படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன் – 23

0
1

முனைவர். ச. சுப்பிரமணியன்

தம்பி வசந்தராசனுக்கு வாழ்த்துக்கள்!

மாத்திரையும் மருந்துமாக வாழ்க்கையின் கடைமடைப்பகுதியில் என் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. உன்னுடைய நலத்தையும் உன் இல்லத்தரசி, மக்கள் மற்றும் பேரப்பிள்ளைகளின் நலத்தையும் அறிய ஆவலாய் உள்ளேன். தம்பி சுப.வீ  சொல்வதைப் போல வெள்ளித்திரை, சின்னத்திரை, செல்போன் திரை, கணினித் திரை என இந்த வாழ்க்கையை திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரால் கடிதம் எழுதுகிற மரபே கருகிவிட்டது என்றே எண்ண வேண்டியதிருக்கிறது. உறவுகளுக்குள்ளேயே கடிதம் இல்லையென்னும்போது உலக இலக்கியங்களில் கடிதம் எப்படி எழுதப்படும்? அமைதியாக இருந்த வாழ்க்கையில் ‘தேவை’ என்ற பெயரால் ஒவ்வொன்றாக நுழைத்துக் கொண்டு நாமே நம்மை இழந்து வருகிறோம், மரத்தை வெட்டி நாலுவழிச்சாலை போட்டுக் கொண்டே மரம் நடுவிழாவை நடத்துவதைப் போல!

மாதவி கோவலனுக்கு எழுதிய இரண்டு கடிதங்கள் மகா இலக்கியங்களாகப் போற்றப்படுகின்றன.  நேரு பெருமான் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களும் பேரறிஞர் அண்ணா தன் தம்பிமார்களுக்கு எழுதிய கடிதங்களும் வரலாற்று ஆவணங்களாகக் கொள்ளப்படுகின்றன. கலைஞர் எழுதிய உடன்பிறப்புக்கான கடிதங்கள் அவர் கால அரசியல் நிழற்படமாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அறிஞர் மு.வ. எழுதிய அன்னைக்கு, தம்பிக்கு, நண்பர்க்கு முதலிய கடிதங்கள் எல்லாம் கடித இலக்கியங்களாகவே கருதப்படுகின்றன. அவையெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கற்பனையாய் மெல்லப் போயினவோ? என்று நெஞ்சம் குமுறுகிறேன். ஒரு இலக்கிய வடிவத்தை உருவாக்குவதும் அதனைச் செழுமைப்படுத்துவதும் அவ்வளவு சாதாரணமான செயலன்று.

நான் உன் கவிதைகளைப் படித்து என் அனுபவத்திற்கும் சிற்றறிவிற்கும் ஏற்ப உணர்ந்தும் அறிந்தும் அனுபவித்தும் வருகிறேன். அவற்றை என் உடல்நிலையின் அனுமதிக்கேற்ப அவ்வப்போது ‘வல்லமை’ இதழில் பதிவு செய்து வெளிப்படுத்தியும் வருகிறேன். நீ எழுதிய ‘சூரியச் சிறகுகள்’ என்னும் உன் தொடக்கக் காலக் கவிதை நூல்களில் ஒன்றினைப் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன். அதனைப் படித்த பிறகு உனக்குக் கடிதம் எழுத வேண்டும்போல் தோன்றியது. அதனால் இதனை எழுதுகிறேன்.

இலக்கிய வடிவங்களில் நான் வசமிழந்து போனது கவிதைகளில்தான்.  கவிதைகளின் சுருக்கமும் ஆழமும் மரபுவழித் ஒரு தமிழரசிரியனைக் கவர்வதில் எந்த வியப்பும் இல்லை. சங்க இலக்கியக் கோட்பாடே வடிவச் சுருக்கந்தானே? மேலே நான் சுட்டிய பெருமக்கள் எழுதிய கடிதங்கள் எனக்குக் கவிதைகளாகவே இனித்துக் கொண்டிருக்கின்றன. உண்மையில் அந்தக் கடிதங்களின் உள்ளடக்கம் பெரும்பாலும் கவிதைக்குரியது அன்று. ஆனால் எழுதிய பெருமக்களின் உள்ளத்து அழகு அவர்தம் எழுத்தில் கவிதைகளாக இழையோடுவதை மிக எளிதாக உணர முடியும். உள்ளத்து உள்ளது கவிதை!

இளங்கலை வேதியல் படித்துக் கொண்டிருக்கும்போதே நீ கவிதைகளில் ஆர்வம் கொண்டிருந்ததை அறிவேன் நான். அறிவியலுக்கும் தொழில் நுட்பத்திற்கும் உறவு உண்டு. ஆனால் தாய்மொழிமீது பற்றுக் கொள்வதற்கும் படைப்பிலக்கியம் செய்வதற்கும் அவ்விருதுறைகளும் பகை பாராட்டுவதில்லை. மொழியை யார் வேண்டுமானாலும் கையாளலாம். கவிதை புனையலாம். உன்னுடைய இன்றைய வாழ்வு கவிதைகளால் முழுமை பெறுகிறது என்பதை அறிந்து நான் பெருமையுறுகிறேன். அன்று ஏகாம்பரம்! இன்று வசந்தராசன்! வாழ்த்துக்கள்!

சிந்தைமிசை குடிகொண்ட சந்தப் பாக்கள்

பாடல் புனைபவர்களுக்குச் சந்தக் காதல் மிக முக்கியம். சத்தக் காதல் வேறு., சந்தக் காதல் வேறு. சந்தத்தை உள்வாங்கிக் கொண்டால் கவிதை வழி தானாகத் திறந்து கொள்ளும். வெற்று வாய்பாடுகளை மனனம் செய்தும் அவற்றுக்கான சீர்களைத் தேடிக் காவல் துறை உதவியோடு கைப்பற்றுவதிலும் பலர் ;தங்கள் மதிப்பு மிக்க நேரத்தைச் செலவிட்டு மாய்கிறார்கள். உனக்கு இயல்பிலேயே அமைந்த வரம் அது! சந்தம் உன்னைச் சொந்தம் கொண்டாடுகிறபோது நான் என் சிந்தை குளிர்ந்தேன்! சிலிர்த்து மகிழ்ந்தேன்!

நதியொன்று வயல்தேடி நடைபோடுது!  — அதன்
நடைபாதம் கரையேறித் திரைமூடுது!
வழிதேடி விழியலையும் கரை மோதுது! – அந்த
வயல் ஏனோ தடம் மறந்து இடம் மாறுது!

