விமலா ரமணி

அந்தப் பசு லட்சுமி எப்படியோ இவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிட்டது. ஆரம்பத்தில் எல்லாம் பானுவிற்கு லட்சுமியைப் பிடித்துத் தான் இருந்தது.அதைக் காளைக்கு விட்டு அதன் முதல் ஈற்றுக்காகக் காத்திருந்தவள்தான் அவள்.

சுத்தப் பசும் பால் இரண்டு வேளையும் குடிக்கக்  கனவு கண்டாள்!நுரை பொங்கப் பொங்கப் பாலைக் குடித்தால் வியாதியே வராதாமே!

ஆனால் திடீரென்று ஏற்பட்ட மாறுதல்…அவர்கள் வீட்டிற்கு ஒருவர் வந்திருந்தார்.தனக்கு வாஸ்து சாஸ்திரம் தெரியும்; மாடுகள் பற்றிய சாமுத்திரிகா லட்சணங்கள் தெரியும் என்று எல்லாம் சொல்லவே தன் லட்சுமியைப் பெருமையுடன் அவருக்குக் காட்டினாள் பானு.அங்கு தான் ஆரம்பமாயிற்று  லட்சுமியின் போதாத  காலம்….

‘மாட்டின் சுழி சரியில்லை..இந்த மாடு  இருக்கும் இடத்தில் துக்கங்கள் நிகழும்.. சாவுகள் ஏற்படும்…. இதை விற்றுவிடுவது தான் நல்லது. சுழி சரியில்லை’ என்றார்!

அவ்வளவு தான் மறு வாரமே லட்சுமியைச் சந்தைக்கு அனுப்பிவிட்டாள் பானு.. வந்த விலைக்கு விற்றுவிடுமாறு புரோக்கரிடம் சொல்லிவிட்டாள்.
முரளிக்கு ஆச்சர்யம்… முரளி, பானுவின் கணவன்…. ‘எப்படி இவளால் இப்படி நொடிப் பொழுதில்  மாற முடிகிறது?’

‘லட்சுமிக்குப் பருத்திக் கொட்டை அரைச்சு வைச்சியா? புல்லு வாங்கிட்டு வந்தியா? தவிடு இருக்கா?’ என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் கேட்டுத் தோட்டக்காரனை மிரட்டிய பானு, இப்போது லட்சுமியைப் பார்க்கவே  பயந்தாள்.

பானுவின் கையால் அகத்திக் கீரை வாங்கி உண்டு பழக்கப்பட்ட லட்சுமி, ஆகாரம் வாங்க மறுத்தது. பானுவின் வரவைப் பார்த்தபடி தோட்டத்துக் கதவைப் பார்த்தபடியே நின்றிருந்தது.

“பானு, லட்சுமியைப் பார்த்தா  பாவமா இருக்கு. இரை எடுக்க மாட்டேங்குது… போய்ப் பாரேன்….” முரளி கெஞ்சினான்.

“அடுத்த வாரச் சந்தையிலே அது விலை போகப் போகுது. அப்ப என்ன பண்றதாம்? பேசாம சும்மா இருங்க..”

‘அடுத்த வாரம் வரை  லட்சுமி உயிரோடு இருக்க வேண்டுமே….’

இவன் தான் பாவம் அதைத் தாஜா செய்து பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் போட்டு, தவிட்டுத் தண்ணீர் காட்டி ஒரு வழியாகச் சமாளித்தான்..

****************************

லட்சுமி போய்விட்டாள். அந்த வீட்டை விட்டுப் போய்விட்டாள். அவளை அன்று சந்தைக்கு அனுப்புமுன் முகத்தில் மஞ்சள் பூசி,கழுத்திலே கறுப்புக் கயிறு கட்டி,நெற்றியில் குங்குமம் வைத்து முரளி தான் வழியனுப்பி வைத்தான்.

பானு உள்ளே இருந்து வெளியே வரவே இல்லை. லட்சுமியைப் பார்த்தாலே சாவு வந்துவிடுமா என்ன? பாவம் லட்சுமி.. தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியபடி உள்ளே உள்ளே பார்த்தபடி பானு எங்காவது தென்படுவாளா என்று பார்ப்பது போல் பார்த்தது….

“ரொம்ப விலைக் குறைவா கேட்டா கொடுத்துடாதே… இங்கேயே கூட்டிட்டு வந்திடு.” முரளி, புரோக்கரிடம் சொன்னான். அவன் சிரித்தபடி  லட்சுமியை ஓட்டிக்கொண்டு  போய்விட்டான்.

பானு கல் நெஞ்சக்காரி வெளியே தலை காட்டவே இல்லை. எதுவுமே நடக்காதது போல்  வெளியே கிளம்பிவிட்டாள். இரவு ரொம்ப நேரம் கழித்துத் தான் புரோக்கர் வந்தான்.

அவன் மட்டும்தான் வந்தான்… லட்சுமியை விற்றுவிட்டானா?

“மாடு விலை போகல்லை அம்மா… சுழி சரியா இல்லைன்னு யாருமே வாங்கல்லை…. எப்படியோ யார் தலைலேயோ ஆயிரம் ரூபாய்க்குக் கட்டிட்டேன்..” என்றவன் தன் கமிஷனாக இருநநு¡று ரூபாய் பெற்றுக்கொண்டு போய் விட்டான்.

