விருப்பமான ஒரு பிறந்தநாள் கேக் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

0
1

முனைவர்.நா.தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

பிறந்தநாள் கேக் ஐந்து மணிக்குக் கொடுக்க வேண்டும் என்பதே ஒப்பந்தம். நான்கு மணிக்கு முன்பாகவே அதன் வேலை நிறைவடைந்திருந்தது. பேக்கரியில் அனைவரும் பார்க்கும் விதத்தில் காட்சிப்படுத்தியதுடன் என் வேலை முடிந்தது.

’பேக்கரி உரிமையாளர் பாராட்டுற விஷயத்துல ஒரு கஞ்சப்பையனல்ல. அவர் என் முதுகில் தட்டி வாழ்த்துக்களைப் பொழிந்தார். பேக்கரியில் வேலை பாக்கிற வேற இருவரை பொறாமைப்பட வைக்கணும்னு அவரு நினைச்சாரோ என்னமோ?’

என்ன வாழ்த்தும்போது அவர் ஓரக்கண்ணால அவங்களையும் பார்த்தது  என்னக் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட செய்தது.

கேக்கின் மேல்பாகத்தில் பாலாடை நிறத்தில் ’ஹாப்பி பர்த்டே’ என்று எழுதியதோடு அதுக்கு சுத்திலுமாக 20 சிவப்பு மெழுகுவர்த்திகள் அழகாக அடுக்கி வைக்கவும் செய்யப்பட்ட இந்த கேக் யாருக்கு என்று சில வாடிக்கையாளர்கள் கேட்காமல் இல்லை. அவர்களின் ஆர்வத்தை குறைக்க பேக்கரி உரிமையாளரோ,  நானோ, மற்ற ஊழியர்களோ தயாராகவில்லை. அப்படி கேக்கிற்கு ஒரு குழப்பமான சூழ்நிலை வந்தது. அது ப்ளம் கேக்கா? இல்ல சாக்லேட் கேக்கா? என்று ஒரே பார்வையில் கண்டறியக்கூடிய  சாமர்த்தியசாலி ஒருவர்  ’இவ்வகை ஒரு கேக்கை என்  வாழ்நாளிலேயே நான் பார்த்ததில்லை என்று மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தியபோது பெருமையும், பெரு மகிழ்வும் கட்டுப்படுத்த சிறிது சிரமப்பட வேண்டி இருந்தது. ’நுண்ணிய கலை நுணுக்கங்களால் செய்த ஒரு சிற்பத்திற்கு இணையானது என்பது மற்றொரு வாடிக்கையாளரின் மதிப்புரை. அவரின் முன்பாக நான் முடிந்தவரை பணிவுடனிருந்தேன்.  இன்று கேக் எப்போதும் விட சிறப்பானதாக வர முழு முயற்சி செய்திருந்தேன். 20 வயது பிறந்தநாள் கொண்டாட இருக்கும் தீஷா என்ற பெண்ணின் முகம் அடிக்கடி என் நினைவில் வந்தது. ஒருவேளை அதுவே என்னை அதிகமாக உற்சாகப்படுத்தி இருக்கலாம். திராட்சைப் பழம் போட்டு சுட்டெடுக்கும் கேக்கின் அதிக வாசம் தான் அவளை சுயமாக கார் ஓட்டிக்கொண்டு இங்கு வர வைத்திருக்கும் என்று நான் கற்பனை செய்ததுண்டு. கேக்கின் கீழ்பாகம் செர்ரி பழத்தினால் அலங்கரிக்கும் போது அவளுடைய உதடுகளை குறித்து நான் எண்ணியதுண்டு.  செர்ரியின் அதே நிறம்தான் அவைகளுக்கும்.

சுவரில் மாட்டப்பட்ட கடிகாரம் ஐந்து மணி என்று கூவிக் கூறியது. நீல நிறத்தில் உள்ள ஒரு சின்ன கார் எந்த நொடியும் பேக்கரியில் வந்து நிற்கலாம். எனது கண்கள் அடிக்கடி வெளியே எட்டி பார்த்தன.  கேக்குடன் பங்களாவிற்கு நானே செல்ல வேண்டி இருக்குமென்று ஞான அறிவு இதற்கிடையில் என்னுள் ஒலித்தது. காரண காரியத்தோடு விளக்கக் கூடிய ஒன்றாக அவ்வெண்ணம் இருக்கவில்லை.