வயல்வீழ்ந்த விதை கூட நாற்றாகுது! – அதன்
வழிதேடி நதிகூட ஊற்றாகுது!
கயல்வீச்சு தனைக்காண நதி வாடுது! – உடன்
கைகோத்து விளையாடச் சுதிபோடுது!

நதியேக்கம் இதைத் தீர்க்க வயலாகு நீ! – என்னில்
நரம்புக்குள் தமிழாக விளையாடு நீ!
விதிப்போர்வை இனிவேண்டாம் தெளிவாகு நீ! – என்னில்
விழுமழையின் துளிசேர்ந்து தேனாகு நீ!

என்று ஒரு பாடல் எழுதியிருக்கிறாய். ‘நோக்கு’ என்பது கவிதையின் கூறுகளில் தலையாயது. விரைவாகப் படித்துச் செல்பவனைக் கையைப்பிடித்து நிறுத்திக் கவனித்துச் செல்’ என்று ஆணையிடுமாறு அமைந்த கூறுக்குத்தான் நோக்கு என்று பெயர். ‘நோக்குதற் காரணம்’ கவிதைகளில் அமைந்திருக்க வேண்டும். இந்தக் கவிதையில் இரண்டு இடங்களில் நான் அந்த நோக்கினால் தடுமாறினேன். ‘நதியேக்கம் ;இதைத் தீர்க்க வயலாகு நீ’ என்ற தொடரும் விழுமழையின் துளிசேர்ந்து தேனாகு நீ’ என்ற தொடரும் என்னைத் தடுத்து நிறுத்தின. தங்களை அடையாளம் காட்டின. மென்மையான காதலை வயலின் ஈரப்பதம் குலையாமல் வாசத்தோடு வடித்தெடுத்திருக்கிறாய்!. இந்தப் பாடலை நான் வாய்விட்டுப் பாடியபோது ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் கண்ணதாசன் எழுதி விசுவநாதன் இராமமூர்த்தி இசையமைத்த ‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்’ என்ற தேனினுமினிய பாடல் நினைவுக்கு வந்தது.

வினாக்களால் கருத்துக்களை வெளிப்படுத்துவது கவிதையின் வடிவ உத்திகளில் ஒன்று. துன்பத்திற்கு யாரே துணையாவார் என்பது போல!. ‘காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டா என்பார் பாவேந்தர்! பெரும்பாலான கவிஞர்கள் கையாண்ட வெற்றிகரமான உத்தி இது. இன்றைய திரையிசைப்பாடல்களின் பெருவெற்றிக்கு இந்த வினா உத்திதான் கைகொடுக்கிறது. என்பதை நுணுகிக் கேட்டு அறிந்து கொள்ளலாம். ‘நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே?” என்பதில் தொடங்கி, இது கல்லின் தோல்வியா? இல்லை உளியின் வெற்றியா? என்பது வரைக்கும் தொடர்வது இந்த உத்திதான். இந்த உத்தியை ஒரு சந்தப்பாட்டில் அதுவும் ஈழத்தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கப் பாடியிருப்பது இன்னொரு மகிழ்ச்சியே!

புலிநகத்தைக் கடிப்பதற்கு எலிகள் கூட்டமா?
பூஞ்ச காளான் முகம் வெளுத்தால் இடி நடுங்குமா?
அலிபுணர்ந்து ஆண்குழந்தை அடைய முடியுமா?
அரைஞாணில் ஆனைகளை அடக்க முடியுமா?
சிலைவடிக்க சிற்பியின்றி உளிகள் போதுமா?
சீழ்ப்பிடித்த சிந்தனையால் ஈழம் மலருமா?
அலைகடலைத் தோற்கடிக்கும்ஆண்கள் கூட்டமாம்
அணிவகுப்போம்! அடையுமட்டும் ஈழம் வாழ்த்துவோம்!
உலைதுருத்தி மூச்சுவிட்டால் புயலடிக்குமா?
ஒரு பனியின் துளியெதிர்ந்தால் கதிரடங்குமா?
வலைவீசி வான்முழுதும் சுருட்ட முடியுமா?
வதங்கிவிழும் பூவெதிர்த்து வேர் கறுக்குமா?
தலையடகு வைத்துவிட்டு முடிசுமக்கவா?
தமிழீழம் தள்ளிவைத்தோன் தமிழன் என்பதா?
விலைபோன தலைவர்களால் வீழ்ந்து கிடக்கிற
வீரத்தமிழ் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்புவோம்!

உணர்வுப் பூர்வமாக எழுந்த ஈழ ஆதரவு உன் வழியாகக் கவிதையாகியிருக்கிறது. எனக்கொரு ஆழ்ந்த வருத்தம் உண்டு. ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு நாவலுக்கான கரு உண்டு என்பர். ஒரு கவிதைக்கான கருவா இருக்காது? அப்படியிருக்கையில் ஈழத்தைப் பற்றிய நெஞ்சை உருக்கும் படைப்புக்கள் தமிழகத்தில் இதுவரை வெளிவராமல் போனது மனத்தை என்னவோ செய்கிறது. ஒரு சில இருக்கலாம். உதிரிப் பாடல்கள் எழுதப்பட்டிருக்கலாம். சிறுகதைகள் எழுதப்பட்டிருக்கலாம். அவையெல்லாம் ஈழத்திற்கு நாம் தருவதாகச் சொல்லிக் கொள்ளும் ஆதரவு நிலையை முற்றிலும் வெளிப்படுத்துவதாக இல்லை. நீலமலை படகரின் வாழ்க்கையை ராஜம் கிருஷ்ணன் ‘குறிஞ்சித்தேன்’ என்ற நாவலில் சித்திரித்ததைப் போல ஈழக்கொடுமையை உலக இலக்கியமாக்கும் முயற்சி ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. சுருங்கச் சொன்னால் விபத்தில் சிக்கியவனைப் பார்த்து ‘அடடா!’ என்று சொல்லிவிட்டு வழியோடு போகிறானே அவனுடைய அந்த அளவு உணர்ச்சிதான் நமக்கு ஈழத்தில் என்பதை என்னால் உரக்கச் சொலல முடியம். உன்னால் முடிந்ததை நீ செய்திருக்கிறாய் என்ற அளவில் நான் அமைதியடைகிறேன்.

