கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 59

-மேகலா இராமமூர்த்தி
வண்டின் உருவினொடு அசோகவனம் சென்ற வீடணன், அங்கே சீதை யாதோர் அபாயமுமின்றி உயிரோடிருப்பதைக் கண்டு, அவளை இந்திரசித்தன் கொன்றதுபோல் காட்டியது மாயச்செயல் என்பதைத் தெற்றென உணர்ந்துகொண்டான். அத்தோடு, நிகும்பலை என்ற கோயிலில் இந்திரசித்தன் வேள்வி செய்துகொண்டிருக்கின்றான் என்பதனையும் அறிந்துகொண்டு தன் இருப்பிடம் திரும்பியவன், அருந்ததி அனைய கற்பினளான சீதை நலமாக உள்ளாள் என்பதையும், நிகும்பலை வேள்விசெய்து இராம இலக்குவரை ஒழிக்க இந்திரசித்தன் திட்டமிட்டுச் செயலில் இறங்கியிருப்பதையும் இராமனுக்குத் தெரிவித்தான்.
சீதை நலமாக உள்ளாள் எனும் செய்தியறிந்து மகிழ்ந்த இராமன், அவ்வுண்மையை அறிந்துவந்து சொன்ன வீடணனை மெய்யுறத் தழுவிக்கொண்டான். அப்போது வீடணன், ”அண்ணலே! இந்திரசித்தன் நிகும்பலை வேள்வியை வெற்றியோடு முடிப்பானாயின் அவனை யாரும் வெல்லவியலாது; வெற்றியும் அரக்கர் படைக்கே வசமாகும். ஆகவே, நான் இப்போதே இலக்குவனோடு அங்குச்சென்று அவ்வேள்வியை அழித்துவருகின்றேன்; விடை தருக!” என்றான்.
“நன்று! அவ்வாறே செய்வீர்!” எனவுரைத்த இராமன், இலக்குவனுக்குச் சில அறிவுரைகளை வழங்கினான்.
”ஐய! இந்திரசித்தன் உன்மீது பிரமாத்திரத்தை விடுவானாயின் அதனை விலக்குதற்குப் பொருட்டு நீ பிரமன் கணையைச் செலுத்தலாமேயொழிய மற்று எக்காரணத்திற்காகவும், வானுலகையும் இவ்வுலகையும் ஒருசேர அழிக்கவல்ல பிரமன் கணையை அவன்மீது எய்யாதே! அவ்வாறே சிவபெருமானின் பாசுபதாத்திரம், திருமாலின் நாராயணாத்திரம் ஆகியவற்றையும் இந்திரசித்தன் ஏவினால் அவற்றின் ஆற்றலை அழித்தற்பொருட்டு நீ பயன்படுத்து; இல்லையேல் பயன்படுத்தாதே! உன் வில்லாற்றலின் துணைகொண்டே அவனை வீழ்த்து!” எனச்சொல்லித் திருமாலின் வில்லையும் கவசத்தையும் அளித்தான். இந்த வில்லும் கவசமும் அகத்தியரைக் கானத்தில் இராமன் சந்தித்தபோது அவர் அவனுக்கு அளித்தவை.
பகைவன் எத்தகைய ஆயுதத்தையும், மாய மந்திரங்களையும் செய்து தம்மையும் தம் படையினரையும் வீழ்த்திவிடக்கூடும் என்பதை அறிந்திருந்தும்கூட உலகவுயிர்களுக்குத் துன்பம் தரத்தக்க கணைகளை நாமாக முதலில் செலுத்தக்கூடாது; தற்காப்பின் பொருட்டு மட்டுமே செலுத்தவேண்டும் என்பதைப் பல சமயங்களில் இராமன் திரும்பத் திரும்ப இலக்குவனிடம் வலியுறுத்துவதைக் காண்கையில், எத்தகைய சூழலிலும் அறமல்லாத வழியில் போரிட்டு வெற்றியை ஈட்டவிரும்பாத – புகழை நாட்டவிரும்பாத ”அறத்தின் நாயகன்” இராமன் என்பது நமக்குத் தெளிவாய்ப் புலப்படுகின்றது.