பதினைந்து நிமிட காத்திருப்பிற்குப் பிறகு பேக்கரி உரிமையாளர் தொலைபேசி வழியாக பங்களாவைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார்.  அது பயன்படவில்லை.  பங்களாவின் தொலைபேசி தற்காலிகமாக வேலை செய்யவில்லை என்ற தகவல் இரண்டு மூன்று முறை ரிசிவர் வழியாக கேட்டது. ஒரு டாக்ஸி பிடித்து முடிந்தவரை வேகமாக கொண்டு போய் கொடுத்துவிட்டு வர என்னிடம் கட்டாயப்படுத்தினார். சம்மதத்தின் அறிகுறியாக தலையை ஆட்டிக்கொண்டு டாக்ஸி பிடிக்க நான் வெளியிலிறங்கினேன்.

அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் வரவில்லை.  சரியாக ஐந்து முப்பது மணிக்கு நான் கிளம்பினேன். ஹோப் வில்லா’ டாக்ஸி ஓட்டுனருக்கு அறிமுகமான இடம் தான். கரும்பனைகளையும் பாறை கூட்டங்களையும் பின் தள்ளிக்கொண்டு டாக்ஸி டெய்ஸி தோட்டங்களுக்கிடையில் உள்ள சமமான பரப்பை அடைந்தது. தூரமாக பாதை இறக்கமாகச் செல்வதை டிரைவர் சுட்டிக்காண்பித்தார். பார்த்துக் கொண்டிருக்கவே குன்றின் மேற்பகுதி முழுவதுமாக மறைந்தது வழியோரங்களில் அங்கும் இங்குமாக குரங்குகள் காட்சியில் தெரிந்தன. சில குரங்குகள் மரங்களில் அமர்ந்து கொண்டு டாக்ஸிக்கு நேராக பார்த்து இளித்துக்கொண்டிருந்தன.  கரும் பாறைகளிலிருந்து உடைந்து வந்த நீர்ப்பாதை கூடுதல்  நீர் இல்லாமல் பாதையின் குறுக்காகச் சென்றது.  மலைச்சரிவின் மரங்களுக்கிடையில் காளான்கள்.

”டிம்…………….. ஓர் இரைச்சல் கேட்டது. டாக்ஸியின் எஞ்சின் சலனமற்றது.  ஓட்டுநர் கீழே இறங்கினார்.

என்ன ஆச்சுன்னு நான் தலைய வெளியில விட்டு ஆராய்ந்தேன்.  ஓட்டுனர் போனட்டை தாழ்த்தி விட்டு எனக்குப் பக்கத்தில வந்தார். அவருடைய முகம் வெளிர்த்திருந்தது.

நான் சுற்றிலும் பார்த்தேன் நீண்ட பாதையும் குன்றுகள் இறங்குகின்ற மலைச்சரிவுகளும் கண்களில் தெரிந்தன.

ஓட்டுனர்  மன்னிப்பு கேட்கத் தயாரானார்

“ வேண்டாம்.”

நான் கோபத்தோடு பிறந்தநாள் கேக்கை வெளியில் எடுத்தேன். உடம்ப வளச்சு நிக்கிற டிரைவரை கவனிக்காம நான் இறங்கி நடந்தேன். அவன் பின்னாலிருந்து என்னமோ அழைத்து சொன்னான்.  நான் அதை கவனிக்கல. என் மனசு கொந்தளிச்சது.  ஒரு பிறந்தநாள் கேக்கை கையில எடுத்திட்டு நீண்ட வழியாக உள்ள இந்த மலைப் பாதையில் என்னுடைய பயணம் கொஞ்சம் கூட சரியானதல்ல என்று நான் எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். சில பறவைகளின் கீச்சு குரல் கேட்டது. வானம்  மங்கிய நீல நிறமாக இருந்தது. குளிர்க் காற்று வீசியது இரண்டு பக்கங்களிலும் தேயிலைச் செடிகள் ஆடிக் கொண்டிருந்தன.