எத்தனையோ வினாக்களை நீ கேட்டிருக்கிறாய்! எந்த வினாவிற்கும் இங்கே  விடையில்லை. ஈழச்சிக்கலில் பன்னாட்டுப் பேராதரவைப் பெறுவதில் நாம் படுதோல்வி அடைந்திருக்கிறோம். அதற்குக் காரணம் தமிழக அரசியல் தலைவர்கள் அதனை உள்ளூர்ச் சிக்கலாக மாற்றிக் கொண்டதுதான் காரணம். ஒரு பைசா கூடச் செலவழிக்கத் தயாராக இல்லாதவன் கூடத் ‘தொப்பூழ்க்கொடி உறவு’ என்று சொல்லிக் கொண்டு மேடையேறிவிடுகிறான். விலைபோன தலைவர்களால் வீழ்ந்து கிடக்கிற வீரத்தமிழ் உணர்ச்சிகள்என்று நீ சொல்லியிருப்பது மிகச்சரியே! இந்த நூலின் இன்னொரு இடத்தில் கூட,

வெளிக்கடையின் சிறையிடுக்கில் கண்ணிழந்த
வேங்கைகளின் வீரததைக் காசாய் ஆக்கும்
ஒலிபெருக்கி வீரர்கள்

என்று நீ எழுதியிருப்பதையும் கவனித்தேன்! பிரபாகரனைக் கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும்’ என்று சொன்னவர்கள் கூட ஈழத்திற்காகப் போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் நகைச்சுவைக் காட்சிகள் இங்கு ஏராளம்! ஏராளம்!!. தற்கால உலக அரசியல் அமைப்பில் பிற நாட்டுச் சிக்கல்களில் எந்த ஒரு நாடும் தன்னிச்சையாக நுழைந்து செயல்பட முடியாது என்னும் சாதாரண உண்மையைக் கூட நாம் அறிவதற்கு முயலவில்லை. களச்சிக்கலைக் கபடிப் போட்டியாக எண்ணியதன் விளைவு இன்னும் பன்னூறு ஆண்டுகளுக்குத் தொடரும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.

சந்தப்பாடல் எழுதுவோர் அனைவருக்கும் ஒரு சிச்கல்வரும். சந்தம் அமையும். அதற்கான சொற்கள் அமையும். ஆனால் பொருளிருக்காது. பொருளோடு கூடிய சந்த அமைதி கொண்ட சொற்கள் அமைவது அரிதிலும் அரிது. மகாகவிக்கு அது இயல்பாக அமைந்தது. பறையருக்கும் இங்கு தீய புலையருக்கும் விடுதலை! பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை’ முதலிய பாடல்களில் இந்தப் பொருட்சந்தத்தை உணரலாம். அதுபோன்ற பேராற்றல் உனக்குக் கைவரப்பெற்றிருப்பது எனக்குத் தனி மகிழ்ச்சி! சித்தர்களின் பாடல்களை நீ அடிக்கடி பயில்வது சந்தம் அமைய எளிதான வழியாகும்.

அதிசயச் சிலந்தி

எச்சிலால் வலைபின்னும் சிலந்தியை எடுத்துக்காட்டாக்கிப்  பாடல் ஒன்று எழுதியிருக்கிறாய். முயற்சியில்லாத மனிதனைச் சாடுவதற்கு நீ சிலந்தியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய். திருச்சிராப்பள்ளி திருவானைக்காவின் தலபுராணம் இந்தச் சிலந்தியைப் பற்றிக் கூறுகிறது. சிவலிங்கத்தின் மீது வெயில்படாமல் இருக்க சிலந்தி வலைபின்ன, சிவனை வணங்கி வந்த யானை சிலந்தியின் செயலைத் தவறாகப் புரிந்து கொண்டு அந்த வலையைச் சிதைக்க. இப்படி பின்னுவதும் அழிப்பதுமாக இருந்து இறுதியில் ஒன்றினையொன்று அழித்துக் கொண்டதாக அந்தக் கதை போகிறது. நமக்கு வேண்டியது யானை அழித்தாலும் சளைக்காமல் வலைபின்னிய சிலந்தியின் முயற்சிதான். அத்தகைய முயற்சி இல்லாத மனிதனை நீ ‘அதிசயச் சிலந்தி’ என்று அழைப்பது சரியென்றே தோன்றுகிறது.

நடந்ததை எண்ணிக் கலங்கிக் கிடப்பவன்!
எட்டாக் கனிகளைக் கொட்டாவி விட்டே
கனிய வைக்கக் காத்துக் கிடப்பவன்!
……………………………………வாழ்க்கைத் திடலில்
கண்ணா மூச்சியால்காலம் கழிப்பவன்
நரை திரை மூப்பு நடக்கும் வரைக்கும்
அமைதியே இவனது ஆகாசக் கோட்டை!
பொறாமை என்பதோ
ஏக்க இதயத்தில் எழுந்த புற்றுநோய்!
எதிர்ப்பார்ப்புக்களில் ஏமாந் திருப்பவன்!

என்றெல்லாம் எழுதிய நீ, இறுதியில் எழுதியிருக்கிறாயே அடுத்தவன் கனவுக்கும் ஆசைப்படுபவன் என்று! அடடா! பொறாமையையும் பேராசையையும் இதனைவிடக் கவிதைச் சொற்களால் கொண்டுவர இயலுமா என்பது தெரியவில்லை.

காட்டுக்குப் பேன் பார்த்த காற்று

தற்காலக் கவிஞர் பெருமக்கள் பலரும் கற்பனையை அறியாதவர்களாகவே இறக்கிறார்கள் என்பது அவர்தம் கவிதைகளைப் பாரத்தாலே புரிந்து கொள்ள முடியும். கவிதையை நிலைக்கச் செய்வது கற்பனையே. பாடுபொருள் ஒன்றாகவே இருந்தாலும் இத்தனைக் கவிஞர்களும் இப்படி வேறுபட்டுத் தோன்றுவதற்குக் காரணமே கற்பனைதான். ஒருவரைப் போல மற்றவர் கற்பனை செய்யமுடியாது  செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது. அமையாது!

காற்றே!
மரங்களின் தலைகளில் நீ
பேன் பாரத்தது போதும்! போ!
அவசரத்தில் மயில் இலைகளை
ஏன் அப்புறப்படுத்துகிறாய்?