‘பத்தாயிர ரூபாய் விலை பெறும் மாடு .. வெறும் ஆயிரம் ரூபாய் மட்டும் தானா?’ முரளிக்குக் கோபம் வந்தது…. பணத்தை விட லட்சுமி மீது இவன் வைத்திருந்த பாசம் அதிகம்….. இவனால் எதுவுமே செய்ய முடியாது..இவன் சுழி அப்படி!

நாளைக்கு இவனுக்கும் சுழி சரியில்லை என்றால் பானு இவனையும் வீட்டை விட்டுத் துரத்தி விடுவாளோ?

****************************

லட்சுமி இருந்த மாட்டுத் தொழுவம் காலியாக இருந்தது.

சாணத்தின் வாசம், சந்தனத்தின் வாசம் போல் முரளிக்கு மணத்தது.

நாட்கள் நகர்ந்தன.

அன்று…….
அதிகாலை………..
வாசலில்  “அம்மா…மா…ஆ…..ஆ…..” என்கிற தீனமான குரல்……

என் லட்சுமியின் குரலா? முரளி பதறி அடித்துக்கொண்டு வாசலுக்கு ஓடினான்…..

வாசலில்?

வாயில் நுரை தள்ள, மூச்சு வாங்கியபடி லட்சுமி தான் வாசலில் நின்றுகொண்டிருந்தது.

இவன் ஓடியே போய் அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “லட்சுமி வந்துட்டியா?” என்று கேட்டான்.

பின்னாலேயே ஒருவன் மூச்சிரைக்க  ஓடி வந்தான்.

“மேய்ச்சலுக்குக் கூட்டிப் போக கவுத்தை அவுத்தேன் .. பிச்சிட்டு ஓடி வந்திடிச்சு.. ஒங்க வூட்டு மாடுங்களா?” என்றான் அவன்…

“யார் வீட்டு ஆளுப்பா நீ?” முரளி கேட்டான்….

“அதான்….நாலு தெரு தள்ளி இருக்காரே ஜோஸ்யரு அவுரு வூட்டு மாடுங்க….. ரெண்டு வாரம் முந்தித் தான் இதைச் சந்தையிலே வாங்கினாரு….இரையே எடுக்க மாட்டேங்குது….”

உள்ளே இருந்து பானு ஓடியே வந்தாள்… “எந்த ஜோஸ்யர்? வாஸ்து எல்லாம் பாப்பாரே, அவரா?”

“ஆமாங்க அவரே தான். இந்த மாட்டுக்குச் சுழி ரொம்ப நல்லா இருக்காம்…அதான் பிரியப்பட்டு வாங்கி இருக்காரு…ஐயாயிரம் ரூபாய்க் கொடுத்ததா சொன்னாரு….”

பானு, முரளியைப் பார்த்தாள்.

“இது எங்க வீட்டு மாடுதான். நான் வந்து அவரு கிட்டே சொல்லிக்கறேன். நீ போ”  என்று அவனை அனுப்பிய பானு, உள்ளே போய்  ஐயாயிர ரூபாயை  எடுத்து வந்தாள்.

ஏதோ புடவை வாங்க வேண்டும் என்று நேற்றுத்தான் இவன் கழுத்தை அறுத்துப் பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வரச் செய்தாள்!

“இப்பவே அந்த ஆளு மூஞ்சியிலே இந்தப் பணத்தை விட்டெறிஞ்சுட்டு வாங்க. ஒரு நல்ல மாட்டைக் குறைஞ்ச விலைக்கு வாங்க இந்த ஏற்பாடா? வரட்டும் அந்த புரோக்கர் பாத்துக்கறேன்….” என்றவள், லட்சுமியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

உள்ளே போன் ஒலித்தது…. முரளி தான் ரிஸிவரை எடுத்தான்…இவள் பயத்துடன் முரளியின் முகத்தைப் பார்த்தாள்…..ஏதாவது கெட்ட செய்தி…?

“என்ன ஜோசியர் போன்  பண்ணினாரா?”

“இல்லை…”

“பி..பின்..னே   என்ன?”

அவள் குரலில் ஒரு நடுக்கம்….

“அமெரிக்காவிலே இருந்து நம்ம மகள் நித்யா தான் போன் பண்ணினாள்…”

“என்ன சமாசாரம்? எல்லாரும் செளக்கியம் தானே?”

“கவலைப்படாதே. அவ இப்போ கன்சீவ் ஆகி இருக்காளாம்… மசக்கைத் தொந்திரவு ரொம்ப அதிகமாம்…. உன்னை உடனே கிளம்பி அமெரிக்கா வரச் சொல்றா…. லட்சுமி வந்த வேளை உனக்கு வெளிநாட்டுப் பயணம்…!”

பானு பிரமிக்கிறாள்…. சுழி மாட்டின் உடம்பில் இல்லை…. இவள் மனத்தில் தான்….. நாளை லட்சுமி சினையாகும். அழகான கன்றை ஈன்றெடுக்கும். நுரை பொங்கப்  பால் காலையும் மாலையும்…..

மீண்டும் லட்சுமிக்கு முத்த மாரிகள்…தன் எஜமானி அம்மாவின் திடீர் அன்பைப் புரிந்துகொள்ளத் தெரியாத லட்சுமி, தனக்குத் தெரிந்த தன் மொழியில் பதில் சொல்கிறது……

“அம்மா…ஆ  ஆ   ஆ”

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சுழி

  1. very nice story I pity for lakshmi

    Mostly all sasthirams r commercial

    Thanks for giving a good story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.