ஒற்றையடிப் பாதை. இருட்டுறதுக்கு முன்னாடி நான் ஹோப் வில்லா’ போயிடலாம்னு நினைச்சாலும் இவ்வளவு தூரம் கடந்து பங்களாவோட கேட் கதவை அடைவதற்குள்ள பகல் வெளிச்சம் முழுவதுமாக மங்கி இருந்தது. சொந்தக்காரங்க வர நேரம் ஆகியும் கேட் திறந்து வைக்கவில்லை.

அடங்காத ஒரு விலங்கைப் போல முரண்டு கொண்டு கேட்காமல் காவல்காரன் எனக்கு நேராக வந்தார். இதுக்கு முன்னாடி மிலிட்டரியில் இருந்தவராக இருக்கணும்.

”பேக்கரியில் இருந்து வரேன்”. நான் சொன்னேன்.

“இது என்னது?” அவரின் கரகரத்த குரல் உயர்ந்தது.

 ”கேக் சூடாறவில்லை”

“ சூடு ஆறிருச்சானு நான் கேட்கலையே!”

இல்லன்னு எனக்கு சொல்ல வேண்டி வந்தது. அவன் கேட் திறந்தான். பங்களா தூரமாக மரங்களுக்கு இடையில் தெரிந்தது. அந்தப் பக்கமாக நடக்கும் போது தேக்கினுடையவும், பெரிய மரங்களினுடையவும் உச்சியில் இருந்து குளிர் கீழே இறங்கியது. பன்றி தொழுவம் எதிரில் தென்பட்டது. பங்களாவில் நிறைய பன்றிகளும், முயல்களும் உண்டென்று   கேள்விப்பட்டிருக்கறே. தோட்ட உரிமையாளரான பால்அகஸ்டின் பன்றிகளையும் முயல்களையும் வளர்த்துவதில் மட்டுமல்ல வேட்டையாடுவதிலும் விருப்பம் உள்ளவனாவான்.

நான்  முற்றத்தை அடைந்தேன். வெளியில் உள்ள தூண்களுக்கு நடுவில்  தொங்கிக் கொண்டிருந்த விளக்கை யாரோ ஏற்றியவுடன் அவ்விடம் பிரகாசமானது.

கேட் காவல்காரனின் வயதை ஒத்த ஒருவர் ஒரு மது பாட்டிலையும் ஏந்திக் கொண்டு அவசரமாக முற்றத்திற்கு வந்தார்.

’ஹில்டா’ அவன் திரும்பி நின்று கொண்டு சத்தமாகக் கூப்பிட்டார். ’வாத்து ரோஸ்ட் சீக்கிரம் கொண்டு வரணும்.’

 ஊதா நிறத்திலுள்ள பாதி உடையும், கவுனுமாக ஹில்டா இடது பக்க கதவு வழியாக ஓடி வந்தாள்.

“ பன்றியோ?”

”அது அங்கே இருக்கட்டும்”

”சாமுவேலு அண்ணா போய்க்கோங்க. நான் உடனே கொண்டு வரேன்.”

”தாமதிக்கக் கூடாது”

“விரோனியருடைய குழப்பம் தான்”

”அதெல்லாம் எனக்குத்தெரிய  வேண்டா. இது ரெண்டாவது பாட்டில் ஆச்சு நினைப்பிருக்கட்டும்.”

சாமுவேல் ஒரு தாக்குதலின் கௌரவம் குறையாத முகத்துடன் படிகளிறங்கினான். பிறந்தநாள் கேக்குடன் நான் வந்திருக்கிறேன் என்ற போதும் கூட அவருடைய முகபாவத்தில் எந்த மாற்றமும் இல்லை.

”ஆகட்டும். என்னமோ ஆகட்டும். நீ பேச வேண்டியது எங்கிட்ட இல்ல எஜமாங்கிட்ட. எங்கூட. வா”

அவர் எங்க கூட்டிட்டுப்போறாருனு  எனக்குத் தெரியல. சில அடிகள் நடந்த போது ஒரு பொருள் என் கண்ணில பட்டது. அங்கே கொஞ்சம் இருட்டா இருந்துச்சு.

