திருப்பூவணப் புராணம் – பகுதி – (24)

கி.காளைராசன்

49.திருவாலவாய்க்  காண்டம்

(வங்கிய சேகர மன்னனுக்கு  மதுரையின் எல்லைகளைக் காட்டுதல்)

சித்தரை மன்னன் பணிந்து வேண்டுதல்

2338    கறையணி  கண்டனைத்  தாழ்ந்து  கைதொழு

திறையவ  நின்னருள்  வலியி  னிந்நிலப்

பொறையது  வாற்றுவேற்கு  ஈண்டிப்  போதொரு

குறையதுண்  டாயினது  என்று  கூறுவான்

2339    இத்தனை  மாக்களும்  இருக்கத்  தக்கதாப்

பத்தனங்  காணவிப்  பதிக்க  ணாதியே

வைத்தறை  செய்திடும்  வரம்பு  காண்கிலேன்

அத்தமற்  றதனையின்  றறியக்  காட்டென்றான்

 

2340    நுண்ணிய  பொருளினு  நுண்ணி  தாயவர்

விண்ணிழி  விமானநின்  றெழுந்து  மீனவன்

திண்ணிய  வன்பினுக்  ​கெளிய  சித்தராய்ப்

புண்ணிய  அருட்கடல்  ஆகிப்  போதுவார்

 

சித்தர் வடிவில் சிவபெருமான் அருள் செய்தல்

2341    பாம்பி  னாற்கடி  சூத்திரங்  கோவணம்  பசுந்தாட்

பாம்பி  னாற்புரி  நூல்சன்ன  வீரம்வெம்  பகுவாய்ப்

பாம்பி  னாற்குழை  குண்டலம்  பாதகிண்  கிணிநாண்

பாம்பி  னாற்கர  கங்கணம்  பரிந்தனர்  வந்தார்

 

2342    வந்த   யோகர்மா  மண்டப  மருங்குநின்  றங்கைப்

பந்த  வாலவா  யரவினைப்  பார்த்துநீ  யிவனுக்

கிந்த  மாநக  ரெல்லையை  யளந்துகாட்டு  என்றார்

அந்த  வாளரா  வடிபணிந்   தடிகளை  வேண்டும்

 

2343    பெரும  விந்நகர்  அடியனேன்  பெயரினால்  விளங்கக்

கருணை  செய்தியென்  றிரந்திடக்   கருணையங்  கடலும்

அருண  யந்துநேர்ந்து  அனையதே  யாகெனப்  பணித்தான்

உருகெ  ழுஞ்சின  வுரகமும்  ஒல்லெனச்   செல்லா

 

பாம்பு எல்லையைக்  காட்டுதல்

2344    கீட்டி  சைத்தலைச்  சென்றுதன்  கேழ்கிளர்  வாலை

நீட்டி  மாநகர்  வலம்பட   நிலம்படிந்  துடலைக்

கோட்டி  வாலைவாய்  வைத்துவேற்  கொற்றவற்கு எல்லை

காட்டி  மீண்டரன்  கங்கண்  மானது  கரத்தில்

 

மதில் அமைத்தல்

2345    சித்தர்  தஞ்சின  கரத்தெழுந்  தருளினார்  செழியன்

பைத்த  வாலவாய்  கோலிய  படிசுவர்  எடுத்துச்

சுத்த நேமிமால்  வரையினைத்  தொட்டகழ்ந்  தெடுத்து

வைத்த  தாமென  வகுத்தனன்  மஞ்சுசூ  ழிஞ்சி

 

2346    தென்றி  சைப்பரங்  குன்றமும்  வடதிசை  இடபக்

குன்ற  முங்குடக்கு ஏடக  நகரமுங்  குணபாற்

பொன்ற  லங்கிழித்  தெழுபொழிற்  பூவண  நகரும்

என்ற  நாற்பெரு  வாயில்கட்கு  எல்லையா  வகுத்தான்

 

2347    அனைய  நீண்மதில்  ஆலவாய்  மதிலென  அறைவர்

நனைய  வார்பொழில்  நகரமு  மாலவாய்  நாமம்

புனைய  லாயதெப்  போதுமப்  பொன்னகர்  தன்னைக்

கனைய  வார்கழற்  காலினான்  பண்டுபோற்  கண்டான்

 

2348    கொடிகள்  நீண்மதின்  மண்டபங்  கோபுரம்  வீதி

கடிகொள்  பூம்பொழில்  இன்னவும்  புதியவாக்  கண்டு

நெடிய  கோளகை  கிரீடம்வா  ணிழன்மணி  யாற்செய்

தடிகள்  சாத்திய  கலன்களும்  வேறுவே  றமைத்தான்

 

2349    பல்வ  கைப்பெருங்  குடிகளின்  பரப்பெலா  நிரப்பிச்

செல்வ  வானவர்  புரந்தரன்  புரத்தினுஞ்  சிறப்ப

மல்லல்  மாநகர்  பெருவளந்  துளும்பிட  வளர்த்தான்

தொல்லை  நாட்குல  சேகரன்  போல்வரு தோன்றல்

 

திருவாலவாயான  படலம்  முற்றிற்று.

