைந்தனர். அவ்விருவருக்கும் சுச்சோதி கர்ம காரியங்களை   முடித்தபின்  நாரதமுனிவர் அவனைச் சந்தித்து,  “உன் முன்னோர்கள் நீ செய்யுந் தில (எள்) தருப்பணத்தை நேரிலே பெறும்வரை தருப்பணஞ் செய்வாய்”  என்று கூறினார்.  சுச்சோதி அரசனும், தன் சேனைகள் சூழப் புறப்பட்டுப் பிரயாகை, அரித்துவாரம், அவந்தி, மாளவம், காகோலம், நீலகண்டம், திரிகூடவீசம் ஆகிய வடநாட்டுத் தலங்களிலும்,  காஞ்சீபுரம், தில்லைவனம் ஆகிய தென்நாட்டுத் தலங்களிலும் முறைப்படியாகத் தீர்த்தங்களாடிச் சிவபிரானைத் தரிசித்துப் பிதிர்களை நோக்கித் தில  தருப்பணஞ்செய்தான். பின்னர் பாண்டியநாட்டிலே திருவாலவாய் சேர்ந்து, பொற்றாமரைக் குளத்திலே  மூழ்கி அவனது முன்னோர்களுக்குத்  திலதருப்பணஞ்செய்து மீனாட்சி சமேத சுந்தரேசுவரரை வழிபட்டு  அங்கே தங்கினான்.  அவ்வாறு தங்கியிருக்கும் போது, ஒரு தினம் இத்தனை தலங்களில் திலதருப்பணம் செய்தும்  முன்னோர்கள் நேரில் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ள வில்லையே! ஒருவேளை. “நாரதமுனிவர் கூறிய வார்த்தை விநோதமோ” என்று கருதி மனம் வருந்தியிருந்தான்.  அப்போது  நாரதமுனிவர் அங்கு வந்து இத் திருவாலவாய்க்குக் கிழக்குத் திசையில் திருப்பூவணம் என்னும் தலம் உள்ளது.  அத்தலம்  சிவபிரானுக்கும், முனிவர்களுக்கும், பிதிர்களுக்கும்  திருவுள்ளம் மகிழத்தக்க தலமாக உள்ளது. “நீ  அங்கே சென்று உன் பிதிர்களுக்குத் தில தருப்பணம் செய்தால்  அதனை அவர்களே நேரில் வந்து பெற்று முத்திடையவார்கள் என்றார்.  அங்ஙனமே அரசன் திருப்பூவணஞ் சேர்ந்தான்”.

 

16. சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம்

நாரத முனிவர் அருளியபடித் திருப்பூவணஞ் சேர்ந்த சுச்சோதிராசன், மணிகன்னிகைத் தீர்த்தத்திலே நீராடிச் சிவலிங்கப் பெருமானை வழிபட்டு வரும் நாளிலே, ஒருநாள், காலவமுனிவரைக் கண்ணுற்று வணங்கி, அவரது ஆசிர்வாதம் பெற்று, வைகைநதி முதலிய தீர்த்தங்களிலே அமாவாசைதினத்திலே நீராடி, தன்னோடு வந்த மூவாயிரம் முனிவருக்கும் அறுசுவைக் கறியமுதுடன் திருவமுது செய்வித்து, திருப்பூவணேசருக்குப் பூசைகள் நடத்தி, மணிகன்னிகைத் தீர்த்தத்தை அடைந்து நீராடி, சங்கற்பம் பண்ணிப்  பிதிர்களை ஆவாகித்து, “என்னுடைய பிதிர், பிதாமகர், பிரபி அனைவரும் எனக்கெதிரிலே தோன்றி நான் கொடுக்கும் எள்ளையும், தண்ணீரையும் பிண்டத்தையும் ஏற்றருளவேண்டும்,  ஏற்றருளாவிடின், எனதுயிரை விட்டுவிடுவேன்” என்று அனைவரும் கேட்கும்படியாகச்  சொல்லிப் பிண்டம் கொடுத்தான். அப்போது மற்றவர்களுக்குத் தோன்றாமல் அவ்வரசனுக்கு மட்டும்  பிதிர்கள் அனைவரும் தேவவடிவங்கொண்டு எதிரிலே தோன்றிப் பிண்டத்தை உண்டு அரசனை ஆசிர்வதித்தனர்.  இதனால்  அரசன் மகிழ்ந்தான்.  பின்னர் அவனது முன்னோர்கள்  சிவபிரான் திருவடிநிழலிற் சேர்ந்தார்கள்.  சிவபிரான் திருவருளினாலே சுச்சோதிராசன் சீவன் முத்தி பெற்றான். மூவாயிரம் முனிவர்களும் பிதிர்கள் பொருட்டுத் தானஞ் செய்தமையால் அம்முனிவர்களுடைய பிதிர்களும் நற்கதி பெற்றனர். இக்காரணத்தாலே இத்தலமானது  பிதிர்முத்திபுரம் என்று பெயர் பெற்றது. புட்பவனேசர் திருக்கோயிலுக்கு நிருதித்திக்கிலே (தென்மேற்குத்திசை) சுச்சோதிராசன்  தன்னுடைய தந்தை தேவவன்மாவின் பெயராலே  ஒரு சிவலிங்கத்தை நிறுவினான்.  பின்பு அவ்வரசன் மூவாயிரம் முனிவர்களோடு போகவதி நகரஞ் சேர்ந்தான்.