உள்ளே என்னமோ சிதறிக்கிடந்தது.

‘இன்னைக்கு முழுசும் தகர்க்கறதாவே இருக்கு.’ சாமுவேல் புலம்பினாரு.   உள்கூடங்களில் கண்ணாடி ஜன்னல்களுக்கு முழுவதும் கெட்டியான சிவப்பு நிற திரைசீலை இடப்பட்டிருந்தது. கதவு மல்லாக்கத் திறந்து வைத்திருந்த நிலையில் அதற்கும் கர்ட்டன் இருந்தது. அதன் ஒவ்வொரு பகுதியும் இரண்டுப் பக்கங்களிலுமாக தொங்கியது. அதற்கும் சிவப்பு நிற திரைச்சீலை தான். உள்ளே நல்ல வெளிச்சமாய் இருந்தது. ஆனால் வராண்டாவிலும் வெளியிலும் உள்ள விளக்குகள் ஏனோ ஏற்றப்படவில்லை.

உள்ளே ஒரு நாய் குரைத்தது. அது என்னை ஆச்சரியப்படுத்தியது.

”பத்திரமா இருந்துக்கோ”

சாமுவேல் மிருதுவான சத்தத்தில் எனக்கு முன்னறிவிப்பு தந்தான்.

நான் கேக் தட்டை இறுக்கமாகப் பிடித்தேன்.

சாமுவேல் பின் தொடர சைகை காட்டினான். நான் அவரின் பின்னாடி கட்டிடத்திற்குள்ளாக கடந்து வந்தேன். வரவேற்பறை சூனியமாய் இருந்தது. டீபாயில் ஒரு ஸ்படிகப் பாத்திரத்தில் பல அளவுகளில் உள்ள துண்டுகள். கொஞ்சம் முன்பாக நான் கேட்ட சத்தம் என்னவாக இருக்கும் என்று அதை பார்த்த போது அனுமானிக்க முடிந்தது.

வரவேற்பறையில தவிட்டு நிறத் துணி போடப்பட்ட சோபாவும், மேலே கண்ணாடிப் பதிக்கப்பட்ட உயரம் குறைந்த மேசையும் தவிர வேறு சாமான்கள் ஒன்றுமில்லை. வலது மூலையில் ஓர் அலங்காரப் பொருளாக வைக்கப்பட்ட காவிவர்ண வேருக்கு மேல் ஒரு பீங்கான் சிலை. படுக்கையறைக்குள் கதவுக்கு மேலாக ஒரு ரோஸ்வுட் கடிகாரம். படுக்கை அறையில் இருந்து மதுவின் வாசம் வரவேற்பறை வரை வீசியது.

நான் ஒரு நிழல் போல சாமுவேலுடன் நடந்தேன்.

பால் அகஸ்டினை பல முறையாக நான் தூரமாக நின்று பார்த்ததுண்டு. நீளமானதும் பறந்ததுமான உடல். தலையின் பாதிக்கு மேல் நெற்றியே ஆக்கிரமித்திருந்தது. கன்னங்கள் உப்பி இளகி தொங்கிக் கொண்டிருக்கும். மேலுதட்டின் பாதி வரை வெட்டப்பட்டு மேல் பக்கம் வடிவமைக்கப்பட்ட மீசை. இடைவெளி இல்லாமல் சேர்ந்த புருவங்கள். கீழே மிகச்சிறிய கண்கள். சிக்காரியாவின் உருவம். பின்பாகமாக படுக்கையில் இரட்டைத்தலை துப்பாக்கி. வேட்டைக்கு உடன் கூட்டிட்டு போகக்கூடிய நாய் காலுக்குக்கீழ்  இல்லை. அதற்கு பதிலாக முதலாளிக்கு சமமான வேறொரு இருப்பிடத்தில் இருந்தது.

”யாரது?”

’தீஷாம்மா ஆர்டர் போட்ட பிறந்தநாள் கேக்கு எடுத்துட்டு வந்திருக்கே.’

சாமுவேல் இத சொன்னதும் எல்லாம் விளக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். அது தவறாகியது. இருப்பிடத்தில் சாய்ந்து உட்கார்ந்து பால்அகஸ்டின் மெதுவாக முணுமுணுத்தார். நாய் எனக்கு நேராக குறைத்துக் கொண்டு குதித்தது. நான் அரண்டு போய் கதவை இலட்சியமிட்டு குதித்தேன். ஹில்டா அடுக்களையிலிருந்து வாத்து ரோஸ்டுடன் அவசரப்பட்டு வரக்கண்ட நேரம். அதுதான் காரணம். ட்ரே நிலத்தில் விழுந்தது. பின்னாலிருந்து  அலறல் கேட்டது. பால்அகஸ்டின் துப்பாக்கிக்குக் கை நீட்டுகிறான் என்பதை அறிந்தவுடன் ஏன்னு தெரியாமல் நான்  அதிர்ச்சிக்குள்ளானேன்.  என் அதிர்ஷ்டம் நாயின் கவனம் அதற்குள் ஹில்டா தரையில் வீழ்த்திய வாத்து ரோஸ்டின் மேல் திரும்பியது. நான் வேகமாக வெளியில் குதித்தேன். வெளியில் இருட்டு பரவியிருந்தது. நான் செடிகளுக்கு இடையில் பதுங்கி இருந்தேன். சதுப்பு நிலம் என்பது போல எனக்குச் சுற்றிலும் கொசுக்கள் இரம்பின.

பிறகு பார்க்கும்போது நான் நிறைய விருந்தாளிகளுக்கு நடுவில் இருந்தேன். பங்களாவின் பரந்த வாசலில் விருந்தினர்கள் குழப்பவாதிகளாக நின்றனர். யாரும் வரவேற்க வராதிருந்ததுதான் குழப்பத்திற்கு காரணம்.  அது நிலைத்திருக்க, கடும் மஞ்சள் நிறத்தில் பட்டு சேலை அணிந்த ஒரு பெண் ஒரு மூலையில் தள்ளி நின்று சின்ன  கைக் கண்ணாடியில் பார்த்து உதடுகளில் லிப்ஸ்டிக் அடித்தாள். பங்களாவின் முற்றத்தில் விருந்தினர்களின் வாகனங்கள். அவைக்கு அருகில் கோட்டும் டையும் உடுத்திய ஒருவன் அழகாக பொதியப்பட்ட ஒரு பரிசுப்பொருளை கையில் ஏந்தி நின்றார். வேறு சிலருடைய கையிலும் பரிசு பொருட்கள் காணப்பட்டன. என் கையிலோ பிறந்தநாள் கேக். பல மின் விளக்குகளின் வெளிச்சத்தில் என்றாலும் எல்லார் முகத்திலும் சலனமான நிழல் விழுந்திருந்தது. பிறந்தநாள் கேக்கை யாரிடம் கைம்மாறுவது என்று தெரியாமல் குழம்பினேன்.

அதற்குள் ஒருவர் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி வந்து எதிர்பாராத காரணங்களால் பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார்.

’என்னது?’ பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லையா?’ ஒரு விருந்தாளி சத்தமாகக் கேட்டார்.

“ஆமாம் எதிர்பாராத சூழ்நிலையால் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதா போச்சுனு மேடம் வருத்தத்தோட சொன்னாங்க” ஒருவர் விளக்கினார்.

”வெட்கம்……….”

“ மேடத்தை கூப்பிடுங்க.”

“ மன்னிக்கணும் மேடம் யாரையும் பார்க்க விரும்பல.”

“தீஷா இருப்பாளே. அவளை கூப்பிடுங்க குறைந்தபட்சம் பரிசுகளையாவது அவளிடம் ஒப்படைக்கலாமே.”

”பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்துசெய்ததால  பரிசுகளையும் வாங்கக் கூடாது என்பதுதான் முடிவு.”

அவர் ஓர் அரங்கு என்பதாக பாவித்து  புறம் திரும்பி நடந்து  மறைந்தார். தோல்வியையும் அசௌகர்த்தையும் பங்கிட்டுக் கொண்டு விருந்தினர் ஒவ்வொருத்தராக போய்க் கொண்டிருப்பதை, ஒரு கதவிற்குப் பின்னால் இருந்து ஹில்டா எட்டிப் பார்ப்பதை நான் கவனித்தேன். ஏற்கனவே முனங்கிக் கொண்டிருக்கும் கொசுக்களுக்கு இடையிலிருந்து விருந்தாளிகளுக்கு மத்தியில் நான் வந்ததே ஹில்டாவைப் பின்தொடர்ந்து தான்.

நான் பிறந்த நாள் கேக்குடன் அவளுக்கு முன்னால் பாய்ந்தேன்.

‘ஹில்டா.’

அவள் பின் வாங்கினாள். நான் கதவு வழியாக நுழைந்தேன். அவள் அறையை விட்டு போயிருக்கவில்லை.

’ம்ஹும்? என்ன வேணும்?’

’எனக்கு மேடத்தை பார்க்கணும்’

’மேடம் இப்போ யாரையும் பார்க்க மாட்டாங்கன்னு மேத்யூ சார் சொன்னது கேக்கலையா?’

’கேட்டுச்சு அது எனக்கு தொடர்பில்லாதது’

ஹில்டாவின் நெற்றி சுழிந்தது. ஏன் எனக்குத் தொடர்பு இல்லைன்னு விளக்க முயற்சித்தேன். அதாவது நான் விருந்தில் பங்கேற்க வந்த ஆள் அல்ல. என் கையில் இருப்பது பிறந்தநாள் பரிசுமல்ல. தனிப்பட்ட முறையில்  ஆர்டர் கொடுத்து செய்த கேக்கோட வந்திருக்கிறேன்.

அப்போது அடுக்களையில் மணி முழங்கியது.

’மேடம் கூப்பிடறாங்க’

ஹில்டா என்னமோ எடுப்பதற்காக அடுக்களைக்கு வேகமாக நடந்தாள். நானும் பின் தொடர்ந்தேன்.

அடுக்களையில் சின்ன மேசை மேல் முழுசாக பொரித்தெடுத்த ஒரு பன்றிக்கறிக்கு அருகில் மண்டி போட்டு உட்கார்ந்து  சேலை அணிந்த ஒரு பெண் கண்ணீர் விடுவதை கண்டு நான் மிரண்டேன்.

’விரோனி, போதும், ஹில்டா ஆணை இடுவது போல கூறினாள்

’என்னோட மனக்குமுறல நான் அழுதுதா தீர்க்க முடியும்.’ வீரோனி அழுகையைத் தொடர்ந்தாள்.

நான் விரோனியை பார்த்துக் கொண்டிருக்கவே ஹில்டா நிலவறையிலிருந்து வேக வேகமாக ஒரு மது பாட்டிலுடன் வெளியில் வந்தாள். அடுக்களையிலிருந்து பங்களாவின் மேலே  செல்ல  படிக்கட்டுகள் இருந்தன. ஹில்டா படிகள் ஏறத் தொடங்கினாள். நானும் படிக்கட்டு ஏறுவது என்று தீர்மானித்தேன். ஹில்டா என்னை விலக்கவில்லை.

‘உண்மையில அங்க என்ன நடந்துச்சு? எனக்கு ஒன்னும் புரியல’

நாங்க மேலே உள்ள வராண்டாவை அடைந்திருந்தோம்.

ஷ்……ஷ்………

ஹில்டா ஒரு முன்னறிவிப்பாக சுவரோடு சாய்ந்து நின்றாள். ஏதோ ஆபத்திலிருந்து தப்பிக்க நானும் அப்படியே செய்ய வேண்டும் என்று அவள் சைகையில் கூறினாள். வயது காரணமாக குருடர்களான இரண்டு பேர் ’தீஷாவின் பெரியம்மாவும் பெரியப்பாவும்’ என்று ஹில்டா என் காதில் ரகசியமாக கூறினாள். தட்டுத் தடுமாறி முன்னால் வந்தார்கள். பெரியப்பா வெள்ளியால் கட்டப்பட்ட மூங்கில் ஊன்றுகோலை கையில் வைத்திருந்தார். பெரியம்மாவின் கழுத்திலும், காதுகளிலும், கைகளிலும் நிறைய ஆபரணங்கள்.

’பொகையிலயும் சாப்பிட்டு நடக்கப் போறாங்க. ஒரு வழியும் இல்ல’

ஹில்டா குரல் தாழ்த்தி கூறினாள். ஆனால் பெரியம்மா என்னமோ சத்தம் கேட்பது போல நின்று காதுகளை கூர்மையாக்கினார். ஹில்டா பாதங்களை ஊன்றி இடையிலூடாக  நடந்தாள். ஹில்டா பேய்களைப் போல நிற்கின்ற பெரியம்மாவினுடையவும் பெரியப்பாவினுடையவும் மேலிருந்து  பார்வையை அகற்றினாள். நானும் அப்படியே செய்தேன்.

இடைவெளியில் இரண்டு பாகங்களிலாக படுக்கையறைகள்.

வெளியில் காத்து நிற்கக் கூறி ஹில்டா ஒரு அறைக்குள் போனாள்.  திரும்பி வரும்போது கையில் மது பாட்டில் இருக்கவில்லை.

’எனக்குப் போயி, சூப்பு எடுத்துட்டு உடனே வரணும்’.

ஹில்டா ஆடையைத் தூக்கி பிடித்துக்கொண்டு வேறொரு அறைக்கு நேராக நடந்தாள். அதன் கதவுகள் அடைந்து கிடந்தன. தீஷாவின் பெயர் அழைத்து ஹில்டா கதவை ஒரு முறை தட்டியதுதான் தாமதம், என்னவோ ஒரு பொருள் கதவுக்கு நேராக சத்தமாக வீசி எறியப்பட்டது அதற்குப் பின்னால் ஆக்ரோஷம் உயர்ந்தது. ’போ………. போ……….’

ஹில்டா பேக்கரி என்றும், பிறந்தநாள் கேக்கென்றும் ஆக்ரோஷத்திற்கு இடையில் கூறினாலும் கதவு அடைந்தே தான் கிடந்தது. டேபிள் லைட்டை போல பல பொருட்களும் கதவிற்கு நேராக தூக்கி எறியற சத்தம் முழங்கியது. நான் அதிர்ச்சியோடு செய்வது அறியாது நின்றேன்.

’வந்திரு…… இனி இங்க நிக்க வேண்டாம் இந்த கேக்க இங்கே யாரும் வாங்கப் போறதில்லை. நீ இதை திரும்ப எடுத்துட்டு போ. அது முடியாதுன்னா நான் வேற வழி ஒன்னு சொல்றேன்.’ ஹில்டா என்னை கூட்டிக்கொண்டு நடத்தாள். நாங்க பொகையிலை (போதை)  திங்கிற பெரியப்பாவையும் பெரியம்மாவையும் கடந்து கீழே இறங்கினோம்.

ஹில்டா என்னை வழிநடத்தியது ஒரு பன்றித் தொழுவத்திற்கு.  அதற்குள் பத்திருபது பன்றிகள் நெருக்கமாக நின்றிருந்தன. அவற்றில் சில குட்டிகள். வளர்ந்த பன்றிகளின் சின்ன கண்களில் உதாசினமும் விரக்திமும்  நிழலோடியது.

‘இவைகள்ல ஏதாவது ஒன்று பிறந்தது இன்றைக்காக இருக்கக் கூடாதா?’ என்று ஹில்டா கூறினாள்.

சரிதான் நான் பிறந்த நாள் கேக்கை கொஞ்சம் கூட தயங்காமல் பன்றிகளுக்கு முன்பு வைத்தேன்.

பன்றித் தொழுவத்திற்கும், ஹோப் வில்லாவிற்கும், புடக்காலியில் உள்ள மரங்களுக்கும், வெளியில் பறந்து கிடக்கின்ற தேயிலை தோட்டத்திற்கும் மேலே அமைதியும், தூய்மையும் ஆன பிறந்தநாள் இரவு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.