*****

 

 

 

திருவிளையாடற் புராணம். கழுவேறிய திருவிளையாடல்

 

வேசமுற விருந்த கழு திரைமுடிந்த வடமின்றும்

பூசுரர்கள் பணிந்தேத்தும் பூவணநன்னகர் மருங்கிற்

காசின் மேல் விளங்கியது கழுவர் படைவீடெனவே

–           செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி. திருவாலவாயுடையார் – பாடல் எண்.50

 

 

 

8. திருப்பூவணத்தைப் பற்றி

வேறு தலங்களில் வழங்கும் தேவாரப்  பாடல்கள்

 

பூவண மேவும் பூவண நாதர்

பூவண நாயகி புந்திகூர் வைகை                (சிவ.)

பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை

– ஆலம் பொழில் . திரு நா.

பூவணத்தவன் புண்ணியன் – குடமூக்கு – திருநா.

பூவணமோ புறம்பயமோ வன்றாயிற்றால் – ஆரூர். திருநா.

புகலூரும் பூவணமும் பொருந்தினான்காண் – ஆருர். திருநா.

பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை – வெண்ணியூர். திருநா.

 

புகலூரும் பூவணமும் பொருந்தினாரும் – வெண்ணியூர். திருநா.

திருச்செம்பொன்பள்ளி திருப்பூவணம் – அதிகை. திருநா

புத்தூருறையும் புனிதனைப் பூவணத் தெம் போரேற்றை – பொது. திருநா

புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர் – பொது. திருநா

*****

 

 

தனித் தேவாரப் பாடல்கள்

 

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்

பதியிலானே பத்தர் சித்தம் பற்றுவிடா தவனே

விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென்  றிவர்கள்

மதியலாதா ரென் செய்வாரோ  வலிவலமே  யவனே

– வலிவலம். திருஞானசம்பந்தர்

 

குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம்

போற்றூரடி  யார்வழி  பாடொழியாத்  தென்

புறம்பயம் பூவணம் பூழியூரும்

காற்றூர்வரை  யன்றெடுத்  தான்முடிதோ

ணெரித்தானுறை  கோயிலென் றென்றுநீகருதே

– பொது. திருஞானசம்பந்தர்

 

 

கோவணமுடுத்தவாறுங் கோளர வசைத்தவாறும்

தீவணச் சாம்பர்பூசித் திருவுரு விருந்தவாறும்

பூவணக் கிழவனாரைப் புலியுரி யரையனாரை

ஏவணச் சிலையினாரை யாவரே யெழுதுவாரே

– பொது. திருநாவுக்கரசர்

 

பூவ ணத்தவன்  புண்ணிய னண்ணியங்

காவ ணத்துடை யானடி யார்களைத்

தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்

கோவ ணத்துடை யான்குட முக்கிலே

 

தேனார் புனற்கெடில  வீரட்டமும்

திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம்

வானோர் வணங்கும் மணஞ்சேரியும்

மதிலுஞ்சை மாகாளம் வரா ணாசி

ஏனோர்க ளேத்தும் வெகு  ளீச்சரம்

இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக்

கானார் மயிலார் கருமாரியும்

கறைமிடற்றார் தம்முடைய காப்புக்களே

 

கோவணமோ தோலோ உடையாவது

கொல்லேறோ வேழமோ ஊர்வதுதான்

பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்

பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமையே

தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்

திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்

ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்

அறியேன்மற் றூராமா  றாரூர் தானே

 

பொன்நலத்த நறுங் கொன்றைச் சடையி னான்காண்

புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண்

மின்நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்

வேதியன்காண்  வெண்புரிநூல்மார்பி னான்காண்

கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்

கோலமா நீறணிந்த மேனி யான்காண்

செந்நலத்த வயல்புடைசூழ் திருவா  ரூரில்

திருமூலட் டானத்தெஞ்  செல்வன் தானே

 