“திருப்பூவணத் தலத்திலே பிதிர்களுக்குத் திலதர்பணஞ் செய்வோர் அளவில்லாத பயன் பெறுவர்”  என்ற கருத்தும் “பிதுர் முத்திபுரம்” என்ற பெயர் ஏற்பட்டதற்கான காரணமும் இச் சருக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

 

திதி – தருப்பணம் செய்தல் – திருப்பூவணத்தில் 1)  _ கோவிந்தராஜன் ஐயங்கார், 2) _ கிருஷ்ண ஐயங்கார் மற்றும் 3) _ ரெங்கநாத ஐயங்கார்  இவர்களது குடும்பத்தினர்  பரம்பரை பரம்பரையாகத் திதி மற்றும் தர்ப்பணங்களைச் செய்து வருகின்றனர்.    திருக்கோயில் அருகே உள்ள அக்ரகார வீதியில் இவர்களது வீடுகள் உள்ளன.

 

17. தீர்த்தச் சருக்கம்

கார்த்திகை மாதம் பிறக்கும் புண்ணிய காலத்திலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் சூரியோதயத்திற்கு முன்னே, மணிகுண்டத் தீர்த்தத்திலே, சூரிய மந்திரம் உச்சரித்து மூழ்குவோர்.  அவர்கள் விரும்பியவற்றை அடைந்து, முடிவிலே சிவலோகஞ்சேர்வர்.   அம்மணிகுண்டத்திலே மூழ்கி  அந்தணர்களுக்கு உடல் உழைப்பைத் தானஞ்   செய்வோர் குன்ம(குட்டநோய்)முதலிய நோய்கள் நீங்கி, முடிவிலே சூரியஉலகம் அடைவர்.  அத்தீர்த்தத்திலே, மார்கழி மாதத்தில்  செவ்வாய்க்கிழமைகளில் மனைவியுடன் மூழ்குவோர் புத்திரப்பேறு அடைவர்.   திருவைந்தெழுத்தை உச்சரித்து அசுவதி நட்சத்திரத்திலே மூழ்குவோர் இறுதியிலே சிவலோகம் அடைவர்.  முழுநிலவு நாட்களில் பிரமதாண்டவ மூர்த்தியைப் (திருப்பூவண நடராசரை) பூசிப்போர் மகேசர் உலகத்திலே ஒரு கர்ப காலம் வரையிலே தங்கிப் பின்பு சிவலோகம் சேர்வர். மக(ஆவணி) மாதத்திலே சூரியோதய காலத்திலே, சூரிய மந்திரம் உச்சரித்துச் சிவபிரான் திருமுன்னர் நாடகஞ் செய்வோர் இறுதியிலே நற்கதி பெறுவர்.  சூரியோதயத்திற்கு முன் வைகை நதியிலே மூழ்கி,  சிவராத்திரியிலே உறக்கமின்றி நான்கு யாமமுஞ் சிவபூசை  செய்து, தானங்கள் செய்வோர் இறுதியிலே சிவலோகம் சேர்ந்து வாழ்வர். மணிகன்னிகைத் தீர்த்தத்தில் இடப(வைகாசி)மாதத்தில் விசாக நட்சத்திரத்திலும், தட்சணாயத்தில் கிரகண காலத்திலும் நீராடுவோர்.  பல வகையான தானஞ் செய்த பயனைப் பெறுவர்.  சிவசந்நிதியில் இரண்டம்பு செல்லுந் தூரத்தில் வசிட்ட தீர்த்தத்தில் மூழ்குவோர் இறுதியிலே பிரமபதம் பெறுவர்.  சூரியோதயத்திலே இந்திரத் தீர்த்தத்திலே, பங்குனி மாசம் உத்தர நட்சத்திரத்தில் மூழ்குவோர் யாகபலத்தை அடைவர்.  பன்னிரண்டு  தினங்கள் மூழ்குவோர் சாகயாகபலனைப் பெறுவர்.   ஒரு மாதம் மூழ்குவோர் அசுவமேத யாகப் பலனைப் பெறுவர்.  அத்தீர்த்தத்தைப் பருகுவோர் அக்கினி nக்ஷாம பலனை அடைவர்.

