முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையல்ல, தமிழனின் உரிமைப் பிரச்சனை – சீமான் அறிக்கை – செய்திகள்

0

முல்லைப் பெரியாறு அணை பற்றியும் ’டாம் 999’ திரைப்படம் பற்றியும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை :

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசிப் பேசி இரு மாநில மக்களுக்கும் இடையே ஒரு பகை உணர்வை ஏற்படுத்திவரும் நிலையில், ‘டாம் 999’ என்ற பெயரில் ஒரு திரைப்படமாகவும் எடுத்து வெளியிட்டிருப்பது தமிழர், மலையாளிகள் இடையே மோதலை உண்டாக்க வேண்டும் என்கிற சூழ்ச்சியாகவே தெரிகிறது.

முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்பதை உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மத்திய நீர்வள அமைச்சகத்தின் நிபுணர் குழு ஆராய்ந்து அறிக்கை அளித்தது.  அதன் அடிப்படையில்தான் முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்கும் அளவை 136 அடியில் இருந்து 142 அடியாக முதல் கட்டமாக உயர்த்தலாம் என்றும், அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி முழு நீர்தேக்க அளவான 152 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2005ஆம் ஆண்டிலேயே இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்து சண்டித்தனம் செய்துவரும் கேரள அரசு, தனது நீர்ப்பாசன சட்டத்தில் திருத்தம் செய்து, நீதிமன்றத் தீர்ப்பையே அவமதித்தது.  இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, அணையின் பலத்தை முழுமையாக சோதித்து அறிக்கை அளிக்குமாறு மீண்டும் உத்தரவிட்டதையடுத்தே நீதிபதி ஆனந்த் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழு முல்லைப் பெரியாறு அணையை சமீபத்தில் சோதனையிட்டது.  அப்போது அணை பலவீனமாக உள்ளது என்பதற்கு பொறியியல் ரீதியாக ஒரு ஆதாரத்தையும் கேரள அரசால் அளிக்க முடியவில்லை.  தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியாகவும் நிரூபிக்க முடியாத கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் அணையல்ல பிரச்சனை, அதில் தேக்கப்படும் நீர்தான் பிரச்சனை என்று கூறி வழக்கின் அடிப்படையில் இருந்தே மாறுபட்டுப் பேசியது.  இதுதான் கேரள அரசின் சட்டப்பூர்வ நிலை.

எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்துவிட்ட கேரள அரசு, இப்படி குறுக்கு வழியை கையாண்டு திரைப்படம் எடுத்து பெரியாறு அணையை உடைக்கும் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறது.  அச்சுதானந்தம் முதல்வராக இருந்தபோது, இதேபோல் ஒரு சிடி-ஐ வெளியிட்டு, அதை கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்குகளில் எல்லாம் காட்டி, அம்மாநில மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தியது.  இப்போது ஐக்கிய அரசு அமீரகத்துடன் இணைந்து, இந்திய கடற்படையில் பணியாற்றி ஒரு மலையாளியைக் கொண்டு திரைப்படமாகவே எடுத்து வெளியிட்டிருக்கிறது.  தொழில்நுட்ப ரீதியாகவும், பொறியியல் ரீதியிலும் நிரூபிக்க முடியாத அரசு, சினிமா எடுத்து நிரூபிக்கப் பார்ப்பது கோமாளித்தனமானது.

கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் ஒன்றை உணர்ந்திடல் வேண்டும்.  தமிழர்களுக்கு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை அல்ல, அது தமிழினத்தின் உரிமைப் பிரச்சனை. தமிழ்நாட்டிற்காக, தமிழனின் வாழ்விற்காக, தமிழர்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்று நினைத்த ஆங்கிலேயர் பென்னி குயிக் எனும் மாமனிதனால் கட்டப்பட்டது.  அதனை அகற்ற ஒருபோதும் தமிழன் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.  அண்டை மாநிலத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தமிழருக்குச் சொந்தமான பாலக்காடு மாவட்டமும், தேவி குளம், பீர்மேடு ஆகிய ஒன்றியங்களும், கற்புக்கரசி கண்ணகி கோயில் மீதும் கேரளா சொந்தம் கொண்டாடி வருவதை தமிழன் அனுமதித்துக் கொண்டிருக்கிறான்.  தமிழனின் தாராள குணத்தை தோண்டிப் பார்க்க முற்பட்டால், அது எல்லைகளை மாற்றியமைக்கும் அளவிற்கு பிரச்சனை பெரிதாகும் ஆபத்து ஏற்படும் என்பதை அண்டை மாநில அரசும், அரசியல்வாதிகளும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அழுத்தத்துடன் நாம் தமிழர் கட்சி கூறிக்கொள்கிறது.

இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் எந்தத் திரையரங்கில் திரையிட்டாலும் அதனை எதிர்த்து ஜனநாயக வழியில் நாம் தமிழர் கட்சி முற்றுகைப் போராட்டம் நடத்தும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.