பொருங்கைமத கரியுரிவைப் போர்வை யானைப்

பூவணமும்  வலஞ்சுழியும் பொருந்தி னானைக்

கரும்புதரு கட்டியையின் னமிர்தைத் தேனைக்

காண்பரிய செழுஞ்சுடரைக் கனகக் குன்றை

இருங்கனக மதிலாரூ மூலட்  டானத்

தெழுந்தருளி யிருந்தானை யிமையோ ரேத்ததும்

அருந்தவனை அரநெறியி லப்பன் தன்னை

அடைந்தடியேன் அருவினைநோய் அறுத்தவாறே

 

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்

பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க

தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான்

தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்

பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்

பொருப்பதன்கீழ் நெரித்தருள் செய் புவனநாதர்

மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்

வீழி மிழலையே மேவினாரே

 

பொன்னிலங்கு கொன்றையந்தார் மாலை  சூடிப்

புகலூரும் பூவணமும் பொருந்தி னாருங்

கொன்னிலங்கு மூவிலைவே லேந்தி னாருங்

குளிராந்த செஞ்சடை யெங்  குழக னாருந்

தென்னிலங்கை மன்னவர்கோன் சிரங்கள் பத்துத்

திருவிரலா லடத்தவனுக் கருள்செய் தாரும்

மின்னலங்கு நுண்ணிடையாள் பாகத் தாரும்

வெண்ணியமர்ந் துறைகின்ற விகிர்த னாரே

 

புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர்

புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர்

வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல்

வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி

நிலமலிநெய்த் தானத்தோ டெத்தானத்தும்

நிலவு பெருங் கோயில்பல கண்டால் தொண்டீர்

கலிவலிமிக்  கோனைக்கால் விரலாற் செற்ற

கயிலாய நாதனையே காண  லாமே

 

ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ

டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப்

பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப்

பராய்த்துறையும் வெண் காடும்பயின்றான் தன்னைப்

பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப்

பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச்

சிந்தியவெந்  தீவினைகள் தீர்ப்பான தன்னைத்

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே

*****

 

மீனாட்சியம்மை குறம்

–   குமரகுருபரசுவாமிகள்  பாடியருளியது.

 

கூடல்புன  வாயில்கொடுங்  குன்றுபரங்  குன்று

குற்றாலம்  ஆப்பனூர் பூவணநெல்  வேலி

ஏடகமா  டானைதிருக்  கானப்பேர்  சுழியல்

இராமேசந்   திருப்புத்தூ  ரிவைமுதலாந்  தலங்கள்

நாடியெங்க  ளங்கயற்கண்  ணாண்டதமிழ்ப்   பாண்டி

நன்னாடும்  பிறநாடும்  என்னாடதாகக்

காடுமலையுந்  திரிந்து   குறி சொல்லிக்  காலங்

கழித்தேனென்  குறவனுக்குங்  கஞ்சிவாரம்மே

*****                                                               –

 

தனிப்பாடல்

தலையி  லிரந்  துண்பான்  தன்னுடலிற்  பாதி

மலைம  களுக்  கீந்து  மகிழ்வான்

உலையில்  இருப்புவண  மேனியனார்  என்றாலோ

ஆம் ஆம்  திருப்பூவணநாதர் திறம்

 

திருப்பூவணத்தில் தாசி ஒருவர் (பெயர் குறிப்பிடப்பெறவில்லை) தினமும் திருப்பூவணநாதர் மேல் பாடல் ஒன்று பாடிமுடித்த பின்னரே தூங்கும் வழக்கம் உடையவர்.  ஒரு அவர் இப்பாடலின் முதல் இரண்டு அடிகளை மட்டும் பாடிவிட்டுப்  பாடலை முடிக்காமல் நிறுத்தி விட்டார். அப்போது அவர் வீட்டில் களவு செய்யச் சில கள்வர்கள் வந்திருக்கின்றனர்.  வருமையின் காரணமாகப் பொருள் வேண்டிய   “புலவர் மருதூரந்தாதி  தலைமலைகண்டதேவர்” என்பவர் கள்வர்களுக்குத் துணையாக வந்திருக்கிறார்.  தாசி பாடிய பாடல் பாதியில் நின்றதைக் கேட்ட புலவர். மூன்றாவது வரியைப் பாடியுள்ளார்.  உடனே  தாசி நான்காவது வரியைப் பாடிப் பாட்டை முடித்துள்ளார்.    இவ்வகையில் கள்வர்களைக் களவு செய்யவிடாமல் தடுக்கும் வகையிலும், தாசி பாடிய பாடல் நிறைவு பெறும் வகையிலும், புலவர் செயலாற்றியுள்ளார்.    இதனைப் பாராட்டிய தாசி தன் வீட்டில் களவு செய்ய வந்த புலவருக்குப் பரிசுகள் வழங்கி  வழியனுப்பி வைத்துள்ளார்.  –   அடிகளாசிரியர். சரசுவதி மகால் வெளியீடு, ஓலைச் சுவடிகள் பற்றிய கையேட்டில் உள்ள குறிப்பு.