இனிய எளிய காட்சி.! இதமான கற்பனை!. கற்பனைக்காகக் கால்கடுக்கத் தவம் செய்வாரிடையே நீ பதங்களைக் கொண்டு பல்லாங்குழி ஆடியிருக்கிறாய்!. தென்றலாக வரும்போது பேன் பாரத்த காற்று, சற்று வேகமாக அடிக்கிறபோது மயிரைப் பியத்து எறிவதைக் கலைநயத்தோடு நீ சொல்லியிருப்பது மனத்தை இனிக்கச் செய்கிறது, எண்ணவும் செய்கிறது. ‘ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே! என்பார் குமரகுருபரர்! காட்டின் அடர்த்தியைக் காட்டாது காட்டிய உன் திறன் மெச்சத் தகுந்தது.

அரளிப்பூவின் அழுகை

நாட்டுப்புற வடிவங்களை மரபுக்கவிதைக்காரர்கள் கையாண்டதை விடப் புதுக்கவிதைக்காரர்கள் கொஞ்சம் அதிகமாகவே கையாண்டிருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். இளங்கோவடிகள், மணிவாசகர், வள்ளற்பெருமான், மகாகவி, பாரதிதாசன் முதலியோரைத் தொடர்ந்து வந்த புதுக்கவிதைக்காரர்கள் இந்த வடிவத்தில் பல புதுமைகளைச் செய்து காட்டியிருக்கிறார்கள். படிமம், அங்கதம், குறியீடு, முரண் என்னும் கவிதை உத்திகளில் படிமத்தைக் காட்சிப்படுத்தியதில் இவர்களுக்குப் பெரும்பங்கு உண்டு.

பூக்களிலே நானுமொரு
பூவாயத்தான பிறப்பெடுத்தேன்!
பூவாகப் பிறந்திருந்தும்
பொன்விரல்கள் தீண்டலையே
பொன்விரல்கள்தீண்டலையே நான்
பூமாலை ஆகலையே! “

என்னுமொரு கவிதை மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களைத் தூக்கி நிறுத்தியவற்றுள் ஒன்று. முதிர்கன்னிகளின் அவலத்தை அரளிப்பூ மேல்வைதது அவர் அழவைத்தாலும் அந்தக்கால முதிர்கன்னிகளுக்கு அது ஒரு அரசியல் வாதியின் ஆறுதலாக இருந்தது என்னவோ உண்மை. இந்தக் குறிப்பை நான் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம் ‘காலம் கூட கரியாச்சு’ என்னும் உன்னுடைய கவிதையைப படித்தவுடன் அரளிப்பூ கவிதை நினைவுக்கு வந்ததை நான் தடுக்க முடியவில்லை.

முன்வாசல் கோலத்தில்
முகமாகிக் காத்திருந்தேன்!
என்வாசல் மூடலையே!
என்கிழக்கு வெளுக்கலையே

என்ற வரிகளை நான் படித்தபோது கண்ணீர் ததும்பியது என்றாலும் வயது நோக்கி அடக்கிக் கொண்டேன். ‘எல்லாருடைய வாழ்க்கையிலும் வெளிச்சம் அடிக்க என் வாழ்க்கை மட்டும் இன்னும் விடியவில்லை’ என்னும் ஏக்கததை உன்னுடைய சுருக்கமான பதிவு கவிதை அழகோடு வெளிப்படுத்துகிறது. ‘என் கிழக்கு’ என்பதுதான் கவிதைச் சொல்!

கனவெல்லாம் விறகாச்சு!
கண்ணீரும் நெருப்பாச்சு!
கன்னிமனம் குழம்பாச்சு!
காலம் கூட கரியாச்சு

என்ற பாடலை

கனவெல்லாம் விறகாச்சே!
கண்ணீரும் நெருப்பாச்சே!
கன்னிமனம் குழம்பாச்சே!
காலம் கூட கரியாச்சே

என்றுதான் என்னால் படிக்க முடிந்தது. இப்படி எழுதியது ஒன்றாகவும் படிப்பது ஒன்றாகவும் அமைய முடியுமா என்பது எனக்குத் தெரியாது. அந்தப் பாடல் செலுத்திய தாக்கத்தினால் நடந்திருக்கலாமோ? மேத்தாவும் நீயும் கையாண்டிருக்கும் இந்த நாட்டுப் புறவடிவம் உங்கள்; இருவரையும் கைவிடவில்லை. என்பதோடு கவிதையும் கனக்கிறது என்பதை நான் சொல்லியாக வேண்டும்.

அங்கதத்தில் நீ அடைந்திருக்கும் வெற்றி

‘நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி’ என்ற வள்ளுவர்தான் ‘தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்’ என்று கிண்டலாகப் பேசியிருக்கிறார். கிண்டல் வேறு, ஒருவரை இகழ்வது வேறு. இந்த வேறுபாடு வள்ளுவருக்கும் தெரியும். உனக்கும் தெரியும். கவிதைக் ‘கிண்டலை’  ‘அங்கதம்’ என்பர்.  உண்மைக்குள் ஒளிந்திருக்கும் உரசல்களை அது ஊரறியச் செய்யும். மனிதம் விரும்பாதது மரணம். அது முன்பெல்லாம் எருமை மாட்டின் மீது அமைதியாக ஆடி அசைந்து வருவதாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்குச் ஒரு வழிச்சாலை நடந்த ஒன்பது விபத்துக்கள் இப்போது நான்குவழியான காரணத்தால் நாற்பதாக உயர்நதிருக்கிறது. சென்னையில் பல்லவன் ஓடியபோது வந்த கற்பனை இது உனக்கு. நன்றாகத்தான் இருக்கிறது.

எருமைமீதே ஏறி வந்த எமனே!
உனக்குப் பதவி உயர்வு எப்போது வந்தது?
பல்லவன் மீதேறி பவனி வருகிறாய்?”

எளிய மனம் பெற்றோர் பேறு பெற்றோர் என்பது விவிலியம். எளிய மனம் பெற்றோருக்குத்தான் இத்தகைய கவிதைகள் கைவரும். இன்னொரு இடத்திலும் நீ இந்த அங்கதத்தை அழகுபடச் சித்திரித்திருப்பதைக் கண்டேன்.

குழந்தை வளர்ப்பு

குழந்தைகள் பிறர் சொல்வதைக் காட்டிலும் செய்வதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்குப் பிடித்தமான ஆசிரியர்கள எண்ணிக்கையில் குறைவாகப் போனதற்கு இதுதான் காரணம். குழந்தைகளை எப்படி வளரக்கக் கூடாது எனபதற்கு நீ எழுதியிருக்கும் இந்த அங்கதம் எனக்குச் சிரிப்பையும் என் பேத்திக்குச் சிந்தனையையும் தூண்டியது என்ற சொல்லலாம்.

பையிலிருந்த பெனசிலை எவனோ
கையில் எடுத்துக் கொண்டு
கம்பி நீட்டிவிட்டான்

பள்ளியிலிருந்து வீடு திரும்பிய
மகள் புலமபினாள்!

நான் சொன்னேன்
போகட்டும் திருட்டுப் பயல்கள்!
நாளைக்கே உனக்கு
நான்கு பென்சில்களை
அடித்துவருகிறேன்
ஆபீசிலிருந்து

மழலைச் செல்வங்களை எப்படி வளர்க்கிறார்கள்? எப்படி வளர்க்கக்கூடாது என்பதை அங்கதச் சுவையோடு நீ சொல்லியிருப்பது அழகு.

இந்தியச் சமையல்

மகாகவி வாழ்க்கையில் நடந்ததாக ஒரு பதிவு கண்டேன். அவர் பையில் இருபது ருபாய் பணம் இருந்ததாம். தன்னோடு உடன் நடந்த சுத்தானந்த பாரதியிடம் அவர் சொல்லியிருக்கிறார். “ஓய்….என் பையில் இப்போது இருபது ரூபாய் இருக்கிறது. இந்த இருபது இருநூறாகும். அந்த இருநூறு இருபதாயிரம் ஆகும். நான் அமுதம் என்ற பத்திரிகையை ஆரம்பிக்க இருக்கிறேன். பிறகு பார் என்னை!” என்றாராம். அந்த வேளையில் “ஐயோ நான கொண்டு வந்த ஒரு பழம் கூட விற்பனையாகவில்லையே? இன்று நான் எப்படி உலை வைப்பேன்?” என்ற அழுகுரல் கேட்டுத் ;திரும்பிய பாரதியின் பார்வையில் விற்காத வாழைப்பழத்தை வைத்துக் கொண்டிருந்த வயதான மூதாட்டி தென்பட்டிருக்கிறாள். பாரதி அருகில் வந்தார். கிழவியிடம் வாழைப்பழம் என்ன விலை என்றார். இருபது ரூபாய் என்றாள் கிழவி தன் பையிலிருந்து அந்த இருபது ரூபாயைத் தூக்கிக் கொடுத்துவிட்டு விருட்டென்று நடந்தாராம் .பாரதி. பசியோடு இருப்பவனிடத்தில் தத்துவம் பேசக்கூடாது. இந்தியாவில் இன்று இது தலைகீழ்! உலகமே இந்தியாவை வியப்போடு பார்க்கிறது என்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்பதும் தெரியவில்லை. அவர்கள் இந்தியாவில் எதனைப் பார்த்து வியக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.

இதோ காகித இலைகளில்
இந்தியச் சமையல்!
கைகளைக்கழுவு!
குழப்பங்கள் கூடிச் செய்த
கொள்கைக் குழம்பு
அருகே………………………….
ஆர்யபட்ட அப்பளங்கள்!
விண்வெளிப் பச்சடிகள்!
காமன்வெல்த் மாநாட்டுக்
கடுகு ரசங்கள்!
ஊர்கள் தோறும் தொலைக்காட்சி ஊறுகாய்கள்!
வெவ்வேறு சுவைகளில்!
உம். சீக்கிரம் சாப்பிடு!
என்ன சோறு வேண்டுமா?
உதை படுவாய் நீ!

வெளிநாட்டவர் வந்தால் சேரிப்பகுதிகளைப் பார்க்காமல் இருப்பதற்காகத் திரைச் சீலைஅமைத்துத் தடுத்துக் கொண்டே இந்தியாவை வியப்போடு பார்க்கிறார்கள் என்றால் எதனால் சிரிப்பது? பசித்தவனுக்கு இறைவன் சோறாக வரவேண்டும். ஆட்சியின் அவலத்தை நகைச்சுவையோடும் அங்கதத்தோடும் நீ சொல்லியிருப்பது பலரையும் கவரக்கூடும்.

சமாதானம்

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது!  என்று ஒரு பாடல் உண்டு. அதனைக் கவிதை என்பாரும் உளர். அண்ணல் கனவு கண்ட களப்போரில் குருதிக்கு இடமில்லை. என்பது உண்மையே! ஆனால் இந்திய விடுதலை வரலாற்றைக் கொஞ்சம் கவனத்தோடு படித்தவர்களுக்கு அன்று சிந்திய ரத்தத்தின் அளவு எவ்வளவு என்பது தெரியவரும்.

அன்று
விடுதலைப் போரில்
வீணாக்கமல் சேமித்துவைத்த
செங்குருதித் துளிகளை
இன்று
மண்டைக்காடுகளில்
மீனாட்சிபுரங்களில்
செலவழித்துக் கொண்டு
இதோ சமாதானப் புறாக்கள்!
எங்கள் இலைகளின ஓரத்தில்
இறால்களோடு
சமாதானத்தைச் சமைத்துக் கொண்டு!

ஆங்கிலம் தெரிந்தும் மௌனவிரதம் இருந்தவர் அண்ணல்தான். அவர் சமய ஒற்றுமைக்குத் தந்த முன்னுரிமையைச் சாதி ஒழிப்புக்குத் தராததற்கான பலனை நான் அனுபவிக்கிறோம். காதல் கூடச் சாதி பார்த்துத்தான் அனுமதிக்கப்படுகிறது. தனிமனித ஆணவக் கொலைகள் தமிழகமெங்கும் வாரச்சந்தையாகிவிட்டது. இந்தப் பாடல் இரண்டு சமுதாயத்தினருக்கிடையே எழுதிய சமயப் பூசலைச் சுட்டுவதாக நீ எழுதயிருக்கிறாய். இன்று நிலைமை இன்னும் மோசம். தமிழகத்தின் மேற்கு மற்றும் வடக்கு மண்டலங்களில; சாதிய வன்மங்கள் தீக்கங்குகளாய்க் கனன்று கொண்டிருக்கின்றன. அரசியல் வாதிகளுக்கு மடடுந்தான் இரட்டை வேடம் சொந்தமா? நமக்கில்லையா? பிறகு என்ன?