அண்ணனை வலம்வந்து வணங்கிய இலக்குவன், “இந்திரசித்தனின் தலையோடு மீள்வேன்!” எனச் சூளுரைத்துச் சென்றான்.
”தன்னால் பிரிந்துவாழ இயலாதவனாகிய தன் தம்பி இலக்குவன் விரைந்து செல்பவன், உடம்பினை விட்டுப் பிரிதலறியாத உயிரைப் போன்று மறைந்த அளவில், இராமனாகிய தான் வளர்ந்துவருகின்ற இளம்பருவத்தில் விசுவாமித்திரரின் உயர்ந்த வேள்வியைக் காத்தற்பொருட்டுப் பிரிந்துசெல்வதைக் கண்ணுற்ற தயரதனை ஒத்தான்” என்று இலக்குவனைப் பிரிந்த இராமனின் நிலையை இராமனைப் பிரிந்த தயரதனோடு ஒப்பிட்டுக் காட்டுகின்றான் கம்பன்.
தான் பிரிகின்றிலாத தம்பி வெங்கடுப்பின் செல்வான்
ஊன் பிரிகின்றிலாத உயிர் என மறைதலோடும்
வான்பெரு வேள்வி காக்க வளர்கின்ற பருவநாளில்
தான் பிரிந்து ஏகக் கண்ட தயரதன் தன்னை ஒத்தான். (கம்ப: நிகும்பலை யாகப் படலம் – 8947)
அரக்கர் சேனையும் நிகும்பலையை அடைந்த குரக்குச் சேனையும் கைகலந்தன. இலக்குவன் புரிந்த போரினால் அரக்கர்குழாம் அழிந்தது; அரக்கரின் இறந்த உடல்களும் அறுபட்ட தலைகளும் ஓமகுண்டங்களில் வீழ்ந்ததனால், ஓமத் தீ அவிந்தது; இந்திரசித்தன் செய்யத் தொடங்கிய யாகம் சிதைந்தது.
அதனைத் தொடர்ந்து இந்திரசித்தனின் யாகம் சிதைந்தது குறித்தும், அயோத்திக்குப் போர்செய்யப் போவதாய்ச் சொன்ன அவன் பொய்யுரை குறித்தும் அனுமன் பகடிசெய்ய, அதுகேட்டுச் சினங்கொண்ட இந்திரசித்தன், ”என்னால் உயிரிழந்து மருந்துகளின் உதவியால் பிழைத்த நீவிர் மீண்டும் என் கையால் சாவது உறுதி!” என்று முழக்கமிட்டுத் தேரேறிப் போரைத் தொடங்கினான். அவனை எதிர்ந்த வானரப் படை அழிய, வீடணனின் அறிவுரைப்படி இந்திரசித்தனோடு மீண்டும் போருக்கு வந்தான் இலக்குவன். நெடுநேரப் போரில் சலிப்புற்ற இந்திரசித்தன், காற்றின்படையை ஏவ, அதே காற்றின்படை கொண்டு அதனைத் தடுத்தான் இலக்குவன்; இந்திரசித்தன் மீண்டும் பிரமாத்திரத்தை ஏவத் தன்னைக் காத்துக்கொள்ளும்பொருட்டுப் பிரமாத்திரத்தை ஏவி அதனைத் தடுத்தான் இலக்குவன். அடுத்து ஆற்றல்மிகு நாராயணாத்திரத்தை இலக்குவன்மேல் செலுத்தினான் இராவணன் சேய். தன்னைத் திருமாலாகவே எண்ணிக்கொண்டு அதனெதிர் சென்ற இலக்குவனை அக்கணை தாக்காது விலகி, அவனை வலம்செய்து கொண்டு ஆகாயம் சென்றவிந்தது.
அடுத்து, சிவன்படையை இந்திரசித்தன் செலுத்த, அதனை அழித்தற்கு இலக்குவனும் சிவன்படையை ஏவ இந்திரசித்தனின் அத்திரத்தை அது விழுங்கியது.
இராமன் சொன்னதுபோலவே தானாகக் கொடிய படைகள் எதனையும் இந்திரசித்தன்மீதோ அரக்கர்படைமீதோ ஏவவில்லை இலக்குவன்; தன்மீது இந்திரசித்தன் கொடியபடைகளை ஏவித் தன்னையழிக்க முற்பட்டவேளையில் மட்டும் அதே படைகளை ஏவித் தன்னையும் உலகையும் அழிவினின்று காத்தான் என்பதை அறிகின்றபோது ”இவனல்லவா தமையன்சொல் தட்டாத தம்பி!” என்று பாராட்டத் தோன்றுகின்றது.
தன் அத்திரங்கள் பயனற்றதுபோனது இந்திரசித்தனுக்கு எரிச்சலூட்டியது. இலக்குவன் அருகில் தன் சிறியதாதை வீடணன் நிற்பதைக் கண்டபோது தன் முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு நீராய்ப் போனதற்கு இவன்தானே காரணம் எனும் சீற்றமும் உடனெழுந்தது; வீடணனை வெகுண்டு நோக்கிய இந்திரசித்தன், ”குளிர்ந்த தாமரை மலர்மேல் உள்ளவனாகிய பிரமனை முதல்வனாகக் கொண்ட வேதியர்குலத்துக்கெல்லாம் தனிமுதல் தலைவனாகிய உன்னைத் தேவர்கள் வந்து வணங்குவர்; ஆனால் நீயோ இழிந்த மனிதர்களுக்கு அடிமைச்சேவகம் செய்து நின் தமையன் இராவணனின் அரசச் செல்வத்தை ஆளுதற்கு உள்ளாய்; இனி உனக்கு மானம் என்ன இருக்கின்றது? அப்பெருமை போரில் இறந்தொழியும் எங்களோடு அடங்கி ஒழிந்தது!” என்று இகழ்ந்துரைத்தான்.
பனிமலர்த் தவிசின் மேலோன்
பார்ப்பனக் குலத்துக்கு எல்லாம்
தனிமுதல் தலைவன் ஆன
உன்னைவந்து அமரர் தாழ்வார்
மனிதருக்கு அடிமையாய் நீ
இராவணன் செல்வம் ஆள்வாய்
இனிஉனக்கு என்னோ மானம்
எங்களோடு அடங்கிற்று அன்றே. (கம்ப: நிகும்பலை யாகப் படலம் – 9100)
அதுகேட்ட வீடணன், ”நான் அறத்தைத் துணையாகக் கொள்வேனேயன்றி பாவத்தையும் அதனால் வரும் பழியையும் துணையாகக் கொள்ளேன். எப்போது இராவணன் பிறனில் விழையும் பிழையைச் செய்தானோ அப்போதே நான் அவனுடைய பின்னோனாய்ப் (தம்பி) பிறவாதவன் ஆனேன்” என்றான்.
தொடர்ந்தவன்…“நான் மதுவினை மாந்தவில்லை; பொய்ம்மொழி புகலவில்லை; பிறர்பொருளை வஞ்சத்தில் கவரவில்லை; மாயச் செயலால் எவரையும் அழிக்கும் செயலை மனத்திலே குறிக்கவில்லை; என்பால் எவரும் எக்குற்றமும் கண்டிலர்; ஏன்… நீங்களெல்லாரும் என்னை நன்கு அறிந்தவர்கள்தாமே; என்பால் ஏதேனும் குற்றமுளதோ? கற்புடைய பெண்டிரிடத்து முறைதவறி நடந்தவரைவிட்டு நான் நீங்கியது பிழையான செயலோ?” என்றான் இந்திரசித்தனைப் பார்த்து.
உண்டிலென் நறவம் பொய்ம்மை உரைத்திலென் வலியால் ஒன்றும்
கொண்டிலென் மாய வஞ்சம் குறித்திலென் யாரும் குற்றம்
கண்டிலர் என்பால் உண்டே நீயிரும் காண்டிர் அன்றே
பெண்டிரின் திறம்பினாரைத் துறந்தது பிழையிற்று ஆமே. (கம்ப: நிகும்பலை யாகப் படலம் – 9106)
அதற்குத் தக்க மறுமொழி கூறவியலாத இந்திரசித்தன், சிற்றப்பன் வீடணனைக் கொல்லும்பொருட்டுச் சிறகுடைய கருடனையொத்த அம்பொன்றை அவன் கழுத்தைநோக்கிச் செலுத்த, அதனைத் தன் அம்பால் இடைவெட்டி முறித்தான் இலக்குவன். அடுத்து வேற்படையை இந்திரசித்தன் வீடணனை நோக்கி ஏவ, அதனையும் தன் வேற்படையால் வீழ்த்தினான் இலக்குவன்.
இந்திரசித்தனின் தேர்ப்பாகனையும் குதிரைகளையும் காற்றினும் கடுகிச்சென்று அழித்தான் வீடணன். சிதைந்த தேரில் நின்றவண்ணம் எதிர்நின்றோர் மீதெல்லாம் அம்புமழை பொழிந்துவிட்டு ஆகாயத்தில் மறைந்த இந்திரசித்தன், ஒருவருக்கும் தெரியாமல் இராவணனைச் சென்றடைந்தான்.
இந்திரசித்தனின் தளர்ந்த தோற்றத்தைக் கண்ட இராவணன், ”கருடன் நெருங்கியதால் படம் ஒடுங்கின பாம்புபோல் தோன்றுகின்றாய்! நிகழ்ந்தது என்ன? சொல்!” என்றான்.
நான் செய்த மாயங்கள், யாக முயற்சி அனைத்தையும் உன் தம்பிவாயிலாக அறிந்து இலக்குவன் தடுத்துவிட்டான்; மூன்று தெய்வப்படைகளை வீசினேன்; அவற்றையும் முறியடித்துவிட்டான். இதுவரை விடாது வைத்திருந்த நாராயணப்படையை ஏவினேன்; அதுவோ இலக்குவனைத் தாக்காது வலம்செய்து போயிற்று! நம் அரக்கர்குலம் செய்த பாவத்தினால் நீ கொடுமையான பகையைத் தேடிக்கொண்டாய்; இலக்குவன் நினைத்தால் அவன் ஒருவனே உலகம் மூன்றையும் அழிப்பான்” என்றான் இந்திரசித்தன் இராவணனிடம்.
மந்திராலோசனைக் கூட்டங்களில் இராம இலக்குவரை அற்பமாய்க் கருதி இறுமாப்புடன் பேசியவனான இந்திரசித்தன், ”கெட்ட பின்பு ஞானி” என்பதுபோலப் போர்க்களத்தில் தன் வரபலம் தவபலம் தெய்வப்படைகளின் பலம் ஒன்றும் பலிக்காதது கண்டு உண்மைநிலை உணர்ந்து தன் தந்தையிடம் பேசிய பேச்சு இது.
”ஆதலால் தந்தையே! அச்சீதையினிடத்தில் வைத்த ஆசையை விட்டுவிடு! அவ்வாறு விடுவாயேல் அவர்கள் சீற்றம் தணிவர்; நம்மோடு போர்செய்யாது போகவும் செய்வர்; அத்தோடு நாம் செய்த தீமையையும் பொறுத்துக்கொள்வர்; உன்மேல் வைத்த அன்பினால் இதைச் சொல்லுகின்றேன்; அவர்களுக்கு அஞ்சிச் சொன்னதாக எண்ணாதே!” என்றான் உலகத்தைப் போர்களால் கலக்கிய வீரனான இந்திரசித்தன்.
ஆதலால் அஞ்சினேன் என்று அருளலை ஆசைதான்அச்
சீதைபால் விடுதிஆயின் அனையவர் சீற்றம் தீர்வர்
போதலும் புரிவர் செய்த தீமையும் பொறுப்பர் உன்மேல்
காதலால் உரைத்தேன் என்றான் உலகுஎலாம் கலக்கிவென்றான். (இந்திரசித்து வதைப் படலம் – 9121)
கும்பகருணன் போருக்குப் புறப்படுவதற்கு முன்பாகத் தன் அண்ணனுக்கு நல்லறிவு கொளுத்த விரும்பி, ”இராம இலக்குவரோடு பகையொழி; சீதையை அவர்களிடத்து ஒப்படை” என நன்மொழி பகன்றான்; அதனை இராவணன் ஏற்கவில்லை. இப்போது போர்கள் பலபுரிந்து இராம இலக்குவர் மனிதரினும் மேம்பட்ட ஆற்றலாளர்; அவர்களை வெல்லுதல் அரிது என்பதனைத் தன் அனுபவத்தின் வாயிலாய் உணர்ந்த இந்திரசித்தனும் ”சீதையை விடுத்தல் அரக்கர் இனத்துக்கு நலம் பயக்கும்” என இராவணனுக்கு அதே நன்மொழிகளை உரைக்கக் காண்கின்றோம். ஆனால், கும்பனின் மொழிகளை எள்ளி நகையாடியது போலவே இந்திரசித்தனின் மொழிகளையும் நகையாடிப் புறக்கணித்த இராவணன்,
”ஏற்கனவே போருக்குச் சென்று இறந்தோர் இப்பகையை முடிப்பர் என்றோ, பின்பு போர்செய்பவர்கள் பகைவரை வென்று மீள்வர் என்றோ, நீ எனக்குப் போரில் வெற்றிதேடித் தந்துவிடுவாய் என்றோ கருதி நான் இப்பகையைத் தேடிக்கொள்ளவில்லை. என்னையே நோக்கி (என் வலிமையை எண்ணி), யான் இந்நெடும்பகை தேடிக் கொண்டேன். ஆகவே, உலகங்கள் அழிந்தாலும் என் கதை அழியாது நிலைபெறும் வகையிலும் அதனைத் தேவர்கள் காணுமாறும், நீர்மேல் குமிழிபோன்ற நிலையில்லாத இந்த உடம்பை விடுவதல்லால் சீதையை விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை!
நான் போரில் வெற்றிபெற வில்லையாயினும் வெற்றிபெற்ற அந்த இராமன் பேர் நிற்குமாயின் அவனால் வெல்லப்பெற்ற யானும் வேதமிருக்கின்ற காலம் வரையில் நிலைபெற்றிருப்பேன் அன்றோ? இறத்தல் என்பது ஒரு காலத்தும் தவிர்க்கக் கூடியதோ? அஃது எவ்வுயிர்க்கும் பொதுவானது அன்றோ? இன்றிருப்பார் நாளை இறப்பார்; ஆனால் புகழுக்கு அத்தகு இறுதி உளதோ?” என்றான் இந்திரசித்தனிடம்.
வென்றிலென் என்றபோதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுளென் அன்றோ மற்றுஅவ் இராமன்பேர் நிற்கும்ஆயின்
பொன்றுதல் ஒருகாலத்தும் தவிருமோ பொதுமைத்து அன்றோ
இன்றுஉளார் நாளை மாள்வர் புகழுக்கும் இறுதிஉண்டோ. (கம்ப: இந்திரசித்து வதைப் படலம் – 9125)
இறப்பு என்றவொன்று தவிர்க்கவொண்ணாதது; ஆனால், புகழுக்கு என்றும் இறப்பில்லை எனும் இப்பாடலின் இறுதி அடிகள் அற்புதமானவை!
”ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.” (குறள்: 233) என்ற குறளினையும்,
”மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே.” என்ற புறப்பாட்டு அடிகளையும் இக்கருத்தோடு நாம் இணைத்துக் காணலாம்.
”சரி நீ போய் ஓய்வெடு! நான் போருக்குப் புறப்படுகின்றேன்” என்று இந்திரசித்தனிடம் உரைத்த இராவணன், ”என் தேரைக் கொணர்க!” எனத் தேர்ப்பாகனிடம் கூறவே, அதுகேட்ட இந்திரசித்தன், ”வேண்டாம் எந்தையே! நானே போருக்குப் புறப்படுகின்றேன்; நான் இறந்தபிறகு என் சொற்களை நல்லனவாய் நீ காணுவாய்!” என்று சொல்லிவிட்டுத் தேரேறிப் புறப்பட்டான்.
இலக்குவனுக்கும் இந்திரசித்தனுக்கும் மீண்டும் கடும்போர் தொடங்கியது. இந்திரசித்தனின் தேரும் அவன் கையிலிருக்கும் வில்லும் சிவபிரான் அருளால் அவனுக்குக் கிட்டியவை; அவையிருக்கும் வரை அவனைக் கொல்ல இயலாது என்பதனை வீடணன் வாயிலாய் அறிந்த இலக்குவன், தன் வில்லின் திறத்தால் அவன் தேரின் கடையாணியைக் கழற்றித் தேரின் சக்கரங்களை அச்சிலிருந்து பிரித்தான். அதுகண்டு விண்ணில் சென்று மறைந்து நின்று ஆரவாரித்தான் இந்திரசித்தன். அவன் குரல்வந்த திக்கில் அம்புகளைப் பொழிந்தான் இலக்குவன்; மேகக்கூட்டத்தில் திடீரென்று வில்லோடு இந்திரசித்தன் தோன்றவே, அம்பெய்து அவன் கையை வில்லோடு கொய்து வீழ்த்தினான் இலக்குவன். உடனே சிவனார் தந்த சூலத்தைக் கையிலேந்திக்கொண்டு இலக்குவனைக் கொல்வதற்காக நின்றான் இந்திரசித்தன்.
”இவனைக் கொல்லும் காலம் வந்துவிட்டது” எனவுணர்ந்த இலக்குவன், வேதங்களே தெளியத்தக்கவனும், வேதியர் வணங்கத்தக்கவனுமாகிய இறைவன் இராமன் எனும் நல்லற மூர்த்தியே என்பது உண்மையாயின் பிறைச்சந்திரனைப் போன்ற வளைந்த பல்லினையுடைய இந்த இந்திரசித்தனைக் கொல்வாயாக” என்றுகூறிப் பிறைபோன்ற வாய்கொண்ட அம்பொன்றைத் தன் ஆற்றல் முழுவதையும் பயன்படுத்தி விண்ணில் செலுத்தினான். விரைந்துசென்ற அந்த அம்பானது இந்திரசித்தனின் தலையை அறுத்துத் தள்ளியது.
அந்தத் தலை விண்ணில் முட்டிவிட்டுத் திரும்ப வருவதற்குள் இந்திரசித்தனின் உடல் மண்ணில் வீழ்ந்தது; அதனைத் தொடர்ந்து அவன் தலையும் மண்மேல் வந்துவீழ்ந்தது; அதுகண்ட அரக்கர்சேனை அச்சத்தோடு சிதறியோடியது. இராமனைத் தேடிச்சென்ற இலக்குவன், அவன் காலடியில் இந்திரசித்தனின் தலையை வைத்தான்.
தம்பியின் வெற்றியால் களிப்புற்ற இராமன், ”சனகன்பெற்ற பூங்கொம்பு போன்றவளான சானகி என்னை நெருங்கிவிட்டாள் என்று மனங்குளிர்ந்தேன். ”தம்பி உடையவன் பகைக்கு அஞ்சமாட்டான்” எனும் பெருமையை எனக்குத் தந்துவிட்டாய்!” என்று இலக்குவனைப் பாராட்டினான்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.