குறளின் கதிர்களாய்…(438)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(438)
இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்பம்
உழத்தொறூஉங் காதற் றுயிர்.
– திருக்குறள் – 940 (சூது)
புதுக் கவிதையில்…
பொருளை வைத்துச் சூதாடி
அதை இழக்கும் போதெல்லாம்
அப்பொருள் மீது
பற்று மிகக்கொண்டு விரும்பிடும்
சூதாட்டம்போல்,
பல்வேறு துன்பங்களை உடல்
அனுபவிக்கும் போதெல்லாம்
அவ்வுடலினையே
உயிர்
விரும்பிடும் தன்மையுடையது…!
குறும்பாவில்…
பொருள்வைத்துச் சூதாடி இழப்பினும்
மேன்மேலும் அதன்மீது விரும்பவைக்கும் சூதுபோல்
துன்புறினும் அவ்வுடலையே விரும்புமுயிரே…!
மரபுக் கவிதையில்…
பெரும்பொருள் வைத்ததைச் சூதினிலே
பெரிதுமாய் இழப்பினும் மேன்மேலும்
விருப்பொடு பொருளதை நாடவைக்கும்
விடமதாம் சூதினைப் போலவேதான்
இருந்திட விரும்பிடும் உயிரதுவும்
இருந்திடும் உடலது தனிலேதான்
வருத்திடும் இடர்களில் வீழ்ந்தவற்றால்
வதைகளாய்ப் பலவுமே இருப்பினுமே…!
லிமரைக்கூ…
பொருள்பல இழந்தாலும் சூதில்,
பொருளதை விரும்பவைக்கும் சூதுபோல் உயிர்நாடும்
நலிந்தாலும் உடலின் மீதில்…!
கிராமிய பாணியில்…
ஆடாத ஆடாத
சூதாட்டம் ஆடாத,
அழிவத்தான் தருகிற
சூதாட்டம் ஆடாத..
கைப்பொருள எல்லாம்
வச்சித் வெளையாடித் தோத்தாலும்
அதுமேல உள்ள
ஆச தீராது சூதாட்டத்தில..
அதுபோலத்தான்
மனுச ஒடம்பு
எவ்வுளவுதான் துன்பப்பட்டாலும்
அதுமேலவுள்ள ஆச
உசிருக்கு
ஒருநாளும் தீராது..
அதால
ஆடாத ஆடாத
சூதாட்டம் ஆடாத,
அழிவத்தான் தருகிற
சூதாட்டம் ஆடாத…!