நடைபாதை வாக்காளர்கள்

வாக்காளர் அடையாள அட்டை அவர்கள் வாழுகின்ற நாட்டை அடையாளப்படுத்தும். ஆனால் இந்தியாவில், சென்னையில் இன்னும் பல ஊர்களில் நடைபாதையையே அடையாளப்படுத்தும் வாக்காளர்கள் அட்டைகளைப் பெற்றவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நடைபாதை யாருக்கானது என்பதையும் உண்மையில் இன்று யாருக்குப் பயன்படுகிறது என்பதையும் கவிதைப் பதங்களால் ஒரு வேடிக்கைச் சோகத்தை விளையாட்டாகப் மீட்;டியிருக்கிறாய்.

நடை பாதை ஓரங்களில் நாங்கள்
நிர்வாணத்தை உடுத்துக் கெர்ணடு!
சுவரே
உனக்குக் கூட வண்ண வண்ணச்
சுவரொட்டி ஆடைகளா?
ஆம்!
மரம் வளர்க்கும் நடைபாதைகளில இன்னும்
மனிதர்களையே வளர்த்துக் கொண்டிருக்கும்
இந்தச் சமுதாயத்தில்
இது இப்படித்தான்!”

மறைந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நடைபாதை கை ரிக்‌ஷாக்காரர்கள் பாடுவதாக எழுதிய ஓரு திரையிசைப்பாடலில்

மாடா இழுக்கிறோம் வேகமா
நம்ம வாழ்க்கைக் கெடக்குது ரோட்டோரமா

என்று எழுதியிருப்பது என் நினைவுக்கு வந்தது.

தலைவனும் தொண்டனும்

நான்கு திரைகளின் நடுவே சிக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்கள தங்களையும் அறியாமல் இன்னுமொரு வலையிலும் சிக்கியிருக்கிறார்கள் .அது அரசியல் வலை. தேர்தலில் நல்லவருக்கு வாக்களிப்பது நேர்மையான அரசியல் என்ற நிலைமாறிக் கொடுக்கிற கூலிக்குக் கூவுவது அரசியல் என்ற நிலைக்குத் தமிழ்நாடு முன்னேற்றமடைந்திருக்கிறது. இந்தியாவில் ஏழை ஏழையாகவே ஆகிக் கொணடிருக்கிறான். பணக்காரன் மேலும் பணக்காரனாகவே ஆகிக் கொணடிருக்கிறான் என்பார்கள். தமிழ்நாட்டில் தலைவன் தலைவனாகவே இருக்க தொண்டன், அடிமட்டத் தொண்டனாகவே இருக்கிறான். தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்தான் அமைச்சனாக இருக்கிறான் என்பதை வாக்காளன் மறந்துவிடுகிறான். தான் கொடிபிடித்து உருவாக்கியவன்தான் தலைவனாக இருக்கிறான் என்பதைத் தொண்டன் மறந்துவிடுகிறான். தனிமையில புலம்புகிறான் அந்தப் புலம்பலை நீ இப்படிப் பதிவு செய்திருக்கிறாய்

கொள்கைகளைக் கோட்டைகளாய் வைத்திருந்த
காலம் போய் இங்கே

கோடடைகளே கொள்கைகள் ஆனதால்
எங்கள் தலைவர்கள்
பொன்ராட்டையால் பொய் நூற்கிறார்கள்!
அவர்களின் பிறந்த நாளில கூடக்
கொக்கோகச் சிறகணிந்து
குதூகலிக்கின்றன!
நாங்களோ
புழுதி ஆடை அணிந்து
புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!”

நடப்பியலைக் கவிதையில் சித்திரிக்கிறபோது கவிதைக் கட்டுமானம் செய்தித்தாள் ஆகிவிடக் கூடாது. நீ அதில் போதுமான அளவுக்குக் கவனத்தோடு இருக்கிறாய். இராட்டையே பொன்னானால் நூற்பது என்னாகும்?  சிந்திக்க வைக்கிற வரிகள்!

கண்ணில் விளையாடும் கற்பனை!

சொற்சேர்க்கையால் கற்பனை கொஞ்சும் கவிதைகளை நீ எழுதி வருவதை முகநூலில் நான் ரகசியமாக ரசித்து வருகிறேன். இன்று கூட நீ எழுதிய கவிதையில் ‘கண்ணிவெடிப் பூக்கள்’ என்று கவிதைச் சீர்களை நீ உருவகம் செயதிருந்ததைக் கண்டேன். ‘நெருப்பை நட்டு’ இருக்கிறாய் நீ! ‘களத்தைத் தீட்டச் சொல்லியிருக்கிறாய்!’ இந்த நூலிலும் நிலவைப் பற்றிய கற்பனைகள் என் நெஞ்சைத் தாலாட்டுகின்றன. பதினைந்து நாள் வளர்பிறை. பதினைந்து நாள் தேய்பிறை. இதுதான் செய்தி. இந்தச் செய்தியை அதாவது விண்வெளிப் பொய்யை எப்படிக கவிதையாக்குவது? நீ ஆக்கியிருக்கிறாய்!

இருட்டுக்கு
வெள்ளையடிக்க
முயன்று முயன்று
ஒருநாள்
நிலவே இருட்டானது

வளர்பிறையின் வளர்ச்சியும் தேய்பிறையின் தளர்ச்சியும் உனக்கு Brush ஆகத் தெரிந்திருக்கிறது. இறுதியில் இருட்டு அமாவாசையானது. அமாவாசை இருட்டானது. இதனையொட்டிய மற்றொரு கற்பனையையும் நான் கண்டேன்

கைபிடி இல்லாத அந்தக்
கருக்கரிவாளை
கொஞ்சம்
பழுக்கக் காய்ச்சியது யார்?”

கவிதை ஒன்றினை மறைத்து மற்றொன்றால் அதனை உணர்த்தும். ஆனால் நீயோ காட்சியையே மறைத்துக் கவிதை செய்திருக்கிறாய்!, பிறைநிலவின் ஒளி உனக்குப் பழுக்கக் காய்rச்சியதைப் போல் இருப்பது எனக்கு வியப்பில்லை. அதனை அதாவது அதன் வடிவத்தைச் சாதாரண வெட்டரிவாளாக நோக்காது கருக்கரிவாளாக நோக்கியதும் கருக்கரிவாளுக்கான கைப்பிடியை நீ தேடியதும் எனக்கொரு கவிதை வியப்பு! அருமையான கற்பனை! இந்தக் கவிதையைப் படிப்பார் யாரும் பிறைநிலவை இனிமேல் கைப்பிடியிலலாத கருக்கரிவாளாகத்தான் பார்ப்பார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை!

காற்றும் விதையும் கண்ணி வெடிகளே!

திருச்சி தியாகராசன் எழுதியுள்ள அணிந்துரையில் புரட்சிபற்றி நீ எழுதிய ஒரு நான்கு வரிப் புதுக்கவிதையை எடுத்துக்காட்டிச் சிலாகித்து இருக்கிறார். அது சரியே

அழுத்தி அழுததிக்
காற்றைக் கைது செய்துவிட்டேன்!
என் வண்டிச் சக்கரத்தில்
ஒரு நான் திமிறிய காற்று வெடித்து
விடுதலையானபோது
வண்டி தாறுமாறாய்……………………………!”

காதலுக்கு வநத தடை கூடப் புரட்சியை உருவாக்கப் போதுமானது என்பதைப் பாவேந்தர் தமது புரட்சிக்கவியில் பதிவு செய்திருக்கிறார். அறிவியலின் அரிய கண்டுபிடிப்பான சக்கரம் சுழலத் தேவையான காற்றுக்கூடப் புரட்சிக்கு வித்தாகிவிடும் என்பதை உன் கவிதையில் காட்டியிருப்பதைத் தியாகராசன் நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். பாராட்டியிருக்கிறார்.

வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்! வேழத்தில்
பட்டுருவும கோல் பஞ்சில் பாயாதுநெட்டிருப்புப்
பாறைக்கு நெக்குவிடாப பாறை பசுமரத்து
வேருக்கு நெக்குவிடும்

என்னும் ஔவை மொழியின் அடிநாதத்தை உள்வாங்கிக்

கண்ணீர் துயரங்களின் எச்சந்தான்!
ஆனாலும் ஏளனப்படுத்திவிடாதீர்கள்!
பறவைகளின் எச்சத்தால்
சிலவேளைகளில்
பாறைகளே வெடித்துவிடும்.!

என்று நீ எழுதியிருக்கிறாய். சமுதாயச் சிந்தனையுடைய படைப்பாளனுக்கு முந்தைய உவமங்கள் புதிய சிந்தனைகளுக்குக் களமாகிவிடும் ;என்பதற்கு இந்தச் சிலவரிகள் எடுத்துக்காட்டு. இறுதியாக

அழுத்தம் கூட அதிகமானால்
எங்கும் எதுவும் வெடிக்கலாம்!
அழுத்தப்பட்டவன் வெடித்தெழுந்தால்
ஆணவக்கூட்டம் துடிக்கலாம்!””

என்று முடித்துக் காட்டியிருக்கிறாய். முழக்கம், களம், இரத்தம், குண்டு, அக்கினி, பிழம்பு, தீ என்ற சொற்கள் இருந்தால்தான் புரட்சியை ஒளிப்பதிவு செய்ய முடியும் என்னும் பாசாங்குக் கொள்கையைப் புறந்தள்ளி இனிய எளிய சொற்களால் புரட்சியை விளக்கியிருப்பது கவிதை பற்றிய தொடக்கப்பள்ளிக்கான பாடமுமாகலாம்.

பாடாண் திணை உனக்குப் பக்குவப் பலகாரம்

எல்லாரும் எழுதுகிறார்கள். யார் யாரோ எழுதுகிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுதுகிறார்கள். என்னென்னவோ எழுதுகிறார்கள். நீயும் எழுதுகிறாய். உன் எழுத்தில் என்னைக் கவர்வது சீர்களின் வரிசையா? அசைகளின் நாட்டியமா? சொற்களின் சொந்தமா? இல்லை உரசல்களா? யாப்புத் திறமையா? எளிமையின் தவமா? எதுவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எதுவோ கவர்கிறது. பெரும்பாலும் கவிதைகளிலேயே மூழ்கிக்கிடக்கிறேன். ஹைக்கூ எது என்று தெரியாமலேயே ஹைக்கூ எழுதுகிறார்கள். கொன்றைவேந்தனையும் ஆத்திசூடியையும் கூட ஹைக்கூ என்றே சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது. புதுக்கவிதை அறியாமலேயே புதுக்கவிதை எழுதுகிறார்கள். இலக்கணம் படித்துவிட்டால் கவிஞன் என்று என்னைப் பலர் அச்சுறுத்துகிறார்கள். பாட்டுக்கு முன்பே ‘நான் இன்ன வாய்பாட்டில்தான் படிக்க வேண்டும்’ என்று எனக்கே அவசரச்சட்டம் போடுவதுபோல் வாய்பாட்டை எழுதிவிடுகிறார்கள். இவர்களிடமிருந்து தப்பித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

பல்வகை பாடுபொருள் உனக்கு வசப்பட்டாலும் பாடாண் திணை உன்னுள் பரவசப்படுகிறது என்றே தோன்றுகிறது, பெரியாரைப்பற்றி எழுதினாலும் அண்ணாவைப் பற்றி எழுதினாலும் கலைஞரைப் பற்றி எழுதினாலும் பாவேந்தரைப் பற்றி எழுதினாலும் முடியரசனைப் பற்றி எழுதினாலும் மறைமலையைப் பற்றி எழுதினாலும் பங்கமில்லா உன மனத்துள் அவர்கள் பதியம் போட்டுவிடுகிறார்கள். அதனால் பாடாண்திணை பாடுதிணையாகிவிடுகிறது.

இந்த நூலின் இறுதியில்  காமரசரைப் பற்றிய பாடாண் திணைப் பாடலைக் கண்டேன். கண் கலங்கினேன். எப்படிப்பட்ட தலைவர்கள் வாழ்ந்த மண் இது.  என்பதை எண்ணிப்பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு. இந்திய சீனா போரின் போதுதான் அதாவது 1962இல்தான் என்னுடைய 15 வயதில அவரை நேரில் பார்த்தேன். அவருடைய கையின் நீளம் பெரிதா? உடம்பின் உயரம் பெரிதா? என்று அப்போதே நான் நினைத்ததுண்டு. மகான் என்ற சொல்லுக்கு அவரைவிட்டால் ஆளில்லை. அவரை நீ பாடியிருக்கிறாய். இல்லை உனக்கும் எனக்கும் கல்விக்கண் திறந்ததால் எனக்கும் சேர்த்து நன்றிக்கடன் பாடியிருக்கிறாய்.

ஆகட்டும் பார்க்கலாம்நாம் மந்திரத்தில்
ஆனைகளே கட்டுண்டு கிடந்த காலம்!
வேகத்தில் செயலிருக்கும்! வீண்கிளம்பும்
வெறுஞ்சொற்கள் செயலிழக்கும்! மூளை யெல்லாம்
தாகத்தில் தவித்திருக்கும்!முன்னே றத்தான்
தலைகூட நடந்திருக்கும்1 தாழ்வுற் றோரின்
சோகத்தில் கரமிணைக்கும் இவரோ மக்கள்
சொநத்தில் கைகோத்த புரட்சி வீரன்!

பெருந்தலைவரை இப்படிப் பட்ம் பிடித்த நீ இறுதிப்பாட்;டில் இன்றைய தமிழகத்தின ;இரங்கத்தக்க நிலையை நேரடியாகச் சொல்லாமல் காமராசரை உவமமாக்கி அவர்போலத் தலைமை வேண்டும் என்கிறாய். நடக்கக் கூடிய காரியமா இது?

சுயநலத்தைச் சுட்டெரிக்கும் தலைமை வேண்டும்!
சுடரறிவால் இருளகற்றும் திறமை வேண்டும்!
கயமைகளின் கையொடிக்கும் துணிவு வேண்டும்!
கண்ணீரைத துடைத்தெறியும் கரங்கள் வேண்டும்
அயலான் போல் நம் நாட்டில் நாமே வாழும்
அவலத்தின் வேரறுக்கும் முயற்சி வேண்டும்!
இயல்கின்ற வரைகாமராசர் போல
இன்னொரு தமிழ்த்தலைமை தானே வேண்டும்!

சமுதாயத்தைப் பற்றிய ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறாய். அங்கதத்தால் அர்ச்சனை செய்திருக்கிறாய். புரிந்து கொண்டாரும் புரிந்து கொள்ளாததுபோல் கடந்து போய்விடுவார்கள். போலி அரசியல் வாதிகளைப் புரட்டி எடுத்திருக்கிறாய்! கற்பனை அழகு பெறுகிறது உன் பாட்டில். உணர்ச்சி ஓங்காரமிடுகிறது உன்பாடடில்! ஏகாம்பரம் வசந்தராசனாகியிருக்கிறாய்! இன்றைக்கு நீ மட்டுமா வளர்நதிருக்கிறாய்? உன் கவிதைகளும் வளர்ந்திருக்கின்றன. ஒரு கருத்தை உனக்கு நினைவூட்ட வேண்டும். நீ பள்ளியில் படித்த போது செய்த அதே தவற்றை இன்னமும் ;செய்கிறாய். ‘வேர்வையை’ ‘வியர்வை’ என்று எழுதுகிறாய்! ‘கோப்பது’ என்பதை கோர்ப்பது என்று எழுதுகிறாய்!. அவ்வளவு ஏன்? இந்த நூலின் தலைப்பைச் சூரிய சிறகுகள் என்று வைத்திருக்கிறாய்! அப்படியானால் அது அல்வழியா? சூரியனாகிய சிறகுகள் என்று வருமா? சிறகுகள் என்ற பன்மையினால் சூரியனைச் சிறகாக உருவகம் செய்ய முடியாது. சூரியனுக்கான சிறகுகள். சூரியனுடைய சிறகுகள். வேற்றுமை. எனவே சூரியச் சிறகுகள் என்றே வரவேண்டும். அப்படி எழுதுவது போலித் தமிழ்வாணர்களின் பொழுதுபோக்கு. மகர ஈற்றுப் பெயர்ச்சொற்களின் பின் வேற்றுமை உருபு இணையுமானால் அத்துச் சாரியை வரவேண்டும் என்று ஒரு அன்பருக்குச் சொன்னேன். அவர் என்ன செய்தார் தெரியுமா? ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத்தாழ்ப்பாள் என்பதுபோல ‘வாழ்க வளமுடன்’ என்றே எனக்கு எழுதினார். அவரைத் திருத்துவது என் பணியன்று. அவர் வழி அவர் வழி! என் வழி இலக்கண வழி! பாட்டை எழுதியவுடன் இப்போதாவது திருப்பிப் பாரக்கிறாயா? அந்த வழக்கம் உன் பாட்டில் உன்னையுமறியாமல் அமைந்துவிடும் சிறிய பிழைகளைக் களைய உதவக்கூடும்.

முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் அதாவது உன்னுடைய முப்பது நான்காவது வயதில் வெளியிட்ட இந்தக் கவிதை நூலை இந்த வாரம்தான் நான் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. பதிப்பில் சில குறையிருக்கலாம். அடர்காட்டில் தடம் அமைப்பது அவ்வளவு சாதாரணமானதன்று என்பதை நான் நன்கறிவேன்!

இறுதியாக ஒன்று நான் சொல்லவேண்டும்  நூலுக்கு அணிந்துரை என்பது யானைக்கு முகத்திரை போல. இந்த உன் கவிதை நூலுக்கு அன்பர் திருச்சி தியாகராசன் எழுதியிருக்கும் முன்னுரை சிறந்தது. தயவு தாட்சண்யம் இல்லாமல் பதிவு செய்யப்பட்டிருக்கும் அவருடைய சாடல் குறிப்பிட்டவர்களைக் கொஞ்சம் சங்கடப்படுத்தும். உண்மை எங்கே யாருக்கும் இனித்திருக்கிறது?

உடல் நலம் பேணி வா! நல்ல நூல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நாளும் படி! உன்னைப் பாராட்டுபவரிடம் எச்சரிக்கையாய் இரு!. விருதுகளுக்கு உன்னை வீணாக்கிவிடாதே! உன்னை நீ நம்பு. நீ உன் திறமைக்குப் பெற வேண்டிய அங்கீகாரத்தை இதுவரை பெறாமல் இருப்பது யாருடைய தவறு? எனக்கு ஒன்றும் புரியவில்லை

நாடு உன்னைத் தேடுகின்ற நாள் விரைவில்!

இன்னும் எழுத என் இதயத்தால் வாழ்த்துகிறேன்

கூடித் தமிழ் வளர்ப்போம்!
மாறா அன்புடன்

ச.சுப்பிரமணியன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.