இவ்வாறு திருப்பூவணத் திருத்தலத்தில் உள்ள தீர்த்தங்களையும், அவற்றில் எந்த நாட்களில் எவ்வாறு நீராட வேண்டும் என்பது பற்றியும், அவ்வாறு நீராடி இறைவனை வணங்குவதால் ஏற்படும் பலன்களை எல்லாம் குறிக்கும் வண்ணம் இச்சருக்கம் அமைந்துள்ளது.

 

18. நளன் கலிமோசனச் சருக்கம்

நளச்சக்கரவர்த்தி வேட்டையாடி முடித்து வேடரோடு மதியஉணவு உண்டு மரநிழலிலே நித்திரை செய்தான்.   அப்பொழுது,  மரத்திலிருந்து கீழே வீழ்ந்த பாம்பு தீண்ட, உடல் கருத்ததாகக் கனவு கண்டு விழித்தான். கனவிற்குப் பிராயச்சித்தம் செய்தும்  நளராசனுக்கு ஊக்கமுண்டாகவில்லை.  பின்பு நளராசன் சூதாடி எல்லாவற்றையுந் தோற்றுத் துன்பமுற்று, மனைவி புத்திரர்களை விட்டு வனம் புகுந்தான்.  புகுந்தபின்னர் நகுடன் என்பவன் பாம்பாகித் தீண்டினமையால் உடல் முழுவதும் ஒளி மழுங்கிக் கருமையுற்றான். பின்னர் நளராசன் இருதுபன்ன மன்னனிடம்  தேர்ப் பாகனாகச் சேர்ந்திருந்தான். அவனுடன் தமயந்தி சுயம்வரத்திற்குச் சென்று அவளை மனைவியாக அடைந்தான்.  மீண்டும் சூதாடி வென்று,  அரசாண்டு, மனைவி மைந்தருடன் நால்வகைச் சேனைசூழத் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான்.  பிறகு கேதாரம் காசி முதலிய தலங்களை அடைந்து, தீர்த்தமாடிச்  சிவலிங்க மூர்த்திகளைத் தரிசித்துக் கொண்டு, மதுரையை அடுத்துத்  திருப்பூவணம் சேர்ந்து சுவாமியையும் அம்மையையும் தரிசனஞ் செய்து வழிபட்டான். திருப்பூவணத்தின் மகிமையையும் அப்பதிக்குத் தான்வந்த பின்னர்த் தனக்குண்டாகிய மனநிம்மதியையும் உணர்ந்து  ஈசனை வணங்கி இத்திருப்பூவணத்தலத்திலேயே தங்கினான்,  தானங்கள் கொடுத்து  புட்பவனேசருக்கு மகோற்சவம் நடத்தினான்.

 

19. திருவிழாச் சருக்கம்

நளச்சக்கரவர்த்தி, திருப்பூவணேசருக்குத் திருவிழா நடத்தத் தொடங்கி, வளர்பிறையிலே புனர்பூச நட்சத்திரத்திலே இடபக் கொடியேற்றி  இரத உற்சவம் நடத்தித் தீர்த்த விழாவும்  செய்வித்தான்.  பின்பு சிவலிங்கப் பெருமானைத் தரிசித்து விடை பெற்றுக் கொண்டு தனது நகரத்தையடைந்து வாழ்ந்திருந்தான்.

அறியாமல் செய்த பாவங்கள் திருப்பூவணத் திருத்தலத்தை வணங்கிய உடனேயே ஒழிந்துவிடும்.  அறிந்து செய்த பாவங்கள்  இத்தலத்தில் ஒருமாத காலம் தங்கி இறைவனை வழிபட்டால்  நீங்கும்.  அந்தணரை நிந்தித்த பாவமுதலியன, அப்பதியில் ஆறுமாத காலம் தங்கி வழிபட்டால் தீரும்.  சித்திரை மாதத்தில் முழுமதி நாளில்  மணிகன்னிகைத் தீர்த்தத்திலே மூழ்கித் திருப்பூவணேசருக்குத் திருப்பூமாலை சாத்தினால், சிந்தித்தன எல்லாஞ் சித்திக்கும்.  வைகாசி மாதம் முழுமதிநாளில்  விசாக நட்சத்திரத்தில்  புட்பவனேசருக்குப் பட்டுப் பரிவட்டங் கொடுத்தவர், பாவங்கள் நீங்கிச் சந்ததியுடன் சக்கரவர்த்தியாய்  வாழ்ந்து, சிவலோகஞ் சேர்வர்.  உத்தராயணம், தட்சிணாயணம், மாதப்பிறப்பு காலம், “கிரகணகாலம்  முதலிய புண்ணிய காலங்களிலே மணிகன்னிகை முதலிய தீர்த்தங்களாடித் தானஞ் செய்வோர். பாவங்கள் ஒழிந்து  எட்டுவிதமான போகங்களை அனுபவிப்பர்”.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *