அமரர் வானவன் ஏகாம்பரம் – வானளந்த மாண்பு
ஒளவை அருள்
டாக்டர் வானவன் ஏகாம்பரம் (4.12.1953 – 19.12.2022)
நிலவியல் முது அறிவியல் மாணவராகச் சென்னை மாநிலக் கல்லூரியில் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ந்தவராவார்.
இவர் என் அம்மாவிற்குக் குதியுந்து (scooter) ஓட்டும் கலையைக் கற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்மா வாயிலாக நாங்கள் மூவரும் குதியுந்து ஓட்ட ஊக்கம் பெற்றோம்.
இவர் அமெரிக்காவில் அணுசக்தி பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
டென்வரிலுள்ள உட்வேர்டு கிளைடு நிறுவனத்திலும் மற்றும் பல நிறுவனங்களிலும் சுற்றுப்புறச் சூழல் விஞ்ஞானியாகப் பணியாற்றிய பெருமை வாய்ந்தவர்.
இவர், சென்னை திரு. கே. செல்வராசப் பிள்ளையின் புதல்வி ஆனந்தியை குசலாம்பிகை மண்டபத்தில் 3.9.1981 அன்று திருமணம் செய்துகொண்ட பொழுது, பள்ளி மாணவர்கள் நாங்கள் மணவிழாவில் கலந்து கொண்டது பசுமையாக நினைவில் உள்ளது.
இவர்களுக்கு இரு ஆண்மக்கள், மனோஜ் மற்றும் மகேஷ் ஆவர்.
செல்வன் மனோஜ், தற்போது ஜப்பானிய மருந்தியல் நிறுவனமான ‘NS Pharma’ நிறுவனத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறார்.
செல்வன் மகேஷ், மருத்துவப் படிப்பு நிறைவு செய்து கள மருத்துவராக ஃபுளோரிடாவில் பணியாற்றி வருகிறார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு, முதுநிலை ஆய்வாக 1990களில் அமெரிக்காவிற்குச் சென்று பயில வேண்டும் என்பது என் தணியாத ஆர்வமாகும். அதற்கு ஊன்றுகோலாகவும் தூண்டுகோலாகவும் வான் மாமா மிளிர்ந்தார்.
அங்குள்ள பல பல்கலைக்கழகங்களில் ஒப்பியல் இலக்கியப் பேராசிரியர்களுடன் அவரே பேசி விண்ணப்பங்களைப் பெற்று நிறைவு செய்து உதவியதை இன்றும் நினைந்து உருகுகிறேன்.
வான் எனும் சொல்லுக்கு ‘நேர்மை, ஒழுக்கம்’ என்றும் பொருளுண்டு என்று எந்தையார் என் அண்ணன் கண்ணனிடம் சொன்னதை நினைவுகூர்கிறேன்.
1999ஆம் ஆண்டில் என் இனிய நண்பர் மலேசியா குமாருடன் திருச்சியில் மின் திட்டக் கூட்டத்தில் இருந்த பொழுது அமெரிக்காவிலிருந்து வருகை புரிந்த பொறிஞர் சேகர் நடராஜன் என்னிடம் திரு.வானவனின் கீர்த்தியை நண்பர்கள் பலர் மத்தியில் சொன்ன பொழுது எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்து, என் பெற்றோர்களிடம் சொல்லி மகிழ்ந்த நினைவலைகள் இப்பொழுது வந்து செல்கின்றன.
நோய்கள் பல தொடர்ந்து அவரை வாட்டினாலும் கலங்காமல் எதிர்த்து வென்று காட்டிய வான் மாமாவின் திறம் அளப்பரியதாகும்.
அண்மையில் 23.08.2022 அன்று தொலைபேசியில் என்னிடம் நீண்ட நேரம் பேசிய பொழுது, தன் மாமியார் எழுதிய பக்திப் பனுவல்களைத் தொகுத்து நூலாக்கம் செய்து தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
எந்தையாரைக் குறித்து எப்பொழுதும் பெருமிதமாகப் போற்றிப் பேசுவார்.
அப்பா மறைவதற்கு முன்பே வான் மாமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இன்முகத் திலகம் ஏகாம்பர மாமாவின் நூற்றாண்டு நிறைவின் பொழுது வான் மாமா வானில் கலப்பது துயரம் மிகுந்தாகும்.
ஆற்றொணாத் துயருடன்
ஒளவை அருள்