 

 

9. நன்றியுரை

 

இந்நூலாக்கத்திற்கு என்னை நெறிப்படுத்திய எனது ஆசான் அமரர் முனைவர் இரா.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும், நல்லாசிகள் வழங்கி என்னை அருள்நெறிப்படுத்திய சென்னை “குமுதம்nஜாதிடம்” ஆசிரியர் உயர்திரு.A.M.ராஜகோபாலன் அவர்களுக்கும், நான் காணும் போதெல்லாம் என்கையில் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் செய்து என்னை நல்லாற்றுப்படுத்திய காரைக்குடி பேராசிரியர். தே.சொக்கலிங்கம் அவர்களுக்கும், இப்புத்தகம் சிறப்பாக வெளிவரத் தேவையான தகவல்களைத் தந்து உதவிய ஸ்தானிகர்கள் திரு.தெய்வசிகாமணி பட்டர், திரு.சுப்பிரமணியன் பட்டர், திரு.செண்பகப் பட்டர் அவர்களுக்கும்,   புகைப்படங்கள் எடுப்பதில் உதவிய என்தங்கை திருமதி.மு.கலையரசி அவர்களுக்கும், தட்டச்சு செய்வதில் உதவிய என் உடன்பிறவாச் சகோதரி சபா.கீதா (கண்காணிப்பாளர், அழகப்பா பல்கலைக்கழகம்) அவர்களுக்கும், பிழைத் திருத்தத்தில் உதவிய பேராசிரியர் முனைவர்.S.இராசாராம் மற்றும் எனது உறவினரான பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் திரு.க.பழனியப்பன் அவர்களுக்கும்,  நூலை அச்சிட்டு வெளியிடப் பணஉதவி வழங்கிய திருப்பதி தேவஸ்தானத்திற்கும், நூலை வெளியிடத் துணைசெய்த சிவகங்கை தேவஸ்தான மேலாளர் திரு.பா.இளங்கோ மற்றும் தேவஸ்தான அலுவலர்கள் அனைவருக்கும்,   இந்நூலை  வெளியிடப் பெரிதும் உதவி செய்த பேராசிரியர். முனைவர். ரெ.சந்திரமோகன் அவர்களுக்கும், திரு.சுப.லெட்சுமணன், திரு.தி.கண்ணன் மற்றும் பல்கலைக்கழகத் தொலைபேசி இணைப்பாளர் திரு.செ.கருணாநிதி அவர்களுக்கும்,  எனக்குப் பலவகையிலும் உதவியாய் இருந்த என்னுடன் பணியாற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், எனது அண்ணன் கி.நாகரெத்தினம், தம்பி கி. சுந்தரபாண்டியன் (காவல்துறை) அவர்களுக்கும், எனது மூத்த மைத்துனர் மணலூர் வெள்ளைச்சாமி தங்கை புஸ்பலதா, இரண்டாவது மைத்துனர் திரு. முத்துப்பாண்டி, தங்கை கலையரசி, மூன்றாவது மைத்துனர் திரு. சூரக்குமார் தங்கை நிர்மலா ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலை அச்சிடத்தேவையான தொகையைக் கடனாக வழங்கி உதவிய அழகப்பா பல்கலைக்கழக வளாக இந்தியன்வங்கி நிர்வாகத்தினருக்கும். இந்நூலைச் சிறப்பான முறையில் அச்சிட்டு உதவிய மதுரை பிரிண்ட்டெக்  அச்சகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலை வெளியிடுவதற்கான என் உழைப்பில் சரிபாதி எனது மனைவி நாகலெட்சுமியையும் மறுபாதி என்மகள் நித்யாவையும் சேரும்.

 

மின்னாக்கம் செய்யப்பட்ட திருப்பூவணப் புராணத்தை வெளியிட்டு உதவிய தலைவர் முனைவர்.நா.கண்ணன் அவர்களுக்கும், செயலர் அம்மையார் திருமதி.சுபாஷினி அவர்களுக்கும், வல்லமை மின்னிதழ் ஆசிரியர் திருமதி.பவள சங்கரி அவர்களுக்கும் எனது உளம் கனிந்த நன்றி.

இவர்கள் அனைவரும் திருப்பூவணநாதர் திருவருளால் அனைத்து நலன்களையும் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.

 

(கி. காளைராசன்)


உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க