காணாமல் போனவர்கள்

பாஸ்கர்
ஒவ்வொரு வருடமாக
ஒன்றைத் தொலைத்துக்கொண்டு இருக்கிறேன்.
சென்ற வருடம் வரை வந்த பூம்பூம் மாட்டுக்காரன்
இப்போது வருவதில்லை.
சின்ன பிராயத்தில்
மலைப்பாம்பைச் சுற்றிய பிச்சைக்காரன்
எங்கிருப்பான் எனத் தெரியவில்லை.
திருவிழாவில் பயாஸ்கோப்பில்
ஊமைப்படம் காட்டியவன்
திரைக்குள் இருந்து வெளியே வரவில்லை.
பல்லி மிட்டாய் தாத்தாவுக்கு
அப்போதே வயது அறுபது.
ராப்பிச்சை என்ற
வர்க்கமே இப்போதில்லை.
தரையைத் தட்டும் நேபாளி
குச்சியோடு போனான்.
இருட்டையும் வெளிச்சத்தையும்
முழுங்கிக்கொண்டு
நிற்கிறது மரம் .
என்னைப் போல
இவர்களையும் அது
பார்த்துக்கொண்டு இருக்கிறது
இன்றும்.